विशेषाविशेषलिङ्गमात्रालिङ्गानि गुणपर्वणि ।।19।।
விஶேஷாவிஶேஷ லிங்க³மாத்ராலிங்கா³நி கு³ணபர்வணி || 19||
விஶேஷ = ஐந்து மஹா பூதங்கள், பத்து இந்திரியங்கள், மனது ஆகிய 16 விகாரங்கள்
அவிஶேஷ = பஞ்ச தன் மாத்திரைகள் + அஸ்மிதை
லிங்க³மாத்ர = மஹத் தத்துவம்
அலிங்கா³நி = பிரதானம் என்கிற ப்ரக்ருதி
கு³ணபர்வணி = ஸத்வம் முதலான குணங்களின் வேறு உருவங்களாக ஆகின்றன.
லிங்கம் என்பது குறி. குறிப்பில்லாமல் ப்ரக்ருதி இருக்கிறது. இதில் முக்குணங்களும் சமமாக இருக்கும். அதை இன்னது என்று குறித்து காட்ட முடியாதில்லையா? அதனால் அது அலிங்கம்.
இந்த ப்ரக்ருதியில் இருந்து உண்டாகிறது மஹத் தத்வம். மஹத் தத்துவத்துக்கு கொஞ்சமாவது அடையாளம் காட்டலாம். சத்வ குணம் மேலோங்கி மற்றவை அதற்குள் அடங்கி இருக்கும். அதற்கு மேல் அதை விளக்க முடியாது. ஆகவே அது லிங்க மாத்ரம்.
மஹத்தத்வத்திலிருந்து அஹம் தத்வம் உற்பத்தி ஆகும். அதில் இருந்து பஞ்ச தன்மாத்திரைகளும் அஸ்மிதையும். இவை அதிகம் விசேஷமாக பாகு படாதவை. ஆகவே அவிசேஷம். இவற்றில் இருந்து என்னென்ன உற்பத்தி ஆகும்? ஐந்து மஹா பூதங்கள், பத்து இந்திரியங்கள், மனது ஆகிய இவை நன்கு பாகுபட்டவை. ஆகவே விசேஷம்.
உத்பத்தி கிரமம்: உயர்வு தாழ்வில்லாத குணங்கள் உள்ள ப்ரக்ருதி.
அதிலிருந்து மஹத் தத்துவம். அதிலிருந்து அஹம் தத்துவம். இதில் எந்த குணமும் மற்றவற்றில் அடங்கி இருக்கலாம்.
இந்த அஹம் தத்துவத்தில் இருந்து தமோ குணம் பிரதானமான (முக்கியமான) போது சப்த தன் மாத்திரை உண்டாகும்.(முதல் பாதம் 45 வது சூத்திரத்திலே கொஞ்சம் பார்த்தோம் இல்லையா? ஸூக்ஷ்மமானவை எவைன்னு பார்க்கும் போது) இந்த சப்த தன்மாத்திரைக்கு அசாதாரணமான லக்ஷணம் சப்தம். (இதே போல பெயரை ஒட்டி அதன் அதன் அசாதாரணமான லக்ஷணத்தை அறியலாம்.) ஒவ்வொன்றிலிருந்து எது வருகிறது எனப்பார்க்கலாம். சப்த தன்மாத்திரை> ஸ்பர்சம் > ரூபம் > ரஸம் >கந்தம். தமிழில் சொல்ல ஒலி>தொடுதல்> வடிவம்>சுவை>மணம்.
இந்த வரிசையில் பின்னோக்கிப் பார்க்க ஒன்றில் மற்றவற்றின் குணங்கள் இருக்கும். அதாவது மணத்தில் சுவை, வடிவம், தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். சுவையில் மணம் நீங்கலாக வடிவம், தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். வடிவத்தில் மணம், சுவை நீங்கலாக தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். தொடுதலில் மணம், சுவை,வடிவம் நீங்கலாக ஒலி மட்டும் இருக்கும். ஒலியில் மற்ற குணங்கள் இருக்காது.
இவை அவிசேஷங்கள். ஸூக்ஷ்மமானவை.
இவற்றிலிருந்து பருப்பொருளான (ஸ்தூலமான) ஆகாசம்; அதிலிருந்து வாயு; அதிலிருந்து அக்னி: அதிலிருந்து நீர்; அதிலிருந்து நிலம் ஆகியன உண்டாகும்.
சத்வ குண பிரதானமான அஹம் தத்துவத்திலிருந்து மனசு உண்டாகிறது.
ரஜோ குண பிரதானமான அஹம் தத்துவத்திலிருந்து இந்திரியங்கள் (கர்ம, ஞான) உண்டாகின்றன.
அடுத்து லயக்கிரமம்.
No comments:
Post a Comment