Thursday, December 31, 2009
மாகபுராணம் 8
8.வித்யாதரியை ரக்ஷித்தது மாக வ்ரதம்:
வித்யாதார வகுப்பை சேர்ந்த ஒருவர் வெகுகாலமாக புத்ரபாக்கியமில்லாமல் வருந்தினார். நூறாண்டு பிரும்மாவை நாடி தவம் புரிந்தார். அவர் தவத்தால் ஸந்தோஷமடைந்த சதுர்முகன் பிரசன்னமாகி "வித்யதரா! இந்த பிறவில்யில் உனக்கு புத்திர பாக்கியம் கிடையாது. உனது தபோ பலத்தால் ஒரு பெண்ணைத் தருகிறேன்.” என்று கூறி மறைந்தார். அங்ஙனமே சில நாட்கள் சென்றபின் அதிக ரூபலாவண்யம் வாய்ந்த ஒரு பெண் குழந்தை பிறந்தது. ரூபம் மட்டும் இல்லாமல் அதன் அரிய குணங்களையும் தெய்வ பக்தியையும் கண்டு அக மகிழ்ந்தான் வித்தியாதரன். மணம் புரிவதற்கேற்ற காலம் வந்தது. பலர் கேட்டும் இவளுக்கேற்றவனாகவும் எனது வீட்டிலேயே வசிப்பவனாகவும் உள்ளவனுக்கே இவளைத் தருவேன் என்று கூறிவந்தான்.
அச்சமயம் ஒரு ராக்ஷஸன் மஹாமாயா தேவியை நாடிக்கடுந்தவம் புரிந்தான். தேவி அவன் விரும்பியபடி ஸகல வித்தைகளும் ஸகல விதமான மாயையும் அவனுக்கு வசமாகும்படி வரமளித்தாள். பரமசிவனிடமிருக்கும் சூலத்தை பெற்றுவிட்டால் உலகில் மூவரும் எவரும் தனக்கு ஈடாகமாட்டார்கள் என்று எண்ணினான். த்ரோணமலைச் சிகரத்தில் அமர்ந்து சிவனை விரைவில் மனங்குளிரச் செய்யும் மந்திரங்களை ஜபித்தான். உணவை, உலகை, உடலையும் மறந்து கால் கட்டைவிரல் மாத்திரம் பூமியில் பட நின்று கொண்டு கரத்தை சிரசின் மேல் குவித்து ஸூர்யனைப் பார்த்து கொண்டு மிகக்கடுமையான தவம் செய்தான். [சிவன்] அவனெதிரில் தோன்றி "நீ விரும்பியபடி சூலத்தை அளிக்கிறேன். அது சத்ரு வஸம் அகப்பட்ட போது நீ இறப்பாய். த்ரிசூலம் என்னிடமே வந்து சேரும்" என்று கூறி அளித்தார்.
பரம சந்தோஷத்துடன் அசுரன் தன்னை ஜயிப்பவர் ஒருவருமில்லை என சமுத்திரத்தின் நடுவிலே மாயையால் மிக அற்புதமான நகரத்தை படைத்தான். சகல லோகங்களிலும் இருக்கும் ஸகல போக வஸ்துக்களும் அங்கிருக்கும் படி செய்தான். எனது பெருமைக்கும் இப்பட்டணத்திற்கும் ஏற்ற ஒரு ஸ்த்ரீ ரத்தினம் கிடைத்துவிட்டால் லக்ஷ்மீ நாராயணனையும் கௌரீ சங்கரனையும் விட சிறந்தவனாக இருப்பேன் என எண்ணினான். ஒவ்வொரு லோகத்திலும் உள்ள அழகிய கன்னிகைகளைப் பார்த்தான். இவள் நமக்கு ஏற்றவளல்ல என்று மேண் மேலும் தேடிக்கொண்டே சென்றான். தற்செயலாக தீர்த்தம் கொண்டுவர நதி தீரம் சென்ற வித்யாதர கன்னிகையைக் கண்டு இவளே நமக்கு ஏற்றவள் எனக்கருதினான்.
அவளருகில் சென்று "பெண்ணே! நான் ராக்ஷஸனாயினும் திவ்யமான தேவ ரூபம் எடுப்பேன். என்னை மணந்தால் என்னிடமிருந்து ஒருவருமனுபவிக்காத இன்பம் பெறலாம். என்னை மணந்துகொள்" என்றான். "ஐயா! பெண்கள் தந்தை தாய் சொல் படி நடக்க வேண்டும் அல்லவா? தந்தையை கேளும்" என்றாள். அரக்கன் தந்தையை கேட்க அவர் தன் கொள்கையை கூறி பெண்ணைத்தர மறுத்தார். ஏமாந்த அசுரன் மற்றோர் முறை அவள் வெளியில் வந்த போது பலாத்காரமாக அவளைத் தூக்கிச்சென்றான். தனது அரண்மனையில் அவளை வைத்துவிட்டு அவளை விதிப்படி மணந்து கொள்ள நல்ல முகூர்த்தம் கூறும்படி பிரும்மாவைக் கேட்டான்.
ப்ரும்மா எட்டு மாதங்கள் கழித்த பின்பே நல்ல நாள் எனக் கூறினார். தன் கஷ்டத்தையும் பெற்றோர் பிரிவையும் எண்ணி வருந்தும் கந்தர்வ கன்னிகையை சந்தோஷப்படுத்த, "பெண்ணே உனக்கு விருப்பமான பொருளை கூறு. எந்த லோகத்தில் இருந்தாலும் கொண்டு வருகிறேன்" என்றான். அவள் "எனக்கு ஸோம வார பிரதோஷத்தில் சிவலிங்க தர்சனம் செய்ய வேண்டும். மற்றெதுவும் வேண்டாம்!” என்றாள். அரக்கன் பாதாளத்தில் உள்ள ஹாடகேஸ்2வர லிங்கத்தைக் காட்டி பிரதி ஸோமவாரத்திலும் சென்று தர்சிக்க ஏற்பாடு செய்தான். அங்கு தர்சனம் செய்ய வந்த நாரத ரிஷி இவளைப்பார்த்து விசாரித்தார். அவளது துக்கத்தை அகற்ற "இங்கு உள்ள மானச சரஸில் மாகஸ்நாநம் செய்து மாதவனைப் பூஜித்து வா!” என உபதேசம் செய்தார். அவளும் அங்ஙனமே அனுஷ்டித்து வந்தாள்.
இதற்கிடையில் நாரதர் இவளுக்கேற்ற பதி ஹரித்ரதன், அவனே அரக்கனை கொன்று இவளை மணக்கத்தக்கவன் எனக்கருதினார். ஹரித்ரதன் உலகில் கண்ணில்படும் நரர், சுரர், வீடு, மாடு, சுவர் முதலிய எல்லாம் ஹரி என்று கருதி வழிபடுவான். பகவன் நாமாவை எந்த வகையிலாவது ஸதா கூறுவான். ஒருவரை வா என்று அழைக்க விஷ்ணோ, போ என்று சொல்ல ஹரே, ஒன்றை எடுத்து வா என்று கூற கோவிந்தா, வாங்கிக்கொள்ள கிருஷ்ணா, சாப்பிட தாமோதரா எழுந்திருக்க கேசவா, படுக்க நரஸிம்ஹா, தூங்க மாதவா, விளையாட வாஸுதேவா, நடக்க வாமனா, வியஸனத்திற்கு ஹ்ருஷீகேச, ஸந்தோஷத்தில் ஸ்ரீதர என பகவன் நாமாக்களையே சகல காரியங்களுக்கும் வைத்து (உதாரணமாய் தங்களுடன் பேசியது ஸந்தோஷமாக இருக்கிறது என்பதற்கு ஸ்ரீதரனாக இருக்கிறது) எப்போதும் பகவன் நாமாவில் ஈடுபடுவான்.
நாரதர் ஹரித்ரதன் அரண்மனைக்கு சென்ற போது அவரை அரசன் தக்கபடி பூஜித்தான். தேவரிஷி தான் வந்த காரியத்தைக்கூறி "நீ அரக்கனை நாடிச்செல். ஸமுத்திரம் தானே உனக்கு வழிவிடும். அவன் சிவனிடம் பெற்ற திரிசூலத்தை ஸமுத்திரத்தில் வைத்து இருப்பான். அதை நீ எடுத்து அதனால் அவனைக் கொன்று வித்யதர ஸ்த்ரீயை மணந்து கொள்" என்றார். முனிவரைப் பணிந்து ஹரித்ரதன் கடலினிடையே உள்ள அரக்கர் ராஜ்யத்தில் நுழைந்தான். கடல் வழி விட அங்கிருந்த சூலத்தை எடுத்துக்கொண்டு போர் முழக்கம் செய்தான். ப்ரும்மாவிடம் சென்று தனது விவாஹத்துக்கு நல்ல முகூர்த்தம் கேட்டு வர சென்ற ராக்ஷஸன் இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டான்.
விஷ்ணு பக்தரில் சிறந்த ஹரித்ரதனைப் பறி கேள்வி பட்டிருந்ததால் அவன் கையால் அவனிடமுள்ள த்ரிசூலத்தால் இறந்து நற்கதி பெறத் தீர்மானித்தான். ஆதலால் மாயையைக் கொண்டு மறையவோ ஸந்தி செய்து கொள்ளவோ (?) விரும்பாமல் வீராவேஷத்துடன் போர் புரிந்தான். சிவன் சொல் வீணாகுமோ? சூலத்தை ஹரித்ரதன் அவன் மார்பில் பிரயோகிக்க அடியற்ற மரம் போல வீழ்ந்தான் அரக்கன். வித்யதர கன்னிகைக்கு நாரதர் சொல்படி மாகஸ்நானம் எவரும் எதிர்பாராத ஆச்சரியமான பலனைத் தந்தது. இவரே என் பதி என்று அவள் இவனை வரிக்க விதிப்படி மணத்தை முடித்துக் கொண்டு தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர். விதி வழுவாது விஷ்ணு பூஜையையும் மாகஸ்நானத்தையும் செய்தனர். ஸந்ததிக்கும் இதை உபதேசித்து முடிவில் வைகுண்டம் சென்றனர்.
Labels:
மாக புராணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment