6. சுமந்தனும் குமுதையும் மாக மஹிமை பெற்றது.
ஆந்த்ர தேசத்திலே ஸுமந்தன் என்றோர் நான்காம் வர்ணத்தவன் இருந்தான். அவன் உழவு தொழிலாலும் வட்டியாலும் நிறைய பொருளைத்தேடி பூமியில் புதைத்து வந்தான். மேல் மேலும் பொருளைத் தேடி பொருள் சேர்ப்பதிலேயே கருத்தாக இருந்தானே தவிர தானம், தர்மம், பூஜை ஸ்நாநம் முதலிய நற்கருமம் செய்வதில்லை. அவனது குமுதா எனும் மனைவியோ நல்லெண்ணமுள்ளவள். "ஏழைகளுக்கு தானமளி, கோவில் குளம் போவோம்" என்றாள். அதை அவன் கேட்பதில்லை. ஒரு நாள் இரவு கடும் மழையில் நனைந்து குளிரால் நடுங்கி நள்ளிருட்டில் ஒரு ஸாது அவர்கள் வீட்டிற்கு வந்து படுக்க இடம் தரும்படி வேண்டினார். குமுதா அவர் நிலையை கண்டு வருந்தி பசு கொட்டகையை சுத்தம் செய்து அங்கு புதிய படுக்கையையும் வஸ்த்ரத்தையும் கம்பளத்தையும் அளித்து தீ மூட்டி குளிரை அகற்றி, பாலைக்கறந்து காய்ச்சி குடிக்கும்படி செய்தாள். சு2சிவ்ரதர் என்ற அவர் மனங்குளிர அவளை ஆசிர்வதித்து பகவான் நாமாவைக் கூறிக்கொண்டே உறங்கினார்.
அதி காலையில் எழுந்து நாம ஸ்மரணம் செய்து நாம ஜபம் செய்து கொண்டே புறப்பட்டார். குமுதா அவரை வணங்கி "தாங்கள் யார்? எங்கே சீக்கிரமாக கிளம்பிவிட்டீர்கள்?” என்றாள். "நான் துங்கபத்ராவாசி. ஸ்ரீரங்கம் சென்று காவேரியில் மாகஸ்நாநம் செய்வதற்காக செல்கிறேன்" என்றார். "மாகஸ்நானம் என்றால் என்ன? அதனால் நமக்கு உண்டாகும் பலனென்ன?” என்று அவள் கேட்க சு2சிவ்ரதர் கூறினார்:
"மாகமாஸம் முப்பது நாட்களிலும் புண்ய தீர்த்தங்களில் ஸூர்யோதய காலத்தில் ஸ்நாநம் செய்தால் நாம் செய்த ஸகல பாபங்களுமகலும். இப்பிறவியில் இறந்த பின்னும் சுகமுண்டாகும். மாகஸ்நானம் செய்யாதவர் நரகம் செல்வர். பிரயாகை, க்ருஷ்ணவேணி, காவேரீ, ரேவா, துங்கபத்ரா, கோகர்ணம், ப்ரபாஸம், தாம்ரபரணீ முதலிய புண்ய தீர்த்தங்களில் மாகஸ்நாநம் செய்தால் விஷ்ணு லோகம் சென்று ஸாயுஜ்யமுக்தி பெறுவான். வேறு எந்த நதியோ, குளமோ, ஏரியோ கிடைத்தாலும் கட்டாயம் அதில் ஸ்நாநம் செய்யவேண்டும். பக்தியுடனோ பலாத்காரத்தாலோ தெரியாமலோ மாகஸ்நாநம் செய்தால் கூட முக்தி பெறுவது நிச்சயம்!” என்றார். இதைக்கேட்ட குமுதா அவரைத் துதித்து "ஐயா! நானும் தங்களுடன் வந்து இன்று அருகிலுள்ள தடாகத்தில் ஸ்நாநம் செய்கிறேன்!” என்று அவருடன் புறப்பட்டாள். இதை அறிந்த ஸுமந்தன் கோபம் கொண்டு "குளிரில் முழுகாதே!" என, அவளை மிரட்ட அடிப்பேனென அவளருகே வந்தான். அதற்குள் அவள் வேகமாக சென்று நீரில் ஒரு முழுக்குபோட்டாள். கணவன் கரையிலிருந்தே அவளை கையைப்பிடித்து இழுத்தான். அவள் எப்படியாவது கணவனும் ஸ்நாநம் செய்யட்டுமென அவன் கையை பிடித்திழுத்து ஜலத்தில் முழுகச்செய்தாள். இருவருமொரு வழியாக ஸ்நாநம் செய்து வீட்டிற்குச் சென்றனர். இந்த வேடிக்கையைப் பார்த்து சு2சிவ்ரதரும் மாகஸ்நாநம் செய்து சென்றார். சில நாட்கள் சென்றபின் ஸுமந்தனும் அவன் மனைவியும் இறந்தார்கள்.
யம கிங்கரர்கள் வந்து பாபியான ஸுமந்தனை பாசத்தால் கட்டி இழுத்துச்சென்றனர். வைகுண்டத்தில் இருந்து திவ்ய விமானம் வந்து குமுதாவை அழைத்தனர். அவள் "தேவ கிங்கரர்களே! எனது பதி யாதொரு தர்மமும் செய்யவில்லை. அவரது சேர்க்கையால் நானும் ஒரு தர்மமும் செய்யவில்லையே? என்னை மாத்திரம் ஏன் வைகுண்டத்திற்கழைக்கிறீர்கள்? அவரை விட்டுவிட்டு நான் மட்டும் வருவது நியாயமா?” என்றாள். "குமுதா! நீ மாக மஹிமையை கேட்டு புருஷன் தடுத்தும் ஒரு ஸ்நாநம் செய்துவிட்டாய். அதற்கு பலன் வைகுண்டம்" என்றனர் விஷ்ணு தூதர். "ஐயா! அவர் என்னை கரைக்கு இழுக்க நான் அவரை ஜலத்தில் இழுக்க, இருவருமே ஸ்நாநம் செய்தோமே.விருப்பின்றியோ பலாத்காரத்தாலோ ஸ்நாநம் செய்தாலும் வைகுண்டம் கிட்டும் என்றாரே சு2சிவ்ரதர்?” என்றாள்.
சித்ரகுப்தனிதைக்கேட்டு "ஸுமந்தனும் மாக ஸ்நாநம் செய்தவனாவான், . அவனையும் வைகுண்டம் அனுப்புங்கள்" என யமக்கிங்கரருக்கு உத்தரவிட்டார். இருவரும் வைகுண்டம் சென்றனர். ஸங்கமே கூடாது. அவஸ்யமானால் ஸத்துக்களுடன் ஸங்கம் வேண்டும். சுசிவ்ரதர் எனும் சாதுவின் சங்கத்தால் ஸுமந்தனும் வைகுண்டம் சென்றான். விருப்பமின்றி பலாத்காரத்தால் ஒரு முறை ஜலத்தில் வீழ்ந்ததே வைகுண்டமளித்தது. விதிப்படி 30 நாளும் ஸ்நாநம் செய்து பழமோ, தாம்பூலமோ தேங்காயோ வஸ்த்ரமோ, கம்பளமோ தானம் செய்தவர் பற்றி கூறவும் வேண்டுமா?
No comments:
Post a Comment