Tuesday, December 2, 2008
பரிட்சை விடைத்தாள் -1
பரிட்சை கொடுப்பாங்கனு தெரிஞ்சிருந்தால் படிச்சிருக்கவே மாட்டோம்னு எல்லாரும் நினைக்கிறாங்க. திவா கேள்வி கேட்டு பதில் எழுதச் சொல்லிப் பரிட்சை கொடுத்துட்டு மார்க்கை அவருக்குப் போட்டுக்கப் போறார். கொடுமைடா கண்ணா இது! நல்லவேளையா ரிவிஷனுக்கு நேரம் இருந்தது! 500 வரிகளுக்குள்னு வேறே! முடியற வேலையா இது? ஈஸ்வரோ ரக்ஷது!:)))))
*************************************************************************************
"பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி!
ததஹம் பக்த்ய்பஹ்ருத மஸ்நாமி ப்ரயதாத்மந:"
இலையோ, பூவோ, பழமோ அல்லது நீரோ எதாயிருந்தாலும் அதைப் பக்தியுடனும், ஆத்மார்த்தமாயும் கொடுத்தால் அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்கின்றான் கண்ணன். கர்மயோகத்திலே கண்ணன் அர்ஜுனன் கிட்டே உன்னோட ஸ்வதர்மம் என்னமோ அதைப் பண்ணுனு சொல்றான். அதே சமயம் எந்தக் காரியமும் பண்ணாமல் தியான யோகம் செய்யுமாறும் சொல்றான். பலருக்கும் குழப்பும் விஷயம் இது தான். ஒரு பக்கம் வேலை செய், இன்னொரு பக்கம் வேலை செய்யாதே! சும்மா இரு!
தட்சிணாமூர்த்தி சின்முத்திரை காட்டிட்டுச் சும்மாத் தான் இருக்கார். அவருக்கு 4 சிஷ்யர்கள். 4 பேரும் ஆனந்தம் பொங்க அவர் உபதேசம் பண்ணிட்டார்னு சொல்றாங்க. அது எப்படி?? அதுதான் இங்கே சிந்திக்கவேண்டியது. உள்முகமாய்த் தன்னை அறிதல். தன்னை அறிந்ததால் ஆலமரத்தடியில் அமர்ந்து சின்முத்திரை காட்ட முடிகின்றது. பின்னர் ஆனந்தக் கூத்தும் ஆட முடிந்தது. அட்டஹாசச் சிரிப்போடு திரிபுரங்களையும் சம்ஹாரம் செய்ய முடிந்தது. இது தான் இங்கே இவரின் கர்மா. லோக க்ஷேமத்துக்காகச் செய்யும் கர்மாக்கள். செய்தே ஆகவேண்டும். அழிக்கவேண்டியவற்றை அழிக்கவேண்டிய நேரத்தில் அழித்தே ஆகவேண்டும். ஆனால் வெளியே பார்த்தோமானால் இப்படி எல்லாம் ஆடிப் பாடிக் கூத்தடித்துக் கொண்டு உள்ளே அமைதிப் பெருவெளி. இது தான் கர்மயோகத்திலே மறைமுகமாய்ச் சுட்டிக் காட்டப் பட்டிருப்பதாய் எனக்குப் புரிந்தது. ஓயாமல் சலிக்கும் மனத்திடம் இருந்து விடுதலை பெறவேண்டும். ஆனால் அது முடியாதல்லவா? ஆகவே மனதை அடக்கவேண்டும். சும்மா வெளியே பற்றில்லாத மாதிரி காட்டிக் கொண்டு உள்ளுக்குள்ளே மனம் சஞ்சலம் அடையக் கூடாது. மனம் நிர்மலமாய் இருந்தால் மட்டும் போதாது. அலை பாயாமல் அடங்கியும் இருக்கவேண்டும்.
இங்கே உதாரணத்திற்கு ஜனக மகாராஜாவை எடுத்துக் கொள்கின்றேன். அவர் அரசனாகவும் இருந்து கொண்டு உலக நன்மைக்காகவும் உழைத்துக் கொண்டு அதே சமயம் எப்படி ஒரு ஸ்திதப் பிரக்ஞனாய், ஒரு பிரம்ம ரிஷியாகவும் இருந்தாரோ அவ்வாறே இருக்கவேண்டும். அதற்குச் சிந்தை சுத்தம் ஆகவேண்டும். நமக்கு அதற்கென விதித்திருக்கும் சில கடமைகளைத் தவறாமல் பின்பற்றவேண்டும். முதலில் கடமைக்காக ஆரம்பிக்கும் இந்தக் காரியங்களில் நாள் ஆக, ஆக ஈடுபாடு பிறந்து பின் முழு மனதோடு அதில் ஈடுபடுவோம் இல்லையா? அம்மாதிரியே இறை வழிபாட்டையும் ஆரம்பித்து வந்தால் நாள் ஆக ஆக முழு ஈடுபாடு வந்து நம் மனம் அதைத் தவிர வேறொன்றை நினையாமல் இருக்கும்.
சிந்தை சுத்தம் ஆனதும் மனம் ஒருமுகப் படும். உள்முகத் தியானமும் கை கூடும். அதுவரையில் உள்மனக் கூச்சல் இருக்கும் வரையில் என்ன முயன்றாலும் முடியாது. இவ்வாறு மனம் அமைதி அடைந்த பின்னரும் நமக்கென்று விதித்த கடமைகளை நாம் விடாமல் செய்து கொண்டிருக்கலாம். அதில் நமக்கு எந்த விருப்பு, வெறுப்பும் இருக்காது. கசாப்புக் கடைக்காரனாக இருந்தாலும் அவனும் ஒரு பிரம்ம ரிஷியே எனப் புரிந்து கொண்ட கொங்கண சித்தரைப் போல. வெளியே கசாப்புக் கடையில் ஆடுகளை வெட்டினாலும் அவன் ஒரு பிரம்ம ரிஷி என்பதைப் புரிந்து கொண்டதைப் போல. அதற்கு ஆரம்பமே பக்தி யோகம். பக்தியோகத்தில் ஆரம்பித்து இடைவிடாமல் பக்தி செய்து வந்தால், பின் நம் கர்மாக்களைச் செய்து கர்மயோகத்தையும் அடைந்து பின் ஞானத்தை அடைய முடியும்.
இங்கே யோகம் என்பது தினமும் செய்யும் ஆசனங்கள் இல்லை. யோகத்தில் ஆசனங்கள் செய்வது ஒரு பகுதியே. உண்மையான யோக நிலையே வேறு. அதில் மேல் நிலையை அடைய இதுவும் ஒரு படியே.
++++++++++++++++++++++++++++
வீட்டுக்கு உள்ளும் வெளியும் தண்ணீர், ஆர்காட், இணைய பிரச்சினைகள் இவற்றுக்கு நடுவிலும் நான் பாஸ் பண்ண தேர்வு எழுதிய கீதா அக்காவுக்கு நன்றி!
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஆகா, கீதாம்மா முதல்ல வந்தாச்சா! நல்லது!
எனக்கு இதுவரை நேரமே கிடைக்கலை - அடுத்த வார இறுதிக்குள் என் பங்கினைத் தரப் பார்க்கிறேன்.
ஆகட்டும் ஜீவா.
நிறைய பேருக்கு நேரம் போதவில்லைன்னு தெரியுது. மௌலியும் வாய்தா கேட்டு இருக்கார். கவி அக்கா நெசமாவே நேரம் இல்லைனுட்டாங்க.
அதனால யாருக்கு எப்ப நேரம் கிடைக்குதோ எழுதுங்க. அதுக்காக தள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டு எழுதாமலே போக வேண்டாம்! :-))
மழையால் ஏற்பட்ட தீவுக்கு நடுவில் எந்த தொந்தரவும் இல்லாத காரணத்தாம் கீதாம்மா உடனே எழுதிட்டாங்க...:)
அண்ணா, ஆரம்பிச்சுட்டேன்....கண்டிப்பாக போஸ்ட் போட்டுட்டு லிங்க் அனுப்பறேன். சேரன்மாதேவி போஸ்ட் ரெடி, அதற்கு அடுத்து இது தான். :)
Post a Comment