லயக்கிரமம்: உத்பத்தி ஆன அதே கிரமத்தின் நேர்மாறான கிரமத்தில் லயம் உண்டாகும். அதாவது எது எங்கிருந்து வந்ததோ அதிலேயே லயமாகிவிடும். அதாவது நிலம் நீரிலும்; நீர் அக்னியிலும்; அக்னி வாயுவிலும்; வாயு ஆகாசத்திலும் லயமாகும். ஆகாயம் அது வந்த தமோ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும்.
இதே போல இந்திரியங்கள் ஒன்றில் ஒன்று லயமாகி அவை வந்த ரஜோ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும்.
மனசு அது வந்த சத்வ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும். இந்திரியங்கள் மனதில் லயமாகி அது அஹம் தத்துவத்தில் லயமாகும் என்றும் சிலர் அபிப்பிராயப் படுகிறார்கள்.
அஹம் தத்துவம் மஹத் இலும், அது ப்ரக்ருதியிலும் லயமாகும். இந்த ப்ரக்ருதி நிலையே இயற்கையானதால் இதுவே நித்யம். அதிலிருந்து வருபவை அவற்றின் வேலை முடிந்தபின் லயமாகி விடும் என்பதால் அவை அநித்தியம்.
எந்த நிலையானாலும் முக்குணங்களும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே இவற்றுக்கு உத்பத்தியும் இல்லை நாசமும் இல்லை.
ஒருவர் பல பசு மாடுகளை வைத்து இருக்கிறார். சௌகரியமாக இருக்கிறார். இப்போது இவருக்கு ஏழ்மை இல்லை. பசுக்கள் எல்லாமே ஒரு வேளை நோய் தாக்கி இறந்து போனால் அவர் ஏழ்மை அடைவார். அவரை ஏழை என்பர். ஆனால் அவர் அப்படியேதானே இருக்கிறார்? ஏழ்மை என்பது பசுக்களின் இருப்பை பொறுத்ததே தவிர அவரை பொறுத்ததில்லை. இதே போல குணங்கள் உத்பத்தி ஆகவும் இல்லை: அழியவும் இல்லை. அவை வெளிப்படும்; அல்லது சூக்ஷ்மமாக இருக்கும். அதனால அதன் தற்கால பாதிப்பை பொருத்து ஒருவரது குணம் அழிந்ததாகவோ உத்பத்தி ஆனதாகவோ சொல்கிறோம்.
இப்படி கிரமமாக ஒன்றிலிருந்து ஒன்று தத்வ ரூபமாக மாறுதல்களை அடைகின்றன. கடைசியில் கிடைத்த விசேஷங்கள் 16 உம் அதற்கு மேல் தத்வ மாறுதல் அடையா. ஆனால் அவற்றின் சொரூபம் தர்மம் லக்ஷணம் அவஸ்தை என மாறுதல் அடையும்.
1 comment:
>>>ஏழ்மை என்பது பசுக்களின் இருப்பை பொறுத்ததே தவிர அவரை பொறுத்ததில்லை <<<
நல்ல உதாரணம்
தேவ்
Post a Comment