Pages

Wednesday, March 3, 2010

குளிக்கும்போது கவனிக்க வேண்டியது..



குளிக்கும்போது கவனிக்க வேண்டியது சிலதை பார்க்கலாம்.
சாப்பிடும்போது பேசக்கூடாது. பேசாமல் சாப்பிட்டால் ஆயுசு அதிகமாகும். பேசிக்கொண்டு சாப்பிட்டால் ஆயுசு குறையும். ஹோமம் செய்யும் போது பேசினால் செல்வம் குறையும். பேசாமல் ஹோமம் செய்தால் அதிகமாகும்.
இதே போல குளிக்கும் போது பேசக்கூடாது.
நதி, குளங்களில் குளிக்கும்போது சூரியனை நோக்கியே குளிக்க வேண்டும். நதியில் ஓடும் தண்ணீர் இருந்தால் நீர் ஓட்டத்தை எதிரிட்டு குளிக்க வேண்டும்.

ஒரு கோவிலில் இருக்கும்போது இன்னொரு கோவில் ஸ்வாமியை புகழக்கூடாது. ஒரு க்ஷேத்திரத்தில் இன்னொரு க்ஷேத்திரத்தை புகழக்கூடாது. அதே போல ஒரு நதியில் குளிக்கும்போது இன்னொரு நதியை நினைக்கக்கூடாது. (காசியும் கங்கையும் மட்டும் விதிவிலக்கு)
கோவிலுக்கு போய் வருகிறோம். இல்லை தேர் திருவிழாவில்/ உத்ஸவத்தில் கலந்துகொண்டு திரும்புகிறோம். உடனே குளிக்கக்கூடாது. மங்கள் காரியம் செய்த உடன் குளிக்கக்கூடாது. உறவினர், சினேகிதர் ஆகியோரை வழி அனுப்பிவிட்டு வந்து உடனே குளிக்கக்கூடாது. சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது.
வியாதி உள்ளவர்; பல கவலைகளால் குழப்பமடைஞ்ச மனமுள்ளவர்: சாப்பிட்டவர்; நன்றாக அலங்காரம் செய்து கொண்டவர் இவர்கள் நதிகளில் குளங்களில் குளிக்கக்கூடாது.
யாருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறாரோ அவர் சமுத்திரத்தில் குளிக்கக்கூடாது.
குளங்கள் தர்மத்துக்கான பொது குளமாயிருந்தால் குற்றமில்லை. தனியார் குளமானால் அனுமதி இல்லாமல் அதில் குளித்தால் குளத்தின் சொந்தக்காரருடைய பாபத்தில் கால் பங்கை பெறுவோம். அனுமதி பெற்று 4-5 மண் கட்டிகளை அதிலிருந்து எடுத்து போட்டு விட்டு அதில் குளிக்கலாம்.
வீட்டுக் கிணறானாலும் ஒரு அடி இரண்டு அடி ஜலமே இருந்தால் அது குளிக்கத் தகுந்தது இல்லை. குறைந்தது 4 அடி ஆழம் ஜலமிருக்க வேண்டும்.
அதே போல் கொஞ்சமே ஜலமிருக்கிறதெனில் ஏரி, நீர்நிலை இவற்றில் *முழுகிக்* குளிக்கக்கூடாது. கைகளால் ஜலத்தை எடுத்து தலையில் விட்டுக்கொள்ளணும். அதே போல சமுத்திரத்திலும்.
[முழுக வேண்டும் என்ற ஆசையில் வெகுதூரம் ஆழமான இடத்துக்கு போய்விட வாய்ப்பு இருக்கிறதே? இதை காரணம் காட்டி சொல்லவில்லை. ஆனாலும் சில சாஸ்திர விஷயங்கள் லாஜிக்காக இருக்கிறன.]
நதி வற்றிப்போய் இருக்கு. அப்புறம் மழை பெய்தோ அணை திறந்தோ தண்ணீர் வருகிறது. இது அசுத்தமானது. பத்து நாட்கள் வரை இது குளிக்க அருகதையில்லாதது.
வண்ணான் துறையில் குளிக்ககூடாது. சரி, நதியில் துணி துவக்கிறார்களே, என்ன செய்வதுன்னா - வேறு வழியில்லாவிடில் பத்து முழம் தள்ளி குளிக்கலாம்.

சில சமயங்களில் சுத்தமாகிறதுக்காக குளிக்கச்சொல்லி இருக்கு.
அழுதால், வாந்தி எடுத்தால், ஷவரம் செய்து கொண்டால். மைதுனம் செய்தால், நாய், நாயை தின்பவனை தொட்டால், பிரசவித்த பெண்ணை தொட்டால், வீட்டு விலக்கானவர்களை தொட்டால்....லிஸ்ட் ரொம்ப பெரிசு. அத்தோட நம்ம டாபிக்குக்கு நேரடி சம்பந்தமில்லை. சிரத்தை உள்ளவர்கள் தேடி தெரிந்து கொள்ளலாம்.

இரவில் குளிக்கக்கூடாது. ராத்திரியில் நடுவில் உள்ள இரண்டு யாமம் மஹா நிசி எனப்படும்.
[ஒரு யாமம்  என்பது சுமார்  3 மணி நேரம். நடு இரவு 12 மணி என்று வைத்துக்கொண்டால் இரவு 9 முதல் காலை 3 வரை மஹா நிசி. இன்னும் சரியாக வேண்டுமானால் சூர்ய அஸ்தமனம் முதல் உதயம் வரை 4 ஆக பிரித்துக்கொள்ளவும். ஒரு இரவில் 4 யாமம்.] இந்த நேரத்தில் நிச்சயம் குளிக்கக்கூடாது. காம்ய ஸ்நாநமும் நைமித்திக ஸ்நாநமும் விலக்கானதால் அவசியமானால் சில விதிகள் படி செய்யலாம்.
ஊருக்கு போய்விட்டு வருகிறோம். குளிக்க வாய்ப்பு கிடக்கவில்லை. இரவாகிவிட்டது. இப்படி இருந்தால் வென்னீரில் அக்னியின் முன்னிலையில் அல்லது தங்கத்தை (யார் அதுன்னு கேக்கக்கூடாது!) பார்த்து/ நீரில் போட்டுக்கொண்டு குளிக்கலாம். க்ரஹணம், ஸூர்ய சங்க்ரமணம் (மாதப்பிறப்பு), விவாஹம், மரண ஜனனங்கள், யாத்திரை ஆகியன இந்த சட்டத்தில் வரும்.

மீன், தவளை, ஆமை எல்லாமே தண்ணீரில் முழுகித்தான் இருக்கின்றன. [கங்கையிலேயே முழுகி இருந்தாலும்] அவற்றுக்கு ஸ்நாந பலன் இல்லை. அது போல விதிப்படி செய்யாத ஸ்நாநம் என்கிறார் யாக்ஞவல்கியர்.


Post a Comment