Pages

Thursday, May 15, 2008

கீர்த்தனம்



அடுத்து கீர்த்தனம். திருநாமங்களையும் புகழையும் மனதார உருகி பாடுவதே கீர்த்தனம். பாடல் இனிமையா இருந்தா மத்தவங்களுக்கு நல்லது. :-))

இனிமையா இல்லேனாலும் பாடறவருக்கு நல்லது. மனசு ஈடுபட்டு உருகறதுதான் முக்கியம். பாடப்பாட உள்ளம் அந்த பகவான்கிட்டே மேலும் நெருங்கும். இப்படி பாடி பாடியே பக்தி வளர்ந்து உன்னத நிலைக்கு போனவங்க மீரா, ஆண்டாள், சூர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள். உண்மையில் எந்த பக்தனுமே இந்த வழியை தள்ள முடியாது. பத்து பேர் சேர்ந்து பஜனை செய்கிற போது அவங்களுக்குள்ள ஒரு அன்யோன்யம் ஏற்பட்டு சத்சங்கம் ஏற்பட்டு பக்தி திடப்படும். இந்த நாம சங்கீர்த்தனத்தை முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் செய்தவர் ஸ்ரீமத் போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.

ஹரி சங்கீர்தனஸ்யாஸ்ய நோபதேச: கதஞ்சன

என்று ஹரி சங்கீர்த்தனத்துக்கு ஒரு உபதேசமும் வேண்டாம்; அதை விட உயர்ந்தது இல்லை என்கிறது பிரம்மாண்ட புராணம்.

மகாபாரத யுத்தம் முடிந்தது. தர்ம புத்திரர் கிருஷ்ணனை பாத்து இப்ப என்ன செய்யனும்னு கேட்டார். கிருஷ்ணன் "பீஷ்மர் அம்பு படுக்கைல இருக்கார். அவரப்போல தர்மத்தை தெரிந்தவங்க ரொம்ப குறைவு. நீ போய் அவர்கிட்ட உபதேசம் கேளு.” ன்னு சொன்னான்.
தர்மரும் போனார். பல விஷயங்கள் உபதேசம் ஆச்சு. எல்லாத்தையும் கேட்டுவிட்டு தர்மர் கேட்டார்:
"கோதர்ம: ஸர்வ தர்மாணாம் பரம பவத: மத:?
“ [எந்த தர்மம் எல்லாவற்றிலும் உயர்ந்ததாக கருதப்படுகிறது?]
அதுக்கு பீஷ்மர் சொன்னார்:
"ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோதிகதமோ மத:
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைர் அர்சேத் நரஸ்ஸதா"

எல்லா தர்மங்களிலும் சொல்லப்படப்போகிற தர்மம் மிக உயர்வாக கருதப்படுகிறது. யார் பக்தியுடன் ஹ்ருதய கமலத்தில் பிரகாசிக்கிற வாசுதேவனை குண கீர்த்தன ரூபமான ஸ்துதிகளால் எப்போதும் அர்ச்சனை செய்கிறானோ அதுவே பரம தர்மம் ஆகும்.

அப்படி ஏன் இதுக்கு அவ்வளவு உயர்வு?

இதானால் ஹிம்ஸை கிடையாதாம். (கேட்கிறவங்களை பொறுத்து இருக்கு! ;-)) ஒரு பூவையும் பறிக்க வேண்டாம். காய், கனி எல்லாம் பறித்து நிவேதனம் செய்ய வேண்டாம்.
இதுக்காக எந்த பொருளையும் சேகரிக்க வேண்டியதில்லை.
ஆண், பெண், குழந்தை இப்படி யார் வேண்டுமானாலும் சொல்லலாம். மற்ற விஷயங்களை போல ஒரு க்வாலிபிகேஷனும் வேண்டாம். ஜாதி தடை இல்லை. இங்கேதான் சொல்லலாம், அங்கேதான் சொல்லலாம்னு ஒரு கட்டுப்பாடும் கிடையாது. காலைதான், இரவுதான் என்று நேர கட்டுப்பாடும் கிடையாது.
இந்த நியமத்தில சொல்லணும் என்று கட்டுப்பாடும் இல்லை.

ஆனால் நாமகீர்த்தனம் தனக்கு அபராதம் செய்தவனை நரகத்தில் தள்ளிவிடுமாம்.
அது என்னடா அபராதம் என்றால் பெரிசா 10 பாய்ண்ட் லிஸ்ட் போடராங்க! சாது நிந்தை, சிவ நாம விஷ்ணுநாமங்களிடையே வித்தியாசம் பார்க்கிறது, நாம பலம்தான் இருக்கே என்று செய்யக்கூடாததா சொன்ன கர்மாக்களை செய்கிறது இப்படி பத்து.

நாம சங்கீர்த்தனம் என்று பெரிசா கூட வேண்டாம். ஒரு முறை பகவான் நாமத்தை சொன்னாலே மோட்சம் கிட்டும்ன்னு சொல்லி அஜாமிளன் கதையை சொல்றாங்க. அஜாமிளன் இல்லாத அந்நியாயம் எல்லாம் பண்ணவன். சாகிற சமயத்தில் கடைசி வார்த்தையா அவன் பிள்ளையை கூப்பிட "நாராயணா" என்று சொன்னான். செத்தவனை கொண்டு போக யமதூதர்கள் வந்தாங்க. அப்போ விஷ்ணு தூதர்கள் வந்து "இவன் எங்களோடவன். தன்வசம் இல்லாமலே மோக்ஷத்துக்கு சாதனமான நாராயணா என்கிற சொல்லை சொன்னான் இல்லையா" ன்னு சொல்லி கொண்டு போயிட்டாங்க.

அப்ப பகவான் பெயரை ஒரு தரம் சொன்னா போதும் இல்லையா? இல்லை, எப்பவுமே சொல்லிகிட்டு இருக்கணும்.

ராம கிருஷ்ணர் கிட்டே ஒத்தர் கேள்வி கேட்டார். கங்கை கரையிலேயே இவ்வளோ பேர் இருக்காங்க. தினமும் கங்கைல குளிக்கிறாங்க. இவங்க பாபம் எல்லாம் போயிருக்கணுமே? ஆனா அப்படி ஒண்ணும் வித்தியாசம் தெரியலையே?

ராம கிருஷ்ணர் வேடிக்கையா சொன்னார்.

"இவங்க குளிக்கப்போற போதே கங்கை நதிலேந்து திவலைகள் பட்டு பாவம் எல்லாம் விலகும். அது எங்க போகும்? இங்கேயே இருக்கிற மரம் செடி கொடிகள்ளே இருக்கும். குளிச்சுட்டு திரும்பி வரப்போ எப்ப இங்க இருக்கிற கடைகளிலே இருக்கிற வஸ்துக்கள் மேலே மனசு போக ஆரம்பிக்குமோ அப்ப அவனோட பாவங்கள் எல்லாம் திருப்பி அவனை பிடிச்சுக்கும்!"

6 comments:

Geetha Sambasivam said...

"ராம நாமமே ஜெபம் செய்-நாளும்
சீதாராம நாமமே ஜெபம் செய், நாளும்

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா!!!

ஸ்ரீ போதேந்திராள் காஞ்சி மடத்து ஆச்சார்ய பரம்பரைல வந்தவர். கும்பகோணம் பக்கத்துல கோவிந்தாபுரம் அப்படிங்கற இடத்துல அவரோட ப்ருந்தாவனம் இருக்கு. ரொம்பவும் மனதுக்கு நிம்மதி தரும் இடம்.

திவாண்ணா said...

@கீதாக்கா
:-))
ராம நாமம் போல சுலபமான சுகம் தரும் நாமம் இல்லை!

@
மௌலி,
ஆமாம், அவரும் பிரம்மேந்திராளும் சம காலமோ?

திவாண்ணா said...

நேத்து மைக்ரேன். அதனால பதிவு போடலை. இன்னிக்கு பாத்தா பதிவு ரொம்பவே நீஈஈஈஈளமா போச்சு. அதனால அடுத்த பதிவு நாளைக்குதான்.

துளசி கோபால் said...

ஹரே க்ருஷ்ணா இயக்கம் வெற்றீயடைஞ்சு உலகின் எல்லாப் பாகங்களிலும் பரவுனதுகூட இந்த சிம்ப்ளிஃபைடு நாமஜபத்தால்தான்.

ஹரே க்ருஷ்ணா ஹரே க்ருஷ்ணா
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே.

மெளலி (மதுரையம்பதி) said...

// அவரும் பிரம்மேந்திராளும் சம காலமோ?//

இல்லைன்னு நினைக்கிறேன். சதாசிவ ப்ரம்மேந்திராள் இன்னும் கொஞ்சம் முன்னே என்று நினைக்கிறேன். எதற்கும் பார்த்துவிட்டு சொல்கிறேன்.

ப்ரம்மேந்திராளும் காஞ்சி ஆச்சார்யாள் கிட்ட சன்யாசம் வாங்கிண்டவர்தான். ஆனா பீடாதிபதியாக இருந்தவர் அல்ல.

இன்றைக்கு சிருங்கேரி-காஞ்சி மடங்கள் இரண்டுமே ப்ரம்மேந்திராளுக்கு குருவந்தனம் பண்ணுவார்கள். ஆஹா! இது பற்றி தனி பதிவே எழுதலாமே ஆச்சார்ய ஹ்ருதயத்தில். நினைவூட்டியமைக்கு நன்ஸ். :)