Pages

Thursday, March 31, 2011

புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம்...



सदा ज्ञाताश्चित्तवृत्तयस्तत्प्रभयोः पुरुषस्यापरिणामित्वात् ।।18।।
ஸதா³ ஜ்ஞாதாஶ்சித்தவ்ரு«த்தயஸ்தத்ப்ரப⁴யோ​: புருஷஸ்யாபரிணாமித்வாத் || 18||

ஸதா³ ஜ்ஞாதா: எப்பொழுதும் அறியப்பட்டவை (ஆகின்றன) ; சித்த வ்ரு«த்தய: = சித்தத்தின் விருத்திகள்; தத் ப்ரப⁴யோ​: புருஷஸ்ய =புருஷனின்; அபரிணாமித்வாத் = பரிணாமமற்றிருத்தல் என்பதால்;

சித்தத்துக்கு வெளி வஸ்து ஒன்றுடன் இந்திரியங்கள் மூலம் ஒரு ஸம்பந்தம் ஏற்பட்டதும் அது அந்தந்த விஷய வடிவாக ஒரு மாறுதலை (பரிணாமத்தை) அடைகிறது. இப்படி மாறுதல் இல்லையானால் அந்த வஸ்து அறியப்பட மாட்டாது. ஆகவேதான் சித்த விஷயமான சப்தம் முதலிய சில அறியப்படாமல் இருக்கிறது. வேலையில் மிக மும்முரமாக இருந்த ஒருவரிடம் இப்போது இடி இடித்ததே தெரியாதா என்றால், அப்படியா எனக்கு சப்தம் ஒன்றும் கேட்கவில்லையே என்கிறார்.

ஆனால் புருஷன் விஷயத்தில் இப்படி இல்லை. புருஷனுக்கோ பரிணாமம் - மாறுதல் என்ற ஒன்றே இல்லை. அவனுக்கு எல்லாமும் எப்போதும் அறியப்பட்டதுதான். அறியப்படாதது என்று ஒன்றுமே அவனுக்கு இல்லை.
இப்படியாக புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம் நன்கு இருக்கிறது.

Wednesday, March 23, 2011

சித்தமும் வஸ்துகளும்...



 तदुपरागापेक्षित्वाच्चित्तस्य वस्तु ज्ञाताज्ञातम् ।।17।।
தது³பராகா³பேக்ஷித்வாச்சித்தஸ்ய வஸ்து ஜ்ஞாதாஜ்ஞாதம் || 17||

தத்³ உபராக³ = அந்த விஷயத்தின் சம்பந்தம் (இந்திரியங்கள் மூலம்); அபேக்ஷித்வாத் = எதிர் பார்க்கப்படுவதால்; சித்தஸ்ய = சித்தத்தின்; வஸ்து ஜ்ஞாதா ஜ்ஞாதம் = வஸ்து அறியப்பட்டதாகவும் அறியப்படாததாகவும் ஆகிறது.

யோக சித்தாந்தப்படி சித்தம் எங்கும் இருப்பது. அதன் சம்பந்தம் எல்லாவற்றுக்கும் இருக்கிறது என்றாலும் எல்லா விஷயங்களும் எப்போதும் அறியப்படுவதில்லை. அந்த விஷய சம்பந்தத்திற்கு சித்தத்தின் அதிகாரத்தை உண்டு பண்ணும் சக்தி இல்லை. அதனால் அந்த விஷயம் அறியப்படவில்லை. சாதாரணமாக நம் சரீரத்தில் இருக்கும் இந்திரியங்களின் வாயிலாக வெளி வஸ்துக்களுடன் சித்தத்துக்கு நேரும் சம்பந்தமே விஷய அதிகாரத்தை உண்டு பண்ண முடிகிறது. அப்படி இல்லாதது அறியப்படாததாக ஆகிறது.

Tuesday, March 22, 2011

புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம் ...



सदा ज्ञाताश्चित्तवृत्तयस्तत्प्रभयोः पुरुषस्यापरिणामित्वात् ।।18।।
ஸதா³ ஜ்ஞாதாஶ்சித்தவ்ரு«த்தயஸ்தத்ப்ரப⁴யோ​: புருஷஸ்யாபரிணாமித்வாத் || 18||

ஸதா³ ஜ்ஞாதா: எப்பொழுதும் அறியப்பட்டவை (ஆகின்றன) ; சித்த வ்ரு«த்தய: = சித்தத்தின் விருத்திகள்; தத் ப்ரப⁴யோ​: புருஷஸ்ய =புருஷனின்; அபரிணாமித்வாத் = பரிணாமமற்றிருத்தல் என்பதால்;

சித்தத்துக்கு வெளி வஸ்து ஒன்றுடன் இந்திரியங்கள் மூலம் ஒரு ஸம்பந்தம் ஏற்பட்டதும் அது அந்தந்த விஷய வடிவாக ஒரு மாறுதலை (பரிணாமத்தை) அடைகிறது. இப்படி மாறுதல் இல்லையானால் அந்த வஸ்து அறியப்பட மாட்டாது. ஆகவேதான் சித்த விஷயமான சப்தம் முதலிய சில அறியப்படாமல் இருக்கிறது. வேலையில் மிக மும்முரமாக இருந்த ஒருவரிடம் இப்போது இடி இடித்ததே தெரியாதா என்றால், அப்படியே எனக்கு சப்தம் ஒன்றும் கேட்கவில்லையே என்கிறார்.
ஆனால் புருஷன் விஷயத்தில் இப்படி இல்லை. புருஷனுக்கோ பரிணாமம் - மாறுதல் என்ற ஒன்றே இல்லை. அவனுக்கு எல்லாமும் எப்போதும் அறியப்பட்டதுதான். அறியப்படாதது என்று ஒன்றுமே அவனுக்கு இல்லை.
இப்படியாக புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம் நன்கு இருக்கிறது.



Friday, March 18, 2011

த்ருஷ்டியும் ஸ்ருஷ்டியும்:



न चैकचित्ततन्त्रं वस्तु तदप्रमाणकं तदा किं स्यात्।16।।
ந சைகசித்ததந்த்ரம்° வஸ்து தத³ப்ரமாணகம்° ததா³ கிம்° ஸ்யாத்| 16||

ந ச = ஆகாது; ஏக = ஒரு; சித்த தந்த்ரம் = சித்தத்தின் தந்திரம் (ஒருவனது ஞானத்தால் உண்டுபண்ணதாக); வஸ்து = வெளியில் உள்ள குடம் போன்ற வஸ்து; தத³ = பின்னால் (வஸ்துவை உண்டு பண்ணிய சித்தம் வேறு விஷயத்தில் நாட்டம் கொண்டால் அறியப்பட்ட வஸ்து); அப்ரமாணகம்° = ப்ரமாணம் இல்லை என்பதால்; ததா³ கிம்° ஸ்யாத் = இல்லாமல் போகுமா என்ன?

திருஷ்டி ஸ்ருஷ்டிவாதிகள் சொல்வது என்னவென்றால் விக்ஞானத்தை விட பொருள் வேறாகத்தான் இருக்கிறது. ஆனால் அது ஜடம். ஞானத்தால்தான் அது தோற்றத்தை அடைய வேண்டும். மனசு என்று ஒன்று அறிவதால்தான் ஒரு பொருள் இருக்கிறது. அறிய ஒன்றும் இல்லையானால் பொருள் இல்லை. ஆகவே அறியப்படும் வஸ்துக்களும் ஞானம் இருக்கும் போது மட்டுமே இருக்கின்றன. மற்ற நேரங்களில் இருப்பதாக சொல்ல ஆதாரம் ஏதுமில்லை. எப்படி சுக துக்கங்கள் இருக்கும் போது அவை அனுபவிக்கக்கூடியவையாக இருக்கிறதோ; நாமும் அதனால் அவற்றை ஒப்புக்கொள்ளுகிறோமோ அதே போல பொருட்களையும் அனுபவத்தில் இருக்கும்போது மட்டுமே ஒப்புக்கொள்ள வேன்டும்.

இதை இங்கு பதஞ்சலி ஆக்ஷேபிக்கிறார்.

ஒரு குடத்தை பார்க்கிறோம். அதனால் அதன் இருப்பு ஏற்படுகிறது எனில் அது ஒருவர் பார்த்ததாலா, பலர் பார்த்ததாலா? ஒருவர் பார்ப்பதை நிறுத்திவிட்டால் அது இல்லாமல் போகுமா? ஒருவர் பார்த்து குடம் உண்டானால் மற்றவர் பார்க்க பார்க்க காரணம் (பொருள் உண்டாவதன் காரணம்) மாறிக்கொண்டே இருப்பதால் குடம் அழிந்து அழிந்து தோன்ற வேண்டுமே? அப்படியா நடக்கிறது? இல்லை அது ஒருவனுடைய சித்த ஆதீனம் (சித்தத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது) என்றால் அவன் அதை பார்ப்பதை நிறுத்த மற்றவரும் பார்க்க முடியாமல் போக வேண்டும். அப்படியும் அனுபவத்தில் இல்லை.
இதனால் வெளி வஸ்துக்கள் ஒருவரது ஆதீனத்தில் இல்லை.


Thursday, March 17, 2011

ஞானமும் அறியப்படுவதும்:



वस्तुसाम्ये चित्तभेदात्तयोर्विविक्तः पन्थाः ।।15।।
வஸ்துஸாம்யே சித்தபே⁴தா³த்தயோர்விவிக்த​: பந்தா²​: || 15||

வஸ்து ஸாம்யே அபி = அறியப்படும் வஸ்து ஒன்றாக இருந்தாலும்; சித்த பே⁴தா³த் = சித்தம் என்பது வித்தியாசப்படுவதால்; தயோர் = அவற்றின்; விவிக்த​: = வேறுவேறான; பந்தா²​: = வழிகள் (ஆக இருக்கின்றன)

பௌத்தர்களின் வாதம் என்னவெனில் ஞானத்தை தவிர்த்து ஏதுமே இல்லை. உலகில் ஒவ்வொரு கணமும் உண்டாகி அழியும் பொருட்களே இருக்கின்றன. இவற்றை அறியும் அறிவுக்கும் பொருட்களுக்கும் வேறுபாடு இல்லை. கணத்தில் தோன்றி மறையும் வஸ்துக்களே இருப்பதால் அனேக விசித்திரமானவையாக அவை தோன்றுகின்றன. ஆக ஞானத்தைத்தவிர ஏதுமே இல்லை. ஆக காரணங்களின் உண்மையான சொரூபம் முக்குணங்களே என்பது சரியில்லை.

இதற்கு பதஞ்சலி சொல்லும்பதில்:
அறியப்படும் வஸ்து ஒன்றாக இருந்தாலும் அறிகின்ற மனிதர்களில் வேற்றுமை இருக்கிறது. அதனால் வெவ்வேறான விளைவுகள் உண்டாகின்றன.
ஒரு பெண் இருக்கிறாள். அவளைப்பற்றி அவளது கணவனுக்கு ஏற்படுவது ஸுக ஞானம். அவளது குழந்தைக்கு ஏற்படுவது பாசம். அவளது சக்களத்திமார்களுக்கு ஏற்படுவது துக்கம். அவளிடம் ஆசை கொண்ட ஒருவனுக்கு உண்டாவது மோஹம். சம்பந்தமில்லாத மூன்றாம் மனிதன் ஒருவனுக்கு ஏற்படுவது உதாசீனம். இப்படி அறியப்பட்டது ஒன்றாயிருக்க உண்டாகும் அறிவின் தன்மை வெவ்வேறாக இருக்கலாம்.
ஆகவே ஞானத்தால் அறியப்பட்டதும் ஞானமும் ஒன்று என்பது பொருத்தமில்லை. அறிவோர் இடத்து முக்குணங்களில் எது தலை தூக்குகிறது என்பதைப்பொறுத்து ஞானம் அமையும்.

Wednesday, March 16, 2011

குணங்களின் பரிணாமம்:



 परिणामैकत्वाद्वस्तुतत्वम् ।।14।।
பரிணாமைகத்வாத்³வஸ்துதத்வம் || 14||

பரிணாம = பரிணாமங்களில்; ஏகத்வாத்³ = ஒருமை; வஸ்துதத்வம் = மஹத் முதலான தத்துவங்களில்;
ப்ரக்ருதியில் க்லேச (மனச்சலன) வாசனைகள் அநாதியாகவும் வெவ்வேறாகவும் இருப்பதால் அவற்றை ஒட்டி காரியம் வேறுபடுகிறது.
முக்குணங்கள் இருப்பினும் அவற்றில் ஒன்று பிரதானமாகவும் மற்ற இரண்டும் அங்கமாகவும் இருக்கும். ஸத்வ குணம் ப்ரதானமான போது மஹத் என்ற பரிணாமம். ரஜஸ் ப்ரதானமானபோது அஹங்காரம் என்ற பரிணாமம். தமஸ் ப்ரதானமானபோது பஞ்ச தன் மாத்ரை என்ற பரிணாமம்.

இதே போல அஹங்காரத்தில் இருந்து:
சத்வ ப்ரதானமான அஹங்காரத்தில் இருந்து ஞானேந்திரியங்கள்.
ரஜஸ் ப்ரதானமான அஹங்காரத்தில் இருந்து கர்மேந்திரியங்கள்.
ஸத்வம் ரஜஸ் சமமாக உள்ள அஹங்காரத்தில் இருந்து மனஸ் ஆகியன உண்டாகின்றன.
தன்மாத்திரை என்பது 5 வித தத்துவங்கள்.
1.சப்தம். 2.ஸ்பர்சம். 3.ரூபம். 4.ரஸம். 5.கந்தம்.
சப்தம் ப்ரதானமாகவும் மற்ற தன் மாத்திரைகள் அங்கமாகவும் இருக்கும்போது ஆகாசம் என்ற பரிணாமம் உண்டாகிறது.
இதே போல ஸ்பர்சம் - வாயு; ரூபம் - அக்னி; ரஸம் - ஜலம்; கந்தம் -ப்ருத்வீ; என ஊகித்தறியவும்.
இப்படி எது ப்ரதானமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து தனித்துவம் உண்டாகிறது.

Tuesday, March 15, 2011

முக்குணங்களின் ஸ்வரூபம்:



 ते व्यक्तसूक्ष्मा गुणात्मानः ।।13।।
தே வ்யக்தஸூக்ஷ்மா கு³ணாத்மாந​: || 13||

வ்யக்த = நிகழ் காலத்திலும்; ஸூக்ஷ்மா = சென்ற காலம், எதிர்காலம் (இவற்றின் சம்பந்தத்தை அடைந்தும் இருக்கிற); தே = அவை (மஹத் தத்வம் முதல் விசேஷம் உள்ள குடம் வரை எல்லா கார்யங்களும்); கு³ணாத்மாந​: = முக்குணங்களின் சொரூபமாக இருக்கின்றன.

எல்லாப்பொருட்களும் சுக, துக்க, மோஹம் ஆகியவற்றை பொருந்தியதாக உள்ளன. ஆகவே இவை சுக துக்க மோஹமான முக்குணங்களிலிருந்தே வருகின்றன. குடத்தை மண்ணாக பார்ப்பது போல சுக துக்க மோஹங்களை முக்குண வடிவமாகவே பார்க்கலாம்.

குணங்கள் நித்தியமானவை; ஆனாலும் அவற்றின் மாறுதல் அடைந்த வடிவங்களான எல்லா காரிய வஸ்துக்களும் கணத்துக்கு கணம் நாசமடைகின்றன. புருஷ தத்துவமோ பிரக்ருதியான ஸத்வம் ஆகிய குணங்களில் இருந்து வேறுபட்டது. அதிலிருந்து வந்த மஹத் போன்றவற்றில் இருந்தும் வேறுபட்டது. கூடஸ்தன் எனப்படுகிறது.

எல்லா காரியங்களுக்கும் முக்குணங்களே காரணமானால் எப்படி ஒவ்வொரு காரியங்களுக்கும் வேற்றுமை இருக்கிறது?


Monday, March 14, 2011

வாசனைகளை கையாள்வது....



अतीतानागतं स्वरूपतोऽस्त्यध्वभेदाद्धर्माणाम् ।।12।।
அதீதாநாக³தம்° ஸ்வரூபதோ'ஸ்த்யத்⁴வபே⁴தா³த்³த⁴ர்மாணாம் || 12||

அதீத =இறந்த கால; அநாக³தம்° = வரப்போகின்ற; ஸ்வரூபத: = (சக்தி) ரூபமாக; அஸ்தி = இருக்கிறது; அத்⁴வ பே⁴தா³த்³ = (முக்காலத்திலும்) அவஸ்தைகள் ஒவ்வொரு வஸ்துவிலும் தனித்தனியே அனுபவிக்கப்படுவதால்; த⁴ர்மாணாம்= கார்யமாகிய தர்மங்களுக்கு;

இல்லாதது உண்டாவதில்லை; இருப்பது அழிவதில்லை என்று கீதை வாக்கியப்படி (நாஸதோ வித்3யதே பா4வ: நாபா4வோ வித்3யதேஸத: ) இருக்கும் போது எப்படி வாசனைகள் அழியக்கூடும்?
சத்தான வஸ்துக்களுக்கு இல்லாமை என்பது சம்பவிக்க முடியது என்பது சரியே.
ஒரு காரியத்துக்கு காலத்தை ஒட்டி நிலைகள் 3 இருக்கிறது. அது வெளிப்பட்டு மறையும். அதற்கு இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம். இந்த 3 காலங்களில் ஏதோ ஒன்றில் எல்லாமே இருந்து தீர வேண்டும்.
"வேதா3ஹம் ஸமதீதாநி வர்த்தனமானாநி ச அர்ஜுன ப4விஷ்யாணி ச பூதாநி" - மூன்று அவஸ்தைகளிலும் வஸ்துக்களை நான் சாக்ஷாத்காரம் செய்கிறேன் என்று ஸ்ரீக்ருஷ்ணன் சொன்னபடி...

காரியம் நடப்பில் இருக்கும்போது நமக்கு தெரிகிறது. உண்டாகும் முன்னும் நடந்த பின்னும் அது சக்தி ரூபமாக இருக்க வேண்டும். அப்போதுதானே அது சாக்ஷாத்கரிக்கப்பட முடியும்? சக்தி வடிவமாக காரணத்தில் ஒடுங்கி இருக்கும் இதைத்தான் பரிணாம-த்ரய ஸம்யமாத். .. (விபூதி பாதம், 16) என்று யோகிகள் சாக்ஷாத்காரம் செய்கின்றனர்.

வாசனைகள் ஸத்காரிய வஸ்துக்கள்; அவை முற்றும் நாசமாகா. இருந்தாலும் அவை நிகழ்காலத்தில்தானே நமக்கு வெளிப்படுத்திக் கொள்ளுகின்றன? அப்படி வெளிப்படுத்திக்கொண்டு கணக்கில்லா பரிமாணங்களை அடைகின்றன. இதுவே பந்தம் அல்லது சம்சாரம் எனப்படும்.
தத்துவ க்ஞானத்தால் "சரி, நடந்தது நடந்துவிட்டது, விடு" என்று அவற்றை இறந்த காலத்துக்கு தள்ளிவிட்டால் பந்தம் போய் விடுவதால் அவை நம்மை பாதிக்கமாட்டா. விவேகக்யாதி அடைந்த சித்தமுள்ளவனுக்கு இந்த வாசனைகள் மீண்டும் வெளிப்படா.
மோக்ஷ நிலையில் இருப்பவனுக்கு வாசனைகள் சக்தி ரூபமாகவே இருந்துவிடும்; பந்தகம் ஆவதில்லை.

முக்காலங்களிலும் எல்லா வஸ்துக்களும் ஸ்வரூபத்தால் இருக்குமெனில் 'இறந்த' மற்றும்  'வரும்' காலங்களில் அவற்றின் ஸ்வரூபம் என்ன?

Friday, March 11, 2011

வாசனை இல்லாமல் போக...



 हेतुफलाश्रयालम्बनैः संगृहीतत्वादेषामभावे तदभावः ।।11।।
ஹேதுப²லாஶ்ரயாலம்ப³நை​: ஸம்°க்³ரு«ஹீதத்வாதே³ஷாமபா⁴வே தத³பா⁴வ​: || 11||

ஹேது = (வாசனைக்கு) ஏதுவானவை [காரணமானவை] (அவித்யா, அஸ்மிதா முதலான காரணங்கள்) ப²ல =பலனான (ஜாதி, ஆயுள், போகம் ஆகியன); ஆஶ்ரய = மனதாகிய பற்றுதலாலும் (ஆஶ்ரயத்தாலும்); ஆலம்ப³நை​: = (நல்ல சப்தம் முதலான) சுகமான விஷய பற்றுதல்களாலும் (ஆஶ்ரயங்களாலும்); ஸம்°க்³ரு«ஹீதத்வாத் = இவற்றுடன் சேர்ந்தே இருப்பதால்; ஏஷாம் = இவற்றின் (ஹேதுக்களின்) அபா⁴வே = இல்லாமை ஏற்பட்டால்; தத³பா⁴வ​ = வாசனையின் இல்லாமையும் ஏற்படுகிறது.

வாசனைக்கு எது காரணமோ அதை நீக்கினால் வாசனையும் இல்லாமல் போகும். அவித்தையே வாசனைக்கு முக்கிய காரணம். இந்த அவித்தை முதலான ஹேதுக்கள் பற்றுதலை முக்கியமாக கொண்டவை. ஆகவே மனது, சுக விஷயங்கள் ஆகியவற்றில் பற்றை நீக்க ஹேதுக்களும் நீங்கும்.


Thursday, March 10, 2011

வாசனைகள் அநாதி....



तासामनादित्वमाशिषो नित्यत्वात् ।।10।।
தாஸாமநாதி³த்வமாஶிஷோ நித்யத்வாத் || 10||

தாஸாம் = அவற்றுக்கு (முந்தைய ஜன்ம வாசனைகளுக்கு) ; அநாதி³த்வம் =ஆதி இல்லாமல் இருப்பது என்பது; ஆஶிஷோ = எப்பொழுதும் உயிருடன் இருக்க வேண்டும்; மரணத்தை அடையக்கூடாது என்ற ப்ரார்த்தனை; நித்யத்வாத் = எல்லா ப்ராணிகளுக்கும் இருப்பதால்; (அங்கீகரிக்கத்தக்கது)

எல்லா ப்ராணிகளும் உயிருடனேயே இருக்க விரும்புகின்றன. மரணத்தை யாரும் வரவேற்பதில்லை. சிறு குழந்தையும் நழுவும் நிலை ஏற்பட்டால் கைக்கு கிடத்ததை கெட்டியாக பிடித்துக்கொள்கிறது. இந்த பயம் முன் பிறவி இல்லாமல் ஏற்படுவதல்ல. அந்த முன் பிறவியில் இருந்திருக்க வேண்டிய மரண பயம் அதற்கு முன் ஒரு பிறவி இருந்திருக்க வேண்டுமென காட்டுகிறது. இப்படியே முன் ஜன்மம், அதற்கு முன் ஜன்மம் என்று போவதால் வாசனைகள் ஆதி இல்லாதவை -அநாதி- என்று ஏற்படுகிறது.


Wednesday, March 9, 2011

வாசனை...



जातिदेशकालव्यवहितानामप्यानन्तर्य स्मृतिसंस्कारयोरेकरूपत्वात् ।।9।।
ஜாதி தே³ஶ கால வ்யவஹிதாநாமப்யாநந்த ஸ்ம்ரு«திஸம்°ஸ்காரயோரேகரூபத்வாத் || 9||

ஜாதி தே³ஶ கால வ்யவஹிதாநாம் அபி = ஜாதி, தேசம், காலம் ஆகியவற்றால் விலகி இருந்தாலும்; ஆநந்தர்ய = தடை இல்லாதது போல வேலை செய்யும் சக்தி; ஸ்ம்ரு«தி = நினைவிற்கும்; ஸம்°ஸ்காரயோ = நினைவுக்கு காரணமான ஸம்ஸ்காரங்களுக்கும்; ஏகரூபத்வாத் = ஒரே ரூபத்தை முடையதாக இருப்பது; (இப்படியாக அங்கீகரிக்கப்படுகிறது)

சுகமோ துக்கமோ ஒரு விஷயத்தை அனுபவிப்பதால் சித்தத்தில் ஏற்படும் தர்மமோ, அல்லது அனுபவத்தின் ஸூக்ஷ்ம நிலையோ வாசனை எனப்படும். ஒரு ஜீவன் பல பிறவிகளை அடைகிறது. முன்னர் ஒரு கல்ப காலம் முன்தான் மனித பிறவி இருந்தது என்றாலும் கூட இப்போது மனிதப்பிறவி வாய்க்கையில் போன மனித பிறவியில் ஏற்பட்ட வாசனைகளே இப்போது வெளிப்படும். வெகு காலமாகிவிட்டதால் அது மறந்துவிடும் என்று இல்லை. முன் பிறவியில் தேவனாக இருந்து இருந்தால் கூட இப்போது அந்த வாசனைகள் வெளிப்படாது. சமீபத்தில் இருந்த பிறவி என்பதால் அது இப்போது வெளிப்படாது. சின்னஞ்சிறு குழந்தை (பசித்தால்) எப்படி அம்மாவின் மார்பை நாடுகிறது? முன் மனித பிறவி வாசனையே! இவ்விதமே மற்ற ஸம்ஸ்காரங்கள்.

Tuesday, March 8, 2011

கர்மா பலன் தரும்போது...



 ततस्तद्विपाकनुगुणानामेवाभिव्यक्तिर्वासनानाम् ।।8।।
ததஸ்தத்³விபாகநுகு³ணாநாமேவாபி⁴வ்யக்திர்வாஸநாநாம் || 8||

தத: அவற்றிலிருந்து (முன் கூறிய மூவித கர்மாக்களால்) தத்³விபாக அநு கு³ணாநாம் = அந்தந்த கர்ம பலனான ஜாதி, ஆயுள், போகம் இவற்றுக்கு அனு குணமான; ஏவ = நிச்சயமாக; அபி⁴வ்யக்தி =வெளிப்படுதல்; வாஸநாநாம் = ஸம்ஸ்காரங்களுக்கு;

ஒரு கர்மா பலன் தரும்போது தேவர், மனிதர் முதலான பிறவி எது கிடைக்கும்; அதில் என்ன ஆயுள் கிடைக்கும், அனுபவிக்க வேண்டிய சுக துக்கங்கள் என்ன என்று மூன்று வித பலன்களை நிர்ணயித்து விடுகிறது. ஒரு ஜீவன் பல வித பிறவிகளை அடைகிறது. அந்தந்த பிறவிக்கு தகுந்தபடியே வாசனைகளும் செயல்படும், அவற்றின் வெளிப்பாடும் இருக்கும். பூனை பிறவியில் எலியை பிடித்தலே வாசனையாக வெளிப்படும். மனித ஜன்மம் எடுத்தால் தேவ போக வாசனைக்கு வெளிப்பாடு உண்டாகாது.
இந்த ஸம்ஸ்காரம் - வாசனை இதெல்லாம் என்ன?


Monday, March 7, 2011

யோகியின் செய்கைகளில் பாவ புண்ணியம்...



कर्माशुक्लाकृष्णं योगिनस्त्रिविधमितरेषाम् ।।7।।
கர்மாஶுக்லாக்ரு«ஷ்ணம்° யோகி³நஸ்த்ரிவித⁴மிதரேஷாம் || 7||

கர்ம = கர்மாவானது; அஶுக்லா க்ரு«ஷ்ணம்° = வெண்மையாகவும் கருப்பாகவும் இல்லாமல் (ஆகிறது) யோகி³ந: யோகிகளுடையன; த்ரிவித⁴ம் = வெண்மை, கருமை, இரண்டும் கலந்தது என மூவிதமாக; இதரேஷாம் = மற்றவர்களுடையன.

வெண்மை என்பது புண்ணிய கர்மாக்கள்; கருப்பு என்பது பாப கர்மாக்கள்.
ஆனால் நாம் செய்யும் கர்மாக்கள் பெரும்பாலும் இரண்டும் கலந்தே இருக்கும். இவை வெண்மை, கருமை, இரண்டும் கலந்தது எனலாம். யாகம் செய்தால் அவற்றில் நெல், அரிசி குத்தி எடுக்கும்போது கூட சில சிறு உயிரினங்களின் ஹிம்ஸை ஏற்படுகிறது. தக்ஷிணை, தானம் என்று புண்ணிய கர்மாக்களும் அடங்குகின்றன. ஆகவே இவை பாப புண்ணியம் கலந்ததாகவே இருக்கும்.
யோகி வெளியில் உள்ள வஸ்துக்களை விலக்கிவிட்டதால் அந்த கர்மாக்களை செய்வதில்லை. அவனால் செய்யப்படும் யோக அனுஷ்டானத்தின் பலனோ ஈஶ்வர அர்ப்பணத்தால் அவனுக்கு மோக்ஷம் ஒன்றையே பலனாக கொண்டதாகின்றது. அதனால் அவனது செய்கைகள் அஶுக்லா க்ருஷ்ணம். அதாவது அதில் புண்ணியமோ பாபமோ இல்லை. ஆகவே இதுவே மோக்ஷத்துக்கு யோக்யதை உள்ளதாகிறது.


Saturday, March 5, 2011

கைவைல்லியத்தை அடைய தகுதி.....



तत्र ध्यानजमनाशयम् ।।6।।
தத்ர த்⁴யாநஜமநாஶயம் || 6||

தத்ர = அங்கே (சித்தி பெற்ற சித்தங்களில்); த்⁴யாந அஜம் = த்யானத்தால் உண்டான சித்தம்; அநாஶயம் = கர்ம க்லேச வாசனைகள் இல்லாததாகும்.

இதுவே கைவைல்லியத்தை அடைய தகுதியானது.
முன்னே சித்திகள் உண்டாகும் வகைகளை பார்த்தோம் இல்லையா? அவற்றில் த்யான சமாதிகளால் சித்திகளை அடைவது ஐந்தில் ஒன்றாக பார்த்தோம். ஆனால் அதுவே கைவைல்லியத்தை அடைய தகுதி உள்ளது என்கிறார்.


Friday, March 4, 2011

ஒரு மனதின் தூண்டுதலாலேயே மற்ற மனதுகள் ....



प्रवृत्तिभेदे प्रयोजकं चित्तमेकमनेकषाम् ।।5।।
ப்ரவ்ரு«த்திபே⁴தே³ ப்ரயோஜகம்° சித்தமேகமநேகஷாம் || 5||

ப்ரவ்ரு«த்தி பே⁴தே³ = ப்ரவ்ருத்தியின் பேதங்கள்; ப்ரயோஜகம்° சித்தம் ஏகம் = தூண்டுகின்ற சித்தம் ஒன்றே; அநேகஷாம் = (யோகியால் உண்டுபண்ணப்பட்ட) அனேக சித்தங்களுக்கு;

ஒரு அரசன் பல அதிகாரிகளை நியமித்து பல வேலைகளை நடக்கச்செய்யும் போதே அனைவரும் ஒருவருக்கொருவர் விரோதமில்லாமல் செயல்பட மேற்பார்வை இட இன்னொரு அதிகாரியையும் நியமிக்கிறான். அது போல யோகி பல சரீரங்களை படைத்து அவற்றுக்கு அதிகாரி போல மனங்களையும் படைத்து எல்லாவற்றையும் அந்தந்த வேலையில் தூண்டிவிட இன்னொரு மனதையும் படைக்கிறான். இந்த இன்னொரு மனதின் தூண்டுதலாலேயே மற்ற மனதுகள் நடப்பதால் (ப்ரவிருத்திப்பதால்) ஒன்றுக்கொன்று விரோதம் சம்பவிக்காது.

Wednesday, March 2, 2011

யோகியின் மனது:



 निर्माणचित्तान्यस्मितामात्रात् ।।4।।

நிர்மாணசித்தாந்யஸ்மிதாமாத்ராத் || 4||

நிர்மாண = (யோகி சங்கல்பிக்கிறான்; அதை ப்ரக்ருதி தன் அஹங்கார ரூபத்தில் இருந்து அனுசரிக்கிறது. உறுப்புகளில் அது ப்ரவேசிப்பதால்) நிர்மாணிக்கப்பட்ட ; சித்தாநி = மனதுகள்; அஸ்மிதா மாத்ராத் = அஹங்காரத்தில் இருந்து. (உண்டாகின்றன.)

ஒரே நேரத்தில் பல விஷயங்களை அனுபவிக்க யோகி பல சரீரங்களை ப்ரக்ருதியின் மீதுள்ள பலத்தால் எடுத்துக்கொண்டால் பல சித்தங்கள் இருக்குமா? ஒன்றுதான் இருக்குமா? யோகியின் சங்கல்பத்தால் அஹங்காரத்தில் இருந்து உண்டான மனதுகள் பலவாகும் என்று இந்த சூத்திரம் சொல்கிறது.

அனேக சரீரங்கள் இருந்தால் அவற்றின் அபிப்பிராயம் ஒன்றாயிருக்க முடியாது; ஒரு சரீரத்தில் அனுபவித்ததை இன்னொன்றில் உள்ள மனது நினைக்க முடியாது; ஆகவே மனசை ஒன்றாகவே சொல்லவேண்டும் என ஆட்சேபித்தால் ...


பிரதிபந்தக நீக்கம்...



निमित्तमप्रयोजकं प्रकृतिनां वरणभेदस्तु ततः क्षेत्रिकवत् ।।3।।
நிமித்தமப்ரயோஜகம்° ப்ரக்ரு«திநாம்° வரணபே⁴த³ஸ்து தத​: க்ஷேத்ரிகவத் || 3||

நிமித்தம் = தர்மம் - அதர்மம்; ப்ரக்ரு«திநாம்° = ப்ரக்ருதியின் ப்ரவ்ருத்திக்கு காரணமாக; அப்ரயோஜகம்° =தூண்டுவனவாக ஆவதில்லை; து = ஆனால்; வரணபே⁴த³ = ப்ரதி பந்தக நிவ்ருத்தி (தடை நீங்குதல்); தத​: = அந்த தர்மத்தினால்; க்ஷேத்ரிகவத் = விவசாயி போல (உண்டாகிறது).

விவசாயி ஒரு வயலில் நீரை நிரப்பிவிட்டு பின் மற்றொரு வயலுக்கு நீர் பாய்ச்ச அவற்றின் இடையில் உள்ள வரப்பை வெட்டிவிடுவான். வரப்பு என்ற தடை நீங்கியதும் நீரும் தானாக மற்ற வயலுக்கு பாயும். அது போல தர்மங்களால் மற்றொரு சரீரத்துக்கு மாற இருந்த பிரதிபந்தகம் (தடை) நீக்கப்படலாம். அதே போல அதர்மத்தாலும் அது நீக்கப்படலாம். (நகுஷன் தேவ சரீரம் இழந்து மலைப்பாம்பாக மாறியது)

நேரடியாக வளர்ச்சிக்கு காரணமாகாவிட்டாலும் வளர்ச்சிக்கான தடைகளை தர்மாதர்மங்கள் நீக்கக்கூடும்.


Tuesday, March 1, 2011

வேறு விதமாக மாறுதல் .....



जात्यन्तरपरिणामः प्रकृत्यापूरात।।2।।
ஜாத்யந்தரபரிணாம​: ப்ரக்ரு«த்யாபூராத|| 2||

ஜாத்யந்தர = (மனித சரீரத்துக்கு) வேறு விதமாக மாறுதல் (தேவர் முதலான சரீரத்துக்கு) ; பரிணாம​: ப்ரக்ரு«த்யா பூராத = ப்ரக்ருதியின் (அனு)ப்ரவேசத்தால் உண்டாகிறது.

பிரதானம் முதல் ப்ருத்வீ முதலான பஞ்ச பூதங்கள் வரை உள்ள தத்துவங்களை ப்ரக்ருதி என்ற பதத்தால் கிரஹித்துக் (எடுத்துக்) கொள்ள வேண்டும்.

இந்த தத்துவங்கள்தானே மானுட சரீரத்துக்கு காரணம்? தேவ சரீரத்துக்கும் அவையே காரணம். அவை எங்குமிருக்கின்றன. ஆகவே ப்ரக்ருதியின் தேவையான பகுதிகள் மனித உடலில் புகுமானால் அது மறைந்து தேவ சரீரம் உண்டாகக்கூடும். அதர்மம் முதலிய தடைகளின் நீக்கம், யோகியின் ஸங்கல்பம், யோகத்தால் உண்டான தர்மம் இவை அதற்கு நிமித்த காரணமாகும். இவை சாதாரணமாக உண்டாகாது ஆகையால் இவற்றை நாம் காண்பதில்லை.

இப்படி ப்ரக்ருதி பிரவேசம் செய்வது தர்மம் முதலியவற்றை ஒட்டியா இல்லையா? இல்லை எனில் ஏன் எங்கும் எப்போதும் அப்படி நடப்பதில்லை? அப்படி இருப்பின் அது தர்மம் முதலான புருஷார்த்தங்களை ஒட்டி என்றாகி தர்மம் முதலானவை ப்ரக்ருதியை கட்டுப்படுத்தும் என்றாகிவிடுமே?