Pages

Friday, May 23, 2008

நட்புசக்யம் என்கிற நட்பு

இறைவனோட உறவு கொண்டாடறவங்கள்ல அந்த உறவு பலவிதமாயும் இருக்கும். பலரும் இறைவனை தன் தலைவனா கொண்டாடினாலும் சிலர் வேற வித உறவு வச்சிருக்காங்க.

கிருஷ்ணனோட அர்சுனன் வச்சிருந்த உறவு நட்பு. அர்சுனனுக்காக எத்தனையோ செஞ்சார் கிருஷ்ணன். அவரோட தங்கை சுபத்தராவை திருமணம் செஞ்சுக்க அர்சுனன் விருப்பப்பட்டப்ப எப்படி சாதிச்சுக்கிறதுன்னு யோசனை சொன்னதே கிருஷ்ணன்தான். கீதை உபதேசம் செய்கிற போது விஸ்வரூப தர்சனம் காட்டுகிற வரை இப்படிதான் உறவு இருந்தது. அப்பறமாதான் "உன்னையே சரணடைஞ்சுட்டேன். என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன்" என்கிற பாவத்துக்கு அர்சுனன் வந்தான்.

சுந்தரர் சிவபெருமானுடன் விசித்திரமாக உறவு கொண்டவர். எல்லாரும் உருகி பணியும் போது இவர் மட்டும் அதிகாரம் பண்ணுவார். வேலை வாங்குவார்.

சுந்தரருக்கு பரவை நாச்சியார் என்று ஒரு பெண் மனைவி. நன்றாக குடும்பம் நடத்தி வந்தவர் திருவொற்றியூர் சென்ற போது சங்கிலி நாச்சியார் என்பவரை சந்தித்து அவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை மணந்து கொண்டு விட்டார். (ஏன் என்பது வேறு கதை) ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்தானே. அடடா பரவையை விட்டுவிட்டு வந்துட்டோமேன்னு வருத்தமாயிடிச்சு. தியாகேசரோ வஸந்த உத்ஸவம் வரதை நினைவு படுத்தி கொண்டு இருந்தார். திருவாரூர் போகாமல், தியாகேசரை பாக்காமல் இருக்க முடியலை. சரின்னு கிளம்பிட்டார். பல நிகழ்ச்சிகளுக்கு பிறகு அங்கே போய் சேர்ந்தார்.

திரும்பி அங்கே போனால் பரவை கதவை சாத்திட்டாங்க. "நீ எப்ப என்ன விட்டுவிட்டு போனயோ அப்பவே தொடர்பு விட்டு போச்சு. அங்கயே போன்" னு திட்டினாங்க. என்ன சமாதானம் சொல்லியும் எடுபடலை. என்ன பண்ணறது? சிவனேன்னு திரும்பினவர் என்னடா செய்யலாம்னு யோசிச்சார். நாம நம்ம கூட டூ விட்டவங்கள எப்படி சமாதானப்படுத்துவோம்? கொஞ்சம் விவரமான பிரெண்டை தூது அனுப்புவோம். அப்படிதான் சுந்தரர் தூது அனுப்ப நினச்சார். யாரை அனுப்பலாம்ன்னு யோசிச்சார். சில பெரியவங்களை அனுப்பினார். வேலைக்கு ஆகலை. பரவையார் "அவர் எனக்கு பண்ணின அபராதம் சின்னதில்லை. போய் வாங்க" ன்னு திருப்பிட்டாங்க.

பிறகு சிவபெருமான்தான் சரியான நபர்ன்னு தோணிச்சு. நேரா அவர்கிட்ட போய் "உனக்குதான் என் பிரச்சினை தெரியுமே. நீதான் தீத்து வக்கணும்" ன்னு கேட்டார். "என்ன பண்ணணும்?" னு சிவபெருமான் கேக்க "நீ போய் பரவைகிட்டே பேசி என்னை ஏத்துக்கச்சொல்லு" ன்னார். சிவபெருமானும் ஒரு ஆலய அர்ச்சகரா உரு மாறி பரவைகிட்டே போனார். பரவை அவரை மரியாதையோட வரவேத்தாங்க. உபசாரம் எல்லாம் பண்ணி "அகாலத்துல வந்து இருக்கீங்களே! என்ன வேணும்?" னு கேட்டாங்க. "அம்மா நீ சுந்தரத்தோட மனஸ்தாப பட்டு விலக்கி வச்சு இருக்கிறதா கேள்வி பட்டேன். அவன் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல அப்படி பண்ணிட்டான். இப்ப உன் நினைவாவே துடிக்கிறான். அவனை திருப்பி ஏத்துக்கணும்" ன்னு சொன்னார். பரவை "அத விடுங்க. அது முடிஞ்சு போன சமாசாரம். வேற ஏதாவது வேணுமானா கேளுங்க" ன்னா. "இல்ல அம்மா, நீ தயவு பண்ணி..." ன்னு ஆரம்பிச்சார் சிவன். "இத பாருங்க நீங்க அதயே பேசிகிட்டு இருந்தா மரியாத கெட்டுடும். வேற ஏதாவதுன்னா சொல்லுங்க. இல்லாட்டா....” ன்னு சொல்ல சிவபெருமான் மேல பேசாம திரும்பிட்டார்.

நடந்ததை கேட்ட சுந்தரர் சண்ட போட்டார். "ஏன் நான் அவளோட சேர்ந்து வாழணும்ன்னு உனக்கு விருப்பமில்லையா? நீ தூது போற லட்சணம் இதானா? சேத்து வக்கிற வழிய பாரு. நீ வேற யார் வேஷமோ போட்டுகிட்டு போனா என்ன அர்த்தம்?” ன்னு பிடிபிடின்னு பிடிச்சுட்டார். சிவ பெருமானும் "சரிப்பா நான் திருப்பியும் போறேன்" னார். தன் சுய ரூபத்தில யோகியர், முனிவர்கள் சூழ போய பரவையார் வீட்டு கதவ தட்டினார். பரவை நாச்சியார் ஏற்கெனவே அவரை திருப்பி அனுப்பிட்டாலும் "வந்தவர் சாதாரணமா தோணலையே? அவர் முகத்தில அப்படிஒரு ஒளி! மங்கல ஓசைகள் , வேத சப்தங்கள் கூட கேட்டா மாதிரி இருக்கே. இன்னும் ஒரு அபூர்வ வாசனை வீசுதே! வந்தவர் இறைவனேதானோ!” ன்னு யோசிச்சுகிட்டே இருந்தாங்க. இப்ப சிவபெருமான் கதவை தட்டவும் கதவ திறந்த பரவை அப்படியே திகைச்சு போனார். சுந்தரர ஏத்துக்கணும்ன்னு இப்ப சொன்னத அப்படியே ஏத்துக்கிட்டார்.

அடியாருக்காக ஆண்டவன் என்னவெல்லாம் செய்ய தயாரா இருக்கிறான்!


Post a Comment