Pages

Thursday, May 8, 2008

பக்தியின் எல்லையிலே!



எதை பற்றி நிற்கிறோமோ அதுவே நமக்கு கிடைக்கும். அழியற விஷயங்களை பற்றி நிக்கிறது அழிவை நோக்கித்தான் செலுத்தும். அப்படி இல்லாம பரம் பொருள் மேல பற்று வச்சா அதை நோக்கி போவோம். அந்த அன்புதான் உண்மையான அன்பு. இதுதான் நம்மோட புலன்களுக்கு அகப்படாத பெரிய இன்பத்தை அனுபவிக்க வழி காட்டும்.

சாதனைல ரொம்ப முன்னேறிய பக்தன் தன் உடலை பத்திய நினைப்பு இருக்கிற வரை இறைவனோட குணங்களையும் அழகையும் வர்ணித்து பேசுவான். உடலை பத்திய நினைப்பு போயிட்டா விவரிக்க முடியாத நிலைக்கு போயிடுவான். இது ஞான விஷயமாயிடும். வழி எல்லாம் நம்ம வசதிக்குத்தான் பிரிச்சுக்கிறோம். க்ராஸ் ஓவர் இருக்கும்னு பாத்தோம் இல்லையா?

பூரணமா நிபந்தனை இல்லாம அன்பு இருக்கிற இடத்திலே தன்னைத்தானே அறிஞ்சு கொள்கிற உயர்ந்த ஞானம் தானா அமைந்திடும். அன்பும் ஞானமும் அவற்றோட முடிவுல ஒண்ணேதான்.

பாகவதம் சொல்லுது "ஆத்மானந்தத்துல ஆழ்ந்து கிடக்கிற ரிஷிகள் தங்களோட பந்தத்திலிருந்து விடுபட்டு நின்னும் பகவான்கிட்டே வேற கோரிக்கை இல்லாம, அன்பு காரணமாவே அன்பு செலுத்தறாங்க.”

பிரகலாதன் தன்னை மறந்து இருந்தப்ப பிரபஞ்சத்தையே காணவில்ல. பெயரோ உருவமோ இல்லாத ஒரு நிலையே தெரிஞ்சதாம். எப்ப தான் பிரகலாதன் அப்படின்னு தோணிச்சோ அப்ப பிரபஞ்சமும், அதுக்கு தலைவனான எல்லை இல்லாத புண்ய குணங்களோட நிலலையுமா ஆன பிரபுவும் புலப்பட்டாங்களாம்.

கோபியர்களும் அப்படித்தான். தாங்கள் யார்ன்னு தெரியாம கிருஷ்ணனாகவே இருந்தாங்களாம். தான் என்கிற நினைப்பு வந்த போது கிருஷ்ணன் பூஜிக்க தகுந்தவனாயும் இவர்கள் கோபியர்களாயும் ஆனாங்களாம். அப்ப கிருஷ்ணன் புன்னகையோட மன்மதன் போல அவங்க எதிர நின்னானாம்.

பரம் பொருள்கிட்ட இருந்து விலகி நின்னா அது பக்தி. ஒன்றி போனா அதுவே ஞானம்.
ஆனா இதுவே ஒரு அஞ்ஞானத்தில கொண்டு விடலாம். பக்தன் சர்வேஸ்வரன் என்கிற கற்கண்டை சுவைக்கத்தான் விரும்பரானாம். அஹம் பிரம்மாஸ்மி ன்னு சொல்லி தானே கற்கண்டா மாற விரும்பறதில்லையாம். ராம கிருஷ்ணர் இப்படி சொல்கிறார்.
`````````
கிருஷ்ணன் தான் வந்த வேலை முடிஞ்சு வைகுந்தம் போக ரெடி ஆயிட்டார். தன்னை உயிருக்கு உயிரா நினைச்ச கோபியர்களை அப்படியே விட்டிட்டு பேகலாமா? அதனால அவர்களை கூப்பிட்டு கேட்டார். "நான் வைகுந்தம் போக வேண்டிய நேரம் வந்தாச்சு. நீங்க என்ன செய்கிறதா உத்தேசம்?”
அவங்க சொன்னாங்க, "நீ போயிட்டா எங்களுக்கு என்ன இங்க வேலை. நாங்களும் உன் கூடவே வரோம்.”
சரின்னு அப்படியே ஏற்பாடு ஆச்சு. கிருஷ்ணனும் வைகுந்தம் போய் நாராயணனோட கலந்தாச்சு. கோபியர்களும் வந்து சேந்தாங்க. வந்ததும் கிருஷ்ணனை தேடினாங்க. காணலை.
சில நாள் போனதும் நாராயணன் அவங்களை கூப்பிட்டு அனுப்பினான். "இங்க சந்தோஷமா இருக்கீங்களா? என்ன சேதி" ன்னு கேட்டான். கோபியர்கள் "இங்க எங்களுக்கு நரகமா இருக்கு" ன்னு சொன்னாங்க. "ஏன்?" னு ஆச்சரியமா கேட்டான் நாராயணன்.

இங்க கண்ணனை காணோமே!


நானேதான் கண்ணனா இருந்தேன்னு சொன்னா கோபிகைகள் ஒத்துக்கலை. "சரி, என்ன பண்ணனும்?" ன்னு கேட்டான் நாராயணன். "எங்களை திருப்பியும் பிருந்தாவனத்துக்கு அனுப்பிடு. நாங்க அங்க கிருஷ்ணனை நினைச்சுக்கிட்டே இருந்திடறோம்!" அப்படினாங்க கோபியர்கள்!
அப்படியே ஆகட்டும்னார் நாராயணன்.
~~~~~~~~~~
சமீபத்தில பிருந்தாவனத்துக்கு போய் வந்தார் எனக்கு தெரிஞ்ச ஒத்தர். ஊரை சுத்திப்பாக்க ஒரு ரிக்ஷா அமர்த்திக்கிட்டார். பெரிய பார்க் ஒண்ணை சுத்திப்பாத்தார் திரும்பி வந்தப்ப என்ன பாத்தேன்னு ரிக்ஷாகாரர் கேட்டார். நிறைய குரங்குகள் இருக்கு. ஒண்ணும் விசேஷமா இல்லையேப்பா ன்னார். அப்படியா. சரி திருப்பியும் போங்க. கொஞ்ச நேரம் அதையே பாத்துட்டு வாங்கன்னார் ரி. காரர். இவரும் சரின்னு போய் உள்ளே உக்காந்தார். குரங்குகளை பாத்துக்கிட்டே இருக்கிறப்ப திடீர்னு ஒரு விஷயம் புரிஞ்சது.

குரங்கு சேட்டைனேதானே பிரசித்தம்? அது சும்மா இருக்காது இல்லியா? ஒரு இடமா இருக்காது. இங்கிருந்து அங்கே தாவும். குதிக்கும். ஏதாவது சேட்டை செஞ்சுகிட்டே இருக்கும்.
ஆனா இந்த குரங்குகளோ அப்படி இல்ல. சிலது ஒரே இடத்துல சும்மா இருக்கும். சிலது கண்ணுல இருந்து கண்ணீரா வரும். சிலது ஒரே இடத்தை சுத்தி சுத்தி வரும். மொத்ததுல எல்வாமே வித்தியாசமா இருந்ததாம். நண்பர் ரிக்ஷாகாரர் கிட்ட பாத்ததை சொன்னார். அதுக்கு ரிக்ஷாகாரர் மேலே நாம பாத்த கதையை சொன்னார். இந்த குரங்குகள்தான் அந்த கோபியர்கள். கிருஷ்ணனையே நினச்சுக்கொண்டே இருக்குங்க அப்படின்னார்.

4 comments:

Geetha Sambasivam said...

பிருந்தாவனம் ஒரு தனி அனுபவம். நிஜமாவே பிருந்தாவனம் தான். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி. கோகுலமும் அப்படியே கண்ணன் இருந்தாப்போல் இருந்தாப்பலேயே இருக்கு! அங்கே போனால் காலம் எதுங்கிற குழப்பமும், சற்றே காலம் மறந்த நிலைமையும் ஏற்படும், ஏற்பட்டது, எங்களுக்கு.

ambi said...

ம்ம், கதை ரொம்ப அருமையா இருக்கு.

அனுமார் கூட, ராமாவதாரம் முடியும் போது ராமர் கூட வைகுண்டம் போகாம சிரஞ்சீவியா எங்கெல்லாம் திவ்ய ராம நாம சங்கீர்த்தனம் நடக்குதோ அங்கெல்லாம் மெய் மறந்து கேட்டுட்டு இருக்கார், இல்லையா?

ambi said...

// மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி. கோகுலமும் அப்படியே கண்ணன் இருந்தாப்போல் இருந்தாப்பலேயே இருக்கு! //

:))))

எனக்கு கமண்ட் எழுத கை துடிக்குது.

திவாண்ணா said...

@ கீதாக்கா
ம்ம்ம்ம்
அத பத்தி எல்லாம் எழுதலாம் இல்ல?

@
அம்பி
வாணா வாணா! :-))

அனுமார் ராமர் கிட்டேயே ஞானோபதேசம் வாங்கினவர். அவர் முதல்லேயே சரியான முடிவு எடுத்துட்டார்.