Pages

Monday, July 11, 2011

உரத்த சிந்தனை - 2



தலை சுத்தல் இப்பதான் கொஞ்சம் பரவாயில்லை. நேற்று இரவு பங்களூரில் இருந்து பஸ் பயணம் அவ்வளவு சரியாக அமையவில்லை.
இந்த பங்களூர் பயணம் நாராயணன் எனக்கு அவ்வப்போது கொடுக்கிற பாடங்களில ஒண்ணா அமைஞ்சது!
ட்ரஸ்ட் க்கு கணிசமான வைப்பு நிதி சேர்த்து வைக்க வேண்டும் என்று தோன்றியதால் அது சம்பந்தமாக பங்களூர் போக முடிவாயிற்று. டிரஸ்டிகளில் ஒருவருடைய நண்பர் ரா. அங்கே இருக்கிறார். அவருடன் கொஞ்சம் சுற்றலாம் என்று முடிவாச்சு. தொலை பேசி மூலம் மூன்று வாரம் முன் பேசியபோது ஜூலை 2, 3 ஊரில் இல்லை, 9-10 பரவாயில்லை என்றார். மற்ற பங்களூர் நண்பர்கள் சிலரும் அப்படியே சொன்னதால் 9-10 என்றே முடிவாச்சு. பேருந்து பயணச்சீட்டும் வாங்கியாச்சு!
கூகுள் மேப் எல்லாம் பாத்து யார் யார் எங்கே இருக்காங்கன்னு ஒரு அலசலும் முடிச்சு ஒரு மாதிரி பயண திட்டத்தை வகுத்தாச்சு. ஏறக்குறைய பங்களுரை வலம் வரா மாதிரிதான் இருந்தது!.
போன புதன் நண்பர் ரா உடன் பேசும் போது “மன்னிக்கணும், ஞாயிறு ஒரு நிகழ்ச்சி இருக்கு. அதற்கான ஏற்பாடுகளை செய்யணும்; அது நினைவு இல்லாம ஒத்துக்கொண்டு விட்டேன்” என்றார்.
‘முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம், நம்ம வேலை சுத்துவது. மீதி எல்லாம் நாராயணன் வேலை’ என்று போயே தீருவது என்று முடிவு செய்தேன். ஒன்றும் இல்லாவிட்டாலும் நண்பர்களை பார்த்து பாட்டரிகளை ரீ சார்ஜ் செய்துக்கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன். நடுவில் சக ட்ரஸ்டி பேசியதில் நண்பர் ரா நேரம் எப்படி ஒதுக்குவது என்று பார்க்கிறேன் என்றார்.
அது சரி, காலை எங்கே போவது? நண்பர்தான் பிசி என்று சொல்லிவிட்டாரே? என் மகனுடன் பேசியதில் ஒருவரை பற்றி முன்னால் அவன் பேசியதை நினைவு படுத்தினான். பக்கத்து ஊரில் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவ் ஆக இருந்த ஒருவரை முன்னால் அங்கே போன போது சந்தித்து இருக்கிறான். பொறி துயில் ஆழ்துனர்களை இவர்கள் சில காரணங்களால அதிகம் சந்திப்பது இல்லை. ஆனாலும் என்னை அவர் நினைவு வைத்துக்கொண்டு இருந்தார். எனக்குத்தான் மறந்துவிட்டது! நான் பங்களூர் வந்தால் அவசியம் வர வேண்டும் என்று ஒரு ஸ்டாண்டிங் இன்விடேஷன் கொடுத்து வைத்து இருந்தார். சரி அவர் வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து போன செய்தால் அவர் சென்னையில் இருந்தார். ஒண்ணும் பிரச்சினை இல்லை, நீங்க வீட்டுக்கு போங்க. நான் இரவு வந்துவிடுவேன்; மனைவி கொஞ்சம் வெளியே கோவிலுக்கு போக வேண்டி இருக்கும். வேற ஒண்ணும் பிரச்சினை இல்லை. என்றார். முகவரி வாங்கிக்கொண்டு போய் சேர்ந்தேன். இனிமையான வரவேற்பு! காலை கடன்கள் அனுஷ்டானங்கள் முடித்து அலுப்பு தீர கொஞ்சம் படுத்து எழுந்தாச்சு! நண்பர் ரா வும் வேலைகளை ஒருவாறு ஏறக்கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார். வெளியே கிளம்பினோம். ஒருவரை மட்டுமே பார்த்து பேச முடிந்தது. முன் ஏற்பாடு இல்லாததால் மற்றவர்கள் ஊரில் இல்லை, வீட்டில் இல்லை போன்ற செய்திகளே கிடைத்துக் கொண்டு இருந்தன. சரி நாராயணன் விட்ட வழி என்று வீட்டுக்கு வந்து விட்டோம். மதிய உணவுக்குப்பின் வெளியே கிளம்பி நண்பரை சந்தித்து உரையாடி அவர் குழந்தையுடன் ரகளை செய்ததில் பாட்டரி ரீசார்ஜ் ஆகிவிட்டது! இரவு பங்களூர் வட கிழக்கு கோடியில் இருந்த நண்பர் வீட்டுக்கு போய் சேர்த்தேன். அங்கு இன்னொரு சின்ன குழந்தை! ஆநந்தமாக பொழுது போயிற்று!
காலை இவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது கணிசமான ஒரு தொகைக்கு செக் கொடுத்தார்! முந்தைய நாள் தங்கிய வீட்டு நண்பரை பார்க்க முடியவில்லை என்று அங்கே மீண்டும் போக திட்டமிட்டு இருந்தேன். அவர் வெகு ஆர்வத்துடன் பல விஷயங்களை கேட்டுக்கொண்டார். கடைசியில் கிளம்பும் முன் அமெரிக்காவில் இருக்கும் அவரது மகள் ‘நல்ல காரியம் எதுக்காவது கொடுங்க’ என்று இவரிடம் கொடுத்து இருந்த கொஞ்சம் பெரிய தொகையை அப்படியே ட்ரஸ்ட் க்கு கொடுத்துவிட்டார்! அங்கே சந்திக்க வந்த நண்பர் இன்னொருவர் மூலமும் இன்னும் கொஞ்சம் வந்து சேர்ந்தது! கடைசியில் நிதிக்காக கிளம்பிய காரியம் நிறைவேறி விட்டது!
எப்படி நிதி திரட்டலாம் என்று நினைத்தேனோ அப்படி இல்லாமல் வேறு வழியில் வந்து சேர்ந்துவிட்டது!
இப்படித்தான் அடிக்கடி இந்த நாராயணன் படுத்துகிறான்!
இதானே கீதையில் கண்ணன் சொன்னது? கர்மாவுக்கு மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது! பலன் இப்படிதான் இருக்க வேண்டும் என்று எதிர் பாராதே!


2 comments:

இராஜராஜேஸ்வரி said...

கர்மாவுக்கு மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது! பலன் இப்படிதான் இருக்க வேண்டும் என்று எதிர் பாராதே!//

பகிர்வுக்கு நன்றி.பாரட்டுக்கள்

Geetha Sambasivam said...

போன காரியங்கள் நல்லபடியாம முடிந்தமைக்கு வாழ்த்துகள்.