Pages

Wednesday, December 30, 2009

மாகபுராணம் 7


7.பிரம்மராக்ஷஸனுக்கும் நற்கதி:

துவாபர யுகத்திலே கோதாவரீ தீரத்தில் ஸூசீ2லர் என்றோர் வேதியரிருந்தார். தர்மசீலரான அவர் பல புண்ணியங்களைச் செய்து தீர்த்த யாத்திரைக்குச் சென்றார். வழியிலே பயங்கரமான ஒரு அரண்யத்தில் நுழைந்து வழி தெரியாமல் தவித்தார். அடர்ந்த புதர்களில் இருந்து புலி கரடிகளின் சப்தம் அவரை நடுங்கச்செய்தது. ஒரு கருங்காலி மரத்திடையே ஒரு பூதத்தைக்கண்டார். அது கொள்ளிக்கண்ணும், செம்பட்டை மயிரும், உலர்ந்த வயிரும், தோலும், எலும்பும், வஸ்த்ரமில்லா உடலுமாக இருந்தது. அதன் உடலை மரக்கிளையின் முட்கள் கீறி கீறி ஒரே ரத்தம். ஐயோ என்ற கூக்குரலுடன் இருந்தது. அதன் நீண்ட மூக்கும் கருத்த உருவமும் மரத்தின் வேரில் அழுந்தி அசைய முடியாத காலும் உடல் மாத்திரம் அசைவதையும் கண்டார் சுசீலர். நடுநடுங்கி ஆபத்பந்துவான விஷ்ணுவை த்யானம் செய்தார்.
ஐயா! என்னை காப்பாற்றுமே! க்ஷணமிங்கே நில்லும். உமது தர்சனம் எனக்கு சிறிது ஆறுதலை தருகிறது என்றது அது. தைர்யத்துடன் யார் நீ? ஏனிப்படித்தவிக்கிறாய்? என்றார் ஸுஸீலர். கோகர்ண க்ஷேத்திரத்தின் மேற்கு பாகத்தில் மதுவிருதம் என்ற ஊரிலே நான் கணக்கனாக இருந்தேன். கிராம  அதிகாரியாக இருந்ததால் எல்லோரையும் முக்கியமாக பிராம்மணர்களையும்  அதட்டி மிரட்டி பணம் பறித்து வந்தேன். பிரதி தினம் பிராம்மண சொத்தையே புஜிப்பேன். அதில்லாத நாள்தான் உபவாசதினம். ஸ்நாநம், தானம், பூஜை,
புண்ணியம் உபகாரம், கதை கேட்பது ஒன்றையும் நான் செய்தறியேன். உமது தர்சனத்தால் எனக்கு பூர்வஞானம் வந்தது. நீர்தான் என்னை இந்தத் துன்பத்தில் இருந்து விடுவித்துக்காக்க வேண்டும் என்றது. நாய், கழுதை, ஓநாய், பூனை முதலிய பல பிறவிகள் பெற்று இப்போது இந்த நிலையில் இருக்கிறேன் என்றது.
"அருகில் ஏதேனும் தீர்த்தமிருந்தால் அதில் மாக ஸ்நாநம் செய்து உனக்கு நற்கதி தேடலாம்" என்றார் ஸூஸீலர்.
ஐயா! இங்கே சுற்றி பன்னிரண்டு யோஜனை வரை தீர்த்தம் கிடையாது!” என்றது பிரம்மராக்ஷசன். "அப்படியானால் உன் புத்திரர் பௌத்திரர் இருக்குமிடத்தைக்கூறு. அவர்கள் மூலம் உனக்கு நற்கதி தேடுகிறேன்" என்றார் ஸுஸீலர். ஸ்வாமி! அந்த துக்கத்தை ஏன் கேட்கிறீர்கள்? கோகர்ண க்ஷேத்திரத்திலே என் புத்திரர் நால்வரும் என்னைப்போலவே பாபம் செய்து இறந்தனர். எங்கு எப்படி இருக்கிறார்களோ? அவர்களது ஐந்தாம் தலை முறையில் பாஷ்கல் என்று ஒருவன் கர்ணிகனாக இருக்கிறான். அவனால் எனக்கெப்படி நற்கதி கிடைக்கும்?”
"அஞ்சாதே! உனக்கென்ன? நான் அங்கு சென்று அவன் மூலமாக உனக்கு இத்துக்கம் அகன்று ஸத்கதி வரும்படிச் செய்கிறேன்" என்று ஸுஸீலர் கோகர்ணம் சென்று அவனைக்கண்டு பிடித்து தான் கண்டதை கூறினார். பாஷ்கலியும் அவர் சொல்படி மாக மாஸம் வந்த போது முப்பது நாளும் ஸ்நாநம் தானம் செய்தான். முடிவன்று கரு வேங்கை மரம் முறிந்து பிரம்மராக்ஷச ஸ்வரூபமும் அகன்று அவன் (பிரம்மராக்ஷசன்) வைகுண்டம் சென்றான்.



No comments: