Pages

Monday, December 14, 2009

விசார சங்கிரகம்-3




7.மனம் புத்தி சித்தம் அகங்காரமாகிய இந்நான்கும் ஒரு பொருளேயென்றால் இவைகளுக்குத் தனித்தனி ஸ்தானங்கள் கூறப்படுவதேன்?
மனத்திற்கு ஸ்தானம் கண்டமென்றும் புத்திக்கு முகம் அல்லது ஹ்ருதயமென்றும்; சித்தத்திற்கு நாபி என்றும்; அகங்காரத்திற்கு ஹ்ருதயம் அல்லது சர்வாங்கம் என்றும் பலவிதங்களாகக்கூறி இருந்தாலும், இவற்றின் சமஷ்டியாகிற மனமென்னும் அந்தக்கரணத்திற்கு ஹ்ருதயமே ஸ்தானம் என்று சுருதிகளில் முடிவாக கூறியிருக்கிறது.

அது சரி, எல்லாம் ஒண்ணுதான்னா ஏன் தனித்தனியா இடம் சொல்லி இருக்கு?
நடைமுறையிலே பலதா சொன்னாலும் அந்தக்கரணத்தோட இடம் ஹ்ருதயம் ந்னு முடிவாக வேதத்திலே சொல்லி இருக்கு.

8.அகக்கரணமாவுள்ள மனமே ஜீவேச்வர ஜகத்ரூப சர்வதத்வாத்மனமாக விளங்குகிறது என்பது எவ்வாறு?

விஷயங்களையறிதற்கு சாதனமாய் இந்திரியங்கள் வெளியிலிருத்ததால் புறக்கரணம் என்றும் மனம் உள்ளிருத்ததால் அகக்கரணமென்றும் கூறப்பட்டாலும் தேகத்தை குறித்தே அகம் புறம் என்று சொல்லப்படுகிறதே அன்றி உண்மையில் உள் வெளி என்பதே இல்லை. ஆகாசத்தைப்போன்று ஸ்வச்சமாயிருத்தலே மனதின் சொரூபம். ஹ்ருதயமென்றும் மனமென்றும் சொல்லப்படுவது அந்தர்பஹிராய்த் தோன்றும் தத்துவங்களின் சேர்க்கையேயாம். ஆகவே சர்வ நாமரூபக்காட்சிகளும் மனோரூபமே என்பதில் சம்சயமில்லை. வெளியிற்றோன்றும் சகலமும் உள்ளேயே இருக்கிறதன்றி வெளியிலில்லை யென்பதை அறிவித்தற்கே வேதங்களிலும் எல்லாம் ஹ்ருதயாகாரமாகவே வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஹ்ருதய மென்பது ப்ரஹ்மத்தை யன்றி வேறில்லை.

மனசு அகக்கரணம் இல்லையா? இந்த மனசேதான் வெளியே இருக்கிற எல்லா ஜீவன்-ஈஸ்வரன், ஜகத், தத்துவங்கள் முதலான எல்லாத்துக்கும் காரணம் ன்னு ஏன் சொல்லறீங்க?
நாம விஷயங்களை தெரிஞ்சுக்க உதவும் கண் முதலானது வெளியே இருக்கு என்கிறதால நாம் அதை எல்லாம் புறக்கரணம் ந்னும் மனசு உள்ளே இருக்கிறதாலே அகக்கரணம் ந்னும் சொல்கிறோம். இதை உடம்பை ஆதாரமா வெச்சு உள்ளே, வெளியேன்னு சொல்கிறோம். ஆனா உண்மையிலே உள்ளேன்னும் ஒண்ணுமில்லை, வெளியேன்னும் ஒண்ணுமில்லை. மனசு ஆகாசம் போல தெளிவா இருக்கு. ஹ்ருதயம் என்கிறதும் மனசு என்கிறதும் உள்ளே/வெளியே வா தோன்றுகிற எல்லாம்தான். அதேதான் பிரம்மம்.