32.ஹ்ருதயத்தில் நான் நான் என்று ஆன்ம ரூபமாக ஸ்புரித்துக்கொண்டிருக்கிறது என்ற ப்ரஹ்ம நிலையை எளிதிற் போதமாகுமாறு இன்னும் சற்று விளக்கமாக விஸ்தரித்துக் கூறுதல் கூடுமா?
சுழுத்தி மூர்ச்சையாகிய காலங்களில் எவ்வித ஞானமும் அதாவது தன் ஞானமோ அன்னிய ஞானமோ அற்பமுமின்றென்பது எவருக்குமவநுபவமன்றோ? பின்னர் "தூக்கத்தினின்றும் விழித்தேன், மயக்கத்தினின்றுந் தெளிந்தேன்" என்ற அனுபவம் முற்கூறிய நிர்விசேஷ நிலையின்றுதித்ததோர் விசேஷ ஞானத்தின் தோற்றமன்றோ? இவ்விசேஷ ஞானமே விஞ்ஞானமெனப்படுகிறது. இவ்விஞ்ஞானமானது ஆன்மாவையேனும் அனான்மாவையேனும் ஆஸ்ரயித்தே விளங்குமல்லாது தனியாகப் பிரகாசிக்காது. இது ஆன்மாவை ஆஸ்ரயிக்கும்போது மெய்ஞானம், ஆன்மாகார மனோவிருத்தி ஞானம், அகண்டாகார ஞானமென்றும் அனான்மாவை ஆஸ்ரயிக்கும்போது அஞ்ஞானமென்றும் சொல்லப்படுகிறது. இவ்விஞ்ஞானம் ஆன்மாவை ஆஸ்ரயித்து ஆன்மாகாரமாக விளங்கும் ஸ்திதியே 'அஹம் ஸ்புரிப்பு' எனச்சொல்லப்படுகிறது. இந்த ஸ்புரிப்பு வஸ்துவை விட்டுத் தனியாக இராது. இந்த ஸ்புரிப்பே வஸ்துவை அபரோக்ஷப் படுத்தற்கான தக்க குறியாம். என்றாலும் இதுவே வஸ்து நிலை ஆகாது. இந்த ஸ்புரிப்பானது எதனை ஆஸ்ரயித்து விளங்குகிறதோ அந்த மூலமே வஸ்து அல்லது ப்ரஜ்ஞானம் எனப்படும். வேதாந்தம் 'ப்ரஜ்ஞானம் ப்ரஹ்மம்' என்றது இது பற்றியேயாம்.
இதனை
நிகழ்சுயஞ் சோதியாகி நிகில சாட்சியுமா மான்மா
புகலும்விஞ் ஞான கோசம் பொருந்தியே விளங்குமென்றும்
இகழ்விலா விவ்வான் மாவை யிலக்கிய மாகப்பற்றி
அகமென வனுபவிப்பா யகண்டமாம் விருத்தி யாலே
-(விவேக சூடாமணி)
என்னும் சுருதியின் தாத்பரியத்தானுந்தெளிக.
ஹ்ருதயத்தில் நான் நான் என்று ஆன்ம ரூபமாக ஸ்புரித்துக்கொண்டிருக்கிறது என்ற ப்ரஹ்ம நிலையை எளிதிற் விளங்குமாறு இன்னும் சற்று விளக்கமாக விஸ்தரித்துக் கூறுதல் கூடுமா?
சுழுத்தி, மூர்ச்சை ஆகிய காலங்களில் எவ்வித ஞானமும் - அதாவது தன் ஞானமோ அன்னிய ஞானமோ - அற்பமும் இல்லை என்பது எவருக்குமவநுபவமன்றோ? பின்னர் "தூக்கத்தினின்றும் விழித்தேன், மயக்கத்தினின்றும் தெளிந்தேன்" என்ற அனுபவம் முன்னே சொன்ன நிர்விசேஷ நிலையிலிருந்து உதித்த ஓர் விசேஷ ஞானத்தின் தோற்றம் அன்றோ? இந்த விசேஷ ஞானமே விஞ்ஞானம் எனப்படுகிறது. இந்த விஞ்ஞானமானது ஆன்மாவையாவது அனான்மாவையாவது சார்ந்தே விளங்கும். அப்படி அல்லாது தனியாகப் பிரகாசிக்காது. இது ஆன்மாவை சார்ந்திருக்கும் போது "மெய்ஞானம், ஆன்மாகார மனோவிருத்தி ஞானம், அகண்டாகார ஞானம்" என்றும் அனான்மாவை சார்ந்திருக்கும் போது அஞ்ஞானம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஞ்ஞானம் ஆன்மாவை சார்ந்து ஆன்மாகாரமாக விளங்கும் ஸ்திதியே 'அஹம் ஸ்புரிப்பு' எனச் சொல்லப்படுகிறது. இந்த ஸ்புரிப்பு வஸ்துவை விட்டுத் தனியாக இராது. இந்த ஸ்புரிப்பே வஸ்துவை மறைவிலிருந்து நீக்க தக்க குறியாம். என்றாலும் இதுவே வஸ்து நிலை ஆகாது. இந்த ஸ்புரிப்பானது எதனை சார்ந்து விளங்குகிறதோ அந்த மூலமே வஸ்து அல்லது ப்ரஜ்ஞானம் எனப்படும். வேதாந்தம் 'ப்ரஜ்ஞானம் ப்ரஹ்மம்' என்றது இது பற்றியேயாம்.
இதனை
நிகழ் சுயம் சோதி ஆகி நிகில சாட்சியும் ஆன்மா
புகலும் விஞ்ஞான கோசம் பொருந்தியே விளங்குமென்றும்
இகழ்வு இலா இவ் ஆன்மாவை இலக்கியமாகப் பற்றி
அகம் என அனுபவிப்பாய் அகண்டமாம் விருத்தியாலே
(- விவேக சூடாமணி)
என்னும் வேதத்தின் தாத்பரியத்தாலும் தெளிக.
No comments:
Post a Comment