Pages

Monday, July 18, 2011

போலி ஆன்மீகம் - பொலம்பல் போஸ்ட்!நேத்து ஆடி முதல் தேதி.
வருஷா வருஷம் ஏண்டா இந்த ஆடி மாசம், மார்கழி மாசம் வரதுன்னு இருக்கும்.
இப்படிச்சொன்னா பல நண்பர்களும் முறைச்சு பார்ப்பாங்க. இந்த ரெண்டு மாசமுமே விசேஷமா தெய்வ ஆராதனைக்கு சொல்லப்பட்டு இருக்கு; நீ என்னடான்னா இப்படி சொல்லறியே; உன்னைப்போய் ஆன்மீகவாதின்னு வேற சிலர் நினைச்சு கொண்டு இருக்காங்க ன்னு மனசில திட்டறீங்க.
நல்லா திட்டுங்க. பரவாயில்லை! என் காதில் ஒண்ணும் விழாது!
ஏன் விழாது? வீட்டுக்கு பகக்த்தில இருக்கிற பிசினஸ் சென்டர்லேந்து அவ்வளோ சத்தம்! நான் நினைக்கிறதே என் காதில விழாது அப்புறமாதானே நீங்க எங்கேந்தோ திட்டறது காதில விழணும்!
தப்பு என் பேரில்தான். இந்த ஏரியாவில இடம் வாங்கி நாங்க வீடு கட்டுமுன்னேயே இந்த பி.செ இங்கே இருந்தது. அப்ப இதோட சீரியஸ்னெஸ் தெரியலை.
குடியேறிய பிறகுதான் வருஷத்தில எவ்வளோ ஞாயிற்றுக்கிழமை இருக்கு; எத்தனை விசேஷ நாள் இருக்குன்னு எனக்கே தெரிய வந்தது!
ஞாயித்துக்கிழமை ஸ்பெஷல் குறி சொல்லறது. இந்த பி.செ சொந்தக்காரரோட மனவிதான் குறி சொலல்றவங்க. மாலை நாலரை மணிக்கு ஆரம்பிச்சு உடுக்கை அடிக்க ஆரம்பிச்சா ஏதேதோ நடக்கும். ஒரு ஹிஸ்டீரியாவில அந்த அம்மா மெதுவா ஒரு சுத்து சுத்தி வந்து ஆட்டம் போட ஆரம்பிக்கும். நேரம் போகப்போக ஆட்டம் வேகமாவும் கண்ட்ரோல் இல்லாமலும் ஆகும். அப்புறம் உடுக்கை ஸ்பீட் குறைஞ்சு கேள்விகள் ஆரம்பிக்கும். முதல்ல ஒரு கேள்விக்கு மூணரை ரூபாயா இருந்தது; அப்புறமா ஏறிபோச்சு. விலைவாசியும் ஏறிபோச்சு இல்லே?
நெசமாதான் இந்த அம்மா குறி சொல்லுதான்னு பாக்க உள்ளூர் இளைஞர்கள் ஒரு தரம் போய் என் வலது கையில என்ன இருக்கு இடது கையில் என்ன இருக்குன்னு கேட்டாங்க. வலது கைல திருநீறு இடது கையில குங்குமம் ன்னு அந்த அம்மா ட்ரமாடிக்கா சொல்லவும் வெத்து கைகளை திறந்து காட்டி ஓஓஓன்னு சத்தம் போட்டுட்டு பசங்க ஓடிட்டாங்க. அப்பலேந்து உள்ளூர்வாசிகளுக்கு இங்க என்ன நடக்குதுன்னு தெரியும். வந்து போறதெல்லாம் வெளியூர்வாசிகள்தான்.
இந்த மாதிரி பிசினெஸ் நடத்தறது ரொம்ப சுலபம். எல்லாருக்கும் ஏதோ கஷ்டம் இருக்கு. ஏதாவது குறூக்கு வழ்ழி கிடைக்காதா நம் கஷ்டம் தீராதான்னு பாத்துகிட்டு இருப்பாங்க. கேள்விக்கு சார்ஜும் அதிகமில்லை என்கிறதால பிரச்சினை சரியாகலைன்னா யாரும் பெரிசா கவலைப்பட போறதில்லை. சரியாச்சுன்னா திருப்பி வந்து இன்னும் பணம் கொடுத்து பூசை கீசை செய்து போவாங்க.
இந்த பிசினெஸ் ஐடியாவை யாரும் பயன்படுத்தினா எனக்கு ராயல்டி கொடுக்கணும்ன்னு இப்பவே எச்சரிக்கறேன்!

பி.செ சொந்தக்காரர் ஏதோ ஆட்டோ ரிப்பேர் ஷாப் வெச்சிருந்தாராம். இவாங்களுக்கு ஒரு பொண்னு உண்டு. சொந்தப்பொண்ணு இல்லை தத்து எடுத்தது ன்னு இவங்க சொல்லிகிட்டு இருந்தாங்க. பின்ன குறி சொல்லறவங்களுக்கு ஒரு பில்டப் வேணாமா?

முதல்ல ஒரு சின்ன இடமா இருந்தது. இது இருந்த நிலத்தை ப்லாட் போட்டு வித்தாங்க. இந்த பி.செ இருந்த இடம் கடேசி ப்லாட். எனக்கு சொந்தம்ன்னு பி.செ சொந்தக்காரர் காட்டினது மூணு ப்லாட். நிலத்தை ப்லாட் போட்டு விக்கறப்ப புரோக்கர் இதை ஒண்ணும் செய்யாம விட்டுட்டு (அவன்கிட்டே போய் ஏன் சார் முறைச்சுண்டு!) கடைசிலே அடுத்த ப்லாட்டை உள்ளூர் மினிஸ்டருக்கு வித்துட்டு போயிட்டார். அவர் அப்பவே கேஸ் ஒண்ணுல மாட்டிகிட்டு இருந்ததுல கண்டுக்காம விட்டுட்டார். மூணாவது ப்லாட்டை ஹைவே எஞ்சினீர் ஒத்தர் வாங்கி உள்ளூர் தாதா முன்னிலையில வேலி கட்டிட்டு போயிட்டார். ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் மூணு வருஷம் முன்னே அங்கே வீடு கட்டினாங்க!ப்லாட் வீடு எல்லாம் வரதைப்பாத்து தன் சொத்தை உறுதி பண்ணிக்க பி.செ சொ.காரர் கும்பாபிஷேகம்ன்னு சொல்லி பாண்டிச்சேரி மினிஸ்டர் உள்ளூர் எஸ்.பி ன்னு கூப்டு அவங்க முன்னிலைன்னு நோட்டீஸ் அடிச்சார். உள்ளூர் எஸ்பிக்கு சிலர் காதை கடிச்சதிலே அவரும் விசாரிச்சுட்டு போகாம விட்டார். மினிஸ்டர்களும் வரலை.
முன்னேயே எனக்கும் இந்த பி.செ.சொ காரருக்கும் பிரச்சினை வந்தது.

ஞாயிற்றுகிழமை விசேஷத்தை சொன்னேன், மற்ற விசேஷ நாள் சமாசாரம் சொல்லலையே! அமாவாஸைக்கு விசேஷமா நடு ராத்திரில உடுக்கை அடிச்சு குறி சொல்லறதுண்டு. மற்ற விசேஷ நாட்களில விசேஷமான ப்ரொசீஜர்!
விடி காலை ஜபம் செஞ்சு கொண்டு இருக்கீறப்ப திடீர்ன்னு பயங்கர சத்தம் கேட்கும்! ஒண்ணுமில்லை பி.செ ல மை/லவுட் ஸ்பீக்கர் கான்ட்ராக்ட் எடுத்தவர் வந்து பவர் ஆன் செய்வார். காலை 5 மணிக்கு ஸ்விட்ச் ஆன் செய்தா திருப்பி ராத்திரி 10 மணிக்குத்தான் அவர் வருவார். அது வரைக்கும் திருப்பி திருப்பி பலதும் அலறிகிட்டே இருக்கும். லவுட் ஸ்பீக்கர் சரியா எங்க வீட்டு மாடியைத்தான் பாத்து இருக்கும். திருவிளையாடல் வசனம் மனப்பாடமே ஆயிடுத்து. கரகர குரலில் கந்த சஷ்டி கவசம், எல்.ஆர்.ஈஸ்வரி பாடின கணக்கில அடங்காத பாடல்கள் எல்லாம் திருப்பி திருப்பி அரங்கேற்றம். இதெல்லாம் காதை துளைச்சாலும் போனாப்போகுதுன்னு விட்டுடலாம்ன்னு பாத்தா திடீர்ன்னு நிலா காயுதுன்னு மாறிடும்!

ஸ்பீக்கர் நேரடியா எங்க வீட்டை பார்க்கறதாலே சத்தம் தாங்க முடியாது. ஆரம்பத்தில போய் போய் வேண்டிக்கொண்டதில அப்ப குறைவா வெச்சாலும் கொஞ்ச நேரம் கழிச்சு பி.செ.சொ காரர் வந்து யாரடா குறைச்சதுன்னு அதட்டிட்டு மேக்சிமம் ஆக்கிடுவார். இதுல என்ன சூக்ஷ்மம்ன்னா இந்த பி.செ, பி.செ வுடைய போட்டிக்காரங்க இருக்கற இடம், எங்க வீடு மூணும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறதுதான். அவங்க ஸ்பீக்கர் சத்தத்தைவிட இவங்க சத்தம்தான் அங்கேயும் அதிகமா கேக்கணுமாம்!

ஆடி மாசம் வந்தா ஒண்ணாந்தேதியே வேலை ஆரம்பிச்சுடும். ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி 'திருவிழா' நடக்கும். இதில என்ன வித்தியாசம்ன்னா ஒரு நாள் கஞ்சி ஊத்துவாங்க. இன்னொரு நாள் ராத்திரி கதை நடக்கும்.
முதல் தரம் கதை நடந்தப்ப அசந்து போயிட்டேன்.
கதை சொல்லறவர் சிரத்தையா மைக்கிலே பாடி கதை சொல்லிகிட்டு இருந்தார். மணி 10, 11 ஆச்சு இன்னும் கதை முடியறபாடில்லை. நேரே போய் பாத்தா கதை சொல்லறவர் அவரோட அசிஸ்டென்ட் தவிர யாரும் அங்கே முழிச்சுகிட்டு இல்லை. நாலஞ்சு பேர் அங்கேயே நிம்மதியா தூங்கிகிட்டு இருந்தாங்க. நான் "ஐயா நீங்க கதை சொல்லுங்க, வேண்டாங்கலை. கேக்க யாருமில்லையே! அதனால் மைக்கை ஆப் பண்ணிட்டு கதை சொல்லுங்க" ன்னேன்! அவரும் மைக்கை ஆப் பண்ணிட்டார். சத்தம் இருந்த வரை நிம்மதி தூங்கின பி.செ.சொ காரார் எழுந்து ஆச்சா போச்சான்னு சத்தம் போட நானும் திருப்பி கத்த ஏக ரகளை! அப்புறம் சத்தம் கம்மியா வெச்சு கதை காலை வரை நடந்தது.

பொறுக்க முடியாம ஒரு நாள் போலீஸ் எஸ்.பி கிட்டே சொல்லிட்டோம். கம்ப்லைண்ட் மேலே உடனடியா ஆக்ஷன்! ஒரு ஆட்டோல வந்து கட்டி இருந்த கோன் ஸ்பீக்கர்கள், ஸ்டீரியோ செட் எல்லாத்தையும் சப்ஜாடா அள்ளிகிட்டு போயிட்டாங்க. கன காரியமா எல்லார் முன்னிலையிலும் எங்க வீட்டுக்கு சிரிச்சுகிட்டே வந்து சல்யூட் அடிச்சு வேலையை முடிச்சுட்டோம் சார் ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க!
அவ்வளோதான்! போலீஸ் போனதும் கூட்டமா வந்து ஒரே சத்தம் போட்டாங்க. நானும் சளைக்காம திருப்பி திட்டினேன். எவ்வளவு தரம் உங்ககிட்டேயே சொன்னேன். நீங்கதான கொஞ்சம் கூட இறங்கி வரலை என்கிறதே என் கட்சி.
அதுக்கு அப்புறம் நேரடியா எங்க வீட்டை பாத்து கோன் ஸ்பீக்கர் கட்டறதை விட்டாங்க. தொல்லையும் பெருமளவு குறைஞ்சது!
அப்புறமா ஊர் முழுதுமே கட்டுப்பாடு வந்து பாக்ஸ் ஸ்பீக்கர் மட்டுமே பயன்படுத்தினாங்க. பிரச்ச்சினை அனேகமா முடிஞ்சது.
சில வருஷங்களிலே பி.செ சொ காரரும் ஊருக்கு போய் சேர்ந்தார். கொஞ்ச நாளிலே அவர் மனைவியும்.

இப்பல்லாம் அப்பப்ப ஸ்பீக்கர் தொல்லை இருக்கு. முன் அளவில இல்லை. ஒண்ணு ரெண்டு நாள்தான் பிரச்சினையும்!
பின்னே ஆரம்பத்துல ஒரே சத்தம்ன்னு பெரிசா கம்ப்லைண்ட் பண்ணியேன்னா, ஹிஹிஹிஹி சும்மா ஒரு பில்டப்தான்!

Post a Comment