Pages

Friday, December 19, 2008

சகித்தல்


[வெளியூர் போகிறதால கொஞ்சம் பெரிய போஸ்ட். நிதானமா படிக்கலாம்.]

அடுத்து நாம பார்க்கிறது திதிக்ஷா என்கிற சகித்தல்.
பொறுமை. பொறை உடைமைன்னு திருவள்ளுவர் சொன்னது.
மயக்கம் செய்கிற காமம் குரோதம் முதலியவை வந்தா அடக்குதல் (பொறுத்தல்) சகித்தல்.
மனசை அடக்க தடையா இருக்கிறது இந்த காமம்தானே? ஆசைப்பட்ட பொருள் கிடைக்காம போனால் வருவது இந்த குரோதம்தானே? இவற்றையும் அடக்குவது.

ஆத்ம சாக்ஷாத்காரம் - நேரடியாக ஆத்மாவை அனுபவிப்பது நடந்தால்தான் விஷயங்கள்ல ருசி முழுக்க முழுக்க நசிஞ்சு போகும். புலனடக்கத்தால புலன்களுக்கு தீனி போடறதை நிறுத்திவிட்டா கொஞ்சம் கொஞ்சமா அவை அடங்குமானாலும் ருசி கண்ட பூனை மாதிரி சாதகன் அனுபவிச்சது உள்ளுக்குள்ளே இருக்கும்தான். இது எப்படா விலகும்ன்னா ஆத்ம தரிசனம் கிடைச்ச பிறகுதான். (1)

¨இது என்னய்யா! பைத்தியம் தெளிஞ்சால் கல்யாணம் ஆகும்; கல்யாணமானால் பைத்தியம் தெளியும் ங்கிறா மாதிரி இருக்கே!¨

இல்லை.
ருசியை அழிச்சு மனசை அழிச்சு ஆத்மாவை பாக்க சாதகன் முயற்சியை பண்ணதான் வேண்டும். இருந்தாலும் முழுக்க செய்ய இவனால முடியாது. இப்படி இவன் முழுக்க முடிஞ்சவரை முயற்சி பண்ண பிறகு ஈஸ்வரன் சீர் தூக்கிப்பாத்து ¨ம்ம்ம்.... பரவாயில்லை. போதுமான முயற்சி பண்ணி இருக்கான். பாவம் முழுக்க செய்ய முடியலை. போனாப்போறது¨ ன்னு கொஞ்சம் மன்னிச்சுவிட்டு கருணையோட ஆத்ம தரிசனத்தை கொடுப்பான். இதனால ருசியும், ருசியை காண்கிற மனசையும் சேத்து அழிச்சுடுவான்.

சரி, அதான் வைராக்கியம் வந்து எல்லாத்தையும் விட்டாச்சே, இது என்ன சகித்தல்ன்னா...

உபாரதி நிலைக்கு வந்ததும் மனசு வெறிச்சுன்னு ஆகிடும்தான். இருந்தாலும் சாதாரண வாழ்க்கையா இல்லாம கொஞ்சம் வித்தியாசமா அளவு கடந்த துக்கமோ கோபத்தை உண்டாக்குகிற விஷயமோ நடந்தா என்ன செய்கிறது? அப்பவும் மனசை பாத்திப்புக்கு விடாதேப்பான்னுதான் இந்த சகித்தலை யும் சொல்லி இருக்கு.

குளிர்- சூடு போல இரட்டைகளா எதிர் எதிரே இருக்கிற ஜோடிகளுக்கு த்வந்த்வம் ன்னு பேரு. இந்த இரட்டைகளை எல்லாம் பொறுத்துக்கப்பா ன்னு அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறப்ப ¨திதிக்ஷ்வ¨ ன்னு சொல்லறார். (ப.கீ 2-14) மேலும் பல இரட்டைகள் வெற்றி தோல்வி, காரியம் நடக்கிறது- நடக்காமல் இருக்கிறது, லாபம்- நஷ்டம் இப்படி பலதும் சொல்லி இதை எல்லாம் பொறுத்துக்க என்கிறான்.

நல்லதை சுலபமா பொறுத்து போயிடுவோம். கெட்டதை பொறுக்கிறது இன்னும் சிரமம். ஆனால் அதுக்கு பழகணும். பழகி பழகி அப்புறமா அதை அசட்டை - உதாசீனம் செய்கிற பக்குவம் வந்துடும்.

அது சரி, நல்லதையும் ஏன் சகிக்கணும்? ஏன் கெட்டதை மட்டும் அசட்டை பண்ண சொல்லி இருக்கலாமேன்னா, அப்படி இல்லை. இரண்டையுமே சமமா பாக்கணும் என்கிறார். ஒரு பக்கத்தோட எக்ஸ்ட்ரீம் தெரியறப்பதானே இன்னும் ஒண்ணு, மறுபக்கம் இருக்குன்னு தெரியும்? இது ஆத்ம சாதனைல கொஞ்சம் முன்னேறின பிறகு புரியும். தென்றல் வீசுதுன்னு தோணீனா ¨அட, தென்றலோ புயலோ ஏதா இருந்தாலும் பரவாயில்லைன்னு தானே இருக்கணும். ஏன் இது தென்றல்ன்னு தனியா தோணணும்¨ன்னு நினைப்பு வரும். மனிதர்கள் ரொம்ப பிரியமா இருந்தா இல்லாவிட்டாலும்தான் என்னன்னு தோணும். அதாவது இப்ப சாதாரணமா நமக்கு கெட்டதை அசட்டை செய்கிறா மாதிரி சாதனைல கொஞ்சம் முன்னேறிய பிறகு நடக்கிற படி நடக்கட்டும் என்று தோணும். அதானே திதிக்ஷா? விடல்?

நல்லது நடக்கிறப்ப மனசு சந்தோஷப்பட்டா அதுவும்தான் மனசு சஞ்சலம், கொந்தளிப்பு. உண்மையில் துக்கம் ன்னு நினைக்கிறது துக்கமும் இல்லை. சுகம் ன்னு நாம சாதாரணமா நினைக்கிறது சுகமே இல்லை. ஆத்ம அனுபவம் மட்டும்தான் உண்மையான சுகம். நல்லதுன்னு நமக்கு தோணுவதை ஆஹான்னு அனுபவிச்சுட்டா பிறகு அந்த நல்லது நடக்காதான்னு எதிர்பார்ப்பு ஆரம்பிச்சுடும் இல்லையா? (இதுக்கு ஸ்ப்ருஹா ன்னு ஒரு சொல் வட மொழிலே) இதை ஏற்படாம பாத்துகிறதும் விடல்தான்.

இப்படி இந்த இரட்டைகள் விடுகிறதுதான் ¨தொந்தம்¨ விடுகிறது! (த்வந்த்வம்). அப்ப த்வைதமும் போய் அத்வைதம் வந்துடும்!

த்வந்த்வம் போகிறவன் பந்தத்தில் இருந்து சுலபமா விடுபடறான் ன்னு கண்ணன் சொல்கிறான். (2)

சங்கரர் ப்ருஹதாரண்ய பாஷ்யத்தில் திதிக்ஷு : த்வந்த்வ ஸஹிஷ்ணு: - எதிரெதிரான இரட்டைகளை சகித்துக்கொள்பவன் திதிக்ஷு என்கிறார்.

நேராக துக்கமா தோணினாலும் அல்லது சுகமா தோணினாலும் ஏதானாலும் அதைப்பத்தி புலம்பாம, விசாரப்படாம, இதை தடுக்க என்ன செய்யலாம்ன்னு யோசிக்காம, பேசாமல் சகிச்சுக்கிறதுதான் தேவை - இதான் சங்கரரோட உபதேசம்.(3)

ஒண்ணு பாத்தீங்களா? விவேகம், தமம் ஆண்பால். வைராக்கியம் ஆண்பால் ஆனா இங்கே நியூட்டர். உபரதி பெண்பால். செயல் துடிப்பு ஆண்மைனா செயல் இல்லாம அடங்கி இருக்கிறது பெண்மை. கிடக்கட்டும், திதிக்ஷா பெண் பால். அவங்க பொறுமை, சகிப்புத்தன்மை யாருக்கு வரும்? பொறுமைக்கு பூமா தேவிதானே!

1.ப.கீ 2.59
விஷயா விநிவர்த்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:|
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே||

2.ப.கீ 5-3
நிர்த்வந்த்வோ ஹி மஹா பாஹோ ஸுகம் பந்தாத் பிரமுச்யதே|

3.ஸஹநம் ஸர்வது:க்காநாம் அப்ரதீகா பூர்வகம்|
சிந்தா விலாப ரஹிதம் ஸா திதிக்ஷா நிகத்யதே|| (வி.சூ 24/25)


9 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//நேராக துக்கமா தோணினாலும் அல்லது சுகமா தோணினாலும் ஏதானாலும் அதைப்பத்தி புலம்பாம, விசாரப்படாம, இதை தடுக்க என்ன செய்யலாம்ன்னு யோசிக்காம, பேசாமல் சகிச்சுக்கிறதுதான் தேவை //

மிகச்சரி. ஆனால் பயிற்சியின் போது மிக கடினமாகத் தோன்றக்கூடியது. :-)

இன்னிக்குத்தான் கொஞ்சம் ஃப்ரி...மற்ற பதிவுகளை ஒவ்வொன்றாக படித்துவிட்டு வரேன்.

Geetha Sambasivam said...

//நல்லதை சுலபமா பொறுத்து போயிடுவோம். கெட்டதை பொறுக்கிறது இன்னும் சிரமம். ஆனால் அதுக்கு பழகணும். பழகி பழகி அப்புறமா அதை அசட்டை - உதாசீனம் செய்கிற பக்குவம் வந்துடும். //

இது கொஞ்சம் சுலபமாத் தோணுதே?

திவாண்ணா said...

//மிகச்சரி. ஆனால் பயிற்சியின் போது மிக கடினமாகத் தோன்றக்கூடியது. :-)//
எல்லாமே கடினம்தான். இல்லாவிட்டா இப்ப மக்களே கொஞ்சமாதான் இருப்பாங்க. அவங்க அவங்க சாதனை பண்ணி எங்கெயோ போயிருப்பான்களே!
ஆனா எதுவும் முடியாதது இல்லை. இது இப்ப புரிஞ்சா போதும். காத்தில் பயிற்சி கூட கூட கைகூடும்.

//இன்னிக்குத்தான் கொஞ்சம் ஃப்ரி...மற்ற பதிவுகளை ஒவ்வொன்றாக படித்துவிட்டு வரேன்.//

ஆகட்டும். :-))

திவாண்ணா said...

//இது கொஞ்சம் சுலபமாத் தோணுதே?/
சுலபம்னா சந்தோஷம்தான்.!

jeevagv said...

மிக்க நன்றி ஐயா, உபரதி பற்றி அறிந்து கொண்டேன்.

கபீரன்பன் said...

நல்ல விளக்கங்கள்.

//இவன் முழுக்க முடிஞ்சவரை முயற்சி பண்ண பிறகு ஈஸ்வரன் சீர் தூக்கிப்பாத்து ¨ம்ம்ம்.... பரவாயில்லை. போதுமான முயற்சி பண்ணி இருக்கான் //

...ஒரு குருவை அனுப்பி, அவர்தான் குரு என்கிற விவேகம் வந்து(??) அவரை கெட்டியா பிடிச்சுக் கொண்டு அவர் சொன்ன வழியிலே முயற்சி பண்ணி...

இதுக்கே இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்கணுமோ :(

திவாண்ணா said...

வெல்கம் ஜீவா!

திவாண்ணா said...

//..ஒரு குருவை அனுப்பி, அவர்தான் குரு என்கிற விவேகம் வந்து(??) அவரை கெட்டியா பிடிச்சுக் கொண்டு அவர் சொன்ன வழியிலே முயற்சி பண்ணி...

இதுக்கே இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்கணுமோ :(//

ஏன் அப்படி நினைக்கணும்! காலம் வந்தாச்சுன்னா க்ஷணத்திலே கூட நடந்துடுமே! அது வரை நம்பிக்கையோட நம்ம வேலையை செஞ்சுகிட்டே இருக்கலாம். அவன் அவன் வேலையை செய்யட்டும்.

Kavinaya said...

//நேராக துக்கமா தோணினாலும் அல்லது சுகமா தோணினாலும் ஏதானாலும் அதைப்பத்தி புலம்பாம, விசாரப்படாம, இதை தடுக்க என்ன செய்யலாம்ன்னு யோசிக்காம, பேசாமல் சகிச்சுக்கிறதுதான் தேவை //

சமயத்துல துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தாலும் இறைவன் இந்த மனநிலைக்காகக் கொடுக்கிற பயிற்சிதான்னு எடுத்துக்கணும் போல.