29.தியானத்தில் தீப ஜ்வாலைபோல் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் தேஜோமய சொரூபத்தினும் தான் வேறில்லை யென்று ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக் கூறியதின் தாற்பர்யமென்ன?
(அ) தேஜோமயத்திலும் தான் வேறில்லையென்று பாவிக்கக்கூறியதன் தாற்பரியமிதுவாம் சுருதிகளில் தியான லக்ஷணத்தைப் பற்றி கைலாசம் வைகுண்டம் பரமபத மென்பனவாகக் கூறப்படுகிற அஷ்டதளத்தோடுங் கூடிய சர்வாத்மகமான ஹ்ருதய கமல மத்தியில் அங்குஷ்ட மாத்ர பரிமாணமாய் மின்னலைப்போற் காந்தியுள்ளதாய் தீபஜ்வாலைபோலும் ப்ரகாசிக்கும் அவ்வஸ்துவைத் தியானித்து புருஷன் அமிர்தத்வத்தை அடைகிறான் என்று கூறியிருத்தலால் இதிலிருந்து தான் வேறு அது வேறு என்ற பேத பாவமும் பின்னத்யானமும் வஸ்துவில் பரிச்சின்ன புத்தியும் ஏகதேச புத்தியுமாகிய தோஷங்கள் சம்பவியாதிருத்தற் பொருட்டாம்.
(ஆ) ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக்கூறியதன் தாற்பரிய மிதுவாம் ஸ + அஹம் ஸோஹம் ஸ பரமாத்மா அஹம் நானென விளங்கும் ஆத்மா. பிரமபுரமென்னும் தேகமாகியபட்டணத்தில் ஹ்ருதய கமலாசனத்தில் வசிக்கும் ஜீவனாகிய சிவலிங்கத்தை அதாவது தன்னை தேகாதிகளை தானென்று வெளிமுகத்திற் சஞ்சரிக்கும் அகங்கார ரூப மனதை ஹ்ருதயத்திலடக்கி தேகாதிகளிலுள்ள அஹம் பாவம் நீங்கி தேகத்திலிருக்கும் நானார் என்ற விசாரத்தோடும் நிச்சலமாக இருந்தபடியிருந்து விசாரிக்குங்கால் அங்கு அஹம் அஹம் என்று சூக்ஷ்மமாக ஸ்புரித்துக் கொண்டிருக்கும் ஆத்ம சொரூபமே எல்லாமா யல்லாவுமாய் பாஹ்யாந்தர பேதமின்றி எங்கும் விளங்கும் பரமாத்ம சொரூபமாக லானும் அந்த ப்ரஹ்மமே நான் என்பதன் பொருளாய் விளங்கலானும் அதை தன் மயமாக பாவிக்கின் அறியாமை நீங்காதாகலான் அங்ங்னம் பாவிக்கக் கூறியதாம்.
வெகு காலம் இவ்வாத்மாநுசந்தானடாகிற ஸோஹம் பாவனையால் நிரந்தரம் வஸ்துவை நிச்சலமாய் த்யானித்து வந்தால் ஹ்ருதயத்திலுள்ள அஞ்ஞான அந்தகாரமும் அஞ்ஞான தற்காரியங்களான ஸர்வ ப்ரதிபந்தங்களும் நீங்கி பரிபூரண ஞானம் லப்த மாகும்.
சிந்தனை புறஞ்செலாச் சிவோகம் பாவனை சந்தத முஞற்றிடின் சமாதி வந்துறும் -வள்ளலார்.
இங்ஙனம் தேகமாகிய பட்டணத்தில் ஹ்ருதய குஹையிலிருக்கும் வஸ்துவையறிதலே ஸர்வ பரிபூரணமாயிருக்கும் ஈச்வரனை அறிதலாம்.
நவத்வாரங்களுடன் கூடிய தேகமாகிய புரியில் ஞானி சுகமாய் வசிப்பன். தேகமே ஆலயம் ஜீவனே சிவன். அவனை ஸோஹம் பாவனையால் பூஜிக்கின் முக்தியுண்டாம்.
பஞ்சகோசாத்மக தேகமே குஹை அதில் வசிக்கும் பரமே குஹேசன் என்று சுருதிகளும் கூறுகின்றன. ஆத்மாவே ஸர்வ தியானங்களிலும் தானாகிய ஆத்மத்யானமே சர்வ சிரேஷ்டமாம். மற்ற த்யானங்க ளனைத்தும் இதில அந்தர்பூத மாகலானும் இது ஸித்தியானால் மற்றவை தேவையில்லை. தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும் தியானிக்கும் தன்னை யறியாமல் இதரமாய் தெய்வமிருக்கிறதென்றென்னி த்யானிப்பது தனது நிழலைக்காலால் அளத்தற்கு சமானம் என்றும் கையிலிருக்கும் அத்ய பூர்வமான கௌஸ்துப ரத்தினத்தை தூர எறிந்துவிட்டு மிக அற்பமான சங்குமணி தேடுதற்குச் சமான மென்றும் பெரியோர் கூறுகின்றனர்.
தியானத்தில் தீப ஜ்வாலை போல் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் தேஜோமய சொரூபத்தை விட்டு தான் வேறு இல்லை என்று ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக் கூறியதின் தாத்பர்யமென்ன?
(அ) தேஜோமயத்திலும் தான் வேறில்லையென்று பாவிக்கக்கூறியதன் தாத்பரியம் இதுதான்: சுருதிகளில் தியான லக்ஷணத்தைப் பற்றி கைலாசம், வைகுண்டம், பரமபதம் என்பனவாகக் பலவிதமா சொல்லப்படுகிற எட்டு இதழ்களோட கூடிய சர்வ ஆத்மகம் ஆன ஹ்ருதய தாமரை மத்தியிலே கட்டைவிரல் அளவே மின்னலைப் போல காந்தியுள்ளதாய், தீப ஜ்வாலை போலும் ப்ரகாசிக்கிற அந்த வஸ்துவைத் தியானித்து புருஷன் அழியா தன்மையை அடைகிறான் என்று கூறியிருக்கிறதால; இதிலிருந்து தான் வேறு, அது வேறு என்ற வித்தியாச பாவமும், வேறு வகையாக த்யானமும், வஸ்துவை பலதாக பார்க்கும் புத்தியும், ஏகதேசபுத்தியுமாகிய தோஷங்கள் சம்பவிக்காம இருக்கணும் என்றே.
--
(ஆ) ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக்கூறியதன் தாத்பரியம் இதுவாம்: ஸ + அஹம் = ஸோஹம் ஸ = பரமாத்மா; அஹம் = நான் என விளங்கும் ஆத்மா. உடம்பை பிரமபுரமென்னும் பட்டணம் ந்னு சொன்னா, ஹ்ருதயம் கமலாசனம். அங்கே வசிக்கிற ஜீவனாகிய சிவலிங்கம் எதுன்னா , தேகம் முதலானதை தான்னு நினைச்சு வெளிமுகமா சஞ்சரிக்கும் அகங்கார ரூபமான மனசு. இந்த மனசை ஹ்ருதயத்திலே அடக்கி, தேகம் முதலானதில இருக்கிற நான் என்கிற பாவத்தை நீங்கி, தேகத்தில இருக்கிற நான் யார் என்கிற விசாரத்தோட, அசைவில்லாம இருந்தபடி இருந்து விசாரிக்கிறப்ப அங்க “அஹம், அஹம்” ந்னு கண்ணுக்கு தெரியாதபடி துடிக்கிற ஆத்ம சொரூபமே எல்லாமாயும் எல்லாம் இல்லாமாயும் வெளி உள் வித்தியாசமில்லாமல் எங்கும் விளங்கும் பரமாத்ம சொரூபமாக ஆவதால, அந்த ப்ரஹ்மமே நான் என்பதன் பொருளாய் விளங்குகிறதாலேயும்; அதை தன் – உடம்பு, மனம் - மயமாக பாவித்தால் அறியாமை நீங்காது என்பதால் அப்படி பாவிக்கச் சொன்னாங்க.
வெகு காலம் இந்த ஆத்மா அநுசந்தானம் ஆகிற ஸோஹம் பாவனையால நிரந்தரம் வஸ்துவை நிச்சலமாய் த்யானித்து வந்தா, ஹ்ருதயத்திலுள்ள அஞ்ஞான அந்தகாரமும் அஞ்ஞான தற்காரியங்களான ஸர்வ ப்ரதிபந்தங்களும் நீங்கி பரிபூரண ஞானம் கிடைக்கும்.
சிந்தனை புறம் செலா சிவோகம் பாவனை சந்ததமுஞற்றிடின் சமாதி வந்துறும் -வள்ளலார்.
இப்படி தேகமாகிய பட்டணத்தில் ஹ்ருதய குஹையில் இருக்கும் வஸ்துவை அறிதலே ஸர்வ பரிபூரணமாக இருக்கும் ஈச்வரனை அறிதலாம்.
நவத்வாரங்களுடன் கூடிய தேகமாகிய புரியில் ஞானி சுகமாய் வசிப்பன். தேகமே ஆலயம் ஜீவனே சிவன். அவனை ஸோஹம் பாவனையால் பூஜிக்கின் முக்தியுண்டாம்.
பஞ்சகோச ஆத்மக தேகமே குஹை; அதில் வசிக்கும் பரமே குஹேசன் என்று சுருதிகளும் கூறுகின்றன. ஆத்மாவே ஸர்வ தியானங்களிலும் தானாகிய ஆத்ம த்யானமே சர்வ சிரேஷ்டமாம். மற்ற த்யானங்கள் அனைத்தும் இதில அடங்கும். இது ஸித்தியானால் மற்றது எதுவும் தேவையில்லை. தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும். தியானிக்கும் தன்னை அறியாமல் இதரமாய் தெய்வம் இருக்கிறது என்று எண்ணி த்யானிப்பது தனது நிழலைக் காலால் அளத்தற்கு சமானம் என்றும், கையிலிருக்கும் கௌஸ்துப ரத்தினத்தை தூர எறிந்துவிட்டு மிக அற்பமான சங்குமணி தேடுதற்குச் சமானம் என்றும் பெரியோர் கூறுகின்றனர்.
2 comments:
மிகவும் முக்கியமான ,நினைவில் இருத்தி கொள்ள வேண்டிய ஒன்று இது.
தியானிப்போம்.
தியானிப்பவன் நானே / தியானத்திலும் நானே/
dear Balu, இப்போ இடுகிற பதிவுகளில் இருக்கிறதெல்லாம் ஆழ்ந்து யோசனை செய்ய வேண்டியவை. இடையில் இதற்காகவே நிறைய இடைவெளி விடுகிறேன். அடுத்த பதிவு சில நாட்களில்.
Post a Comment