Pages

Tuesday, September 30, 2008

கர்ம வழி-பொது 2


சாதாரணமா நம்ம மனசு எப்படி இருக்கு?

செய்யற வேலை நல்லா முடிஞ்சுட்டா அதுக்கு நாம் உரிமை கொண்டாடுறோம்.
அது தப்பா போச்சுனா யார் மேல பழி போடலாம்ன்னு பாக்கிறோம்.

வேளுக்குடியார் சுவாரசியமா உதாரணம் சொன்னார். உபன்யாஸத்துக்கு கிளம்பினாராம். ஏழு மணிக்கு நிகழ்ச்சி. போகும்போது ஒரே ட்ராபிக் ஜாம். நேரமாயிடுத்து. சபா காரியதரிசி ஏன் லேட்டுன்னு கேட்டாராம். அதுக்கு இவர் பல காரணங்களோட தயாரா இருந்தார். அழச்சுகிட்டு போக வேண்டியவர் நேரத்துக்கு வரலை; வர வழில ஒரே ட்ராபிக் ஜாம். இப்படி எல்லாம் சொல்லி அதனால தாமதமாயிடுத்து என்றார். அடுத்த நாள் சபாவுக்கு சரியான நேரத்துக்கு போனாராம். காரியதரிசி அட இன்னிக்கு நேரத்துக்கு வந்துட்டீரே ன்னார். அதுக்கு "நான் எப்பவும் சரியான நேரத்துக்கு வந்துடுவேனே" என்றார். என்ன சொல்லி இருக்கணும்? அழைத்து போகிறவர் சரியான நேரத்துக்கு வந்தார். வழில டிராபிக் ஜாம் இல்லை. கார் மக்கர் செய்யாம சரியா ஓடித்து... ஆனா இப்படி எதுவுமே சொல்லையே!

ஆக பலனுக்கு நாம் எப்போதுமே முழு காரணமில்லை
.
--
இதை ஏற்கெனவே பாத்தாச்சு. இருந்தாலும் கொஞ்சம் திருப்பி பாக்க...
பலனை எதிர்பாக்காதேன்னா அனேகமா யாருமே அப்படி செய்ய மாட்டாங்க. யாரா இருந்தாலும் எதோ ஒரு பலன் - விளைவு நடக்கும்ன்னுதானே வேலை செய்யறோம். அத எதிர் பாக்காதேன்னு சொன்னா யார் வேலை செய்வாங்க?

ஒரு வேலையை செய்யலாம், செய்யாம விடலாம் அல்லது வேற மாதிரி செய்யலாம். அதுக்கு உனக்கு அதிகாரம் இருக்கு! ஒரு போதும் பலன்ல அதிகாரமில்ல.
பலன் இப்படிதான் இருக்கணும்னு சொல்கிறத்துக்கு நமக்கு அதிகாரம் இல்ல. ஏன்னா பலன் நம்ம மட்டுமே பொருத்தது இல்ல. நேரம், இடம், நாம் செய்யற வேலைல பங்கு இருக்கிற மத்தவங்க எப்படி என்ன செய்யறாங்க இதெல்லாம் வருது இல்லையா?
நாம நல்லா படிச்சு பரீட்சை எழுதலாம். அதை திருத்தறவருக்கு அது சரியா போய் சேரனும். அவர் அப்ப நல்ல மூட்ல இருக்கனும். ஏதாவது பக்கத்தை பாக்காம விட்டுடக்கூடாது. மார்க் கூட்டி போடறது சரியா இருக்கனும். அத சரியா கணினில பதியனும். நம்ம மார்க் வந்து சேரத்துக்குள்ளே இப்படி எவ்ளோ விஷயம் இருக்கு?
எதுவுமே இப்படித்தான் இருக்கணும்ன்னு நினைக்கிறப்போதான் நமக்கு பிரச்சினை வருது. நடக்குமோ நடக்காதோன்னு தூக்கம் கெட்டு போகுது. நடக்கலேனா என்ன செய்யறதுன்னு ரொம்ப யோசனை செய்ய ஆரம்பிக்கிறோம். நினைச்சபடி நடக்கலைனா அதுக்கு தடையா இருந்தது எதுவோ, அது மேல கோபம் வருது. அதப்பத்தி ஒண்ணும் செய்ய முடியலைனா விரக்தி வருது.

நம்மால முடிஞ்ச வரை செஞ்சோம். அப்புறம் அவன் விட்ட வழின்னு யார் நினைக்கிறாங்களோ அவங்க அவ்வளவு கஷ்டப்பட மாட்டாங்க. மனசு அமைதியா இருப்பதாலே அவரால வேலையை நல்லாவே செய்ய முடியும்.
--
மூணாவது வரி
"செயல்பாட்டின் பயனுக்கு நீ காரணமா ஆகாதே.”

இது எப்படி சாத்தியம்? முதல்ல செயலை பண்ணு. அதுக்கு அதிகாரம் இருக்கு. பலன் இப்படிதான் வேணும்ன்னு சொல்லாதே. பலன்ல அதிகாரம் உனக்கு இல்லைன்னாரே! இப்ப செயல்பாட்டோட பலனுக்கு காரணமாகாதேன்னா?? அப்ப பலனுக்கு நம்மதான் காரணம்ன்னு ஆயிடுமே? முரணில்லையா?

இல்லை. பலனுக்கும் ஓரளவு நாம்தானே காரணம். மேலே சொன்ன 5 காரணங்கள்ல ஜீவாத்மாவும் ஒண்ணுதானே?

உதாரணத்தால விளக்கலாம்.

அக்னி காரியம் பண்ணுகிறோம். பலனை கருதாம பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ன்னு சொல்லி செய்கிறோம். அப்படி செய்கிறபோது தானாக சில பலன்கள் விளையும். அக்னி காரியத்தின் பல பலன்களில் பணம் கிடைக்கிறது ஒண்ணு. இது நமக்கு வேணுமா இல்லையா ன்னு பாத்து, தேவை இல்லைனா வேற பலனை கூட ஈச்வரன் கொடுக்கலாம். அது ஒரு வேளை நமக்கு தெரியாமலே இருக்கலாம்; தேவைன்னு தோணாமலே இருக்கலாம். “எல்லாம் உனக்கு தெரியும்பா, நீயே கொடுக்கிரதை கொடு; இல்லை கொடுக்காட்டா கூட பரவாயில்லைன்னு நினச்சு யார் பலனை யோசிக்காம கர்மா செய்கிறானோ அவனுக்கு தேவையானதை ஈச்வரன் கொடுத்து எல்லாமே நல்லபடியா இருக்கும்.

ஆனா ஒரு வேளை ஒரு வேளை நாம் பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போட -சங்கல்பம் செய்தோ, செய்யாமலோ, எதிர்பார்ப்போடயோ செய்தா? பணம் கிடைச்சுடும். செய்கிற கர்மா சரியா செஞ்சா பலன் கிடைச்சே ஆகணுமே! ஆனா அதால நல்ல விளைவுகள் ஏற்படும்ன்னு சொல்ல முடியாது.

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" இல்லையா?

இததான் பலனுக்கு காரணமாக ஆகிடாதேன்னு சொன்னது. இன்ன பலன் வேணும்ன்னு உத்தேசிக்கிறதாலேயே நாம் பலனை நிர்ணயம் செஞ்சிடறோம். அப்படி செய்யாதேன்னுதான் இங்கே சொன்னது.

இப்படி எல்லாம் கேட்டபிறகு நமக்கு தோணலாம். அட, பலன்ல உரிமை கிடையாதுன்னா வேலை பண்ணுவானேன்? இது பெரிய பிரச்சினையப்பா. பேசாம சும்மா கிடந்துடலாம். ஏன் வம்பு!


Monday, September 29, 2008

கர்ம வழி-பொது 1



காக்காவுக்கும் குருவிக்கும் கல்யாணம், ..கெட்டி மேளம் கோவில்ல, வெத்திலை பாக்கு கடையில ன்னு பாடினா மாதிரி...

பகவத் கீதை வெண்பா அழகிய மணவாளருடையது...
கீதை உரை பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட பகவத்கீதை உண்மையுருவில் என்ற புத்தகத்திலிருந்து... இதை கடுகு.காம் இலிருந்து சுட்டு இருக்கேன். (நிறைய நகைச்சுவை கதை கட்டுரைகள் எழுதினவரா இவர்?)...
சில விஷயங்கள் வேளுக்குடியாரின் பிரவசனங்களில் இருந்து...
சிலது என் தங்கமணியோட பேசினது....
சிலது என் அருமை புத்திரன் விளக்கம் கொடுத்தது...

எல்லாருக்கும் நன்றி.
~~~~~~~~~~~~
பொதுவாக ஒருவருடைய வேலையை பத்தி இப்ப பாக்கலாம்.
வர்ணத்துக்குன்னு கார்யங்கள் சொன்னாலும் இந்த கால கட்டத்துல நம்மை பகவான் ஏதோ ஒரு வேலைல கொண்டு வெச்சு இருக்கான். அது அவங்க அவங்க தர்மத்துக்கு விரோதமா இல்லையா என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும்.

எந்த வேலைல இருந்தாலும் சில விஷயங்களை கடைபிடிச்சா அது கர்ம யோகமா ஆயிடும்.
கர்ம யோகம்னா உடனே பலருக்கும் நினைவுக்கு வரது பகவத் கீதைதான். அதை அடிப்படையா வெச்சே மேலே பாத்துகிட்டு போகலாம்.

எல்லாருக்கும் தெரிஞ்ச ஆனால் பலரும் தப்பா புரிஞ்சுகிட்ட ஸ்லோகம் 2 ஆம் அத்தியாயத்தில வர 47 ஆம் ஸ்லோகம் "கர்மண்யேவாதிகாரஸ்தே" என்பதுதான். இதை ஆரம்பத்திலேயே பாத்தாச்சு.

ஆமாங்க, வழி 2, 2-

இப்ப கொஞ்சம் விரிவா பாக்கலாம்.

கீதை 2:47

கருமத்தே யுன்ற னதிகாரங் கண்டாய்
வருமப் பயனிலணு மன்னா-தொருமித்து
மற்றதனுக் கேதுவா மன்னேல் கருமமலா
வெற்றமைவில் வேண்டா விருப்பு

விதிக்கப்பட்ட கடமையைச் செய்வதில் மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது. செயலின் பலனில் அதிகாரம் இல்லை. இருப்பதாகவும் எண்ணாதே. செயலற்ற நிலையையும் விரும்பாதே. வெற்றி, தோல்விகளை எண்ணாமல் நடுநிலையுடன் செயல்படு. இத்தகைய மனநிலையே யோகம் எனப்படும்.

காரியம் செய்வதிலதான் உனக்கு அதிகாரம் - ரைட்ஸ்- இருக்கு. அதை செஞ்சா என்ன ஆகும் என்பதில உனக்கு ரைட்ஸ் இல்லை.
எந்த பயனிலும் ஆசை வைக்காதேன்னும் சொல்லலை. அடுத்து வர ஸ்லோகங்களை பாத்தா இது புரியும். ஆத்மாவை உணந்து கொண்டு பிரம்மத்தை அடைய பலனைத்தவிர கீழான விஷயங்களில் ஆசை கூடாது.
பலனை பெறும்போது இது நான் செய்ததால கிடச்சது என்று நினைக்காதே.
ஏன்?
நாம் மட்டுமே விளைவை நிர்ணயிப்பது இல்லை.
சாஸ்திரங்கள் என்ன சொல்லுதாம்? ஒரு காரியம் நடக்க 5 விஷயம் வேலை செய்யுதாம். 1. பரமாத்மா 2. ஜீவாத்மா 3. உடல் 4. இந்திரியங்கள் 5. பிராணன்.
என்னதான் பெரிசா திட்டம் போட்டாலும் அது பகவானோட திட்டத்துக்கு பொருந்தாட்டா அதை செய்ய முடியாது.
ஊருக்கு போய் ஒரு இடத்திலே பேசணும். நான் நினைச்சேன். ஆனா திடீர்ன்னு சுரம் வந்ததால போகவே முடியலை. இப்படி உடல் ஒத்துழைக்கலை.
போனேன், போகிற வழில குளிர் காத்து, தொண்டை கட்டிக்கொண்டது. பேச்சே வரலை.
இப்படி பலவிதமா தடங்கல்கள் ஏற்படலாம். அதை எல்லாம் தாண்டி வேலை நடந்தா அதில முழு காரணம் நாம் ன்னு சொல்லிக்கிறதுல அர்த்தமே இல்லை.

சாதாரணமா நம்ம மனசு எப்படி இருக்கு?

Sunday, September 28, 2008

வேண்டுகோள்


நல்லது.
இப்படியெல்லாம் சாஸ்திரங்கள் விதிச்சாலும் இப்ப நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.

வர்ண கலப்பு என்பது மஹாபாரத காலத்திலேந்தே தொடங்கி நாளாக ஆக அதிகமாக ஆகிட்டே இருக்கு. இந்த நிலைல பொதுவா சொல்ல முடியலை. அவரவர் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கு.

எங்க குல தெய்வத்தை கண்டு பிடிச்சு அங்கே போன போது சில நடை முறைகள் தெரியவந்தது. அந்த கோவிலுக்கு பூஜை செய்ய அதிகாரம் உள்ளவங்க சுமார் 50 குடும்பங்கள். எல்லாருமே ஏதோ ஒரு வேலைல இருக்காங்க.

இத்தனை பேருக்கும் வருஷத்திலே ஒரு வாரம் பூஜை செய்ய முறை. அந்த சமயம் லீவு போட்டுட்டு பூஜைக்கு வந்துடுவாங்க. மத்த சம்யம் எப்படி இருக்காங்களோ, அந்த ஒரு வாரம் மட்டும் சுத்த பத்தமா இருப்பாங்க. ஒரு வாரம் பூஜை கவனிச்சுட்டு அவங்க அவங்க வேலைக்கு போயிடுவாங்க.
இதுல ஒரு விசேஷம் இருக்கிறதா தெரியுதே! அவங்க அத்தனை பேருக்கும் அந்த கோவில்ல வேலை கிடைக்காதுன்னு யாரும் விட்டுட்டு போகலையே! நல்லா சம்பாதிக்கிற வேற வேலைல இருந்தாலும் இதை செய்யணும்ன்னு தோணுதே!

இப்படியே எல்லாரும் இருக்க முடியுமோன்னு யோசனை!
என்ன வேலை பாத்தாலும் அவரவர் ஸ்வ தர்மமான வேலைல ஒரு 'டச்' இருந்து கொண்டு இருக்கலாமோன்னு.....

குறிப்பா இங்கே அந்தணர்களை பத்தி சொல்லணும்.
மற்ற வேலைகளை பிறர் செய்கிறதாலே எந்த வேலையும் அழிஞ்சு போச்சான்னு பாத்தா.. ஒரு சில கலைகளை தவிர எல்லாமே இன்னும் இருக்கு. வைச்யர்கள் வியாபரத்தை விட்டா என்ன இப்ப எல்லாருமே வியாபாரம் செய்கிறாங்க. ஆட்சி முறை மாறி போனதிலே க்ஷத்திரியர்கள் போலீஸ், ராணுவம் இப்படி போகலைனாலும் அதுக்கு ஆள் இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு. இப்படி லௌகீக சமாசரங்கள் யாராலோ பூர்த்தி செய்யப்படுது. பிரச்சினை அதிகம் இல்லை.

ஆனால் அந்தணர்கள் ஸ்வதர்மத்தை விட்டதுல வேதம் நம்மகிட்டேந்து பிரிஞ்சு போய்கிட்டே இருக்கு.
அப்ப வேதம் அழிஞ்சு போயிடுமா?

போகாது. ஏன்னா அது ஈஸ்வரனின் உயிர் மூச்சு. ஈஸ்வரன் இருக்கும்வரை அது இருக்கும். அப்படின்னா அது எப்பவுமே இருக்கும்.
பின்னே? அது நம்மகிட்டேந்து விலகி போயிடும். அப்படி நடந்தா அது நம்மோட நல்லதுக்கு இல்லை.

அந்தணர்கள் விதி வசத்தால எந்த வேலைல வேண்டுமானா இருக்கட்டும். கொஞ்ச நேரம் ஒதுக்கி வேதம் கத்துக்கொள்வது; கற்று கொண்டு இருந்தா அதை பாராயணம் செய்வது- மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுப்பது; இரண்டுமே முடியாத பட்சத்தில் வேத பாடசாலைகள் தழைக்க முடிஞ்சதை செய்வது- இப்படி ஏதேனும் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.


Thursday, September 25, 2008

பிறப்பால் கர்மா -2



வைச்ய தர்மம்.

பசுக்களை பரிபாலித்தல், தானம், யாகம், அத்யயனம் இவற்றை செய்தல்; தரையிலும் நீரிலும் யாத்திரை செய்து வியாபாரம், வட்டிக்கு கடன் கொடுத்தல், விவசாயம் இவை வைச்யர்களுக்கான விருத்திகள். (மனு)

பராசரர் ரத்தின பரீட்சை என்று ஒண்ணு சேத்துக்கிறார்.

மனு மேலே சொல்கிறார்: முத்துக்கள், பவழங்கள், உலோகங்கள், துணிகள் வாசனை பொருட்கள், ரஸ பொருட்கள் இவற்றோட தார தம்மியம் தெரியணும். விதைகள் விதைக்கும் விதிகள், மண்ணின் குண குற்றங்கள், அளவிடும் முறைகள் தெரியணும். சரக்குகளின் உயர்வு தாழ்வுகள், தேசங்களின் குண தோஷங்கள், சரக்குகளின் லாப நஷ்டங்கள், பசுக்களை விருத்தி செய்யும் முறைகள் தெரியணும். ஊழியர்களுக்கு உரிய சம்பளம் கொடுத்தல், மனிதர்களின் மொழிகள், சரக்குகளை காப்பாற்றும் விதம், அவற்றுடன் சேர்க்கக்கூடிய பொருட்கள், வாங்கல்- விற்றல் இதெல்லாம் தெரியணும். இப்படி பணம் சேர்க்க நல்லமுயற்சிகள் செய்யணும். சேர்த்ததை தாராளமா எல்லா பிராணிகளுக்கும் தானம் செய்யணும்.
சூத்திர தர்மம்: மற்ற மூன்று வர்ணத்தவருக்கான வேலையை செய்வதே இவர்கள் தர்மம். ஆங்கிலத்தில் லெக்வொர்க் என்கிறார்களே அது. அதற்கு தகுந்த உடல் வலிமையும் சக்தியும் இவர்களுக்குத்தான் இருக்கு.

இப்படி செய்ய வேலை கிடைக்கலை/ விருப்பமில்லை என்றால் சில பொருட்களை வியாபாரம் செய்யலாம்: உப்பு, தேன், தைலம், தயிர், மோர், நெய், பால் இதெல்லாம் வியாபாரம் செய்யலாம். ஆனாலும் மது, மாமிசம் இவற்றை வியாபாரம் செய்யலாகாது.

இப்படி வேலை செய்து கொண்டு, மிருதுவான வார்த்தைகளுடனும், அகங்காரம் இல்லாமலும் இருப்பவர் உயர் நிலையடைவார்கள்.

இவர்களுக்கு மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் இல்லை. பூண்டு முதலியன சாப்பிடுவதால் பாபமில்லை. உபநயனம் முதலிய சம்ஸ்காரங்களுக்கு தேவையும் இல்லை; அதிகாரமும் இல்லை.

தர்மத்தை அறிந்தவர்களும், தர்மம் செய்ய விரும்புவர்களுமான சூத்திரர் மந்திரங்களை தவிர்த்து நமஹ என்று பாக யக்ஞங்களை செய்தால் பாபமடைய மாட்டார்கள். அதாவது அக்னயே ஸ்வாஹா என செய்வதற்கு பதில் அக்னயே நமஹ என்று ஹோமம். பும்சவனம் முதல் சௌளம் வரையான சம்ஸ்காரங்கள் அந்தந்த காலத்தில் செய்ய வேண்டும்.

தேவலர் கூடுதலாக, உழவு, பசுபாலனம், சுமை தூக்குதல்,வியாபாரம், சித்திரம் எழுதுதல், சில்பங்கள் வடித்தல், நடனம், பாட்டு, வாத்தியங்களை வாசித்தல் இவற்றையும் தர்மமாக சொல்கிறார்.

இவர்கள் அதிகமாக தனம் சேகரிக்கக்கூடாது. யாரை அண்டி இருக்கிறார்களோ அவர்கள் சூத்திரரை வயதாகி வேலை செய்ய முடியாத காலத்திலும் சம்ரக்ஷிக்க வேண்டும். ஒரு வேளை சம்ரக்ஷித்தவர் க்ஷீண திசையடைந்தால் சூத்திரர் அவரிடம் பெற்ற தனத்தால் அவருக்கு உதவி செய்யலாம்.

தர்மம் தவறுபவர்களுக்கு கடுமையான பிராயச்சித்தங்களும் சொல்லி இருக்கு.

Wednesday, September 24, 2008

பிறப்பால் கர்மா



சாஸ்திரப்படி ஒருவருடைய கர்மா என்னன்னு சொல்லி இருக்குன்னு பாக்கலாம். இந்த காலத்திலே இது பொருந்துமா என்பது அவரவர் முடிவு செய்ய வேன்டியது.

அந்தணருடைய கர்ம அதிகாரம் வேத அத்தியயனம் (கற்பது) செய்தல், வேத அத்யாபனம் (சொல்லிக்கொடுத்தல்), யாகம் செய்தல், யாகம் செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்கிக்கொள்ளுதல். இவ்வளவே.

இப்படி கர்ம அதிகாரம் உள்ள இவருக்கு இருக்க வேண்டியவை: தவம், இந்திரிய அடக்கம், தயை, தானம், ஸத்யம், தர்மம், சாஸ்திரம், அன்பு, வித்யை, அறிவு: பரலோகம், ஈஸ்வரன், வேதம் பிரமாணமானது என்பதில் நம்பிக்கை.

க்ஷத்திரியர்களுக்கு: வேத அத்தியயனம் (கற்பது) செய்தல், யாகம் செய்தல், தானம் கொடுத்தல் இவை மூன்றும் உண்டு. ஆனால் முக்கிய தர்மம் பிரஜைகளை காப்பதுதான்.
இவன் எப்படி இருக்க வேண்டும்? மிகுந்த உத்ஸாகம், தானசீலம், நன்றி மறவாமை, பெரியோரை சேவித்தல், வணக்கம் இவை உள்ளவன். ஸத்வ குணம், உண்மையான வாக்கு, சுத்தம், கார்யங்களை சீக்கிரமாக செய்தல், மறதி இன்மை, பெருந்தன்மை, கடினசித்தம் இன்மை; தார்மிகன், சூதாட்டம் போன்ற கெட்ட பழக்கங்கள் இன்மை, நல்லறிவு, சூரனாக இருத்தல், ரஹசியங்களை /தந்திரங்களை அறிந்து இருத்தல், ஆத்ம வித்யை, அர்த்த சாஸ்திரம், பசு பாலனம் இவற்றை அறிந்து இருத்தல், இப்படி இருக்கணும்.

இவன் அந்தணர்களிடம் பொறுமையுடனும், நண்பர்களிடம் வக்கிரமில்லாமலும், எதிரிகளிடத்தில் ப்ரதாபம் உள்ளவனாயும், வேலைக்காரர்கள், ஜனங்கள் இவர்களிடத்தில் அப்பாவை போல அன்பு உள்ளவனாயும் இருக்க வேண்டும்.
இப்படி இருப்பதற்காக அரசனுக்கு பிரஜைகளின் புண்ணியத்தில் 1/6 பங்கு கிடைக்கும். (அதே போல அவர்கள் பாவத்திலும்...முழுப்பாவமும் கிடைக்கும்!). அதனால் வஞ்சகர்கள், திருடர்கள், சூதுக்காரர்கள், கொள்ளையர்கள், கணக்கர்கள் இவர்களிடம் துன்பப்படும் மக்களை கவனித்து காக்கவேண்டும்.

அரசன் சாதுக்களை சிறப்பிக்க வேண்டும். லஞ்சத்தால் பிழைப்பவர்களை சொத்து பறிமுதல் செய்து நாட்டை விட்டு விரட்டவேண்டும். வேதம் உணர்ந்தவர்களை தானங்களால் ஆதரித்து நாட்டில் வசிக்க செய்ய வேண்டும். இப்படி எல்லாம் யாக்ஞவல்கியர் சொல்றார்.


Tuesday, September 23, 2008

காம்யம் -நிஷ்காம்யம்


காம்ய கர்மாக்கள் பலவிதம். பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள், தர்ப்பணங்கள். கிரிவலம், தானங்கள், நெறையவே இருக்கு. சாஸ்திரங்களில் சொல்லி இருக்கிற பிராயச்சித்தங்களும் இப்படித்தான்.

நிஷ்காம்ய கர்மாவுக்கும் இதுக்கும் செய்கிற விதத்திலேயும் வித்தியாசம் உண்டு. இன்ன விஷயம் நிறைவேற இப்படி இதை செய்கிறேன் என்று சங்கல்பம் செய்தால் அதை அப்படியே நிறைவேத்தனும். அதில லீ வே எடுத்துக்க முடியாது.

ஒருவர் ஒரு கஷ்டத்துக்காக ஒரு மடாதிபதியை போய் பார்த்தார். அவர் அதுக்கு ஒரு தீர்வு சொன்னார். ஒவ்வொரு சஷ்டியும் திருச்செந்தூர் போய் இன்னது செய்யது வரணும்; அப்படி தொடர்ந்து இவ்வளவு தரம் செய்யனும். சரின்னு இவரும் அப்படியே செய்து வந்தார். முக்கால்வாசி பூர்த்தி ஆயிடுத்து. இன்னும் 4-5 தான் பாக்கி என்ற நிலைல இவர் மடாதிபதியை போய் பாத்து அடுத்த சஷ்டி போக முடியாது. சென்னைல முக்கிய வேலை இருக்குன்னார். மடாதிபதி போய்த்தான் ஆகணும்னார். இவர் இல்லை அதுக்கு பதிலா இன்னும் 2 தரம் போய்வரேன் என்றார். இல்லை, அதுக்கு அடுத்த நாள் போறேன் என்றார். மடாதிபதி ஒத்துக்கலை. என்னால நிச்சயம் போக முடியாது, என்ன செய்யறதுன்னு கேட்டார் இவர். அப்படின்னா பரவாயில்லை, திருப்பி முதல்லேந்து ஆரம்பிச்சு செய் என்றார் மடாதிபதி.

நிஷ்காம்யத்துல இப்படி சட்ட திட்டம் இல்லை.

சரி நாம செய்கிற எல்லா விஷயமுமே காம்யம்தானா? ஞான வைராக்கிய சித்யர்த்தம் என்று பண்ணினால்? அது மோட்சத்தை தேடுகிற மார்க்கம்; அது காம்யம் இல்லை.

சமீபத்தில ஒரு கூட்டத்தில ஸ்வாமி ஓங்காரனந்தா சொன்னார்: ஒரு கோவிலுக்கு போய் ஒரு சின்ன அஷ்ட்டோத்திர பூஜை செய்யக்கூட இருக்கிற எல்லார் பேரும் சொல்கிறோம். வீர்ய விஜய ஆயு ஆரோக்கிய என்று முழ நீள சங்கல்பம் செய்கிறோம்.
ஸோம யாகம் செய்வதை பாருங்க. யக்ஞேஸ்வர ப்ரீத்யர்த்தம், ஸோமேன யக்ஷ்யே.. அவ்ளோதான்.!
பலன் செய்கிறவருக்கும் கிடைத்தாலும் பொதுவாகவே எல்லாருக்கும் பலன் கிடைப்பதால் இது நிஷ்காம்யம் ஆகிவிட்டது.


Sunday, September 21, 2008

காம்ய கர்மா:



காம்ய கர்மா:
ஏதோ ஒரு விஷயத்தை வேண்டி ஒரு கர்மா செய்கிறோம். இது காம்ய கர்மா.
ஜீவனத்துக்கு பணம் வேண்டிதான் வேலை பார்க்கிறோம். அப்ப இதுவும் காம்ய கர்மாதான். சில பேருக்கு அப்படி வேலை பார்க்க தேவையில்லாமல் இருப்பர். இருந்தாலும் வீட்டில் சும்மா இல்லாமல் ஏதோ ஒரு வேலை பார்ப்பார்கள். அதற்கு சம்பளம் என்று ஒன்று இருந்தாலும் அதைப்பத்தி கவலை படாம வேலை பார்ப்பார்கள். உதாரணமா சொன்னா பல பெண்கள் படிப்பு முடித்து ஆசிரியை வேலை பார்ப்பதுண்டு. அப்படி சம்பாத்திக்க கட்டாயமோ இல்லை அவசியமோ இல்லாவிட்டாலும் சமூகத்துக்கு ஏதோ ஒரு உதவி செய்யணும் என்று செய்வர். அல்லது இலவச ட்யூஷன் எடுப்பார்கள். அப்போது இதே அகாம்ய நிஷ்காம்ய கர்மா ஆகிவிடும்.

எப்போதுமே அகாம்ய நிஷ்காம்ய கர்மா காம்ய கர்மாவை விட உயர்ந்தது.
அது நல்லாவும் நடக்கும். ஏன்? அப்படி கர்மா செய்கிறபோது பணம்/ சம்பளம் பத்தி யோசனை இல்லை. மனசு முழுக்க காரியத்தில் ஈடுபடும். அப்படி செய்யும் காரியம் பரிமளிக்கும்.

காரியம் செய்யும் போது என்ன சங்கல்பம் செய்கிறோம்? “பகவத் ஆக்ஞையா" “ பரமேஸ்வர /நாராயண ப்ரீத்யர்த்தம்" இப்படி எல்லாம் சொல்லிதான் இன்ன காரியம் செய்கிறேன் என்று சங்கல்பிக்கிறோம். ஏன் கர்மா செய்கிறோம்? அது பகவானுடைய உத்தரவு. எதற்கு செய்கிறோம்? அது அவனுக்கு பிடிக்கும் அதனால். அதே போல கர்மா முடிந்து "உடலால், வாக்கால், மனதால், இந்திரியங்களால், புத்தியால் இல்லை வெறும் சுபாவத்தால் என்னவெல்லாம் செய்கிறேனோ அனைத்தையும் நாராயணனுக்கே சமர்ப்பணம் செய்கிறேன்.” என்று செய்த கர்மாவில் பலனை விட்டு விடுகிறோம். இப்படி செய்யும் போது அது அகாம்ய நிஷ்காம்ய கர்மா ஆகிறது.

இப்படி சொல்வதால் அகாம்ய கர்மா மட்டுமே செய்யவேண்டும் என்று இல்லை. லௌகீக வாழ்க்கையில் சில பொறுக்க முடியாத தொந்திரவுகள் வந்தால், சில நியாயமான ஆசைகள் நிறைவேறாமல் போகும்போது இப்படி கர்மாக்கள் செய்யலாம்.
இதிலேயே ஆசை என்று ஒன்று, ஆஸ்தை என்று ஒன்று.

ஆசைல தனக்கு, தன் குடும்பத்துக்கு என்று கொஞ்சம் குறுகிய நோக்கம் இருக்கு.
ஊரில் மழையே இல்லை. வெயில் வாட்டி எடுக்கிறது. மழை பெய்யணும்னு ஏதோ ஒரு கர்மா -ஏகாதச ருத்திர அபிஷேகம் போல- செய்யறோம். ஊருக்கு மழை பெய்யணும் என்பது ஆஸ்தை.

மனுஷனுக்கு காம்யங்கள் -ஆசைகள்- ரொம்பவே அதிகமா இருக்கு. அப்ப அதற்கான கர்மாக்களும் எக்கச்சக்கமா இருக்கு. எதோ வேதம் பிலாஸபிதான் ன்னு நினைக்கிறோம். உண்மையில அதுல நிறைய கர்மாக்கள் சொல்லி இருக்கு. எல்லாத்துக்கும் பலன் சொல்லி இருக்கு. வேதம் இந்த மாதிரி வாழ்க்கைக்கும் பின்னால வரப்போற வாழ்க்கைக்கும் சேத்துதான். பிலாஸபி -வேதாந்தம் (வேத அந்தம்) -கடேசில வரதுதான். அது நிரந்தர தீர்வு. முன்னாலே வருகிறதெல்லாம் தற்காலிக தீர்வுகள்.

Friday, September 19, 2008

சிராத்தம் -நியமங்கள்



சிராத்தம் வருகிற மாசத்திலோ பட்சத்திலோ சவரம் செய்து கொள்ளுதல், வேறு வீடுகளில் சாப்பிடுதல், ஸ்திரீ ஸங்கம் இவற்றை தியாகம் செய்ய வேண்டும்.
பசும் சாணத்தால் சிராத்தம் செய்யும் பூமியை மெழுகி எள்ளை இறைக்க வேண்டும்.
உளுந்து இல்லாமல் சிராத்தம் செய்யப்பட்டதாகாது. தேனை பித்ருக்கள் விரும்புகிறார்கள்.

சுருக்கமாக சிராத்த விஷயம்:
1. 12 நாழிகைக்கு மேல் (ஒரு நாள் = 60 நாழிகை. 12 நா = காலை 11 மணி) ப்ராம்மணர்களுக்கு ஸ்னானத்துக்கு தைலம் சூர்ணம் முதலியன கொடுக்க வேண்டும். அவர்கள் குளித்த பின் கர்த்தாவும் குளிப்பார். துவாதசியானால் நெல்லி சூர்ணம் கொடுக்க வேண்டும்.
2. ஆவாஹனம், அர்க்யம், சங்கல்பம், பிண்ட தானம், எள்நீர் கொடுத்தல், ஆசனம், பாத்யம், அன்னதானம் இவற்றில் நாம கோத்திரங்களை சொல்ல வேண்டும்.
3. தேவர்களின் ஆவாஹனத்தில் இரண்டு பாதங்கள், முழங்கால்கள், தோள்கள் தலை இவற்றில் அக்ஷதை போடவும்.
4. பித்ருக்கள் ஆவாஹனத்தில் தலை தோள்கள், முழங்கால்கள் என இறங்கு வரிசையில் எள்ளை போடவும்.
5. வீண் பேச்சு கூடாது.
6. தேவர்களுக்கு கட்டை விரலை பிடிக்காமலும் பித்ருக்களுக்கு பிடித்தும் மந்திரம் சொல்வர்.
7. சமையலின் குற்றங்களை சொல்லகூடாது

இவை போல பல உண்டு.

பித்ருக்களை வஸுக்களாயும், தாத்தாவை ருத்திரர்களாயும், அவருடைய அப்பாவை ஆதித்யர்களாயும் வேதம் சொல்லுகிறது.
ஒரு வேளை மற்ற புண்ய காலங்களில் (96) சிராத்தம் செய்ய முடியாவிட்டால் ஆம ரூபமாக, ஹிரண்ய ரூபமாக (அந்தணர்களுக்கு தக்ஷிணையாக) கொடுத்து செய்யலாம். சக்தி இல்லாதவன் பசுக்களுக்கு ஒரு நாளுக்கு போதுமான புல்லை போடலாம். பிண்டங்கள் போடலாம். தில (எள்) தர்ப்பணம் செய்யலாம்.

யார் சிராத்தம் செய்ய முடியாமல் - சக்தி இல்லாமல் இருக்கிறானோ அவன் அதற்கு பிரதிநிதியாக என்ன உள்ளது என்று பார்த்து அதை செய்தால் முக்கியமாக செய்ய வேண்டியபடி செய்த பலன் கிடைக்கிறது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

யார் சிரத்தையுடன் பித்ருக்களையும் அக்னியையும், தேவர்களையும் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா பிராணிகளுக்கும் உள்ளிருக்கும் இறைவனை பூஜிக்கிறார்கள். ஆயுள், புத்திரர்கள், புகழ், சுவர்க்கம், யசஸ், புஷ்டி, பலம், பாக்கியம், பசுக்கள், சுகம், தனம், தான்யம் இவற்றை அடைகிறார்கள்.
ஆகவே கிருஹஸ்தன் சிராத்தத்தை சரியாக செய்ய வேண்டும்.

இத்துடன் 40 சம்ஸ்காரங்கள் குறித்த பதிவுகள் முடிந்தன.
அடுத்து காம்ய கர்மாவை கொஞ்சமாக பார்த்துவிட்டு பொதுவாக கர்மா குறித்து பார்க்கலாம்.


Thursday, September 18, 2008

ஆப்திக சிராத்தம்:



ஆப்திக சிராத்தம்:

இதைப்பற்றி முதலில் எழுதுவதாக உத்தேசம் இல்லை. எனினும் மௌலி கேட்கிறர். சரி எழுதி விடலாம் என்று தோன்றியது. நமக்கு தெரிந்து கடைப்பிடிக்க கூடியதை மட்டுமே எழுத உத்தேசம். நடைமுறைகள் அதிகமாக எழுதவில்லை.
------
இதை பார்வண சிராத்தம் என்பர். (பார்வணம் என்பது 3 தலை முறையை உத்தேசித்தது. ஏகோத்திஷ்டத்தில் இப்படி இல்லை)
யாருக்கு எந்த மாசத்தில் எந்த திதியில் மரணம் ஏற்பட்டதோ அதே மாத அதே திதியில் செய்ய வேண்டும். ஏனெனில் திதிதான் பலமுடையது என்கிறார் நாரதர்.
சந்திரன் நகர்வை முக்கியமாக கொண்டு நிர்ணயிப்பது சாந்த்ர மாஸம். சூரியனை கொண்டு நிர்ணயிப்பது ஸௌர மாஸம்.
சாந்திர மாசம் தர்சாந்தம் (அமாவாஸையில் முடிவது) பூர்ணிமாந்தம் (பௌர்ணமி அன்று முடிவது) என 2 வகை.
இதில் எதை பின் பற்றுவது?
ஜ்யோதிஷர்கள் நர்மதையை எல்லையாக சொல்லி அதற்கு தெற்கே தர்சாந்தம், வடக்கே பூர்ணிமாந்தம் என சொல்கின்றனர்.
விரதங்களுக்கு சாந்திர மாதம் உயர்ந்தது; ஆனால் சிராத்தத்துக்கு சௌர மாதம் என்கிறது சந்திரிகை.
சாந்திரமானத்தில் அடிக்கடி அதி மாசம் வருவதால் அது நிலை இல்லாதது என்பதை சுட்டிக்காட்டி அது இப்படி சொல்கிறது.

ஒரு வேளை சௌர மாதத்தில் 2 திதிகள் வந்தால்? அதாவது சுக்ல பட்ச சதுர்த்தி 2 என்பது போல வந்தால்? பின் திதி தோஷம் (க்ரஹணம், மாத பிறப்பு போல) இல்லாமல் இருந்தால் அதில் செய்ய வேண்டும். இரண்டிலும் தோஷம் இருந்தால்? முந்தைய திதி.
சிராத்தம் செய்ய வேண்டிய மாத்தியானிக காலம் கழிந்த அபராஹ்ணம் என்ற காலத்தில் குறிப்பிட்ட திதி இருக்க வேண்டும்.
இது போல நிறைய சமாசாரங்கள் இருக்கின்றன.

ப்ரதி வருஷம் சிராத்தம் செய்யாதவர் கோடி ஜன்மங்கள் சண்டாளனாக பிறப்பானாம். ஸம்வர்த்தகர் சொல்கிறார்.

முக்கியமான விஷயம் சகோதரர்கள் சொத்தை பிரித்துக்கொண்டுவிட்டால் - அதாவது குடும்பம் தனியாக பிரிந்து விட்டால் சிராத்தம் தனித்தனியாகதான் செய்ய வேண்டும். பலர் அன்று மட்டும் ஒன்று சேர்ந்து செய்கின்றனர். (மத்த நாட்களில் இருக்கிறாயா இல்லையா என்று கூட பார்ப்பதில்லை!) இது தவறு.
அதே போல ஏதேனும் ஆபத்து வந்தாலும் ஆம ரூபமாக செய்யக்கூடாது. அந்த திதி சௌகரியப்படாவிட்டால் அடுத்த அமாவாசை அல்லது க்ருஷ்ண ஏகாதசியில் செய்வர்.

96 சிராத்தங்கள் குறித்து முன்னேயே பார்த்து இருக்கிறோம்.
புண்ணிய தீர்த்தங்களில் செய்யும்போது வரணம் செய்யும் அந்தணரை பரீட்சிக்க வேண்டியதில்லை.
இல்லாவிட்டால் அவசியம் பரீட்சிக்க வேண்டும். {அப்படி செஞ்சா யாரும் கிடைப்பாங்களா? :-( நம்பிக்கையுடன் உறுதியோடும் செய்தால் கிடைப்பார்கள்.} அவன் குலம் நல்ல குலமா? அவன் வேதம் பயின்றவனா? ஆசாரங்கள் நல்லதாக இருக்கின்றனவா?
வேத அத்தியயனம் பிள்ளை செய்யவில்லை; அவன் அப்பா செய்து இருக்கிறார்.
வேத அத்தியயனம் பிள்ளை செய்து இருக்கிறார்; அவன் அப்பா செய்யவில்லை.
இப்படி 2 பேரில் யார் பரவாயில்லை?
ஆச்சரியமான பதில்; முதல் ஆசாமிதான்.

காயத்ரி செய்வதில் நாட்டம் உள்ளவன், ஆசாரத்துடன் இருப்பவன் சிறந்தவன். நான்கு வேதங்களும் கற்றாலும் எல்லா இடங்களிலும் சாப்பிட்டுக்கொண்டு, எல்லாவற்றையும் விற்றுக்கொண்டு, நேரத்துக்கு குளியல் சந்த்யா உபாசனம் இல்லாதவன் லாயக்கு இல்லை.

அக்னி ஹோத்ரி, நியாய சாஸ்திரம் அறிந்தவன், ஆறு அங்கங்களையும் அறிந்தவன், மந்திர பிராம்மணம் அறிந்தவன், தர்மங்களை ரக்ஷிப்பவன்; குரு, தேவதை, அக்னி இவர்களை பூஜிப்பவன், ஞானீ, சிவ பூஜை செய்பவன், விஷ்ணு பக்தி உள்ளவன் இவர்கள் வரிக்கக்கூடியவர்கள்.

அமாவாஸை பிரதமை ஆகிய காலங்களில் வேதம் சொல்கிறவன், சதாசாரம் இல்லாதவன், கண்டவர் அன்னத்தால் உடல் வளர்ப்பவன் இவர்கள் லாயக்கு இல்லை.
நான் வருகிறேன் கூப்பிடு என்று தானாக அழைத்துக்கொள்கிறவன் கூடாது என்று சொல்லப்பட்டாலும் சாஸ்திர பிரமாணம் தெரியவில்லை.

Wednesday, September 17, 2008

12 ஆம் நாள் விதி:



12 ஆம் நாள் விதி:ஸபிண்டீகரணம். இறந்தவர் பிரேதத்வம் நீங்கி பித்ரு ஆவதற்கு இது செய்யப்படுகிறது.
12 ஆம் நாளும் செய்யலாம். அல்லது 4 ஆம் மாதம், 6 ஆம் மாதம், 11 ஆம் மாதம் அல்லது வருட முடிவிலும் செய்யலாம்.
ஒரே மகனாக இருந்தாலும், சுயமாக அக்னி ஆராதனை செய்பவனாக இருந்தாலும் 12 ஆம் நாள் செய்வதே உசிதம். சரீரம் ஸ்திரம் இல்லை என்பதால் இப்படி.
இந்த சபிண்டீகரணம் செய்யாமல் வேறு எந்த சுப காரியமும் செய்யலாகாது.
இன்னும் பல கௌண காலம் சொல்லி இருக்கிறது.
பிரம்மசாரி, ஸன்யாசி, போல சிலருக்கு நாராயண பலிதான். ஆகவே சபிண்டீகரணம் இல்லை.
இரண்டு சிராத்தங்களை ஆரம்பித்து ஒன்றை பார்வண ரீதியிலும் ஒன்றை ஏகோத்திஷ்ட ரீதியில் பிரேத வர்ண சிராத்தமும் செய்வர். இந்த 2 உம் சேர்ந்தே சபிண்டீகரணம்.
முதலில் விச்வேதேவர், பிறகு பித்ருக்கள் கடைசியில் பிரேதம் அதாவது பித்ரு (தகப்பனார்) வரணம் செய்து காரியம்.
விஷ்ணுவும் பார்வண ரீதி சிராத்தத்தில் உண்டு.
ஹோமம் செய்து மீதியுள்ள அன்னத்தையும் எள்ளை கலந்து 7 பிண்டங்களாக பிடித்து உச்சிஷ்ட சன்னதியில் அக்னிக்கு தெற்கே போன பதிவில் சொல்லிய படி பிண்டமிடுவர்.

அந்தணர் அனுமதி பெற்று பிரேத அர்க்கியம் கொடுத்து மௌனமாக நீட்டமாக பிண்டம் பிடித்து மூன்றாக்கி அவற்றை பிதா முதலியவர் எதிரில் வைத்து;
பிரேதம் வைதரணி நதியை கடக்க வைதரணீ கோ தானம் செய்து;
(பார்க்க கருட புராணம்: யம லோகம் செல்லும் வழியில் வைதரணி நதி குறுக்கிடும் அதை தாண்ட வேண்டும். அது துர் நாற்றமும், அதிக வேகமும், கருத்த தண்ணீர் ரத்தம் உள்ளதாயும், எலும்பு மயிர் இவற்றுடன் கூடிய அலைகளுடனும் இருக்கும்.)
பிரேத பிண்டங்களை பிதா முதலியவர் பிண்டங்களுடன் ஒன்றாக சேர்ப்பர். அதன் மீது எள்ளும் நீரும் இறைப்பர்.

இதை மூத்த மகனே செய்ய வேண்டும். மற்றவர் அல்ல.

சோத கும்பம்:
அந்தணர் வரணம் இல்லாமல் மூன்று புருஷர்களை உத்தேசித்து நீர் கடத்துடன் செய்யும் சிராத்தம். செய்பவருக்கும் சாப்பிடுபவருக்கும் ஒரு நியமமும் இல்லை. இதை 12 ஆம் நாள் சபிண்டீகரணம் செய்த பின் ஆரம்பித்து தினசரி வருஷ சிராத்தம் முடிய செய்வர்.
தினசரி முடியாதவர்கள் சேர்த்து அமாவாஸை அல்லது மாசிகம் போது செய்வர்.

ஆசௌசம் 12 நாள் வரையிலும் கூட உண்டு. ஸபிண்டீ செய்யும் முன் தேவ பூஜை, வேறு பித்ரு காரியம், ஹோமம், தானம், ஜபம் இவற்றை செய்யலாகாது.

Tuesday, September 16, 2008

ஏகோத்திஷ்ட சிராத்தமும்...


ஏகோத்திஷ்ட சிராத்தமும் சபிண்டீகரணமும் இரண்டு வகை. ஒன்று காரிகையில் சொன்னபடி. இரண்டு மாஸி சிராத்த கிரமத்தில். அவரவர் வீட்டு பழக்கப்படி.

இதை செய்யாவிட்டால் எல்லா சம்ஸ்காரங்களையும் மீண்டும் செய்ய சொல்லி இருக்கிறதால் இதை அவசியம் செய்ய வேண்டும்.

குளித்து மத்தியான அனுஷ்டானங்கள் முடித்து திருப்பி குளித்து;

சங்கல்பம் செய்து இரண்டு அக்னிகளை ஸ்தாபித்து; வடக்கில் ஹோமத்துக்கு அக்னி, அதற்கு வலதாக பிண்டப்பிரதானத்திற்கு மேடை, அதற்கும் வலதில் அந்தணருக்கு பதிலாக அக்னி. இதை மேற்கு நோக்கி அமர்ந்துள்ள தகப்பனாராக த்யானம் செய்வர். அதனால் அவருக்கு மேற்கேதான் ஆசனம், பாத்யம் (காலில் நீர் அளித்தல்) அர்க்யம் (கைகளில் நீர் வார்த்தல்) ஆசமனம் முதலான உபசாரங்கள், எள் நீர் அளித்தல் எல்லாம்.

மாஸி சிராத்த கிரமத்தில் இந்த உபசாரங்கள் இல்லை. முகமன் கூறி வரவேற்பது மட்டுமே.

மற்றப்படி ஒரு அந்தணரை வரித்து சிராத்தம் செய்வது போலவே - திருப்தி கேட்பது உட்பட.
எள்ளும் நீரும் இறைத்துவிட்டு நமஸ்காரம் இல்லாமல் "இது ஜனார்த்தனனுக்கு பிரியமானது" என சொல்லி உணவளிக்கும் இடத்தில்; எள்ளும் நெய்யும் கலந்த பாயஸ அன்னத்தால் தெற்கு நோக்கி 32 ஆஹுதிகள். பானீயம் - திருப்தி கேட்டு தக்ஷிணை தாம்பூலம் உட்பட மீதி உபசாரங்களையும் முடிப்பர்.

பிண்ட ப்ரதானம்: அக்னியில் உள்ள அந்தணரையும் அனுப்பிவிட்டு தெற்கில் தெற்கு நுனியாக தர்ப்பைகளை பரப்பி எள்ளும் நீரும் விட்டு ஹோமம் செய்து மிஞ்சிய அன்னத்தால் குதிரை குளம்பு அளவு அன்னம் எடுத்து பிண்டம் போட்டு மேலே மீண்டும் எள்ளும் நீரும் விட்டு முடிப்பர். ஏதேனும் அன்னம் மிஞ்சினால் அதை நீரில் போட்டுவிட வேண்டும்.

மொத்தம் 16 சிராத்தங்கள் வரும்.


முதல் மாதம் குறைவாக இருக்கும் போது ஒன்று (ஊன மாசிகம்) மூன்றாம், ஆறாம் மாதங்கள், வருட முடிவில் அதே போல ஒன்றொன்று, (மொத்தம் 3) ஒவ்வொரு மாதமும் இறந்தவர் திதியில் =12 ; இப்படி மொத்தம் 16. தேச காலம் அனுகூலமாக இல்லாவிட்டாலும் நோய் வரலாம், மரணம் வரலாம் என்ற சந்தேகங்கள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் சேர்த்து சபிண்டீகரணத்துக்கு முன் ஒன்றாக 11 நாளில் செய்கிறார்கள். அப்படி செய்யும் போது 16 பிண்டங்களையும் ஒன்றாக சேர்த்து செய்வர். இப்படி இல்லாமல் மாதா மாதம் மாசிகம் செய்து வருட முடிவில் சபிண்டீகரணம் செய்வதானால் பிண்ட தானத்தை தனித்தனியாக செய்வர்.

(குழப்பிக்கொள்ள வேண்டாம். எப்படியும் மாதா மாதம் மாசிக சிராத்தம் உண்டு. இப்போது சொல்வது பிண்ட ப்ரதானம் மட்டுமே)

Monday, September 15, 2008

ஸர்ப பலி



பையர் இன்னிக்கு (பௌர்ணமி) ஸர்ப பலி செய்யறார்.
தயார் செஞ்சு வெச்சு இருந்ததை அவருக்கு தெரியாம க்ளிக்கிட்டேன்.


From 15092008

பொரி, சத்து மாவு, அரிசி, (எல்லாம் ஹோமத்துக்குத்தான்.) மை, சந்தனம், குளிர்ந்த தண்ணீர்.

அப்புறமா பலாஸ புஷ்பம்.
அது வஸந்தத்துலதான் பூக்குமாம்.
அப்பவே பறிச்சு சேத்து வெக்கணுமாம். தெரியாம போனதாலே போன் பௌர்ணமிக்கே செய்து இருக்கக்கூடியதை செய்ய முடியலே. ஒரு மாசமா அங்கே இங்கே சொல்லி வெச்சு கேட்டு ஒரு வழியா போன சனிக்கிழமைதான் வந்து சேர்ந்தது.

From 2008-09-15--19.21.11


பாவம் வாடி வதங்கி இருக்குங்க!
அப்பாடா, ஆணி அதிகமா போனதிலே பதிவு போட முடியாம இருந்ததை சரி பண்ணியாச்சு!


Friday, September 12, 2008

பதினோராம் நாள்


பதினோராம் நாள்

பகலில் வீட்டை பசுஞ்சாணத்தால் மெழுகி துணிகளை வண்ணானால் சுத்தம் செய்து வாங்கி;

பகலின் இரண்டாம் பாகத்தில் குளித்து வீட்டு/ ஆத்ம சுத்திக்காக புண்யாஹம் செய்து வீட்டுப்பொருள்களை புனித நீர் தெளித்து நவ சிராத்தம் செய்து வ்ருஷோத்சர்கம் செய்ய வேண்டும். இத பத்தி ஏற்கெனவே பார்த்து இருக்கோம் இல்லையா? அப்ப செய்யாது போனால் இப்போது இறந்தவருக்காக கர்த்தா செய்வார்.

http://anmikam4dumbme.blogspot.com/2008/07/blog-post_17.html

இப்படி செய்ய முடியாதவர்கள் 11 அந்தணர்களுக்கு அன்னத்துக்கு அரிசி தானம் செய்ய சொல்கிறார்கள். ஒரு வேளை ஏதும் ஒரு காரணத்தால் இது இப்போது செய்ய முடியாவிட்டால் 12, 23, 27 நாட்களில் செய்ய சொல்லி இருக்கிறது.

மாட்டுத்தொழுவத்தில் ஹோமத்துக்கு தயார் செய்து கொண்டு; தானியத்தின் மீது கும்பம் ஸ்தாபித்து ருத்திரனை ஆவாஹம் செய்து பூசிப்பர். ஹோமம் செய்ய சரு மாவு. இதற்கான மந்திரங்களில் பல "கோ சூக்தம்" என்ற வடிவில் (உதக சாந்தியில்) உள்ளது. பின் ருத்திர ஹோமம். பின் காளையை நிறுத்தி பூசித்து; 11 அந்தணர்களை வரித்து 11 முறை ருத்திர ஜபம். (குறைந்தது ஒரு முறை) காளையை அலங்கரித்து அதையும் அக்னியையும் சேர்த்து வலம் வந்து மந்திரம் சொல்லி எள் கலந்த நீரை பருக வைப்பர். வலது முன் காலின் அடியில் லிங்கம் அல்லது சங்கு சின்னம் மஞ்சளால் செய்து வலது காதில், இடது காதில் மந்திரம் சொல்லி பின் பசுக்களிடையே சுதந்திரமாக அதை விட்டு விடுவர். அது போகும் போதும், போன பின்னும் அதை நோக்கி மந்திரம், பிரார்த்தனை உண்டு.

இதில் நடந்து இருக்கக்கூடிய குற்றங்களுக்கு எள், துணி, பணம், நீர்குடம், பசுமாடு தானம் செய்வர். (பசுவுக்கு பதில் மட்டை தேங்காயும் பயனாவது உண்டு.)
பின் ருத்திர பலி தருவதுடன் ஹோமமும் காரியமும் பூர்த்தி ஆகிறது.


Thursday, September 11, 2008

பத்தாம் நாள் காரியங்கள் -தொடர்ச்சி


அடுத்து சாந்தி ஹோமம்.

இது வரை தீட்டு இருந்தது, தர்ப்பைகள் தெற்காக வைக்கப்பட்டன. பவித்ரம் செய்தால் அதில் ஒத்தைபடை தர்ப்பைகள். நமஸ்காரம் தெற்கு நோக்கி.
ஆனால் இப்போது தீட்டு போய் விட்டது. இனி தேவ காரியங்கள் போல. அதற்கு தகுந்தாற்போல சாதாரணமாகவே நடைமுறை.

சாந்தி ஹோமத்துக்கு விசேஷமாக வேண்டியவை எருது (தோல்) கொத்துமல்லி, நீர்வஞ்சி, கல், நட்டு வைக்க செடிக்கிளை, நொச்சி மாலைகள் ஆகியன. அக்னி வழக்கம் போல பிரதிஷ்டை செய்து மேற்கே தோலை விரித்து தாயாதிகள் அதில் உட்கார்ந்து நொச்சி மாலை அணிவர். ஹோம கிரமத்தில் சில மாறுதல்கள் உண்டு. ஹோமமும் இலையின் கீழ் பாகத்தால் செய்வர். 10 ஹோமங்கள். ஒவ்வொன்றும் முடிந்தபின் இலையிலிருந்து சொட்டு நெய்யை வடக்கில் ஒரு பாத்திரத்தில் விடுவர்.

இதற்கு முன் கிழக்கே ஒரு எருதை நிறுத்தி இருக்க வேண்டும். அதற்கு பதில் சிவப்பு எருதின் தோலை வைக்கிறார்கள். இப்போது அதற்கு பதில் மட்டை தேங்காயை வைக்கிறார்கள் போல் இருக்கு. எருதையே நிறுத்தி வைத்து இப்போது அதை தொட்டுவிட்டு அதன் பின்னே அனைவரும் வரிசை ஏதும் இல்லாமல் கிழக்கு நோக்கி மந்திரம் சொல்லிக்கொண்டு போவர்.

கர்த்தா நீர்நொச்சி கொத்தை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் பின்னால் எருது, தான் உட்பட எல்லார் அடிசுவட்டையும் அழித்துக்கொண்டு போவார்.
இறந்தவருக்கும் உயிரோடு இருப்பவருக்கும் இது எல்லை, என எண்ணி தாயாதிகளுக்கு தென்புறமாக கல்லை நடுவர். பிறகு சுமங்கலிகள் உள்ளங்கைகளால் கீழே நீர் விடுவர். பின் அந்த ஸ்த்ரீக்கள் அந்நீரால் முகத்தை துடைத்துக்கொள்வர். அப்படி யாரும் இல்லையானால் கர்த்தாவே அப்படி செய்வார்.
இப்போது அனைவரும் மை இட்டுக்கொள்வர்.

அப்புறம் கர்த்தா மாயானத்திலோ அல்லது வேறிடத்திலோ ஒரு மரக்கிளையை நடுவார். பின் அனைவரும் நொச்சி மாலைகளை கழற்றி எறிவர்.

ஆனந்த ஹோமம் அடுத்தது.

இவ்வளவு நாட்கள் சோகமான காரியங்களையே செய்து கொண்டு இருந்தார்கள். இப்போது ஆனந்த ஹோமம்.
தானங்கள் செய்து அதிக சம்ஸ்காரங்கள் இல்லாமல் ஹோமம்.
லௌகீகமான (=சாதாரணமான) அக்னியில் அன்னம் சமைத்து கர்த்தாவும் தாயாதிகளும் அதை சாப்பிடுவர். பின் புண்யாஹம் செய்து அந்த புனித நீரை உட்கொள்வர்.

இந்த ஆனந்த ஹோம அக்னியை வீட்டுக்கு எடுத்து சென்று அங்கு வைத்துக்கொள்வர்.
இரவில் பொரி, அப்பம் முதலியன தானம் செய்ய சொல்லி இருக்கு.

இப்படியாக 10 நாள் காரியங்கள் முடிந்தது.


Wednesday, September 10, 2008

பத்தாம் நாள் காரியம்.


தசாஹம்

பத்தாம் நாள் தாயாதிகள் அனைவரும் உடம்பு முழுதும் சவரம் செய்து கொண்டு குளித்துவிட்டு விரித்த தலையுடன் ஒரே ஒரு துணிமட்டும் அணிந்து தெற்கு முகமாக நதி கரையில் கல் ஊன்றிய இடத்தில் உள்ள குண்டத்தில் 30 துணியுடன் நீர் வார்த்தலும் 75 முறை எள்ளும் நீரும் வார்த்தலும் செய்வர்.

பிறகு கர்த்தா 3 முறை குளித்து அதே குண்டத்தில் 3 முறை துணியுடன் நீர் வார்த்தலும் 12 முறை எள்ளும் நீரும் வார்த்தலும் செய்வார். வீட்டுக்கு போய் அங்குள்ள கல் ஊன்றிய இடத்தில் தினம் போல துணியுடன் நீர் வார்த்தல், எள்ளும் நீரும் வார்த்தல், ஏக்கோத்திர வ்ருத்தி சிராத்தம் ஆகியன செய்து ப்ரபூத பலி தானம் செய்வார்.

ஒத்தைப்படை கோடுகள் வரும்படி கோலம் போட்டு (அதனால் வீடுகளில் சாதரணமாக அப்படி கோலம் போடுவது இல்லை) தெற்கு நுனியாக துணியை பரப்பி தர்ப்பைகளையும் பரப்பி எள்ளும் நீரும் விட்டு மௌனமாக அன்னம் அப்பம் கொழுக்கட்டை, லட்டு, முறுக்கு, நெய், தேன், தயிர் எல்லாம் வைப்பர். அதன் மேல் மீண்டும் எள்ளும் நீரும் விட்டு குலம் தழைக்க வேண்டிக்கொள்வர். பாத்திரங்களை எள்நீரால் சுற்றி, அலம்பி, நிமிர்த்தி வைத்து, தெற்கு முகமாய் நமஸ்கரிக்க வீட்டு காரியங்கள் முடிகிறது. பெண்கள் துன்பத்தை காட்டுவர். பின் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, கல்லை எடுக்க தானங்கள் செய்து, பித்ருவை போக வேண்டிய இடத்துக்கு போகச்சொல்லி பிரார்தித்து, கண்களை மூடிக்கொண்டு கற்களை எடுத்து; விழித்து, அவற்றை துணியில் வைத்து கையலம்பி, சகதி மண், தானியங்கள் இவற்றை எடுத்துக்கொண்டு போய் ஒரு குழியில் எல்லாவற்றையும் போட்டு மூடுவர்.

இதே போல நதி கரையில் காரியங்களை செய்வர். பெரியோரை வலம் வந்து பிரார்தித்து மீண்டும் சர்வாங்க சவரம் செய்து குளிக்க தீட்டு கழிகிறது.


Tuesday, September 9, 2008

இரண்டாம் நாள்



இரண்டாம் நாள்:

முற்பகலில் எரிந்தபின் தங்கி இருக்கக்கூடிய எலும்புகளை சேகரிப்பர். உடலில் எரிய சிரமமாக உள்ளது இதுதான். அதனால் கொஞ்சம் தங்கிவிடும். பால், நீர், நெய், தர்ப்பை, அத்திக்கொத்து, கண்டங்கத்தரிக்காய், கருப்பு சிவப்பு நூல்கள், கற்கள், நீர் குடங்கள், மண்வெட்டி, பானை இவற்றை எடுத்து செல்வர். நாம் காவல் இல்லாததால் வெட்டியான் உள்ளிட்ட பலர் சவத்தை தொட நேர்ந்து இருக்கும். அதற்கு பிராயச்சித்தங்கள் செய்து;

சிதையில் அக்னி அணைந்து போயிருந்தால் அதற்கும் பிராயச்சித்தம் செய்வர்:

பால் அல்லது பஞ்ச கவ்யத்தால் அக்னியில் (சாம்பலில்) தெளிப்பர்.

சாம்பலை எடுத்து சமித்தின் மீது வைத்து சிதைக்கு தெற்கே எங்காவது மும்முறை பூமியில் கோடு கிழித்து சாதாரண அக்னி வைப்பர்.
மந்திரம் சொல்லி அதில் சமித்தை வைப்பர். மௌனமாக நீரால் சுற்றி ஹோமம் செய்வர். 4 முறை நெய் எடுத்து பிரஜாபதி குறித்து ஹோமம்.
பிராயச்சித்த ஹோமங்கள் செய்து அக்னியை சிதையில் வைப்பர்.

தெற்கு பார்த்து நின்று நீர் அதிகமாக கலந்த பாலை சிதையில் அத்தி கொத்துக்களால் மந்திரம் சொல்லி அக்னியில் தெளிப்பர். தெற்கிலிருந்து நிறைய அக்னி எடுத்து தனியாக வைத்து அதில் நெய்யால் 3 ஆகுதி ஹோமங்கள். பிறகு ஒத்தைப்படை நீர்குடங்களால் நீரிட்டு அக்னியை முழுதும் அணைக்க வேண்டும்.

(அதாவது அக்னி அணையாமல் இருந்து இப்படி செய்ய வேண்டும். அனேகமாக அணைந்துவிடுமாதலால் அதற்கு பிராயச்சித்தம் செய்து மீண்டும் அக்னியை உண்டாக்கி கர்மா தொடர்கிறது.)

கர்த்தா இடது கையில் கறுப்பு சிவப்பு நூல்களால் கண்டங்கத்தரியை கட்டுக்கொண்டு மேற்கே பார்த்து அமர்ந்து இடது காலை ஒரு கல் மீது ஊன்றிக்கொண்டு பார்க்காமலே இடது கையால் பற்கள் தலை எலும்புகள் ஆகியவற்றை மந்திரம் சொல்லி எடுப்பார். பின் கை கால் எலும்புகள், இடுப்பு எலும்புகள் துடை முழங்கால், பாத எலும்புகள். இப்படி மந்திரத்துடன் எடுத்து பின் மந்திரமில்லாது மீதியையும் எடுத்து ஒரு சட்டியிலோ துணியிலோ போடுவார்.

பிறகு சிதையில் உள்ள சாம்பலை எடுத்து தெற்கே ஒரு உருவமாக செய்வர். இதன் மேல் 5 வித திண்பண்டங்கள் - பொரி, கடலை, அப்பம், முறுக்கு, இளநீர் ஆகியவற்றை சமர்பிப்பர்.

பின் எலும்புகள் உள்ள கலசத்தை துணியாலோ வாணாயாலோ மூடிவிட்டு அதை எடுத்துக்கொண்டு எழுந்து மந்திரம் சொல்லி பின் இவற்றை அடக்கம் செய்ய போவர். வன்னி மரத்தடி, பலாமரத்தடி, மஹா நதி இவற்றின் அருகே குழி பறித்து தெற்கு முகமாக உட்கார்ந்து குழியில் தர்ப்பைகளை தெற்கு நுனியாக பரப்பி அகமர்ஷண சூக்தம் சொல்லி குழியில் அஸ்தி கலசத்தை வைத்து பால், நெய், சந்தன நீர், பஞ்சகவ்யம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து மண்ணால் மூடுவர். கங்கை முதலிய புனித நீர்களையும் இதில் விடலாம். முதல் நாள் செய்தது போல முழுக்கு போட வேண்டும்.

முன் காலத்தில் ஆற்று வெள்ளம் ஏற்பட்டு எலும்புகள் காணாமல் போக வாய்ப்பு இருந்தது. அப்படி ஆனால் அதே இடத்தில் உள்ள மண்ணையோ மீதி சாம்பல் மிஞ்சினால் அதையோ வைத்து கர்மா செய்வர்.

Monday, September 8, 2008

முதல் நாள் காரியம்



முதல் நாள் காரியம் (தொடர்ச்சி) :

மத்தியானத்தில் புது துணி, எள், தர்ப்பை, சொம்பு எடுத்து நீர் நிலைக்கு போகணும். அதன் கரையில் கல் புதைக்க குழி தோண்டணும். கல் புதைக்க அனுமதி வாங்கி சங்கல்பம் செய்து தெற்கு முகமாய் இடது காலை மண்டி போட்டு அமர்ந்து தர்ப்பையால் சுற்றப்பட்ட 3 கற்களை குண்டத்தில் வைத்து இறந்தவரை (ப்ரேதத்தை) அதில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

பத்து தர்ப்பைகளுடன் ஒரு புது துணியை மூன்றாக மடித்து சுருட்டி உள்ளங்கையால் இன்னாருக்கு என சொல்லி 3 முறை நீர் வார்க்க வேண்டும்.

அதே போல பின்னர் எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.
(இதை ஒட்டிதான் "எனக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை எள்ளும் தண்ணியும் இறைச்சாச்சு" என கோபத்தில் சொல்வதுண்டு. பெரிய பாபம்.)

அப்புறம் அத்தனை நீரையும் கொட்டிவிடவேண்டும்.

இப்படி இரண்டாம் நாள் ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் துணியுடன் நீரும் ஒவ்வொரு நாளும் ஒன்று அதிகமாய் எள்நீரும் கொடுக்க வேன்டும்.

பின் வீட்டுக்கு போய் திண்னையிலோ அல்லது வெளியிலோ இடது பக்கத்தில் குழி தோண்டி கல் புதைக்க வேண்டும். சிறு குழி தோண்ட வேண்டும். ப்ராயச்சித்தமாக ஹிரண்யம் தானம் செய்து கல் ஊன்றுவர். முன் போலவே துணியுடன் நீர் வார்ப்பது. இதனால் பிரேத சரீரம் உருவாகிரது. சாதாரண தீயில் கர்த்தா தானே சரு சமைக்கணும். அதில் நெய் விட்டு வடக்கே இறக்கி திருப்பி நெய் சேர்த்து குழியின் அருகில் தென்கிழக்கில் பசு சாணத்தால் தரையை மெழுகி நீர் தெளித்து தெற்கு நுனியாக தர்ப்பைகளை பரப்பி எள் நீர் வார்ப்பது. பின் சருவில் எள் கலந்து முஷ்டி அளவு அல்லது கோழி முட்டை அளவு எடுத்து பிண்ட தானம் செய்வர். (மாலையானால் கட்டைவிரல் அளவு.) அதன் மீது எள்ளும் நீரும் வார்ப்பர். படைத்தவற்றை ஏற்கும்படி வேண்டிக்கொள்வர். சரு பாத்திரத்தை நீரிட்டு அலம்பி அந்த நீரால் ஒரு முறை இடமாக (அப்ரதக்ஷிணமாக) நீரால் சுற்றுவர்.

ஏக்கோத்தர விருத்தி ச்ராத்தம்: ஆம ரூபமாக செய்வதாக சங்கல்பம் செய்து 3 அந்தணர் சாப்பிடக்கூடிய அளவு அரிசி தானம் செய்வர்.

இப்படி 10 நாட்கள் பிண்டமும் பலி தானம் கொடுத்து; ஒவ்வொரு நாளும் ஒன்று அதிகமாய் எள்நீரும் கொடுக்க வேண்டும்.

நவ ச்ராத்தம்:
குண்டத்தின் மேல் 2 உரிகளை கட்டி ஒன்றில் நீரும் மற்றதில் பாலும் தரையில் இளநீரும் வைப்பர். பிண்டத்தையும் பலியையும் துணியில் வைத்து குடுமி முடிந்து குலத்துக்கோ ஆற்றுக்கோ சென்று நீரில் தெற்கு முகமாக நின்று பிண்டத்தையும் பலியையும் தலைக்கு மேலாக பின் பக்கம் ஆகாயத்தில் எறிவர். அப்படியே முழுக்கு போடுவர்.
முதல் நாள் செய்யப்பட்ட அதே திரவியம்தான் கடைசிவரை சரு செய்ய பயனாகும். முதல் நாள் போட்ட அதே இடத்தில்தான் மற்ற நாட்களூம் பிண்டம் நீர் போடுவர்.
நீர் நிலையில் உள்ள கல்லுக்கு நீர் இறைத்தல் மட்டும். வீட்டில் உள்ள கல்லில் பிண்டமும் உண்டு. நீர் நிலை இல்லை என்று வீட்டிலேயே இரண்டு கற்களையும் ஊன்றியது உண்டு. இப்போதெல்லாம் ஃப்லாட் ஆகிவிட்டபோது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

Monday, September 1, 2008

விடுமுறை வேண்டி விண்ணப்பம்


ஐயா/ அம்மா,

இப்பவும் லீனக்ஸ் தொடர்பான மொழிபெயர்ப்பில் தீவிரவாதியாக ஈடுபட்டு இருக்க வேண்டி இருக்கு. இந்த மாசம் ௧0 ஆம் தேதி கடேசி நாளாம். உலகத்துல இருக்கிற வானிலை மையங்கள எல்லாம் ஒரு பட்டியல்ல போட்டு மொழிபெயர்க்க சொல்லி படுத்தறாங்க. போன தபா ௯௯ % இருந்தது இதால ௬௭% ஆகி போச்சு. அதனால இந்த ஒரு வாரம் விடுப்பு தரும்படி வெகு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அல்லாருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!
இப்படிக்கு
திவா