परिणामत्रयसंयमादतीतानागतज्ञानम् ।।16।।
பரிணாமத்ரயஸம்°யமாத³தீதாநாக³தஜ்ஞாநம் || 16||
பரிணாம த்ரய= (தர்ம, லக்ஷண, அவஸ்தை என்ற) மூன்று பரிணாமங்களில்; ஸம்°யமாத்³ = ஸம்யமம் செய்ய; அதீத அநாக³த = இறந்த காலத்திலுள்ளதும், எதிர்காலத்தில் உள்ளதும் (பற்றிய); ஜ்ஞாநம் = ஞானம் (கிடைக்கும்)
சித்தம் இயற்கையில் சத்வமானது. அஞ்ஞானம் என்கிற அழுக்கால் மூடப்பட்டதால் இயற்கை குணம் வெளிப்படாமல் இருக்கிறது. ஸம்யமத்தால் இந்த அழுக்கை போக்கினால் இந்திரியங்களின் உதவி இல்லாமலே சித்தம் விஷயங்களை அறிந்துகொள்ளும்.
[ஸம்யமம்? முன்னேயே பார்த்தோம். தாரணை, த்யானம், ஸமாதி - இம் மூன்றும் ஒரே விஷயத்தில் செய்யப்படும் போது ஸம்யமம் எனப்படும். இந்த சொல் இனி அடிக்கடி வரும். ஆகையால் சரியாக புரிந்து கொள்ளுங்கள்.]
தர்மீயை பொறுத்த விஷயங்கள் எதிர்காலத்தில் இருந்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வந்து பின் இறந்த காலத்துக்கு சென்றுவிடுகிறது. தாரணை, த்யான, ஸமாதிகளால் ஸம்யமம் செய்ய முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.
இப்படி மேலே இன்னும் பல விஷயங்களை சொல்லிக்கொண்டு போவர். கேட்க ஆசையாக இருந்தாலும் அடைய வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஸம்யமம் என்று ஒன்றைச்சொல்லுகிறார்களே அதுதான் நமக்கு பிரச்சினை. இது பல காலம் செய்த முறையான பயிற்சியால் உண்டாவது. There are no short cuts. யமம் முதலான வெளிமுகப் பயிற்சிகளும் தாரணை முதலான உள் முகப்பயிற்சிகளும் சரியாக செய்தால்தான் இவை சித்திக்கும். த்யானம் என்பது வெளி சிந்தனையே இல்லாமல் இருப்பது என்று சொல்லும் போது நாம் போக வேண்டிய தூரம் எவ்வளவு என்று அறிந்துகொள்ளலாம். இலக்குடன் முழுக்க முழுக்க ஒன்றிவிடுவதே ஸம்யமமாகும். இது நம்மால் சாதாரணமாக முடியாது. எதில் அப்படி ஒன்றுகிறோம் என்பதைப் பொறுத்து என்ன சித்திக்கும் என்று சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment