Pages

Tuesday, December 15, 2009

மாகபுராணம்-3




3.சிஷ்யனுக்கு ஸத்ய விரதர் உபதேசம்.

ஸுதேவரது சிஷ்யன், தான் குரு புத்ரியின் நிர்பந்தத்தால் அவள் இறந்தால் குரு சாபம் வருமே என அஞ்சி செய்யத்தகாத கார்யம் செய்ததைக்கூறி தனக்கு பிராயச்சித்தம் கூறும்படி வேண்டினான். ஸுதேவன் மனம் நொந்து உனது இச்சையின்றி பரேச்சையால் செய்த இந்த பாபம் அகல கங்கா தீரம் சென்று பன்னிரண்டாண்டு தவம்புரி என்றார். அங்ஙனமே சிஷ்யன் குருவை பணிந்து செல்லும்போது ஓராஸ்ரமத்தில் மஹரிஷிகள் பத்னியுடன் ஸ்நாநம் பூஜை முதலியன செய்து மணல் திட்டில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவர்களை வணங்கி நீங்கள் செய்யும் கர்மா யாது? அதை எப்படி அனுஷ்டிப்பது? என்று வினவினான்.
ஸத்ய விரதர் என்ற ரிஷி கூறினார்: இது மாக மாஸ விரதமெனப்படும். மாகமாஸம் முப்பது நாட்களிலும் ஸூர்யோதய காலத்தில் ஸ்நாநம் செய்து விஷ்ணுவைப் பூஜித்து மாக புராண ஸ்ரவணம் செய்தால் பிரம்ம ஹத்தி, பொய் சாக்ஷி கூறல், உத்யானத்தை அழிப்பது, பெண்ணை விற்பது, ஸேதுவை உடைப்பது, வேத பிராம்ஹணர் த்ரவ்யத்தை அபகரிப்பது, கொடுக்கிறேன் என்று கூறி கொடுக்காமல் இருப்பது, பெரியோரிடம் த்வேஷம், பூஜை வைச்வதேவமில்லாமல் உண்பது, அன்ய பித்ரு சேஷம் உண்பது, குருஸ்த்ரீ கமனம், கையில் தர்ப்ப பவித்ரம் இல்லாமல் சண்டாளர்களுடன் பேசுவது, சண்டாளன் தூர ஸ்த்ரீகளின் குரலை கேட்டுக்கொண்டே புசிப்பது, வேதமில்லா ஊரில் வசிப்பது, புராணம், விவாஹம் முதலியவைகளுக்கு விக்கினம் செய்வது, மாக விரதம்/ புண்ய தீர்த்த ஸ்நாநம் இல்லாமை, ஸதியை த்யாகம் செய்வது முதலிய மஹா பாதக உபபாதகங்களையும் நீக்கும் இந்த விரதம்.
இந்த மாஸத்துக்கு மாதவனே தேவன் ஆனதால் காலையில் ஸ்நாநம் செய்து, துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து தூப, தீப, நைவேத்யங்களை செய்து அவர் எதிரில் அமர்ந்து மாக மஹாத்மியத்தை கேட்க வேண்டும். சக்திக்கேற்றபடி ஸுவர்ணம், வஸ்த்ரம், அன்னம், பாயஸம் முதலியன தானம் செய்ய வேண்டும். மாக மாஸத்தில் கந்தமூலம், பழம் முதலியவைகளையே புஜித்து ஸ்நாந பலன் பூரணமாக கிடைக்கும்படி முடிவில் அன்னதானம் செய்தவர் மறு ஜென்மம் எடுக்க மாட்டார்" இதைக்கேட்ட சிஷ்யன் மூன்று நாள் அங்கிருந்து அவர்களுடன் மாக ஸ்நாநம், பூஜை, புராண ஸ்ரவணம் இவைகளைச் செய்தான். ஸத்யவிரதரை வணங்கி தான் இச்சை இல்லாமலே செய்த பாபத்தையும், குரு கூறிய பிராயச்சித்தத்தையும் கூறி கங்கைக்குப் புறப்பட்டான். ஸகல பாபங்களையும் போக்கி பக்தரிஷ்டத்தைப் பூர்த்தி செய்பவரும் சங்க சக்ர கதாபாணியும் லக்ஷ்மீ பதியாயுமுள்ள மஹா விஷ்ணுவை மனதிலே த்யானம் செய்து பன்னிரண்டாண்டுகள் கடுந்தவம் புரிந்தான் சிஷ்யன். மாக ஸ்நாநம் மாதவ பூஜை தவம் இவைகளால் பாபம் நீங்கி அவன் விஷ்ணு பதத்தை அடைந்தான்.

No comments: