புராணங்களில் சில இடங்களில் "இப்படியெல்லாம் இருக்கிறதே. இதை எல்லாம் சொல்ல வேண்டுமா?" என்று நினைக்கவைக்கும். முதலாவது உள்ளதை உள்ளபடியே சொல்வது அந்த கால பழக்கம். இப்போது காணப்படும் "puritanism" அப்போது இல்லை. இதை நினைவில் வைத்துக்கொண்டு மேலே படிக்கலாம்.
2.மாக கௌரீ பூஜை மஹிமை:
ஸௌராஷ்ட்ர தேசத்திலே ப்ருந்தாரக என்ற ஊரில் ஸுதேவன் என்ற ஓர் வேதியர் இருந்தார். வேத சாஸ்த்திர அனுஷ்டானம் நிறைந்த அவருக்கு பல சிஷ்யர்கள் உண்டு. அவர் மிக்க ரூபலாவண்யம் வாய்ந்த தனது ஒரே கன்னிகையை தக்க வரன் தேடி மணம் புரியக் கருதிக் கொண்டிருந்தார். சிஷ்யர்களில் ஸுமித்ரன் என்பவன் குரு பணிவிடையில் சிறந்த சாது. தனது கன்யகைக்கும் துணையாயிருந்து ஆளுக்கும் பணிவிடை செய்யச் சொல்லி இருந்தார். ஒரு நாள் தூரம் சென்றுவிட்டாள். ஸுமித்ரன் அவளை ரக்ஷிக்க கூடவே சென்றான். அவள் ஆடி ஓடி விளையாடி ஒரு தடாகத்தருகே மரத்தின் நிழலில் அமர்ந்தாள். மந்த மாருதமும், கோகில கானகமும், மணமுள்ள மலரும் ஆளது மனதில் காம விகாரத்தை உண்டு பண்ணிற்று. அருகிலிருந்த ஸுமிதரனை தன்னுடன் ரமிக்கும்படி வேண்டினாள்.
மிக உத்தமமான ஸுமித்ரன் அம்மா நான் உனது சஹோதரன். குரு புத்ரி! இத்தகைய சொல்லை என்னிடம் கூறாதே! விரைவில் ஸத்பதியை தேடி மணம் புரிவிப்பார் குரு! மனதை அடக்கிக்கொள்! என்றான்.
கன்யா ரத்னம், கனகம், ஸம்வித்தை, அமிருதம் இவைகள் தானே நம்மிடம் வரும்போது வேண்டாம் என்பது மூடச்செயல். என்னுடன் இப்போது நீ ரமிக்காவிட்டால் என்னுயிர் போய்விடும். குரு உன்னை சபிப்பார்! என்றாள். ஸூமித்ரனும் தெய்வ வசத்தால் குரு சாபத்துக்கு அஞ்சி, அவள் விருப்பத்துக்கிணங்கினான்.
இருவரும் வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தனர். நடந்ததை அறியாத ஸுதேவர் நல்லபடியாக பெண்ணை ரக்ஷித்து வந்ததற்காக அவனைப்பாராட்டி களைப்புடன் இருக்கும் பெண்ணையும் பக்ஷ்ய போஜ்யாதிகளால் தேற்றினார். சில நாட்கள் சென்ற பின் காஷ்மீர தேசத்திய வேதியன் ஒருவனுக்குப் பெண்ணை அளித்து மணம் செய்வித்தார். துரதிருஷ்ட வசத்தால் உடனே அவன் இறக்க பெண்ணும் தந்தையும் கதறினார்கள். இப்படி அவள் தலையில் எழுதிய ப்ரம்மாவை நிந்தித்தார். தம் வினையை எண்ணி கதறினார். பெண்ணும் கதறினாள்.
பரோபகாரியான ஒரு யதீஸ்வரர் இவ்வழுகை குரலைக் கேட்டு அருகே வந்து விசாரித்தார். தன் ஞானதிருஷ்டியால் அவர் முன் வினையை கண்டறிந்து கூறினார். பிராம்மணோத்தம! உம் பெண் முற்பிறவியில் ஒரு க்ஷத்திரியப்பெண். அதிரூப சுந்தரி. விதர்ப்ப ராஜனை மணந்து வாழும் நாளிலே கெட்ட சகவாசத்தால் ஜார புருஷரிடம் அன்பு கொண்டாள். அவர்களது தூண்டுதலால் மன்னனை நடு நிசியில் தூங்கும்போது கத்தியால் வெட்டினாள். அந்த ரத்த பிரவாகத்தை கண்டு பயந்து தன்னையும் வெட்டிக்கொண்டு இறந்தாள். அந்த பாபத்தினால் பதியை இழந்தாள். மிக உத்தமரான உம் குலத்தில் தோன்ற காரணம் யாதென்று கூறுகிறேன் கேள்!
பதியை கொன்ற பாபத்தினால் பல பிறவிகளில் பெண்ணாகி மணமானவுடனே பதியை இழந்து விதவையானாள். பதினான்காவது பிறவியில் ஸரஸ்வதீ தீரத்தில் பெண்கள் பலர் கூடி மணலால் கௌரியை அமைத்து மாகமாஸம் முப்பது நாளும் ஸ்நாநம் பூஜை செய்து வந்ததைத் தற்செயலாக இவள் அங்கு சென்று ஒர் நாள் அவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த புண்ணியத்தால் சிறந்த உம் குலத்தில் பிறந்தாள். புண்யம் புண்ய பலனை கொடுத்தது. பாபம் பாப பலனான வைதவ்யத்தை தந்தது. அன்றியும் விவாஹம் ஆவதற்கு முந்தியே பூர்வ வாசனையால் உமது சிஷ்யனை பலாத்காரம் செய்து அனுபவித்தாள் என்றார் யதீஸ்வரர்.
இதைக் கேட்டவுடன் ஸுதேவர் இரு கரங்களாலும் செவிகளை மூடிக்கொன்டு சிவ சிவ என்று கதறினார். புழுவாய்த் துடித்தார். "யதீஸ்வரரே! கஷ்டம் கஷ்டம். என் பெண்ணாய் பிறக்க வேண்டுமா இவள்? இவள் நற்கதி அடைய மறு பிறவியிலாவது ஸுமங்கலியாய் இருக்க ஒரு உபாயம் கூறுங்கள்" என்று அவர் திருவடிகளை வணங்கி வேண்டினான் ஸுதேவன். யதீஸ்வரர், ஸுதேவரே! மாக ஸ்நானம் முறைப்படி செய்வித்து மாக கௌரீ பூஜையும் செய்தால் இவளது பாபமகலும். மறு பிறவிகளில் சுமங்கலியாக வாழ்வாள். மூன்றாவது மாகமாஸ விரதத்தில் ஸுமங்கலிகளுக்கு இரண்டு முறத்தில் பஞ்சு, மஞ்சள், தாம்பூலம் முதலியன வைத்து சந்தனம் குங்குமம், மை புஷ்பம், முதலியவற்றால் அலங்காரம் செய்து ஏழு பிரதக்ஷிணம் ஏழு நமஸ்காரம் செய்து தானம் செய்ய வேண்டும். அன்ன தானமும் செய்தால் பாபமகலும். ஸுதேவர் அங்ஙனமே அப்பெண்ணுக்கு செய்வித்தார். பதியில்லாதவளானதனால் விஷ்ணுவின் திருவடியை அடைந்தாள். பதியுள்ளவளானால் பதி லோகம் சென்று பல பிறவிகளிலும் ஸுமங்கலியாகவே வாழ்வாள்.
No comments:
Post a Comment