Friday, May 30, 2008
சாந்த பாவம்
மகாபாரத யுத்தம் நடந்தப்ப முதல்ல அர்சுனன் சண்டை போட தயங்கினதும் அப்புறமா கண்ணன் பகவத் கீதை உபதேசம் செய்ததும் அதற்கு அப்புறமா அர்சுனன் தன்னோட கடமையை உணர்ந்து சண்டை ஆரம்பிச்சதும் நமக்கு தெரியும்.
இப்படி சண்டை நடந்தபோது இரண்டாம் நாள் சண்டையில பாண்டவர்கள் பக்கம் கொஞ்சம் வெற்றியும் அதனால உற்சாகமும் உண்டாச்சு. துரியோதனனுக்கு செம கடுப்பு.
அடுத்த நாள் சண்டைலேயும் அதே மாதிரி தொடர அவன் பீஷ்மரை போய் பாத்து "நீங்க, கிருபர், துரோணர் ன்னு மூணு பெரிய வீரர்கள் என் பக்கம் சண்டை போடறீங்க. ஆனா நம்ம படைகள் தோத்து ஓடுது. இது எப்படி சாத்தியம்? பாண்டவர்கள் மேல இருக்கிற அன்பாலதான் சும்மா விடறீங்க. அவங்கள எல்லாம் எதிர்க்க உங்களுக்கு விருப்பம் இல்லைனா முன்னாலேயே சொல்லி இருக்கலாமே? நான் வேற வழியை பாத்து இருப்பேன்”, அப்படின்னு கண்டபடி பேச பீஷ்மர் கடுப்பாயிட்டார். “நான் முடிஞ்ச வரை உக்கிரமாதான் சண்டை போடறேன். நான் உனக்கு முன்னேயே சொன்னேனே. கிருஷ்ணன் பக்கம்தான் எப்படியும் வெற்றி கிடைகும்ன்னு. அவன் உதவி கிடைக்கிறவரை பாண்டவர்கள இந்திரனால கூட ஜெயிக்க முடியாது. இருந்தாலும் நீ சொல்லறதனால இந்த கிழவன் இன்னும் உக்கிரமா சண்டை போடுவான்" அப்படின்னார்.
அப்புறமா பீஷ்மர் சண்டை போடற விதமே மாறி போச்சு.
அவர் மாயா ஜாலம் செய்யறாரோன்னு கூட சந்தேகப்படற மாதிரி ஆயிடுத்து. எங்கே பாத்தாலும் அவரே சண்டை போடற மாதிரி தோணிச்சு. ஒரு நெருப்பு வட்டம் மாதிரி எதிர்த்த எல்லாரையும் அழிச்சார்.
கிருஷ்ணன் அர்சுனன பாத்து " டேய், இப்படியே விட்டா இன்னிக்கி யுத்தம் முடிஞ்சுடும். பீஷ்மர் துரோணர் எல்லாரையும் கொல்லுவேன் ன்னு சத்தியம் பண்ணி இருக்க இல்ல? அத ஞாபகம் வச்சிகிட்டு சண்டை போட்டு இந்த பீஷ்மரை அடக்கு" ன்னான்.
சரின்னு அர்சுனன் சொல்ல கண்ணன் தேரை நேரா பீஷ்மர் பக்கம் செலுத்தினான். அர்சுனனும் சண்டை போட ஆரம்பிச்சான். நல்லாதான் சண்டை போட்டான். ஆனாலும் அரைகுறை மனசோடதான் சண்டை போட்டான். பீஷ்மரோ அர்சுனன் சாமர்த்தியத்த பாராட்டிகிட்டே கொஞ்சமும் உக்கிரம் குறையாம சண்டை போட்டார். கண்ணன் பாத்தான். இதெல்லாம் வேலைக்கு ஆவாது. இந்த அர்சுனன் பயல கொஞ்சம் உசுப்பு ஏத்தி விடணும்ன்னு முடிவு பண்ணான்.
அப்ப பல அரசர்கள் யுத்த களத்த விட்டு ஓட ஆரம்பிச்சு இருந்தாங்க. கண்ணன் "போகட்டும், போகட்டும். இன்னும் யார் ஓடாம இருக்காங்களோ அவங்களும் போகட்டும். நானே நேரா இறங்கி பீஷ்மரையும் துரோணரையும் கொல்லுவேன். பாண்டவர்களூக்கு ராஜ்யத்த மீட்டு கொடுப்பேன்" அப்படின்னு சொல்லி தேரை விட்டு இறங்கினார். சக்கிராயுதத்தை மனசால நினச்சார். அதுவும் உடனே வந்து சேர்ந்தது. அத எடுத்துகிட்டு பூமி அதிர பீஷ்மரை நோக்கி நடந்தார்.
என்னடா பக்திய பத்தி பேச வந்துட்டு சண்டை பத்தி பேசறானேன்னு நினைக்கிறீங்க இல்லை? முக்கியமான விஷயம் இப்பதான் வருது.
பீஷ்மர் என்ன பண்ணார்? ரொம்ப சந்தோஷப்பட்டு போனார். "கிருஷ்ணரே வாரும். இப்ப உங்களால கொல்லப்பட்டாலும் எனக்கு இந்த பிறவியிலேயும் பின்னாலேயும் நன்மைதான் கிடைக்கும். நீங்களே என்ன எதிர்க்கிறதால நான் கௌரவ படுத்தப்படறேன்" அப்படின்னு சாந்தமா சொன்னார்.
போர் பூமில இப்படி ஒரு சாந்தம்!
அப்புறமென்ன? அர்சுனன் ஓடி வந்து " கிருஷ்ணா, ஆயுதம் எடுக்க மாட்டேன்னு நீ செய்த சபதத்தை நீயே மீற வேண்டாம். நான் கொஞ்சமும் தயக்கம் இல்லாம சண்டை போடறேன்" அப்படின்னு சமாதானப்படுத்த போர் தொடர்ந்தது.
பீஷ்மர் போன்ற ஞானிகள் பகவானோட எப்பவுமே சாந்த பாவத்தில உறவு வைத்தவங்க.
Thursday, May 29, 2008
காதலன் காதலி பாவம்
பக்தர்கள் இறைவனை பாக்கிறதுல தன் காதலன் / காதலியா பாக்கிறதும் உண்டு. மாணிக்கவாசகர் அப்படி நாயிகா பாவத்தில நிறைய பாடினாராம். ஆழ்வார்களும் அப்படி பாடியிருக்காங்க.
பாரதியார் கவிஞரானாலும் அவ்வப்போது ஞான / இறை அனுபவம் பெற்றவர்.
அவர் இறைத்தன்மையை சக்தியாகவும் கண்ணனாகவும் பார்த்தார். கண்ணனை தாயாகவும் குழந்தையாகவும் தகப்பனாகவும் ஆசானாகவும் சேவகனாகவும் பார்த்தவர்.
அப்படிப்பாத்து ஒவ்வொரு பாட்டு எழுதினவர் "கண்ணன் என் காதலன்" னு ஆரம்பிச்சு பாட்டா எழுதி தள்ளிட்டார் போலிருக்கு!
முதல்லே என்னன்னே புரியாம வெளியிலே வெச்ச விளக்கு அலையறதை போல அல்லல் படுறார்.
தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப்போல்
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சம் துடித்ததடீ
கூண்டுக்கிளியினை போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளை எல்லாம்-
மனது வெறுத்து விட்டதடீ.........
திடீர்ன்னு ஒரு நாள் கொஞ்சம் புரிகிறது.
கனவு கண்டதிலே - ஒரு நாள்
கண்ணுக்கு தோன்றாமல்
இனம் விளங்கவில்லை - எவனோ
என்னகம் தொட்டுவிட்டான்....
யார்ரான்னு யோசிக்கிறார்.
எண்ணி எண்ணி பார்த்தேன்: - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!
அப்புறம் கண்ணனாலதான் எல்லாம்ன்னு தெரிகிறது. உறக்கத்திலும் விழிப்பிலும் அவனே இருக்கிறான்.
.....நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் - இது
நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டதே
கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
கொண்டை மலர் சிதற நின்றிழுத்தும்....
பயல் படுத்துகிறான். அவன் கதைகளெல்லாம் கேட்க கேட்க தூக்கம் இல்லாம போகுது!
கண்ணன் எங்கே எங்கேன்னு தேடுகிறார். காட்டிலேயெல்லாம்!
.
.....திக்குத்தெரியாத காட்டில்- உனைத்
தேடித் தேடி இளைத்தேனே!...
காட்டிலே வேடன் ஒத்தன் பாத்து ஆசை வைக்கிறான். பாரதி மறுக்கிறார்.
"அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை
அஞ்சக்கொடுமை சொல்ல வேண்டா - பிறன்
கண்ணலஞ் செய்துவிட்ட பெண்ணே - எந்தன்
கண்ணற் பார்த்திடவுந் தகுமோ?”
வேடன் வற்புறுத்துகிறான். "கண்ணா!” என்று அலறி மயங்கி விழுகிறார். நினைவு வரும் போது யாரையும் காணோம்!
அப்புறம்
கண்ணன் மனநிலையைத் - தங்கமே தங்கம்ன்னு தூது விடுகிறார்.
கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்
“நேர முழுவதிலுமப் பாவி தன்னையே - உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒரு சொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு
தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்"
என்று வெறுத்துப்போகிறார்.
இப்படி உருகற ஆசாமிக்கு காதலன் உருவம் கூட மறக்குமா என்ன? அப்படியும் ஆயிடுது!
பிறிவாற்றாமையில் புலம்புகிறார்:
"கண்கள் புரிந்துவிட்ட பாவம் -உயிர்க்
கண்ணனுரு மறக்கலாச்சு!
பெண்களினிடத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?”
இப்படி ஒரு பக்தன் காதலனாக பகவானை நினைத்து பக்தி செலுத்தறதை சுப்ரமணிய பாரதியார் நல்லாவே காட்சிக்கு கொண்டு வரார். முழு பாடல்களையும் படிச்சுப்பாருங்க!
Tuesday, May 27, 2008
தாஸ்யம்
விறண்மிண்டர் ன்னு ஒரு தொண்டர். மலை நாட்டு வேளாள குடியில் பிறந்தவர். சிறு வயதிலேந்து சிவ பக்தர். எப்பவும் இறைவன் திரு நாமங்களை சொல்லிகிட்டு இருப்பார். இவருக்கு சிவனடியர்கள்கிட்டே ரொம்ப பக்தி. அவங்களை உபசரித்து தொழுவார். சிவனாருக்கு தன்னை வழி படறவங்களை விட தம் அடியார்களை வழி படறவங்க மேல அதிக பிரியம் வச்சு இருக்கார்ன்னு விறண்மிண்டருக்கு தெரியும். அதனால அடியார்களை பாத்தா அவர்களுக்கு வணக்கம் செலுத்திட்டுதான் அப்புறமா ஆண்டவனை வழி பட போவார்.
இவர் ஸ்தல யாத்திரையா போகிற போதுதான் ஆரூர் போனார். அடியார்களை வணங்கிட்டு உள்ளே போய் இறைவனை வணங்கினார். அப்புறமா வெளியே மத்தவங்ககிட்ட பேசிகிட்டு இருக்கிறப்ப சுந்தரர் அங்கே வந்தார். அவரை பாத்த எல்லா சிவனடியார்களும் அவரை வணங்க எழுந்தாங்க . விறண்மிண்டருக்கு ஆச்சரியம். யாரப்பா இது. எல்லாரும் எழுந்து வணங்கறாங்க ன்னு கேட்டார். சுந்தரரை பத்தி அவங்களும் சொன்னாங்க.
மக்கள் சுந்தரரை வணங்க, சிவ சிந்தனையிலேயே இருந்த சுந்தரர் யாரையும் கவனிக்கவே இல்லை. நேரா கோவிலுக்கு உள்ளே போயிட்டார்.
இத பாத்துகிட்டு இருந்தார் விறண்மிண்டர். சிவனடியார்களை கண்டு மரியாதை செய்யாம உள்ள போறதான்னு வருத்தமாயிடிச்சு. சுந்தரர் காதில விழற மாதிரி உரக்க "சிவனடியார்களை பாக்காம போகிற சுந்தரர் நமக்கு தேவையில்லை" ன்னு சொன்னார். எல்லாரும் அதிர்ச்சியாயிடாங்க. பின்னாலேயே "அப்படிப்பட்ட இவருக்கு சிவபிரான் அருள் பாலிப்பார்னா, அந்த சிவனும் நமக்கு தேவையில்லை" அப்படின்னார்.
உள்ளே போயிட்ட சுந்தரர் பதை பதைத்து போயிட்டார். சிவ பெருமான் கிட்ட உருகி வேண்டிக்கிட்டார். ”என்னை தடுத்து ஆட் கொண்ட பெருமானே உனக்கு தெரியாதா? புறத்தில் வணக்கம் செய்யலை. மனசால வணக்கம் பண்ணேன். அது மத்தவங்களுக்கு தெரியாதே. இப்படி ஒரு பழி சொல் எனக்கு வந்து விட்டதே" ன்னு வருந்தினார். சிவன் " கவலைபடாதேப்பா. என்னை இவ்வளோ பாட்டு பாடினியே, அடியார்களை பாடி அவங்க பெருமை எல்லாம் உலகம் அறிய பண்ணு" அப்படின்னார். அவங்க திருத்தொண்டைப்பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதேன்னார் சுந்தரர். "நான் அடி எடுத்து கொடுக்கிறேன். பாடு. மீதி எல்லாம் தானே வரும்" ன்னார் சிவ பெருமான்.
உள்ளே போயிட்ட சுந்தரர் இறைவனை வணங்கிட்டு நேரா கிட்ட வந்து மன்னிப்பு கேட்டுக்கிட்டார். சிவனடியார் யாரையும் அவமதிக்கிற எண்ணம் தனக்கு இல்லைனார். அதை நிரூபிக்க "தில்லை வாழ் அந்தணர் அடியார்க்கும் அடியேன்" னு ஆரம்பிச்சு பாட்டு பாட ஆரம்பிச்சார். எல்லா அடியார்களின் பெருமைகளையும் கூறி "அவர்களுக்கு அடியேன்" அப்படின்னு பாடி முடிச்சார். (திருத்தொண்டர் தொகை என்கிற இததான் அடிப்படையா வச்சு பின்னால சேக்கிழார் பெரிய புராணம் பாடினார். )
கூடி இருந்தவங்க எல்லாருமே பாடலை கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இப்பதான் சுந்தரர் அடியார்கள் மேலே எத்தனை மதிப்பு வெச்சு இருக்கார்ன்னு தெரியுது ன்னு கொண்டாடினாங்க. அப்படி ஒரு அருமையான பாடல் தோன்ற காரணமான விறண்மிண்டரையும் எல்லாரும் பாராட்டினாங்க. விறண்மிண்டரும் ஆனந்தப்பட்டு போனார். இப்படி அடியார்களுக்கு தாஸ பாவத்தை காட்டின விறண்மிண்டரை சிவபெருமான் சிவ கணங்களுக்கு தலைவரா ஆக்கிட்டார்.
Friday, May 23, 2008
நட்பு
சக்யம் என்கிற நட்பு
இறைவனோட உறவு கொண்டாடறவங்கள்ல அந்த உறவு பலவிதமாயும் இருக்கும். பலரும் இறைவனை தன் தலைவனா கொண்டாடினாலும் சிலர் வேற வித உறவு வச்சிருக்காங்க.
கிருஷ்ணனோட அர்சுனன் வச்சிருந்த உறவு நட்பு. அர்சுனனுக்காக எத்தனையோ செஞ்சார் கிருஷ்ணன். அவரோட தங்கை சுபத்தராவை திருமணம் செஞ்சுக்க அர்சுனன் விருப்பப்பட்டப்ப எப்படி சாதிச்சுக்கிறதுன்னு யோசனை சொன்னதே கிருஷ்ணன்தான். கீதை உபதேசம் செய்கிற போது விஸ்வரூப தர்சனம் காட்டுகிற வரை இப்படிதான் உறவு இருந்தது. அப்பறமாதான் "உன்னையே சரணடைஞ்சுட்டேன். என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன்" என்கிற பாவத்துக்கு அர்சுனன் வந்தான்.
சுந்தரர் சிவபெருமானுடன் விசித்திரமாக உறவு கொண்டவர். எல்லாரும் உருகி பணியும் போது இவர் மட்டும் அதிகாரம் பண்ணுவார். வேலை வாங்குவார்.
சுந்தரருக்கு பரவை நாச்சியார் என்று ஒரு பெண் மனைவி. நன்றாக குடும்பம் நடத்தி வந்தவர் திருவொற்றியூர் சென்ற போது சங்கிலி நாச்சியார் என்பவரை சந்தித்து அவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை மணந்து கொண்டு விட்டார். (ஏன் என்பது வேறு கதை) ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்தானே. அடடா பரவையை விட்டுவிட்டு வந்துட்டோமேன்னு வருத்தமாயிடிச்சு. தியாகேசரோ வஸந்த உத்ஸவம் வரதை நினைவு படுத்தி கொண்டு இருந்தார். திருவாரூர் போகாமல், தியாகேசரை பாக்காமல் இருக்க முடியலை. சரின்னு கிளம்பிட்டார். பல நிகழ்ச்சிகளுக்கு பிறகு அங்கே போய் சேர்ந்தார்.
திரும்பி அங்கே போனால் பரவை கதவை சாத்திட்டாங்க. "நீ எப்ப என்ன விட்டுவிட்டு போனயோ அப்பவே தொடர்பு விட்டு போச்சு. அங்கயே போன்" னு திட்டினாங்க. என்ன சமாதானம் சொல்லியும் எடுபடலை. என்ன பண்ணறது? சிவனேன்னு திரும்பினவர் என்னடா செய்யலாம்னு யோசிச்சார். நாம நம்ம கூட டூ விட்டவங்கள எப்படி சமாதானப்படுத்துவோம்? கொஞ்சம் விவரமான பிரெண்டை தூது அனுப்புவோம். அப்படிதான் சுந்தரர் தூது அனுப்ப நினச்சார். யாரை அனுப்பலாம்ன்னு யோசிச்சார். சில பெரியவங்களை அனுப்பினார். வேலைக்கு ஆகலை. பரவையார் "அவர் எனக்கு பண்ணின அபராதம் சின்னதில்லை. போய் வாங்க" ன்னு திருப்பிட்டாங்க.
பிறகு சிவபெருமான்தான் சரியான நபர்ன்னு தோணிச்சு. நேரா அவர்கிட்ட போய் "உனக்குதான் என் பிரச்சினை தெரியுமே. நீதான் தீத்து வக்கணும்" ன்னு கேட்டார். "என்ன பண்ணணும்?" னு சிவபெருமான் கேக்க "நீ போய் பரவைகிட்டே பேசி என்னை ஏத்துக்கச்சொல்லு" ன்னார். சிவபெருமானும் ஒரு ஆலய அர்ச்சகரா உரு மாறி பரவைகிட்டே போனார். பரவை அவரை மரியாதையோட வரவேத்தாங்க. உபசாரம் எல்லாம் பண்ணி "அகாலத்துல வந்து இருக்கீங்களே! என்ன வேணும்?" னு கேட்டாங்க. "அம்மா நீ சுந்தரத்தோட மனஸ்தாப பட்டு விலக்கி வச்சு இருக்கிறதா கேள்வி பட்டேன். அவன் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல அப்படி பண்ணிட்டான். இப்ப உன் நினைவாவே துடிக்கிறான். அவனை திருப்பி ஏத்துக்கணும்" ன்னு சொன்னார். பரவை "அத விடுங்க. அது முடிஞ்சு போன சமாசாரம். வேற ஏதாவது வேணுமானா கேளுங்க" ன்னா. "இல்ல அம்மா, நீ தயவு பண்ணி..." ன்னு ஆரம்பிச்சார் சிவன். "இத பாருங்க நீங்க அதயே பேசிகிட்டு இருந்தா மரியாத கெட்டுடும். வேற ஏதாவதுன்னா சொல்லுங்க. இல்லாட்டா....” ன்னு சொல்ல சிவபெருமான் மேல பேசாம திரும்பிட்டார்.
நடந்ததை கேட்ட சுந்தரர் சண்ட போட்டார். "ஏன் நான் அவளோட சேர்ந்து வாழணும்ன்னு உனக்கு விருப்பமில்லையா? நீ தூது போற லட்சணம் இதானா? சேத்து வக்கிற வழிய பாரு. நீ வேற யார் வேஷமோ போட்டுகிட்டு போனா என்ன அர்த்தம்?” ன்னு பிடிபிடின்னு பிடிச்சுட்டார். சிவ பெருமானும் "சரிப்பா நான் திருப்பியும் போறேன்" னார். தன் சுய ரூபத்தில யோகியர், முனிவர்கள் சூழ போய பரவையார் வீட்டு கதவ தட்டினார். பரவை நாச்சியார் ஏற்கெனவே அவரை திருப்பி அனுப்பிட்டாலும் "வந்தவர் சாதாரணமா தோணலையே? அவர் முகத்தில அப்படிஒரு ஒளி! மங்கல ஓசைகள் , வேத சப்தங்கள் கூட கேட்டா மாதிரி இருக்கே. இன்னும் ஒரு அபூர்வ வாசனை வீசுதே! வந்தவர் இறைவனேதானோ!” ன்னு யோசிச்சுகிட்டே இருந்தாங்க. இப்ப சிவபெருமான் கதவை தட்டவும் கதவ திறந்த பரவை அப்படியே திகைச்சு போனார். சுந்தரர ஏத்துக்கணும்ன்னு இப்ப சொன்னத அப்படியே ஏத்துக்கிட்டார்.
அடியாருக்காக ஆண்டவன் என்னவெல்லாம் செய்ய தயாரா இருக்கிறான்!
Thursday, May 22, 2008
வாழ்கை முறை
மொக்கை மொக்கை ன்னு கேள்வி பட்டு இருக்கீங்க இல்லை? என்ன எழுதறதுன்னு தெரியாதப்ப அப்படி ஏதோ ஒண்ணை எழுதிடுவாங்க.
இது அப்படி ஒண்ணு। எழுத நினைச்சது இன்னும் தயாராகலே.
இந்த பதிவுல கூட மொக்கை போட முடியுமான்னு சந்தேகப்படறவங்க என் திறமையை குறைவா மதிப்பு போட்டு இருக்கீங்க।
:-))
இப்ப என்னுடைய -அப்படின்னா நான் கடை பிடிக்கிற தத்துவம் பத்தி சொல்லப்போறேன்। இதுக்கெல்லாம் பேர்ன்னு வைக்கலை. ஆனா சிலர் நாராயணனிஸம் ன்னு பேர் வெச்சிருக்காங்க.
இறந்த காலத்துல வாழ்வதையும் எதிர்காலத்துல வாழ்வதையும் கூடிய வரை தவிர்கிறேன்। அதாவது இறந்த கால நினைவுகள்ள ஏதாவது பாடம் இருந்தா அத எடுத்துகிட்டு மீதியை உதாசீனம் செய்யறேன். மறக்கறேன்னு சொல்லலை. எதையாவது மறக்கனும்னு நினச்சா அது கொஞ்சம் கஷ்டம்தானே. கருங்குரங்கு கதையாயிடும். உதாசீனம் செய்யறது மறந்து போகும்.
எதிர்காலத்தில என்ன செய்யனும்னு கொஞ்சம் திட்டம் போட்டாலும் அதை பத்தி கவலை படுகிறதில்லை। அதாவது ஒரு செஸ் ஆட்டக்காரர் மாதிரி ரொம்ப விரிவா திட்டம் போடறதில்லை. நாளைக்கே நாம் இருப்போமோ இல்லையோ. அதுக்குன்னு திட்டம் போடாம இருக்கிறதும் இல்லை. எதா இருந்தாலும் பகவான் நினைக்கிறபடி நடக்கட்டும்னு விட்டுவேன். நேரம் வரும் போது பகவான் எப்படி நடக்கனுமோ அப்படி நடத்துவான்கிறதுல நல்ல நம்பிக்கை இருக்கு. அப்படி நடக்கிறப்போ நாம நினைக்கிறதை விட நல்லாவே நடக்குது. இது அனுபவம்.
இப்ப இருக்கிற இந்த கணம்தான் நம்மது. அதனாத இந்த கணத்தில எனக்கு வாய்கிற வேலையை செஞ்சுகிட்டு போறேன். அத என்னால முடிஞ்ச அளவு நல்லா செய்யறேன். பிரச்சினையே இல்லாம வேலை நடந்து முடியுதா சந்தோஷம். பிரச்சினை வருதா அதை சரி செய்ய பாக்கிறோம். அது இன்னொரு வேலை. இப்படியே வாழ்கை ஓடுது.
நண்பர் ஒருவர்। நல்லா படிக்கிற மாணவர்தான். மருத்துவ கல்லூரி சேர்ந்தார். படிச்சு தேர்ந்து மேல் படிப்பு சேர்ந்தார். கடைசி பரீட்சைல நேர்முக பரீட்சை. ஒரு எக்ஸாமினர் கேள்வி எல்லாம் கேட்டு சரி போன்னார். அடுத்த எக்ஸாமினர் கேட்டது ஒரே கேள்விதான். நீ இன்ன மாவட்டத்து இன்ன ஜாதிதானே? ஆமாம்னு சொன்னதும் சரி போய் வான்னுட்டார். பரீட்சையில் தேறவில்லை ன்னு சொல்லிட்டாங்க. சரின்னு ஒரு வேலைல சேர்ந்து அப்படியே படிச்சு திருப்பியும் நேர்முக தேர்வு போனார். அதே எக்ஸாமினர். அதே கதை. சரின்னு ஊருக்கு வந்து ப்ராக்டிஸ் ஆரம்பிச்சார். ஆரம்ப காலம் நிறைய நேரம் கிடைச்சது. வாரம் தோறும் நகரத்துக்கு போய் அப்பதான் ஆரம்பிச்சு இருந்த ஒரு உடல் பரிசோதனை செய்யறதை கத்துக்கிட்டார். அடுத்து வந்த பரீட்சையில் வேற எக்ஸாமினர் வர பாஸ் பண்ணிட்டார்.
மேலெழுந்தவாரியா பாத்தா ரொம்பவே அந்நியாயம் நடந்ததுன்னு தோனுது இல்ல? அப்புறம் நடந்தது என்னன்னு பாக்கலாம்।
கொஞ்சம் கொஞ்சமா நோயாளிங்க வர ஆரம்பிச்சாங்க। ஆபரேஷன் செய்யறதுல முதல் பரீட்சையில் தேறாம இருந்தப்ப வேலை செஞ்சரே அந்த ஆஸ்பத்திரி அனுபம் ரொம்பவே கை கொடுத்தது. நல்ல ரிசல்ட் கிடைக்கவே நிறைய பேஷண்ட் வர ஆரம்பிச்சாங்க. அப்புறம் அப்பதான் ஆரம்பிச்சு இருந்த ஒரு உடல் பரிசோதனை செய்யறதை கத்துக்கிட்டார்ன்னு சொன்னேன் இல்லையா அந்த பரிசோதனை இந்த ஊர்ல யாரும் செய்யாம இருந்தப்ப இவர் செய்ய ஆரம்பிச்சதுல நிறைய வேலை வந்தது. இப்படி கொஞ்ச நாள்ளேயே பிஸி மருத்துவர் ஆயிட்டார்.
ஆக நாம் நினைக்கிற மாதிரி எல்லாம் நடக்கிறதில்லை। சில சமயம் கெட்டதுன்னு நினைக்கறது கூட நாளான பின்னால நல்லதுன்னு தெரிய வரும். அதனால கடவுள் என்ன கொடுத்தாலும் நல்லதேன்னு எடுத்துக்க ஆரம்பிக்கலாம்.
இதை பிரஸாத புத்திங்கிறாங்க. இது கிடைச்சாச்சுன்னா வாழ்கை ரொம்பவே சுலபமாயிடும்.
Wednesday, May 21, 2008
பக்தி பற்றி தியாக பிரமம்
உண்மையா பக்தி செய்கிறவங்க எப்படி இருப்பாங்கன்னு பாத்திருக்கோம். அதுக்கு இலக்கணமா வாழ்ந்தவர் தியாக பிரமம் என்கிற தியாக ராஜர். அவர் என்ன சொல்கிறார்ன்னு பாக்கலாமா?
ராகம் பியாகடை
தாளம் ஆதி
பல்லவி
பக்துனி சாரித்ரமு வினவே
மனஸா ஸீதா ராம
அனு பல்லவி
ஆஸக்தி கேல தாருகோசுஜீ
வன்முக்துடை யாநந்தமு நொந்து
சரணங்கள்
ஜபதபமுலுதா ஜேசிதி நநராது அதிகாகமரி
கபடாத் முடு மநமை பல்கராது
உபமதநகு லேகயுண்ட வலெ நநி
ஊரயூர திருக கராது
சபல சித்துடை யாலுஸு துலபை
ஸாரெகு ப்ரம காராத நேஹரி - (பக்)
பவ விப வமுநிஜ மநியெம்ச கராது அதிகாகமரி
சிவ மாதவ பேத முசேயக ராது
புவநமந்து தாநே யோக் யுட நநி
பொம்கி பொட்ட ஸாக ராது
பவநாத் மஜத்ருதமௌ ஸீதாபதி
பாத முலுயே மரராதநு ஹரி - (பக்)
ராஜஸ தாமஸ குணமுலு காராது அதிகாகநுசு
வ்யாஜ முநநு ராலேத நகாராது
ராஜயோக மார்கமுநீ சித்தமு
ராஜூ சுட விட வகராது
ராஜசிகா மணியை நத்யாக
ராஜ ஸகுநி மரவராத நேஹரி - (பக்)
ஸீதாராம பக்தனுடைய (வாழ்க்கை குறிப்பு) சரித்திரம் (பக்தனுடைய இயல்பு குணம்) இவற்றை மனமே கேள்.
தன்னால் இயன்ற வரை தருமங்களை செய்து அல்லது தனக்கு கிடைத்ததை கொண்டு திருப்தி அடைந்து ஒரு ஜீவன் முக்தனுடைய நிறைவுள்ள ஆனந்தத்தை அடைகிறான்.
ஜபம் தபம் இவற்றை தாம் முறையே செய்தும் அவைகளை மற்றவர் அறிய வெளியே சொல்ல மாட்டான். மனதில் கபடம் ஏதும் இல்லாமல் இருப்பான். தனக்கு நிகர் யாருமில்லை என ஊர் ஊராக சொல்லித்திரிய மாட்டான். அற்ப ஆசை கொண்ட மனதுடன் வீடு பொருள் இவற்றில் பற்று வைக்க மாட்டான். இவ்வுலகில் அடைபவைகளை உண்மை என்று நம்பி இருக்க மாட்டான். அதுவுமில்லாமல்
சிவன் விஷ்ணு என்று பேதம் செய்ய மாட்டான். இந்த புவனத்தில் நான் ஒருவனே யோக்யன் என்று பெருமை பேசி காலம் கழிக்க மாட்டான். ஆஞ்சநேயன் பற்றும் திருவடிகளை உடைய சீதாபதியின் பாதாரவிந்தங்களில் பக்தி மறக்க மாட்டான். ராஜஸ தாமஸ குணங்களை அடையாது எல்லாம் கர்ம வசப்படியே வரும் என்று ராஜ யோக மார்கத்தை சித்தத்தில் நிலை பெற வைத்து ராஜ சிகாமணியான திருவாரூர் தியாகேசப்பெருமான் தோழராய் விளங்கும் ராமனை மறவாமல் இருப்பான்.
கொஞ்சம் கேக்கலாமா?
|
சமீபத்தில் ஸ்ரீ ஜீவாவிடம் ஆன்மீக பாடல்கள் பற்றி கேட்டு இருந்தேன். விரும்பியதை கொடுப்பவன் அல்லவா எம் பெருமான்? சமீபத்தில் கிடைத்த ஒரு புத்தக தொகுப்பை எடுத்தேன். முழுக்க முழுக்க தியாகராஜர் பாடல்கள்! இந்த பதிவில் எழுதி இருப்பது அதிலிருந்து எடுத்ததே. தொகுப்பு "வைதிக தர்ம வர்தினி" என்ற புத்தகத்தில் இருந்து தியாகோபனிஷத் என்ற பகுதி।எழுதியவர் டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள்.
நீங்கள் கேட்கும் பாடலுக்கு தொடுப்பு கொடுத்தது ஸ்ரீ ஜீவா அவர்கள். இந்த பதிவு அவருக்கு சமர்ப்பணம்!
Tuesday, May 20, 2008
அர்ச்சனம் வந்தனம்
பகவானைப்பத்தி ய பெருமைகள கேட்டு அவனையே நினைச்சு அவன் பெருமைகளை பாடிய பக்தன் அடுத்த என்ன செய்ய நினைக்கனும்? பகவானுக்கு அர்ச்சனை செய்ய நினைக்கிறானாம். பகவானோட பாதங்கள சுத்த நீராலே கழுவி மலர்கள் இட்டு பூசிக்கிறான். எல்லாவற்றிலும் புனிதமானது பகவான் திருவடிகள்ன்னு நினைக்கிற பக்தன் பூஜை பண்ண பண்ண தான் தன் உடல் என்கிற நினைப்பு ஒழிகிறதாம். தன்னை முழுக்க முழுக்க அவன்கிட்டே ஒப்படைக்க தயாராகிறான். இததான் அர்ச்சனம் என்கிறாங்க.
வந்தனம்
அர்ச்சனம் என்கிற செய்கை வரை வந்தவர்களுக்கு அப்பறமா ஒண்ணுமே செய்ய வேண்டாமே சிவனேன்னு அவன் கால்கள்ளேயே விழுந்து கிடக்கலாமேன்னு தோணும்.
இப்படி செய்யறதே வந்தனம். அப்படி செய்கிறப்ப தான் என்கிற நினைப்பு அழிக்கப்படுது. தான் பெரிய ஆள் என்ற நினைப்பு போய் பணிவு வரும்.
கம்ஸன் கிருஷ்ணன் இருக்கிற இடத்தை தெரிஞ்சதும் அவனையும் பல ராமனையும் மதுராவுக்கு அழைச்சு வரச்சொல்லி அக்ரூரர் என்கிறவரை அனுப்பினான். அக்ரூரர் வசுதேவரோட தாயாதி. அவரும் போய் அழைச்சதும் கண்ணன் உடனே கிளம்பிட்டான். வந்ததோட முக்கிய காரியம் முடியணுமே. இன்னும் மத்த பல காரியங்கள் இருக்கே.
வரவழில ஒரு சாயங்காலம் யமுனை ஆறில மாலை அனுஷ்டானம் செய்ய இறங்கினார் அக்ரூரர். அப்படியே திகைச்சு போயிட்டார். கரை பக்கம் திரும்பி பாக்கிறார். கிருஷ்ணனும் பலராமனும் ஜபம் செய்யராங்க. தண்ணிக்குள்ளே பாத்தா அங்க சிரிச்சுகிட்டே இருக்காங்க. அக்ருரருக்கு கொஞ்ச நேரம் ஒண்ணும் புரியலை. இங்கேயும் அங்கேயும் திருப்பி திருப்பி பாத்துட்டு இரண்டு பேரும் சாதாரண ஆசாமிங்க இல்ல பகவான் அவதாரம்தான் அப்படின்னு புரிஞ்சுகிட்டார். புரிய ஆரம்பிச்சதும் எல்லா இடத்திலேயும் கண்ணனே தென்பட்டானாம். அக்ரூரரும் அவனை பாக்கிற இடமெல்லாம் விழுந்து விழுந்து வந்தனம் பண்ணார்.
இப்படி செய்தே அவரோட மனசு பகவான்ல லயிச்சு ஸ்திரப்பட்டதாம்.
Friday, May 16, 2008
பாதசேவனம்
இறைவனோட திருவடிகளுக்கு எப்பவுமே ஒரு சிறப்பான இடம் பக்தி வழில உண்டு.
சாதாரணமா நாம துச்சமா மதிக்கிறது பாதங்களைதானே. நடக்கிறோம், கொள்ளறோம், பாதங்கள்லதான் அழுக்கு படுகிறது. வெளியே போய் வந்தா கால்களைதான் கழுவிக்கிறோம். அப்படி சாதாரணமா அசுத்தமா நினைக்கிற பாதம் இறைவவனோடது என்கிறப்ப நாம அதை புனிதமா நினைக்கிறோம். எப்படி பெரியவங்க கால்களை தொட்டு கும்பிடறோமோ அப்படி பகவானோட பாதங்களை தலைல தாங்கவும் பக்தர்கள் தயங்க மாட்டாங்க. அதனாலதான் பெருமாள் கோவில்ல சடாரி சாத்துகிறாங்க. கிரீடம் மாதிரி இருக்கிற அது மேலே பாதங்கள் பொறிச்சு இருக்கும்.
இந்த பாதுகைகளின் பெருமையை பாடி பாடி பரமனோட பாதங்கள்ல தன்ன முழுக்க அர்பணிச்ச வேதாந்த தேசிகர் பாதுகா சஹஸ்ரம்னு புத்தகமே எழுதினார்.
ராமரோட பாதுகைகளைதான் பரதரும் கேட்டு வாங்கிப்போனார். ராமரோட பாதம் பட்டுதான் அகலிகையும் சாபம் நீங்கினாள். இத பாத்து விஸ்வாமித்திரர்,
மை வண்ணத்து அரக்கி போரில்
மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன்
அப்படின்னு ஆச்சரியப்பட்டாராம்.
அப்பப்ப நடக்கிற தேவ அசுர யுத்தம் நடந்து மகாபலி தலைமைல அசுரர்கள் ஜெயிச்சுட்டாங்க. தேவர்களோட அம்மா அதிதி சும்மா இருப்பாளா? பயோ விரதம்னு ஒரு விரதம் இருந்து விஷ்ணுகிட்டே வரம் வாங்கினா.
பெருமாளும் ஒரு குள்ளமான பிரம்மசாரியா வாமனரா வடிவெடுத்து பலிகிட்ட வந்தார். பலியும் வரவேத்து "உங்களுக்கு என்ன வேணும்?" ன்னு கேட்டான்.
"ஒண்ணும் வேணாம், என் காலால மூணு அடி மண் போதும்"ன்னார் விஷ்ணு.
"அட! நான் இந்த மூணு உலகத்துக்குமே ராஜா. வெறும் மூணு அடி மண்தானா வேணும்?"ன்னான் பலி. அது போதும்னுட்டார் வாமனர்.
அசுர குருவான சுக்கிராசாரியாருக்கு இது தெரிஞ்சு போச்சு. பலிகிட்ட " இவன் கேக்கிறானேன்னு கொடுக்காதப்பா. அது உனக்கே கெடுதியா முடியும்" ன்னார்.
இந்த சின்ன பையன் என்ன பண்ண முடியும்?
அப்பனே வந்து இருக்கிறது சாதாரண ஆசாமி இல்ல. விஷ்ணு. அவர் எப்பவும் சுரர்களுக்குதானே சாதகம் பண்ணுவார். அதனால சொல்லறேன். வேண்டாம்.
பலி சக்ரவர்த்தி கேக்கலை.
விஷ்ணுவே வந்து கேட்டா நான் என்ன பாக்கியம் பண்ணி இருக்கணும்? அப்படி பாத்தாலும் அது தப்பில்லே.
தண்ணீர் இருக்கிற கமண்டலுவை தூக்கிவிட்டான் பலி.
சுக்கிராசாரியாருக்கு பொறுக்கலை. இவன் ராஜ்யத்தை விஸ்தாரம் பண்ன நான் எவ்வளோ கஷ்ட பட்டு இருப்பேன்? அதை எல்லாம் ஒடு நிமிஷத்துல தொலச்சுடுவான் போல இருக்கேன்னு நினச்சு ஒரு வண்டு ரூபம் எடுத்து போய் கமண்டலு மூக்கில உக்காந்து அத அடைச்சுட்டார்.
வாமனர் சிரிச்சுகிட்டே ஒரு தர்ப்பையை எடுத்து கமண்டலு மூக்கில குத்தினார். சுக்கிராசாரியாரோட ஒரு கண்ணு போச்சு.
பிறகு பலி தாரை வார்த்து தர வாமனரும் வாங்கிகிட்டார். "சரி, உன் மூணு அடியை அளந்து எடுத்துக்க"ன்னு பலி சொன்ன உடனே வாமனர் வளர ஆரம்பிச்சார். ஒரு அடியால மண்ணையெல்லாம் அளந்தார். இரண்டாவது அடியால விண்ணையெல்லாம் அளந்தார். "மூணாவது அடியை எங்கே வைக்கட்டும்?” ன்னு பலியை பாத்து கேட்டார்!
"ஸ்வாமி! என் தலை மட்டுமே பாக்கி! அதில வைங்க" ன்னு பலி சொன்னான்.
பகவானும் சிரிச்சுகிட்டே அவன் தலை மேல தன் காலை வைத்து அப்படியே அழுத்தி சுதல லோகத்துக்கு கொண்டு போயிட்டார். அங்கே அவனை ராஜாவாக்கினார். எல்லா மங்களங்களையும் கொடுத்தார்.
அப்படி திருவடி தீட்சை வாங்கினவன் பலி சக்ரவர்த்தி.
எவனுக்கு நான் அருள் பண்ண நினைக்கிறேனோ அவனோட பொருளை எல்லாம் நான் போக்கிவிடுகிறேன். பொருள் இருக்கு என்கிற செருக்கால இல்லையா மனுஷன் கர்வத்தோட உலகத்தையும் என்னையும் அவமதிக்கிறான்?
அப்படின்னு பாகவதத்திலே பகவான் சொல்கிறதா இருக்கு.
அது போல பலியோட சொத்தையெல்லாம் தன்னோடதாக்கி அவன் பணித்தபிறகு அவனுக்கு அவன் அகங்காரத்தையும் அழிச்சு அவனை ரக்ஷிச்சார் பெருமாள்.
Thursday, May 15, 2008
கீர்த்தனம்
அடுத்து கீர்த்தனம். திருநாமங்களையும் புகழையும் மனதார உருகி பாடுவதே கீர்த்தனம். பாடல் இனிமையா இருந்தா மத்தவங்களுக்கு நல்லது. :-))
இனிமையா இல்லேனாலும் பாடறவருக்கு நல்லது. மனசு ஈடுபட்டு உருகறதுதான் முக்கியம். பாடப்பாட உள்ளம் அந்த பகவான்கிட்டே மேலும் நெருங்கும். இப்படி பாடி பாடியே பக்தி வளர்ந்து உன்னத நிலைக்கு போனவங்க மீரா, ஆண்டாள், சூர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள். உண்மையில் எந்த பக்தனுமே இந்த வழியை தள்ள முடியாது. பத்து பேர் சேர்ந்து பஜனை செய்கிற போது அவங்களுக்குள்ள ஒரு அன்யோன்யம் ஏற்பட்டு சத்சங்கம் ஏற்பட்டு பக்தி திடப்படும். இந்த நாம சங்கீர்த்தனத்தை முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் செய்தவர் ஸ்ரீமத் போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.
ஹரி சங்கீர்தனஸ்யாஸ்ய நோபதேச: கதஞ்சன
என்று ஹரி சங்கீர்த்தனத்துக்கு ஒரு உபதேசமும் வேண்டாம்; அதை விட உயர்ந்தது இல்லை என்கிறது பிரம்மாண்ட புராணம்.
மகாபாரத யுத்தம் முடிந்தது. தர்ம புத்திரர் கிருஷ்ணனை பாத்து இப்ப என்ன செய்யனும்னு கேட்டார். கிருஷ்ணன் "பீஷ்மர் அம்பு படுக்கைல இருக்கார். அவரப்போல தர்மத்தை தெரிந்தவங்க ரொம்ப குறைவு. நீ போய் அவர்கிட்ட உபதேசம் கேளு.” ன்னு சொன்னான்.
தர்மரும் போனார். பல விஷயங்கள் உபதேசம் ஆச்சு. எல்லாத்தையும் கேட்டுவிட்டு தர்மர் கேட்டார்:
"கோதர்ம: ஸர்வ தர்மாணாம் பரம பவத: மத:?“ [எந்த தர்மம் எல்லாவற்றிலும் உயர்ந்ததாக கருதப்படுகிறது?]
அதுக்கு பீஷ்மர் சொன்னார்:
"ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோதிகதமோ மத:
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைர் அர்சேத் நரஸ்ஸதா"
எல்லா தர்மங்களிலும் சொல்லப்படப்போகிற தர்மம் மிக உயர்வாக கருதப்படுகிறது. யார் பக்தியுடன் ஹ்ருதய கமலத்தில் பிரகாசிக்கிற வாசுதேவனை குண கீர்த்தன ரூபமான ஸ்துதிகளால் எப்போதும் அர்ச்சனை செய்கிறானோ அதுவே பரம தர்மம் ஆகும்.
அப்படி ஏன் இதுக்கு அவ்வளவு உயர்வு?
இதானால் ஹிம்ஸை கிடையாதாம். (கேட்கிறவங்களை பொறுத்து இருக்கு! ;-)) ஒரு பூவையும் பறிக்க வேண்டாம். காய், கனி எல்லாம் பறித்து நிவேதனம் செய்ய வேண்டாம்.
இதுக்காக எந்த பொருளையும் சேகரிக்க வேண்டியதில்லை.
ஆண், பெண், குழந்தை இப்படி யார் வேண்டுமானாலும் சொல்லலாம். மற்ற விஷயங்களை போல ஒரு க்வாலிபிகேஷனும் வேண்டாம். ஜாதி தடை இல்லை. இங்கேதான் சொல்லலாம், அங்கேதான் சொல்லலாம்னு ஒரு கட்டுப்பாடும் கிடையாது. காலைதான், இரவுதான் என்று நேர கட்டுப்பாடும் கிடையாது.
இந்த நியமத்தில சொல்லணும் என்று கட்டுப்பாடும் இல்லை.
ஆனால் நாமகீர்த்தனம் தனக்கு அபராதம் செய்தவனை நரகத்தில் தள்ளிவிடுமாம்.
அது என்னடா அபராதம் என்றால் பெரிசா 10 பாய்ண்ட் லிஸ்ட் போடராங்க! சாது நிந்தை, சிவ நாம விஷ்ணுநாமங்களிடையே வித்தியாசம் பார்க்கிறது, நாம பலம்தான் இருக்கே என்று செய்யக்கூடாததா சொன்ன கர்மாக்களை செய்கிறது இப்படி பத்து.
நாம சங்கீர்த்தனம் என்று பெரிசா கூட வேண்டாம். ஒரு முறை பகவான் நாமத்தை சொன்னாலே மோட்சம் கிட்டும்ன்னு சொல்லி அஜாமிளன் கதையை சொல்றாங்க. அஜாமிளன் இல்லாத அந்நியாயம் எல்லாம் பண்ணவன். சாகிற சமயத்தில் கடைசி வார்த்தையா அவன் பிள்ளையை கூப்பிட "நாராயணா" என்று சொன்னான். செத்தவனை கொண்டு போக யமதூதர்கள் வந்தாங்க. அப்போ விஷ்ணு தூதர்கள் வந்து "இவன் எங்களோடவன். தன்வசம் இல்லாமலே மோக்ஷத்துக்கு சாதனமான நாராயணா என்கிற சொல்லை சொன்னான் இல்லையா" ன்னு சொல்லி கொண்டு போயிட்டாங்க.
அப்ப பகவான் பெயரை ஒரு தரம் சொன்னா போதும் இல்லையா? இல்லை, எப்பவுமே சொல்லிகிட்டு இருக்கணும்.
ராம கிருஷ்ணர் கிட்டே ஒத்தர் கேள்வி கேட்டார். கங்கை கரையிலேயே இவ்வளோ பேர் இருக்காங்க. தினமும் கங்கைல குளிக்கிறாங்க. இவங்க பாபம் எல்லாம் போயிருக்கணுமே? ஆனா அப்படி ஒண்ணும் வித்தியாசம் தெரியலையே?
ராம கிருஷ்ணர் வேடிக்கையா சொன்னார்.
"இவங்க குளிக்கப்போற போதே கங்கை நதிலேந்து திவலைகள் பட்டு பாவம் எல்லாம் விலகும். அது எங்க போகும்? இங்கேயே இருக்கிற மரம் செடி கொடிகள்ளே இருக்கும். குளிச்சுட்டு திரும்பி வரப்போ எப்ப இங்க இருக்கிற கடைகளிலே இருக்கிற வஸ்துக்கள் மேலே மனசு போக ஆரம்பிக்குமோ அப்ப அவனோட பாவங்கள் எல்லாம் திருப்பி அவனை பிடிச்சுக்கும்!"
Tuesday, May 13, 2008
உள்ளுதல்
ஸ்மரணம் என்பது நினைக்கிறது, உள்ளுதல். பகவானைப்பத்தி கேட்டதையும் பாடினதையும் இடைவிடாம நினைக்கனும். அவனோட சிறப்பு, புகழ், அழகு, வீரம், அருள், கொடை இப்படி எல்லா குணங்களையும் சிந்திக்கணும். அப்படி நினைக்க நினைக்க அவன் சிறப்புகள்ல மனசு தோய தோய நம்ம மனசில இருக்கிற அழுக்கெல்லாம் போயிடும். தெளிவா ஆயிடுவோம்.
எதை இடைவிடாம நினைக்கிறோமோ அதுவாகவே ஆயிடுவோம் ன்னு பெரியவங்க சொல்லறாங்க. யார் காமத்தையும் ஆட்டம் போடறதையும் நினைக்கிறோமோ அவங்க அதுலேயே அழுந்தி மிருகமா போவாங்க. யார் பகவானைப்பத்தி அவனோட நல்ல குணங்களையே நினைக்கிறாங்களோ அவங்களுக்கு அந்த நல்ல குணங்கள் வந்து சேரும்.
திபெத்ல ஒரு துறவி இருந்தார். அவர்கிட்டே ஒரு இளைஞன் வந்து சேந்தான். உபதேசம் பண்ணனும்னு கேட்டுக்கிட்டான். "சரி, இங்கியே கொஞ்ச நாள் இரு. உனக்கு எது பொருத்தம்னு பாத்து செய்யறேன்" னு சொன்னார். பிறகு அவனை கவனிச்சதுல அவனுக்கு புத்தியும் அதிகமில்ல. உடம்பாலேயும் ஒண்ணும் பெரிசா செய்ய முடியாதுன்னு கண்டுபிடிச்சார். என்ன தத்துவம் சொன்னாலும் ஒண்ணும் புரியலை. என்னடா செய்யறதுன்னு யோசிச்சார். "அப்பனே, உனக்கு எதை ரொம்ப பிடிக்கும்?" ன்னு கேட்டார். "சாமி. நான் வளக்கிற யாக் எருமையைதான் ரொம்ப பிடிக்கும்" அப்படின்னான். "நல்லதுபா. நீ அதையே நினைச்சுகிட்டே இருக்க முடியுமா?" ன்னு கேட்டார்.
" ஓ செய்யலாமே.”
"சரி, அப்படியே பண்ணு"
இத கேட்டுக்கிட்டு இருந்த மத்த சிஷ்யங்களுக்கு சிரிப்பு தாங்கல.
சில நாட்கள் போச்சு. இந்த சீடன் சாப்பாட்டுக்கு நாலு நாளா வரக்காணோம். சாதாரணமா சாதனைல இருக்கிறவங்கள யாரும் தொந்திரவு செய்ய மாட்டாங்க. அதனால தகவல் குருவுக்கு போச்சு. குரு சிஷ்யன் இருந்த இடத்துக்கு போனார்.
"அப்பனே, இருக்கியா?” ன்னு கூப்டார்.
" குருவே, இருக்கேன்" ன்னு குரல் வந்தது.
"வெளியே வரலியா ?”
"வர ஆசைதான் குருவே, பசிக்குது.”
" பின்ன வாயேன்!”
" வாசல் சின்னது. கொம்பு இடிக்குது. வர முடிலை" ன்னான் சிஷ்யன்.
இந்த அளவு ஒன்றி போகாட்டாலும் ஸ்மரணம் அடித்தடுத்த நிலைகள்ல கொண்டு விடும்.
Monday, May 12, 2008
ரிவிஷன்
-பக்தி யோகத்துல இறங்கறவங்க எப்படி இருக்கனும்?
என்கிற தலைப்பில முன்னேயே பட்டியல் போட்டு இருந்தோம். அனேகமா அது எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா பாத்துட்டோம். முன்னே பின்னே இருக்கு. இது அத எல்லாம் கொஞ்சம் நேர் செய்ய.
1. பயிற்சி: அசையாத மனசோட எப்போதும் தொடர்ச்சியாக கடவுளை நினைச்சுக்கிட்டே இருப்பது. அதெப்படி எப்பவுமே நினைக்க முடியும்ன்னா, முடியும். வழியை அப்புறமா பாக்கலாம். இங்கே இருக்கு.
2. விவேகம்: சரி தவறு என்கிற பாகுபாடு தெரியணும். அதில் சரியானதையே எப்பவும் தேர்ந்தெடுக்க முடியனும். இங்கே இங்கே இங்கே இருக்கு
3. விமோகம்: மோகம் நமக்கு தெரிஞ்சதுதானே. அது உலக விஷயங்கள்ல. மோகம் இல்லாம இருப்பதே விமோகம். அதாவது பற்றுக்களில் இருந்து விடுபடுதல். இங்கே இருக்கு
4. சத்தியம்: வாய்மை. ஆன்மீகத்தில எந்த வழியா போனாலும் கடை பிடிக்க வேண்டியது. உண்மையே நினைத்து உண்மையே பேசி மனச்சாட்சி சொல்கிறதை கேட்டு நடப்பது.
5. அர்ஜவம்: நேர்மை இங்கே இருக்கு
6. கிரியை: எல்லா சீவ ராசிகளுக்கு நல்லதே செய்வது. ஏன்னா எல்லா சீவராசிகளிடமும் கடவுள் இருக்கிறார் இல்லையா? இங்கே இருக்கு
7. கல்யாணம்: திருமணம் இல்லைங்க! இதுவும் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்து வேற விதமா பயன்படுகிற பல வார்த்தைங்கள்ல ஒன்னு! கல்யாணம் என்கிறது மற்றவர்களிடம் அன்பு பாராட்டி அவர்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது. கடவுளிடம் வேண்டிக்கிறப்ப எல்லாரும் நல்லா இருக்கணும், உலகம் அமைதியா நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிறது.
8. தயை: கருணை. அன்பே சிவம். கடவுள் அன்பு, மன்னிக்கும் தன்மை, பரிவு கொண்டவன். அவனை புரிந்து கொள்ள , அடைய முயற்சி பண்ணுகிற நாமும் அவனை மாதிரி இருக்க பழக வேண்டும். இங்கே இருக்கு
9. அஹிம்சை: மனதாலும் செயலாலும் மற்ற சீவ ராசிகளுக்கு துன்பம் விளைவிக்காம இருப்பது. இங்கே இருக்கு
10. தானம்: கஷ்டப்படுகிற ஏழை எளிய மக்களுக்கு முடிந்தவரை, சுத்தமான உள்ளத்தோட வாரி கொடுக்கிறது. இங்கே இருக்கு
11. அனவஸ்தை: அவஸ்தை தெரியுமில்லையா? கஷ்டப்படுகிறது. அனவஸ்தை எப்பவுமே சிரிச்சுகிட்டு நம்பிக்கையோட இருப்பது. இங்கே இருக்கு
இந்த பதினொரு விஷயமும் பக்தி வழில சீரியஸா ஈடுபடறவங்களுக்கு இருக்க வேண்டிய விஷயங்கள். நமக்கு இதெல்லாம் இல்லைன்னா வளர்த்துக்க வேண்டியது.
Sunday, May 11, 2008
கேள்வி
ம்ம்ம்ம் கடந்த பதிவுகள் கடைசிலே கொஞ்சம் கனமா போச்சோ என்னவோ!
ஆமாமா! நீங்க பாட்டுக்கு இப்படி இப்படி இருக்கணும்னு பட்டியல் முழ நீளம் போட்டுக்கிட்டே போனா எப்படி? எதை கடை பிடிக்கணும்னு கொஞ்சம் சிம்ப்ளா சொல்லுங்க!
சரி ஆகட்டும். சிம்பிளாவே போகலாம்.
முதல்ல வரது பகவானோட கதைகளை கேக்கிறது.
முதல்ல இறைவனோட பெருமைகளை தெரிஞ்சுக்கணும். அப்புறம் அப்படி தெரிஞ்சுக்கிறதோட பயனை பத்தி தெரிஞ்சு, இறைவனை பத்தி மேலும் தெரிஞ்சு கொண்டு, யார் எப்படி பயன் பெற்றாங்களோ அவங்க வழியை தெரிஞ்சுக்கணும். நாமும் அவங்களோட உயர்ந்த நிலையை அடைய சாதனை செய்யனும். இதுக்கெல்லாம் முதல் படி பகவானை பத்தி தெரிஞ்சுகிறதுதானே? இதுதான் முத படி. கேள்வி. சிரவணம் என்கிறாங்க. கேக்க கேக்க அவனை பாக்கத்தோணும். மனசு ஒருமை படும். மத்த விஷயங்கள் மேல பற்று விலகும். இது அடுத்த படிகள்ல போக உதவும்.
அட, அட, இப்படி ஏதாவது சுலபமா சொல்லறதை விட்டுட்டு.. ம்ம்ம் மேலே சொல்லுங்க. கதை கேட்டாலே பக்தில முன்னேறி மோக்ஷம் கிடச்சுடும் இல்ல?
நக்கலா? அப்படி கதை கேட்டுதான் ஒத்தர் மோக்ஷத்துக்கு போனாரு!
அட நெசமாவா? அப்ப கதை சொல்லுங்க.
இதோ பிடிங்க!
பரிக்ஷித்து மகா ராஜா ஒரு நாள் பரிவாரங்களோட வேட்டையாடிகிட்டு இருந்தார். வேட்டை மும்முரத்துல எல்லாரும் பிரிஞ்சுட்டாங்க. பரிக்ஷித்துக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் தேடி போனார். அங்க சமீரகர் என்கிற முனிவர் தவம் செஞ்சுகிட்டு இருந்தார். அவரை தண்ணி கேட்டார். அவரோ தவம் கலையாம இருந்ததால பதில் சொல்லலை. கோபப்பட்டு பரீக்ஷித்து அங்கே பக்கத்தில கிடந்த ஒரு செத்த பாம்பை தூக்கி அவர் கழுத்துல மாலை மாதிரி போட்டுட்டு போயிட்டான்.
பிறகு சமீரகரோட பிள்ளை அங்க வந்தான். வயசு சின்னதானாலும் தபசு பெரிசு. அப்பா கழுத்தில செத்த பாம்பை பாத்தான். நடந்த விஷயம் ஞான திருஷ்டில தெரிஞ்சது. படு கோபம் வந்தது. "இவனென்லாம் ஒரு ராஜாவா? என் அப்பா கழுத்தில பாம்பை மாலையா போட்டவன் ஒரு வாரத்தில தக்ஷகன் பாம்பு கடிச்சு சாகட்டும்" ன்னு சாபம் கொடுத்துட்டான்.
சமீரகர் தவம் கலைஞ்சு எழுந்தப்ப தன் பையன் அழுதுக்கிட்டு இருக்கிறதை பாத்தார். ஏண்டா அழறேன்னு கேட்டார். பையனும் நடந்ததை சொன்னான். "என்ன காரியம்டா செஞ்சே? நானோ முனிவன். எனக்கு பாம்பை போட்டா என்ன மாலையை போட்டா என்ன? ரெண்டும் ஒண்ணுதான். இதுக்குப்போய் ராஜாவை சபிச்சுட்டயே! அவனால எத்தனை ஜனங்க சந்தோஷமா இருக்காங்க?” இப்படி கடிந்துகிட்டு ராஜா கிட்டே போய் விஷயத்தை சொல்லி இன்னும் ஏழு நாள்தான் உயிர் வாழ்வார் அப்பிடின்னும் சொல்லிட்டு வான்னார்.
இதை கேள்வி பட்ட ராஜா வருத்தப்பட்டான். இன்னும் ஒரு வாரம்தான் இருக்கா? அதுக்குள்ள நாம் எப்படி உருப்படலாம் னு யோசிச்சான். சரி வடக்கிருந்து உயிர் தியாகம் பண்ணலாம்னு கங்கை கரைக்கு போனான். பல ரிஷிகளும் வந்து சேந்தாங்க. அவங்களை வணங்கி தேற வழிய சொல்லுங்கன்னு கேட்டான். அவங்க சுகர் கொஞ்ச நேரத்துல இங்க வருவார். உனக்கு மோக்ஷம் கிடைக்க வழி அவரால தெரியும் னு சொல்லி ஆசிர்வாதம் செஞ்சுட்டு போயிட்டாங்க. அங்கே சுக பிரம்ம ரிஷியும் வந்து சேர்ந்தார். அவரை வணங்கி யோசனை கேக்க அவர் ஒரு வாரத்தில மோக்ஷம் கிடைக்கும் வழி பகவானை பத்தி கதை கேட்கிறதுதான் அப்படின்னு சொல்லி பாகவதத்தை சொல்ல ஆரம்பிச்சார்.ஒன்பதாவது அத்தியாய கடைசில சுகர் கிருஷ்ணனோட பெருமைகளை சுருக்கமா சொன்னார். பரிக்ஷித்து "எனக்கு ரொம்பவே அதிருப்தியா இருக்கே. ஹரிசந்திரன், துஷ்யந்தன், சூரிய குல மன்னர்கள், சந்திர குல மன்னர்கள் கதை எல்லாம் கேட்டப்ப எப்ப கிருஷ்ணன் கதை வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன். என் உறவினர்கள் எல்லாரும் கிருஷ்ணன் பத்தி எவ்வளவு உயர்வா சொல்லி இருக்காங்க. அவன் கதையை கேக்கதான் நான் உயிர் பிழச்சு இருக்கேன் போல தோணுது. அதனால அவன் கதையை விரிவா சொல்லுங்க" ன்னு கேட்டான். ரொம்பவே சந்தோஷப்பட்ட சுகர் கிருஷ்ணன் கதையை விஸ்தாரமா சொல்ல (10 வது அத்தியாயம்) சிரத்தையோட கேட்ட பரிக்ஷித்து மோக்ஷம் அடைஞ்சான்.
Friday, May 9, 2008
தானம்
கடைசியா தானம். இதுல கொடுக்கிறவர் எவ்வளவு கொடுக்கிறார் என்கிறது அவ்வளவு முக்கியமில்ல. என்ன உள்ளத்தோட கொடுக்கிறார்ன்னு பாக்கணும். கோவில் கட்டறாங்க, திருவிழா நடத்தறாங்க. அதுக்கு ஒரு கோடீஸ்வரன் ஆயிரம் ரூபா கொடுக்கிறது பெரிசு இல்ல. ஒரு அன்னாடங்காச்சி நிறைஞ்ச உள்ளத்தோட ஒரு ரூபா கொடுக்கிறது ரொம்ப பெரிசு.
பக்தர்கள் எல்லா ஜீவ ராசிகள் கிட்டேயும் இறைவனை பாத்தா தன் கிட்ட இருக்கிறா எல்லாத்தையும் அவற்றோட பகிர்ந்துக்கதானே நினைப்பான்?
நாம தேவர் என்று ஒரு பக்தர் மகாராஷ்ரத்துலே. விட்டலனுடைய பரம பக்தர். நிறைய அபங்கங்கள் பாடி இருக்கார்.
(அபங்கம் என்கிறது நம்ம தேவாரம் மாதிரிம். பக்தி பாடல்கள்.)
வாழ்கை முழுதும் வறுமைதான்.
ஒரு நாள் யாரோ ஒரு ரொட்டியையும் கொஞ்சம் வெண்ணையும் கொடுத்துட்டு போனாங்க. அதை சாப்பிட பக்கத்துல வெச்சுட்டு "விட்டலா! இன்னிக்கி சாப்பாடு அனுப்பிட்டாயா" ன்னு விட்டலனை நினைச்சு பஜன் செய்ய ஆரம்பிச்சார். அப்ப ஒரு நாய் வந்து ரொட்டியை கவ்விகிட்டு ஓட ஆரம்பிச்சது. பக்கத்துல இருந்த எல்லாரும் சத்தம் போட முழுச்சுகிட்டார் நாமதேவர். எல்லாரும் "பாரு பாரு ரொட்டியை நாய் கவ்விகிட்டு ஓடறது" ன்னாங்க. நாம தேவரும் அதன் பின்னாலேயே ஓட ஆரம்பிச்சார். நாய் இன்னும் வேகமா ஓடறது. நாமதேவர் "விட்டலா, விட்டலா, ரொட்டியை மட்டும் எடுத்துக்கிட்டு வெண்ணையை விட்டுட்டயே. ரொட்டியை அப்படியே சாப்பிட முடியாது. தொண்டை அடைக்கும்"ன்னு கத்திக்கிட்டே ஓடினார்.
சுத்தி இருந்தவங்க எல்லாரும் இது சரியான கிறுக்குன்னு நினைச்சாங்க.
இவருக்கு நிலையா வருமானம் ஏதும் கிடையாது. எப்படியோ நாலு காசு சேர்ந்தாலும் பாகவதர்களை கூப்பிட்டு பஜனை எல்லாம் நடத்தி சாப்பாடு போட்டு தீத்துடுவார்.
இவரோட போக்கு வெறுத்துப்போய் இவர் மனைவியே விட்டலன் கிட்டே போய் புகார் பண்ணி இருக்கா. "நீ இப்படி எம் புருஷனை போட்டு இழுக்கிறயே! பாரு, இந்த மனுஷன் ஒரு சல்லி காசு கூட வீட்டுக்கு கொண்டுவர மாட்டேங்கிறார். நான் எப்படி குடும்பம் நடத்தறது?” என்று கேட்டா. விட்டலனோ "நான் ஒன் புருஷனை இழுக்கலை. அவன்தான் என்னை இழுக்கறான். என்ன செய்யட்டும்?” ன்னார். இவளோ "அதெல்லாம் எனக்கு தெரியாது. காசு வரலைனா நாங்க பட்டினி கிடக்க வேண்டியதுதான்" அப்படினா. விட்டலன் "சரி, சரி, எங்கிட்டே ஏது காசு? நீ போய் ருக்குமாயியை பாரு.” அப்படின்னான். இவளும் ருக்குமாயியை போய் பாத்து புகார் பண்ணா. "சரி, நான் கவனிக்கிறேன்" அப்படின்னு ருக்குமாயி சொன்னா. நாமதேவர் மனைவியும் திருப்தியா வீட்டுக்கு போனா.
அன்னிக்கு இரவு ஒரு வண்டியை ஓட்டிக்கிட்டு ஒரு ஆசாமியும் ஒரு பெண்ணும் நாமதேவர் வீட்டுக்கு வந்தாங்க. நாமதேவரோட குரு கொண்டு கொடுக்கச்சொன்னதா நிறைய மூட்டைகளை இறக்கி விட்டுவிட்டு போயிட்டாங்க. இறக்கின மூட்டையெல்லாம் பிரிச்சு பாத்தா நிறைய காசும் பொருளும் இருந்தது. இது ஏன் என் குரு இங்க அனுப்பினார்ன்னு கேட்டுக்கிட்டே கொண்டு வந்தவங்களை தேடினா அவங்களை காணோம். விட்டலனும் ருக்குமாயியும் எப்பவோ திரும்பி போயிட்டாங்க!
Thursday, May 8, 2008
பக்தியின் எல்லையிலே!
எதை பற்றி நிற்கிறோமோ அதுவே நமக்கு கிடைக்கும். அழியற விஷயங்களை பற்றி நிக்கிறது அழிவை நோக்கித்தான் செலுத்தும். அப்படி இல்லாம பரம் பொருள் மேல பற்று வச்சா அதை நோக்கி போவோம். அந்த அன்புதான் உண்மையான அன்பு. இதுதான் நம்மோட புலன்களுக்கு அகப்படாத பெரிய இன்பத்தை அனுபவிக்க வழி காட்டும்.
சாதனைல ரொம்ப முன்னேறிய பக்தன் தன் உடலை பத்திய நினைப்பு இருக்கிற வரை இறைவனோட குணங்களையும் அழகையும் வர்ணித்து பேசுவான். உடலை பத்திய நினைப்பு போயிட்டா விவரிக்க முடியாத நிலைக்கு போயிடுவான். இது ஞான விஷயமாயிடும். வழி எல்லாம் நம்ம வசதிக்குத்தான் பிரிச்சுக்கிறோம். க்ராஸ் ஓவர் இருக்கும்னு பாத்தோம் இல்லையா?
பூரணமா நிபந்தனை இல்லாம அன்பு இருக்கிற இடத்திலே தன்னைத்தானே அறிஞ்சு கொள்கிற உயர்ந்த ஞானம் தானா அமைந்திடும். அன்பும் ஞானமும் அவற்றோட முடிவுல ஒண்ணேதான்.
பாகவதம் சொல்லுது "ஆத்மானந்தத்துல ஆழ்ந்து கிடக்கிற ரிஷிகள் தங்களோட பந்தத்திலிருந்து விடுபட்டு நின்னும் பகவான்கிட்டே வேற கோரிக்கை இல்லாம, அன்பு காரணமாவே அன்பு செலுத்தறாங்க.”
பிரகலாதன் தன்னை மறந்து இருந்தப்ப பிரபஞ்சத்தையே காணவில்ல. பெயரோ உருவமோ இல்லாத ஒரு நிலையே தெரிஞ்சதாம். எப்ப தான் பிரகலாதன் அப்படின்னு தோணிச்சோ அப்ப பிரபஞ்சமும், அதுக்கு தலைவனான எல்லை இல்லாத புண்ய குணங்களோட நிலலையுமா ஆன பிரபுவும் புலப்பட்டாங்களாம்.
கோபியர்களும் அப்படித்தான். தாங்கள் யார்ன்னு தெரியாம கிருஷ்ணனாகவே இருந்தாங்களாம். தான் என்கிற நினைப்பு வந்த போது கிருஷ்ணன் பூஜிக்க தகுந்தவனாயும் இவர்கள் கோபியர்களாயும் ஆனாங்களாம். அப்ப கிருஷ்ணன் புன்னகையோட மன்மதன் போல அவங்க எதிர நின்னானாம்.
பரம் பொருள்கிட்ட இருந்து விலகி நின்னா அது பக்தி. ஒன்றி போனா அதுவே ஞானம்.
ஆனா இதுவே ஒரு அஞ்ஞானத்தில கொண்டு விடலாம். பக்தன் சர்வேஸ்வரன் என்கிற கற்கண்டை சுவைக்கத்தான் விரும்பரானாம். அஹம் பிரம்மாஸ்மி ன்னு சொல்லி தானே கற்கண்டா மாற விரும்பறதில்லையாம். ராம கிருஷ்ணர் இப்படி சொல்கிறார்.
`````````
கிருஷ்ணன் தான் வந்த வேலை முடிஞ்சு வைகுந்தம் போக ரெடி ஆயிட்டார். தன்னை உயிருக்கு உயிரா நினைச்ச கோபியர்களை அப்படியே விட்டிட்டு பேகலாமா? அதனால அவர்களை கூப்பிட்டு கேட்டார். "நான் வைகுந்தம் போக வேண்டிய நேரம் வந்தாச்சு. நீங்க என்ன செய்கிறதா உத்தேசம்?”
அவங்க சொன்னாங்க, "நீ போயிட்டா எங்களுக்கு என்ன இங்க வேலை. நாங்களும் உன் கூடவே வரோம்.”
சரின்னு அப்படியே ஏற்பாடு ஆச்சு. கிருஷ்ணனும் வைகுந்தம் போய் நாராயணனோட கலந்தாச்சு. கோபியர்களும் வந்து சேந்தாங்க. வந்ததும் கிருஷ்ணனை தேடினாங்க. காணலை.
சில நாள் போனதும் நாராயணன் அவங்களை கூப்பிட்டு அனுப்பினான். "இங்க சந்தோஷமா இருக்கீங்களா? என்ன சேதி" ன்னு கேட்டான். கோபியர்கள் "இங்க எங்களுக்கு நரகமா இருக்கு" ன்னு சொன்னாங்க. "ஏன்?" னு ஆச்சரியமா கேட்டான் நாராயணன்.
இங்க கண்ணனை காணோமே!
நானேதான் கண்ணனா இருந்தேன்னு சொன்னா கோபிகைகள் ஒத்துக்கலை. "சரி, என்ன பண்ணனும்?" ன்னு கேட்டான் நாராயணன். "எங்களை திருப்பியும் பிருந்தாவனத்துக்கு அனுப்பிடு. நாங்க அங்க கிருஷ்ணனை நினைச்சுக்கிட்டே இருந்திடறோம்!" அப்படினாங்க கோபியர்கள்!
அப்படியே ஆகட்டும்னார் நாராயணன்.
~~~~~~~~~~
சமீபத்தில பிருந்தாவனத்துக்கு போய் வந்தார் எனக்கு தெரிஞ்ச ஒத்தர். ஊரை சுத்திப்பாக்க ஒரு ரிக்ஷா அமர்த்திக்கிட்டார். பெரிய பார்க் ஒண்ணை சுத்திப்பாத்தார் திரும்பி வந்தப்ப என்ன பாத்தேன்னு ரிக்ஷாகாரர் கேட்டார். நிறைய குரங்குகள் இருக்கு. ஒண்ணும் விசேஷமா இல்லையேப்பா ன்னார். அப்படியா. சரி திருப்பியும் போங்க. கொஞ்ச நேரம் அதையே பாத்துட்டு வாங்கன்னார் ரி. காரர். இவரும் சரின்னு போய் உள்ளே உக்காந்தார். குரங்குகளை பாத்துக்கிட்டே இருக்கிறப்ப திடீர்னு ஒரு விஷயம் புரிஞ்சது.
குரங்கு சேட்டைனேதானே பிரசித்தம்? அது சும்மா இருக்காது இல்லியா? ஒரு இடமா இருக்காது. இங்கிருந்து அங்கே தாவும். குதிக்கும். ஏதாவது சேட்டை செஞ்சுகிட்டே இருக்கும்.
ஆனா இந்த குரங்குகளோ அப்படி இல்ல. சிலது ஒரே இடத்துல சும்மா இருக்கும். சிலது கண்ணுல இருந்து கண்ணீரா வரும். சிலது ஒரே இடத்தை சுத்தி சுத்தி வரும். மொத்ததுல எல்வாமே வித்தியாசமா இருந்ததாம். நண்பர் ரிக்ஷாகாரர் கிட்ட பாத்ததை சொன்னார். அதுக்கு ரிக்ஷாகாரர் மேலே நாம பாத்த கதையை சொன்னார். இந்த குரங்குகள்தான் அந்த கோபியர்கள். கிருஷ்ணனையே நினச்சுக்கொண்டே இருக்குங்க அப்படின்னார்.
Wednesday, May 7, 2008
சத்வம், தர்மம், அனவஸ்தை,அனுதர்ஷம்.
கடைசியாக சத்வம் என்கிற உயர்ந்த சீலம்.
எப்பவும் சோம்பலோட தூங்கி வழிஞ்சுகிட்டு சும்மா இருக்கிறது தமஸ்.
இது எப்படி சரியாகும்? ஆள எழுப்பி ஏதாவது வேலைல இறக்கினா சரியாகும்.
ஏதாவது வேலை செய்துக்கிட்டே, கோபப்பட்டுக்கிட்டே இருக்கிறவரை என்ன செய்யறது? அட கொஞ்சம் அமைதியா இருப்பான்னு சொல்லி சரி பண்ணலாம்.
அதாவது-
செயல் இல்லாம இருக்கிற தமஸ் ஐ ராஜஸ குணத்தால ஜெயிக்கணும். அதை சத்வ குணத்தால ஜெயிக்கணும். அப்படி செய்தா மனசு எப்பவும் சாந்தமா அலை கழியாம இருக்கும். இதுவே இறை உணர்வை இதயத்துல நிரப்பி பக்தியோட உயர்ந்த நிலைக்கு சாதகனை கொண்டு போகும்.
தர்மம் என்பது நம் பெரியவங்களும் சாஸ்திரங்களும் எதை சரின்னு ஒப்பு கொண்டதோ அதுதான். அதுக்கு மாறா செய்கிற எதையும் பெரியவங்க ஒத்துக்க மாடடாங்க. "தர்மோ ரக்ஷதி ரக்ஷித:" என்ற படி யார் தர்மத்தை காக்கிறாங்களோ அவங்களை தர்மம் காக்கும். இங்க காக்கிறதுன்னா என்ன? நாம தர்மத்தை காப்பாத்தறதாவது?
தர்மத்தை கடைபிடிக்கனும். அதுதான் காக்கிறது.
அடுத்து வர அனவஸ்தை பக்குவமான மனநிலையை சாதகனுக்கு கொடுக்கும். இத வச்சே சாதகனோட பக்குவத்தை எடை போடலாம். எப்ப எல்லா இடத்திலேயும் பரம் பொருளை சாதகன் பாக்கிறானோ அப்ப எப்பவுமே சந்தோஷமா இருப்பான். மனசில குறை எல்லாம் போய் நிறைஞ்சு இருக்கும்.
இது எப்படி கிடைக்கும்னா....
இது நமக்கு இயல்பானதுதான். ஆனால் இந்த நிலைலேந்து புலன்களால அனுபவிக்கிற ஆசையும் வெளிப்புற சூழலும் நம்மை வேற எங்கயோ இழுத்துப்போக நாம அனுமதிக்கிறோம். பக்தியால வெளிப்பக்கம் போகிற புலன்களை உள்ளே திருப்பி வெளிப்புற சூழலையும் ஜெயிச்சா இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.
அனுத்தர்ஷ என்கிற மிகையான களிப்பு அடையாமை அடுத்தது.
இது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கலாம். சாதாரணமா எல்லாரும் சந்தோஷமா இருக்க விரும்பறாங்க? அது இருக்கலாம், ஆனா அளவுக்கு மேலே போக வேண்டாம்னு சொல்கிறாங்க. இன்பத்தையும் துன்பத்தையும் சமமா பாக்க கத்துக்கன்னு சொல்கிறார் கிருஷ்ணன்.
து:கேஷ்வனுத் விக்ன மனோ:ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
வீத ராக பய க்ரோத:ஸ்திததீர் முனிருச்யதே -கீதை 2-56
துன்பத்தில் துயரடையாத, இன்பத்தில் வேட்கை இல்லாத, பற்று- அச்சம்- சினம் இவை இல்லாத, உறுதியான உள்ளம் உடையவனே முனி எனப்படுவான்.
சுருக்கமா சொன்னா இச்சைகளை அடக்கி ஆள்கிறவனே அதிக சந்தோஷத்துல அகப்பட மாட்டான். அவன் ஆத்ம ஞானத்தையும் பெறுவான்.
Tuesday, May 6, 2008
கனக தாசர் -மனதின் சக்தி
வழிகள் பலவா இருந்தாலும் தானே வரும் விளைவுகள் இங்கேயும் அங்கேயும் இருக்கலாம். பக்தி ஞானத்தில் கொண்டு விடலாம். கர்ம யோகியோட குண்டலினி எழும்பலாம். ஞானி பக்தி பண்ண ஆரம்பிக்கலாம்.
உதாரணத்துக்கு ஒரு கதையை பாக்கலாம்.
மகாராஷ்ர மாநிலத்தில ஒரு ஆட்டிடையர். பெயர் கனகதாசர். கிருஷ்ணன் மேல ரொம்ப பிரியம். ஆடுகளை மேய விட்டுவிட்டு மனசாலேயே ககினெலே க்ருஷ்ணனுக்கு பூஜை செய்வார். பாட்டு பாடுவார். அவன் சிந்தனையாவே இருப்பார்.
வ்யாஸ ராயர்னு ஒத்தர். அந்த நாட்டு மந்திரி. அரசருக்கு அவர் மேல ரொம்ப மரியாதை. அப்படிப்பட்ட மகான் வ்யாஸ ராயர் ஒரு முறை பல்லக்குல ககினெலே பக்கம் போய்கிட்டு இருந்தார். கூடவே அவரது பரிவாரம். பரிவாரத்தில நிறைய வேத வித்துக்கள், புலவர்கள். போகிற வழியிலே ஒரு துளசிக்காடு வந்தது. மைல் கணக்கா அருமையான துளசி செடிங்க. அதை பார்த்த ராயருக்கு ஒரே சந்தோஷம். உடனே அதை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ய நினச்சார். மனசாலேயே ஒரு துளசி மாலை கட்டினார். அதை மனசாலேயே ககினெலே கிருஷ்ணனுக்கு போடும் போது.... அட இதென்ன மாலை ஒரு பக்கம் சரியா படியலையே!
வ்யாஸ ராயருக்கு ஆச்சரியமா போச்சு. நாம செய்தது கற்பனைதானே? அதில ஏன் இப்படி? சரின்னு திருப்பி அதேபோல மாலை மனசால கட்டி போட திருப்பியும் அதே போல படியலை. படு ஆச்சரியமான ராயர் பல்லக்கிலிருந்து தலையை வெளியே நீட்டி அறிஞர்களை கூப்பிட்டு விஷயம் சொன்னார். யாருக்காவது ஏன் இப்படின்னு தெரியுதான்னு கேட்டார். எல்லாரும் ஒத்தரை ஒத்தர் பாத்துக்கிட்டாங்க. யாருக்கும் காரணம் தெரியலை. இவ்வளளவு பெரிய அறிஞர் கூட்டத்துக்கே பிடிபடாத இது என்னவா இருக்கும்ன்னு யோசிக்க ஆரம்பிச்சார். பல்லக்கு போய்கிட்டு இருந்தது.
அப்ப கனகதாஸர் அவசர அவசரமா அங்க ஓடி வந்தார். சாமீ! சாமீ! ன்னு கூப்பிட்டார். பரிவாரங்கள் "என்னடா இது? ஒரு ஆட்டிடையன் நம்ம எஜமானரை கூப்பிடறான்" னு பாத்தாங்க. ராயரும் வெளியே எட்டிப்பாத்தார். கனகதாஸர் ,"சாமீ க்ருஷ்ணன் கையிலே மத்து சாத்தியிருக்கு. அது துளசிமாலைய சரியா படியாம தடுக்குது. மாலைய கொஞ்சம் தள்ளி போட்டா சரியாயிடும்" ன்னு சொன்னார். இதை கேட்ட எல்லாருக்கும் ஆச்சரியம். என்னடா இது ராயர் மனசில மாலை செஞ்சு போட்டா இவனுக்கு எப்படி தெரிஞ்சது? ராயரும் ஆச்சரியப்பட்டு கண்ணை மூடிக்கிட்டு இன்னொரு மாலையை மனசால பண்ணி கொஞ்சம் தள்ளிப்போட அது சரியா படிஞ்சது. "ஏனப்பா யாருக்கும் தெரியாத இந்த சமாசாரம் உனக்கு எப்படி தெரிஞ்சது?"ன்னு கேட்டார். "அதுவா சாமீ! நீங்க மாலை போடறப்ப நான் அவனுக்கு பூஜை பண்ணிக்கிட்டு இருந்தேன். அதனால தெரிஞ்சது" ன்னார் கனகதாஸர்.
மனசோட சக்தி இந்த அளவு இருக்க முடியும்.
Monday, May 5, 2008
அஹிம்சை
அஹிம்சை.
மத்தவங்களுக்கு துன்பம் செய்யாம இருக்கிறதும் மத்தவங்க நமக்கு செய்கிற துன்பத்தை பொறுத்து மன்னிக்கிறதும் அஹிம்சை.
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்அப்படின்னு வள்ளுவர் சொல்கிறார்.
பொன்றும் துணையும் புகழ்
பெறும் ஜீவ காருண்யம் அஹிம்சை இல்லை. சாந்தியும் சகிப்புத்தனமையும் இருக்கணும்.
துறவி ஒத்தர் குளிக்கப்போனார் ஆறுல முங்கி குளிச்சு வெளியே வரப்ப ஆத்து தண்ணில சிக்கி தத்தளிக்கிற தேள் ஒண்ணை பாத்தார். பாவமே ன்னு அதை வெளியே எடுத்து விட போனார். தேள் கண்டதா இவர் உதவி செய்யறார்னு? அதோட இயல்பு கைல கொட்டிடுச்சு. கை தானா உதற தேள் திருப்பியும் தண்ணில விழுந்து தத்தளிச்சது. துறவி திருப்பியும் அதை வெளியே எடுத்து விடப்போக அதே கதை ஆச்சு.
ஆனா துறவி அதை வெளியே எடுத்து விடற முயற்சியை கைவிடலை. சில பல தடவை கொட்டினப்பறம் ஒரு வழியா வெளியே எடுத்து விட்டார். இதெல்லாம் கரைலேந்து பாத்துக்கிட்டு இருந்த ஒத்தர் துறவிய கேட்டார்:
ஏன் சாமி அது கொட்டினப்பவே சும்மா விட வேண்டியதுதானே. திருப்பியும் திருப்பியும் ஏன் அதுக்கு உதவி செய்ய போய் கொட்டு பட்டீங்க?
துறவி சிரிச்சுக்கிட்டே சொன்னார். கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்யறது இயல்புதானே?
அதுக்குன்னு அது கொட்ட கொட்ட நீங்க ஏன் அதை எடுத்து விட போகணும்?
அது எங்கேயாவது அதோட இயல்பை விட்டுதா? ஆறு
அறிவு இருக்கிற நாம ஏன் விடணும்?
நமக்கு ஒத்தர் கெட்டது செஞ்சு விடறார். கோபமா வருது. அதுக்கு அவரை தண்டிக்கலாம்தான். ஆனா கஷ்டப்பட்டு அடக்கிக்கிறோம். இது அஹிம்சைதானா? அதாவது வர்ர கோபத்தோட கஷ்டப்பட்டு பொறுக்கிறது அஹிம்சை இல்லை. பொறுக்கிற நேரத்தில மனசு சாந்தமா இருக்கிற அளவு முன்னேறனும். அஹிம்சாவாதி எப்பவும் நினைக்கறது சொல்கிறது செய்கிறது ஒண்ணாவே இருக்கும்.
இந்த தூய்மை ஆன்மீகத்தில் மிக முக்கியம்.
ஆன்மீக சாதனையில் தேவையான உயர்ந்த குணங்களை பட்டியல் போடலாமா?
அஹிம்ஸா ப்ரதமம் புண்யம் புண்யம் இந்திரிய நிக்ரஹ:
ஸர்வ பூத தயா புண்யம் க்ஷமா புண்யம் விசேஷத:
ஞானம் புண்யம் தப: புண்யம் த்யானம் புண்யம் ததைவ ச
ஸத்வம் அஷ்டவிதம் புண்யம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்
அஹிம்ஸை முதலில் சொன்னதை கவனிக்கணும்.
இந்திரிய நிக்ரஹம் என்கிற புலனடக்கம் அடுத்து. சர்வ பூத தயை என்கிற உயிர் கருணை. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடின வள்ளலார் போல.
அடக்கம் அமரருள் உய்க்கும் என்றபடி க்ஷமா என்ற பொறுமை.
இந்த ஜடமான உடல் நானில்லை. அதை உள்ளிருந்து இயக்குகிற இயங்கு சக்தியான ஆத்மாதான் நான் என்கிற ஞானம்.
மனசை அடக்கி புலன்களை ஜெயித்து செய்கிற தவம்.
மனசை ஒரு நிலை படுத்தி சித்த சுத்தி பயிற்சி பண்ணி உபாசனா மூர்த்தியை லயிக்கப்பண்ணும் த்யானம்.
கடைசியாக சத்வம் என்கிற உயர்ந்த சீலம்.
Friday, May 2, 2008
நேர்மை, அன்பு
நேர்மை
பலவார்த்தைகளை ஏறக்குறைய ஒரே மாதிரி பொருள் செய்துக்கிறோம் நாம். சத்தியம் நேர்மை ஒரே மாதிரி இருக்கில்லே?
நன்னடத்தைதான் நேர்மை. எல்லா சூழ்நிலைலேயும் நேர்மையை கடைபிடிக்கனும்.
பல பேர் சாதாரணமா இருக்கிறப்ப நேர்மையா இருப்போம். அதுவே ஒரு இக்கட்டுன்னா நேர்மையா இருப்போமாங்கிறது சந்தேகமே.
இருந்தாலும் இதை ஒரு அடிப்படை அறமா சொல்கிறாங்க.
இறைவனை நம்பறதுல பகட்டில்லாத நேர்மை; அவன் பேரை சொல்கிறதுல நேர்மை; மகான்களுக்கு செய்கிற தொண்டில நேர்மை. இப்படின்னு ஒத்தரோட உலகியல் வாழ்வு இறையியல் வாழ்வு இரண்டிலேயும் நேர்மையை கடைபிடிச்சா சாதனைல உயரலாம்.
இதுவெல்லாம் சுலபமில்லைதான். ஆனால் இறை நம்பிக்கையால இதை சாதிக்கணும்.
அடுத்து அன்பு.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்
என்பு தோல் போர்த்த உடம்பு
அன்பில்லாத ஆள் சும்மா தோல்போத்திய எலும்பு கூடுதானேங்கிறார் வள்ளுவர்
சங்கரரும்
மனுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹா புருஷசம்ஸ்ரயம்
துர்லபம் தேவானுக்ரஹ ஹேதுகம்
அப்படின்னு விவேக சூடாமணில சொல்கிறார். இதுல மனுஷ்யத்வம் என்கிறது அன்பின் அடிப்படையில்தான்.
இந்த அன்பு வெறும் கவர்ச்சி/ மோகம் /பற்றால வரதில்லை. தன்னலமில்லாத தியாகம் தூய்மையான வாழ்வு இதன் அடிப்படைல வரதுதான் அன்பு.
சுய நல அடிப்படையா இருந்தா அதுக்கு இவ்வளோதான்னு ஒரு வரம்பும் துயரமும் கலந்தே இருக்கும்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிர்க்கும் தம்முயிர் போல் எண்ணியுள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாரவர் உளந்தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடமென நான் தேர்ந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ
வள்ளலார்தான் சொல்கிறார்.
வித்தையும் வினயமும் இருக்கற பிராம்ஹணன், பசு, யானை, நாய், நாயைச் சாப்பிடற புலையன் இவை எல்லாத்தையும் ஞானிகள் சமமான பார்வையிலேயே பார்க்கிறாங்கன்னு கிருஷ்ணன் சொல்கிறான். கீதை 5-18
இந்த மாதிரியாக ஞானம் அன்போட முதிர்ச்சில வரும். இந்த மாதிரியான ஞானிகளுக்கு செய்கிற தொண்டையே ரொம்ப உயர்ந்ததா சொல்கிறாங்க.
சாதகன் தூய அன்பை வளத்துகிறதால, "தான்" என்கிற சின்ன வட்டத்துலே இருந்து விடுவிச்சுக்கிட்டு மற்றவங்களுக்கு ன்னு வட்டம் விரிஞ்சு பிறகு இறைவன் படைச்ச உயிர்கள் எல்லாத்து மேலயும் அன்பு காட்டுகிறதா ஆகி விடுவான். இது இறை தரிசனம் பெற பெரிய துணையா ஆகும்.
யாரால தன்னலமில்லாத தூய அன்பை உணர முடியலையோ அவரால இறைவனை உணர முடியாது.
Thursday, May 1, 2008
ஹெவியா போகாம தடுக்க ஒரு ப்ரேக்!
பதிவுகள் கொஞ்சம் ஹெவியா போறதா மௌலி சொல்லி இருந்தார்.
ஒரு பட்டியல் போட்டு அதைப்பத்தி பேசறப்போ கொஞ்சம் தவிர்க்க முடியாம போச்சு. கதை ஏதாவது போடலாம்னா எழுதறது அதுக்கு தோதா இல்லை. சரின்னு ஒரு சின்ன ப்ரேக்.
----------
1. பயிற்சி: அசையாத மனசோட எப்போதும் தொடர்ச்சியாக கடவுளை நினைச்சுக்கிட்டே இருப்பது. அதெப்படி எப்பவுமே நினைக்க முடியும்ன்னா, முடியும். வழியை அப்புறமா பாக்கலாம்.
இப்படி முன்னால எழுதி இருந்தேன் இல்லையா?
அது எப்படின்னு பாக்கலாமா?
இதுக்கு உறுதுணையா இருக்கிறது நாமஜபம். நமக்கு பிடிச்ச இஷ்ட தேவதையோட பெயரை திருப்பி திருப்பி சொல்லறது. அதுலேயே பல விதங்கள் இருக்கலாம். உதாரணமா கண்ணா, மாதவா, கோவிந்தா, இல்லை சிவ சிவ இல்லை கந்தா கந்தா முருகாமுருகா இப்படி. ஒரே கடவுளின் எந்த பெயரை வேண்ணா சொல்லலாம். ஆரம்பத்துல தனியா உக்காந்து இதை மட்டும் சொல்லி பழகணும். பிறகு பல வேலைகளோட கோத்து பழகணும். உதாரணமா சமைக்கும்போது (ரங்கமணிகளுக்கும்தான்) நாம ஜபத்தோடயே சமைக்கலாம். அது உணவுல சேர்ந்து நல்ல பலன் தரும். இல்லை பைக்லே ஆபீஸ் போகும்போது.
இப்படி எல்லாம் சொல்லலாமா? எப்போ வேண்ணா சொல்லலாமா? நான் சுத்தமா இல்லையே? இப்படி எல்லாம் கேள்வி வரும்.
விடை நிச்சயம் சொல்லலாம்; சொல்லணும்.
பிரணவத்தோட சேர்க்காத நாமத்தை யார் எங்கே வேணுமானா சொல்லலாம்.
இப்படியே பழக பழக ஒரு ஆச்சரியமான சமாசாரம் நடக்கும். அந்த பேர் மனசிலே எப்பவுமே ஓடும். நாம் பேசும்போது, நடக்கும்போது, வேலை செய்யும்போது....
இது எப்படி?
மனசை புரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம். அது ரொம்பவே வினோதமானது.
ஜபம் செய்ய உட்கார்றோம். செய்ய ஆரம்பிக்கிறோம். சில நாள் கவனமா செய்கிறோம். புதுசு இல்லையா? செய்யும்போது கவனம் சிதறி எங்கோ தோசை வடை சினிமான்னு போயிடுது. வருத்தப்படறோம். திருப்பி ஜபம் செய்ய ஆரம்பிக்கிறோம். இப்ப கொஞ்ச நேரம் நிலைச்சு இருக்கு. ஆனாலும் திருப்பியும் எங்கோ போயிடுது. இப்படி ஓடுகிற மனசை திருப்பி திருப்பி ஜபத்துக்கு கொண்டு வரணும். இப்படி சில நாட்கள் போன பிறகு.... ஜபம் செய்கிறோம். மனசு எங்கோ போய்விட்டது. திருப்பி மனசை ஜபத்துக்கு கொண்டு வரப்பாக்கிறோம். அட! இது என்ன? அந்த ஜபம் உள்ளே ஓடிகிட்டுதான் இருக்கு! இப்படி ஜபம் செய்ய, கவனம் சிதற- திருப்பி திருப்பி நடக்குது.
எப்படி இது?
மனசில பல லேயர்கள் இருக்கு. அதுல ஒவ்வொரு லேயரிலேயும் ஒன்னொண்ணு நடக்கும். ஜபம் ஓடற லேயர் ஒண்ணு. சாதாரணமான நினைவுகள் அலையறது ஒண்ணு.
எப்ப எல்லா லேயர்லேயும் ஒரே விஷயம் ஓடுதோ அப்ப முழு கான்சன்ட்ரேஷன் வந்தாச்சு.
பாண்டிச்சேரி போயிட்டு என் நண்பனும் நானும் மோட்டார் சைக்கிள்ல திரும்பி வந்து கொண்டு இருந்தோம். அப்ப அவன் ஒரு ஆம்புலன்ஸ் ஐ காட்டி,”இதுல ஆம்புலன்ஸ் ன்னு "தலை கீழா" தெரியறா மாதிரி எழுதி இருக்கு இல்லையா? ஏன்னு தெரியுமா?” ன்னு கேட்டான்.
இது தலை கீழா இல்லையேன்னேன். சரி, சரி, வித்தியாசமா இருக்கில்ல? ஏன் ன்னு கேட்டான்.
அதுக்கு நான் விடை இப்ப தெரியலை. நான் கடலூர் பாலம் தாண்டறத்துக்குள்ளே சொல்லறேன்னு சொன்னேன். பிறகு பலவிதமான விஷயங்களை பேசிகிட்டே வந்தோம். திடீன்னு நான் டேய் உன் கேள்விக்கு ஆன்சர் இதுதான். ஆம்புலன்ஸ் ன்னு முன்னால போற வண்டிகளோட ரியர் வியூ கண்ணாடில சரியா தெரியணும். அதனால அதுக்கு தக்க படி எழுதி இருக்கு ன்னு சொன்னேன்.
உனக்கு விடை தெரிஞ்சது ஆச்சரியம்தான் ன்னு யாரோ முணு முணுக்கிறாங்க. அது சரிதான். இருந்தாலும் ஆச்சரியமான விஷயம் நாங்க அப்ப பாலத்தை கடந்துகிட்டு இருந்தோம் என்கிறதுதான்.
இந்த மாதிரி எப்படி நடக்கிறது? பல விஷயங்களை பேசிகிட்டு வந்தாலும் மனசு கேள்விக்கான பதிலை தேடி பிடிச்சு விட்டது. பிறகு காத்திருந்தது. நானோ அதை சீண்டவே இல்லை. பாலம் வருகிறதுன்னு அதுக்கு தெரிஞ்சதும் அதுவே ஒரு எண்ணத்தை வெளியே கிளப்பி விட்டது. விடை வெளியே வந்து விட்டது.
என்னத்துக்கு சொன்னேன்? மனசில பல லேயர்கள் இருக்கு. அவை வேலை செஞ்சுகிட்டே இருக்கும். அவை கவனத்துல இல்லைங்கிறதால் இல்லாம போகாது. திடீர்ன்னு மேலே வரும்.
அது போல நாம் ஜபம் பழக பழக அது உள்ளே ஓடிகிட்டே இருக்கும். நான் காலை ஆஸ்பத்திரி போகும் போது ஒரு ஜபம் செய்ய பழக்கி இருக்கேன். அது நான் காலை பைக் ஓட்ட ஆரம்பிச்சதும் ஆரம்பிச்சு போய் சேருகிறவரை தானா ஓடும். அதே போல மாலை வேற ஜபம்.
இதுல என்ன பிரச்சினை?
1. தனியா ஜபம் செய்யறது விட்டு போச்சுனா இதுவும் மௌனமாவே காணாம போயிடும். சில மாசங்கள் கழிச்சு திடீர்ன்னு முழிச்சுப்போம். ஜபம் எங்கேடான்னு பாத்தா காணாம போயிருக்கும். அது அப்பதான் தெரியும்.
2. எந்த செயலோட இணைச்சு இருக்கோமோ அந்த செயல் ஏதோ ஒரு காரணத்துக்காக நின்னு போச்சுனா இதுவும் நின்னுடும்.
இந்த ரெண்டு விஷயங்களிலேயும் கவனமா இருந்தா இந்த ஜபம் நல்ல பலன் தரும்.
சீக்கிரமே உஜாலாக்கு மாறிடலாமா?
பி.கு
உங்க மனசுல இருக்கிற லேயர் எத்தனை? பாத்து இருக்கீங்களா?
Subscribe to:
Posts (Atom)