Pages

Friday, May 16, 2008

பாதசேவனம்இறைவனோட திருவடிகளுக்கு எப்பவுமே ஒரு சிறப்பான இடம் பக்தி வழில உண்டு.
சாதாரணமா நாம துச்சமா மதிக்கிறது பாதங்களைதானே. நடக்கிறோம், கொள்ளறோம், பாதங்கள்லதான் அழுக்கு படுகிறது. வெளியே போய் வந்தா கால்களைதான் கழுவிக்கிறோம். அப்படி சாதாரணமா அசுத்தமா நினைக்கிற பாதம் இறைவவனோடது என்கிறப்ப நாம அதை புனிதமா நினைக்கிறோம். எப்படி பெரியவங்க கால்களை தொட்டு கும்பிடறோமோ அப்படி பகவானோட பாதங்களை தலைல தாங்கவும் பக்தர்கள் தயங்க மாட்டாங்க. அதனாலதான் பெருமாள் கோவில்ல சடாரி சாத்துகிறாங்க. கிரீடம் மாதிரி இருக்கிற அது மேலே பாதங்கள் பொறிச்சு இருக்கும்.

இந்த பாதுகைகளின் பெருமையை பாடி பாடி பரமனோட பாதங்கள்ல தன்ன முழுக்க அர்பணிச்ச வேதாந்த தேசிகர் பாதுகா சஹஸ்ரம்னு புத்தகமே எழுதினார்.

ராமரோட பாதுகைகளைதான் பரதரும் கேட்டு வாங்கிப்போனார். ராமரோட பாதம் பட்டுதான் அகலிகையும் சாபம் நீங்கினாள். இத பாத்து விஸ்வாமித்திரர்,

மை வண்ணத்து அரக்கி போரில்
மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன்

அப்படின்னு ஆச்சரியப்பட்டாராம்.

அப்பப்ப நடக்கிற தேவ அசுர யுத்தம் நடந்து மகாபலி தலைமைல அசுரர்கள் ஜெயிச்சுட்டாங்க. தேவர்களோட அம்மா அதிதி சும்மா இருப்பாளா? பயோ விரதம்னு ஒரு விரதம் இருந்து விஷ்ணுகிட்டே வரம் வாங்கினா.
பெருமாளும் ஒரு குள்ளமான பிரம்மசாரியா வாமனரா வடிவெடுத்து பலிகிட்ட வந்தார். பலியும் வரவேத்து "உங்களுக்கு என்ன வேணும்?" ன்னு கேட்டான்.
"ஒண்ணும் வேணாம், என் காலால மூணு அடி மண் போதும்"ன்னார் விஷ்ணு.
"அட! நான் இந்த மூணு உலகத்துக்குமே ராஜா. வெறும் மூணு அடி மண்தானா வேணும்?"ன்னான் பலி. அது போதும்னுட்டார் வாமனர்.

அசுர குருவான சுக்கிராசாரியாருக்கு இது தெரிஞ்சு போச்சு. பலிகிட்ட " இவன் கேக்கிறானேன்னு கொடுக்காதப்பா. அது உனக்கே கெடுதியா முடியும்" ன்னார்.

இந்த சின்ன பையன் என்ன பண்ண முடியும்?

அப்பனே வந்து இருக்கிறது சாதாரண ஆசாமி இல்ல. விஷ்ணு. அவர் எப்பவும் சுரர்களுக்குதானே சாதகம் பண்ணுவார். அதனால சொல்லறேன். வேண்டாம்.

பலி சக்ரவர்த்தி கேக்கலை.
விஷ்ணுவே வந்து கேட்டா நான் என்ன பாக்கியம் பண்ணி இருக்கணும்? அப்படி பாத்தாலும் அது தப்பில்லே.

தண்ணீர் இருக்கிற கமண்டலுவை தூக்கிவிட்டான் பலி.
சுக்கிராசாரியாருக்கு பொறுக்கலை. இவன் ராஜ்யத்தை விஸ்தாரம் பண்ன நான் எவ்வளோ கஷ்ட பட்டு இருப்பேன்? அதை எல்லாம் ஒடு நிமிஷத்துல தொலச்சுடுவான் போல இருக்கேன்னு நினச்சு ஒரு வண்டு ரூபம் எடுத்து போய் கமண்டலு மூக்கில உக்காந்து அத அடைச்சுட்டார்.

வாமனர் சிரிச்சுகிட்டே ஒரு தர்ப்பையை எடுத்து கமண்டலு மூக்கில குத்தினார். சுக்கிராசாரியாரோட ஒரு கண்ணு போச்சு.
பிறகு பலி தாரை வார்த்து தர வாமனரும் வாங்கிகிட்டார். "சரி, உன் மூணு அடியை அளந்து எடுத்துக்க"ன்னு பலி சொன்ன உடனே வாமனர் வளர ஆரம்பிச்சார். ஒரு அடியால மண்ணையெல்லாம் அளந்தார். இரண்டாவது அடியால விண்ணையெல்லாம் அளந்தார். "மூணாவது அடியை எங்கே வைக்கட்டும்?” ன்னு பலியை பாத்து கேட்டார்!

"ஸ்வாமி! என் தலை மட்டுமே பாக்கி! அதில வைங்க" ன்னு பலி சொன்னான்.
பகவானும் சிரிச்சுகிட்டே அவன் தலை மேல தன் காலை வைத்து அப்படியே அழுத்தி சுதல லோகத்துக்கு கொண்டு போயிட்டார். அங்கே அவனை ராஜாவாக்கினார். எல்லா மங்களங்களையும் கொடுத்தார்.
அப்படி திருவடி தீட்சை வாங்கினவன் பலி சக்ரவர்த்தி.

எவனுக்கு நான் அருள் பண்ண நினைக்கிறேனோ அவனோட பொருளை எல்லாம் நான் போக்கிவிடுகிறேன். பொருள் இருக்கு என்கிற செருக்கால இல்லையா மனுஷன் கர்வத்தோட உலகத்தையும் என்னையும் அவமதிக்கிறான்?

அப்படின்னு பாகவதத்திலே பகவான் சொல்கிறதா இருக்கு.
அது போல பலியோட சொத்தையெல்லாம் தன்னோடதாக்கி அவன் பணித்தபிறகு அவனுக்கு அவன் அகங்காரத்தையும் அழிச்சு அவனை ரக்ஷிச்சார் பெருமாள்.


Post a Comment