5. விசாரம் ஸ்தூல தேகத்திலுள்ள ஆன்ம பாவத்தை மாத்திரம் நீக்குதற்கு சாதனமா? சூக்கும காரண தேகங்களிலுள்ள ஆன்ம பாவங்களை நீக்குதற்கும் சாதனமா?
ஸ்தூல தேகத்தை பற்றியே மற்ற தேகங்கள் ஜீவித்திருப்பதாலும் தேகம் நான் என்பதில் பஞ்ச கோச ரூபமான முத்தேகங்களுமே அடங்கிவிட்டதானும் ஸ்தூல தேகத்தில் உள்ள ஆன்ம பாவத்தின் அழிவே மற்ற தேகங்களின் அழிவாகலானும் விசாரம் மும்மை தேகங்களிலுமுள்ள ஆன்ம பாவங்களை போக்கற்கே சாதனமாகிறது.
விசாரம் செய்யச் சொல்லறீங்க. இதனால இந்த நாம பாக்கிற உடம்புலிருந்து நான் என்கிறதை நீக்குமா? இல்லை பாக்கமுடியாத உடம்புங்கன்னு சொல்கிறாங்களே - சூக்குமம், காரணம் ந்னு,- அந்த உடம்புகளிலிருந்தும் நான் என்கிற பாவனையை நீக்குமா?
நாம பாக்கிற உடம்பைத்தான் மத்ததும் பிடிச்சுக்கொண்டு இருக்கு. அதனால நாம பாக்கிற உடம்பிலிருந்து நான் என்கிற பாவத்தை நீக்கினா போதும். மத்ததிலிருந்தும் அது நீங்கிடும்.
6. விருத்தி பேதங்கள் மனம் புத்தி சித்தம் அகங்காரமெனப் பல விதங்களாயிருக்க மனோ நாசமே முக்தி என்பதெப்படி?
[மனசுன்னு மட்டுமில்லாம உள்ளத்தோட (அந்தக்கரணத்தோட) வெளிப்பாடு புத்தி, சித்தம், அகங்காரம் ந்னு பலவிதமா சொல்லறாங்களே, ஆனா ஏன் மனோநாசமே முக்தின்னு சொல்கிறாங்க?]மனதின் தத்துவங்களை கூறும் சாஸ்திரங்களில் "நாம் புஜிக்கும் அன்னத்தின் சூக்ஷ்மபாகத்தால் கெட்டிப்பட்டு, இராக த்வேஷ காமாதிகளால் விருத்தி அடைந்து, மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் சமுதாயமாய், மனமென்னும் பன்மை யொருமைப் பெயரையே பெற்றதாய், நினைத்தல், நிச்சயித்தலாதிய தருமங்களை யுடையதாய், ஞானத்தால் அறியப்பட்ட திருசியமாய், ஜடமாய், ஜடமாயினும் ஞானத்தின் சேர்க்கையால் (தப்தாய பிண்டம் போன்று) சேதனம் போலவே தோற்றுவதாய், பரிச்சின்னமாய், அநித்தியமாய், அவயவாகாரமாய், அரக்கு சுவர்ண மெழுகாதிகள் போன்று பரிணாமமுறுவதாய், சர்வ தத்வாதமகமாய், சக்ஷுரிந்திரியாதிகளுக்கு நேத்திராதி போல ஹ்ருதய கமலத்தை ஸ்தானமாகவுடையதாய்; ஜீவனுக்குபாதியாய்; தானொரு பொருளை நினைத்து விருத்தி ரூபமாய் மூளையிலுள்ள அறிவோடுங் கூடி பஞ்சேந்திரியங்களின் வழியாக அவ்விஷயங்களை (அறிவோடுங்கூடியுள்ள) மூளையாற் கூட்டிக்கொடுக்கப்பெற்று, அவ்விஷயங்களை யறிந்தனுபவித்து திருப்தியடைவதாய் விளங்கும் பதார்த்தம் எதுவோ அதுவே மனம்.” என்று மனத்தின் சொரூபத்தை கூறியிருத்தலால் ஒருவனுக்கே வேலையில் வெவ்வேறு நாமம் வருவது போன்று மனமொன்றே விருத்தி பேதங்களை முன்னிட்டு மனம், புத்தி, சித்தம், அகங்காரமென்ற நாமங்களால் வழங்கப்படுகிறதேயன்றி வேறில்லை. இம்மனமே சர்வ தத்வாத்மக ஜீவேச்வர ஜகத் சொரூபமாயிருத்தலான் இது எப்போது ஞானத்தால் ஆன்மாகாரமாகுமோ அப்போதே எல்லாம் ப்ரஹ்ம சொரூபமாகிற கைவல்யமாகும் என்று சொல்லப்படுகிறது.
--மனசைப்பத்தி சாஸ்திரங்களில எப்படி விவரிச்சு இருக்குன்னு பாத்தா இது விளங்கிடும்.
நாம சாப்பிடற உணவில கண்ணால பார்க்கக்கூடிய பாகம் ஜீரணமாகி சக்தி கொடுக்கும். பார்க்க முடியாத பாகம் மனசை பாதிக்கும்; எண்ணங்களை அதிகமாக்கும். பட்டினி கிடக்கும்போது எண்ணங்கள் அதிகமா வராது இல்லியா? (இதனாலதான் விரதங்களில சாப்பாட்டை குறைக்கச் சொல்லராங்க) இந்த மனசு ஆசை, கோபம் போன்ற குணங்களால வளரும். இதுவேதான் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்கிற கூட்டமாக பரிணாமமாகும். அப்படி பலதா ஆனாலும் மனம் என்கிற ஒரே பொருள்தான் அது. இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமான்னு நினைக்கறதும், இப்படித்தான்னு நிச்சயம் பண்ணறதும் இதுதான். சாக்ஷி ஞானத்தாலே இது அறியப்படும். இது ஜடம்தான், ஆனாலும் எப்படி நெருப்பில காய்ச்சிய ஒரு இரும்பு துண்டுக்கு சூடு என்கிற அதோட இயற்கையா இல்லாத குணம் ஒண்ணு புதுசா இருக்கறாப்பல தெரியுமோ அது போல சாக்ஷி ஞானத்தோட சேர்கிறதால மனசு அறிவுள்ளதா தோணும். பின்புலத்தில சாக்ஷி ஞானம் இல்லாம மனசுக்கு அறிவு இல்லை. மேலும் மனசுங்கறது வரையறைக்கு உட்பட்டது (அதாவது அளவற்றது இல்லை). அதே மாதிரி மனசு அநித்தியம்; இப்ப இருக்கிற மனசு அப்புறம் அப்படியே இருக்கும்ன்னு சொல்ல முடியாது. மனசு அப்டீன்னு இப்பொ நாம சொல்லிண்டிருக்கற அந்தக்கரணம் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்கிற எந்த அம்சத்தோட தன்மைகளை எப்ப காட்டுதோ அப்ப அந்த ரூபத்தை எடுத்துக்கும். அரக்கு, மெழுகு, தங்கம் முதலிய பொருள்கள் உருவம் மாறி பொம்மை, ஆபரணம் முதலிய பல விதமான பொருள்களா மாறுவது போல இதுவும் மாறும். (சர்வதத்வாத்கமாய்?) கண் காது முதலான உடல் உறுப்புகளுக்குள்ள நேத்திரம் சுரோத்திரம் முதலான இந்த்ரியங்கள், அதாவது பார்ப்பது கேட்பது முதலான சக்திகள் இருந்து செயல் படுத்தறதுபோல அந்த இந்த்ரியங்களுக்குள்ள இருந்து அதுகள செயல்படுத்தறது மனசு தான். ஹ்ருதயத்த இருப்பிடமா கொண்டு ஆழ்ந்த உறக்கத்துல அந்த எடத்துல ஒடுங்கிடறது. ஜீவனுக்கு உபாதியா இருக்கு. அதாவது அது ஒரு ஜீவனையும் இன்னோரு ஜீவனையும், ஜீவனையும் ஈச்வரனையும் பிரிக்கறது. அதாவது ஒரு ஜீவனுக்கும் இன்னோரு ஜீவனுக்கும் என்ன வேறுபாடுன்னா இவனுக்கு வேற மனசு அவனுக்கு வேற மனசுன்னு அத வெச்சு சொல்லலாம். அதே மாதிரி ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் என்ன வித்தியாசம்னா ஜீவனுக்கு குறுகிய (ஒரு சில பொருள்களை மாத்திரம் அறியக்கூடிய) மனசு இருக்கு, ஈச்வரனுக்கோ உலகத்தையே வ்யாபிக்கக்கூடிய பெரிய்ய்ய மனசு. பௌதிக ரீதியில சொல்லப்போனா ஐம்புலன்கள் பொருள பாத்து மூளையிலே தெரிவிக்கும்போது அந்த மூளையோடு கூடி அந்த விஷய ரூபமா மாறி அனுபவிக்கறது. இப்படிப்பட்ட குணங்களை உடையது மனசு, அல்லது அந்தக்கரணம்.
இப்படி மனசைப்பத்தி சொல்லி இருக்கிறதாலே மனசுன்னு தனியா இல்லை. அதோட தொடர்புடையதுதான் புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம். எப்படி ஒருத்தர் வீட்டிலே மனைவிக்கு கணவனாகவும், குழந்தைக்கு தகப்பனாகவும், அலுவலகத்திலே ஆபீசராவும், மேலதிகாரிக்கு சேவகனாகவும், கிளப்பிலே செயலாளராகவும் இருப்பாரோ அப்படியே மனசு இடத்துக்கு தகுந்த ரூபம் எடுக்குது. ஆகவே மனோ நாசம்ன்னா இந்த நாலுமே நாசம் அடையும். இந்த மனசேதான் எல்லா ஜீவன்-ஈஸ்வரன், ஜகத், தத்துவங்கள் முதலான எல்லா கற்பனைகளுக்கும் காரணம். அதனால மனம் ஆன்மாகாரம்- நாசமாகும் போது முக்தி கிடைத்ததாக பொருள்.
2 comments:
ஹ்ம்... கூடவும் வச்சுக்க முடியாது; இல்லாமலும் இருக்க முடியாது. பொல்லாதது - மனசு.
:-))
Post a Comment