सति मूले तद्विपाको जात्यायुर्भोगाः ।।13।।
க்லேசங்கள் செய்யக்கூடியது:
ஸதி மூலே தத்³விபாகோ ஜாத்யாயுர்போ⁴கா³: || 13||
ஸதி மூலே தத்³விபாகோ ஜாத்யாயுர்போ⁴கா³:
க்லேச ரூபத்தில் உள்ள காரணமானது உள்ளபோது அவற்றின் பலன் உண்டாகிறது. அவை பிறப்பு, ஆயுள், போகம் ஆகியனவாகும்.
க்லேசங்கள் நீங்கி விட்டவனுக்கு கர்ம வாசனையும் அதன் பலன்களும் ஏற்படுவதில்லை. ஆசை இல்லாதவன் கர்ம பலனை அனுபவிக்கவும் இச்சை இல்லாதவனாகிறான். பயமில்லாததால் சோகமும் இராது. விவேக க்யாதி என்ற அக்னி இருப்பின் அது க்லேசங்கள் என்ற விதைகளை வறுத்துவிடும். வறுத்த நெல் முளைக்காதது போல க்லேசங்கள் இல்லாவிடில் கர்மவாசனை பலன் தராது.
கர்ம வாசனையால் ஏற்படுவது:
1.பிறப்பு: தேவ ஜென்மமா, மனுஷ்ய ஜென்மமா, விலங்கா தாவரமா என்பன. 2. ஆயுள்: எவ்வளவு காலம் தேகம் - இந்திரியங்களின் சேர்க்கை நீடிக்கும் என்பது. 3.போகம் என்பது இந்திரியங்களால் கிடைக்கும் சுக அனுபவங்கள்.
மரணம் ஏற்படும்போது வளர்ச்சியை அடைந்த அநேக கர்மங்கள் சேர்ந்தே பிறப்பை கொடுக்கின்றன. அந்த ஒரே உடலால் விசித்திரமான போகம் ஏற்படும். மேலும் கர்மங்கள் தனித்தனியாக பிறப்பு, ஆயுள், போகம் இவற்றை தனித்தனியாகவோ, சேர்ந்தோ கொடுக்கவும் கூடும்.
கர்மா மூலம் உண்டாகும் ஜென்மங்கள் பற்றி சில கேள்விகள் உள்ளன.
ஒரு கர்மம் ஒரு ஜென்மத்தை மட்டும் உண்டுபண்ணுமா அல்லது பல ஜென்மங்களை உண்டு பண்ணுமா?
இல்லை அநேக கர்மங்கள் சேர்ந்து ஒரு ஜென்மத்தை உண்டாக்குமா?
அல்லது அவை அநேக ஜென்மங்களுக்கு வழி செய்கின்றனவா?
ஒரு கர்மம் ஒரு பிறப்பை மட்டுமோ அல்லது அநேக பிறப்புக்களையோ தராது. நம் கர்மாக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு ஜன்மம் அல்லது பல ஜென்மங்களை தருமானால் பெரிய காத்திருப்பு பட்டியல்தான் தேவை. ஆகவே அநேக கர்மாக்கள் சேர்ந்து ஒன்றோ பலவோ ஜென்மங்களை தருகின்றன. ஒரு ஜன்மத்தில் பலன் தரும் கர்மாக்களில் பிரதானமாக ஒன்று இருக்கும். அது அப்போதே பலன் தருவது, மற்றவை இதனுள் அடங்கும். இந்த கர்மாக்களே ஆயுளையும் நிர்ணயிப்பதாக கண்டோம் அல்லவா? மரண காலத்தில் கர்மாக்கள் நேரத்தை நிர்ணயித்ததுடன் பலனை கொடுத்து தீராததால் அடுத்த ஜன்மாவையும் தருகின்றன. இதே கர்மாக்களால் அவன் அடுத்த ஜென்மத்தின் போகங்களையும் அனுபவிக்கிறான்.
பிரதான கர்மா பலமாக இருக்க மற்றவை அதற்கு எதிராக பலன் தர வேண்டியிருப்பின் தடை உண்டாகி வெகு காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். கர்மா சரியாக உருவாகாமல் நாசம் ஆகவும் செய்யலாம். பிரதான கர்மாவுக்கு விரோதமாக இல்லாமல் இருப்பின் நடு நடுவே தன் பலனை கொடுத்து விடலாம். அதற்கு ஒத்துப்போனால் சேர்ந்தேவும் கொடுத்துவிடலாம்.
"புண்யே பாபம் அபநுததி" என்ற படி புண்ணியத்தால் பாபத்தின் விளைவை தடுத்துக்கொள்ளலாம்.
சில கர்மாக்கள் -ஜ்யோதிஷ்டோமம் போன்ற யாகங்களில் புண்ணியமும் பாபமும் கலந்தே வருகின்றன. யாகங்களால் சுவர்க்க வாசம் கிட்டினாலும் தேவர்களாலும் கஷ்டம் அனுபவிக்க நேருகிறது.
வரும் ஜன்மத்தில் நிச்சயமாக பலன் தரும் கர்மங்கள்
மரணப்பிரகாசகம் எனப்படும். இவை இப்போது பலன் தரத்தொடங்கிவிட்ட கர்மாக்கள். மரணத்தை தருவதுடன் அடுத்து அனுபவிக்க வேண்டியவைகளுக்கு தகுந்த சூழ்நிலையையும் இவை உண்டு பண்ணிக்கொள்ளும்.
இதனாலேயே கர்மாவானது இன்ன பலன் இப்போது தரும் என்று நிச்சயித்து சொல்ல முடியாமல் இருக்கிறது.