Pages

Monday, March 1, 2010

குளியல்:
காலையிலே எழுந்து இன்னும் குளிக்கலைன்னா சூரிய உபாசனைக்கு முன்னாலேயாவது குளிச்சுடணும்.
எழுந்தவுடன் குளிக்கிறதானால் சரீர சுத்தி, பல் தேய்கிறது, ஜல மலம் கழிப்பது எல்லாம் செய்துவிட்டு ஆசமனம் செய்தே குளிக்கணும். குளிக்கிறதே ஒரு கர்மா ஆனதால் அதுக்கு முன்னே கூடியவரை சுத்தி இருக்கணும். அதுக்குத்தான் ஆசமனம். ஆசார அனுஷ்டானங்களோட இருக்கிறவங்க ஒருமுறை குளிச்சு தலை, அக்குள் துவட்டிக்கொண்டு இன்னொரு முறை குளிப்பாங்க.
எந்த தண்ணியிலே குளிக்கிறது?
அட என்னங்க. தண்ணி கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு! எந்த தண்ணின்னு கேள்வி வேறயான்னு முணு முணுக்காதீங்க. எங்கே வாய்ப்பு இருக்கோ அங்க இந்த ஆர்டர்லே தேர்ந்தெடுக்கலாம்.
ஓடுற நீர் இருக்கிற நதி, நதி, ஏரி, அருவி, பொதுவா இருக்கிற குளம், குட்டை, கிணறு. அது சரி எவ்வளோ தூரம் ஓடினா அது நதி? 8000 வில் தண்ட தூரமாம். சுமார் 8 கி.மீ ன்னு வெச்சுக்கலாம்.
ம்ம்ம்... இப்பதான் மாசி மகம் போச்சு. அதான் நினைவுக்கு வருது. சாதாரணமாக சமுத்திரத்திலே குளிக்கிறது இல்லை. அமாவாசை, பௌர்ணமி அன்றைக்கு மட்டும் செய்யலாம். ம்ம்ம்... நீங்க சொல்கிறதுக்கு முன்னாலேயே நான் சொல்லிடறேன். ராமேஸ்வரம் மட்டும் இதுக்கு விதி விலக்கு! அங்கே என்னிக்கு வேணுமானாலும் மண்ணில் வில் வரைந்து சீதாராமருக்கு பூஜை செய்து சங்கல்பம் செய்து குளிக்கலாம்.
புனித தீர்த்தங்களிலே குளிக்க குறிப்பிட்ட கிரமம் உண்டு. சங்கல்பம், மந்திரங்கள் சொல்வது, தலையில் புரோக்ஷணம் செய்து கொள்வது, குளிக்கும் போது மந்திரங்கள் சொல்வது, குளித்து முடித்து தேவதைகளுக்கு தர்ப்பணம் செய்வது இப்படி 5 அங்கங்கள் அதுக்கு. கடைசிலே தண்ணீரை அசுத்தமாக்கியதுக்கு பிராயச்சித்தமாக யக்ஷ்மா என்ற தேவதையை உத்தேசித்து கரையிலே தர்ப்பணம் ஒண்ணும் உண்டு!
உடம்பில் துணி இல்லாமல்; பேசிக்கொண்டே குளிக்கக்கூடாது. நாராயணனை நினைவு கொள்ளாமல் குளிக்கக்கூடாது. குளிக்கும் தண்ணீரில் வேண்டுமென்றோ கவனமில்லாமலோ அசுத்தம் செய்யக்கூடாது - கொப்பளிப்பது, ஜல மலம் கழிப்பது - இப்படி. புனிதமான கோவில் குளங்களில குளித்து விட்டு நன்றாக டெடர்ஜெண்ட் போட்டு துணி துவைக்கிறார்கள்! :-( இதுவும் ரொம்பவே பாபம். சிலர் அதில் வழுக்கி குளத்தில் வழிக்கூட வாய்ப்பு இருக்கு.
வென்னீரில் குளிக்கிறது உடம்பு சரியில்லாதவங்களுக்கு. தண்ணீரை நன்றாக கொதிக்க வெச்சு அதில பொறுக்கும் சூட்டுக்கு தண்ணீர் ஊற்றி குளிக்கலாம்.
ஃப்லாட்லே இருக்கேன். மேலே இருக்கிற தண்ணி தொட்டி தவிர வேற வழியில்லைன்னு நினைக்கிறவங்களுக்கு: பல இடங்களிலே புதுசா தண்ணி தனியா பிடிக்கன்னு (fresh water line) தனியா ஒரு குழாய் இருக்கும். அந்த தண்ணியிலே மோட்டார் வேலை செய்கிறப்ப புதுசா தண்ணி பிடிச்சு குளிச்சு பாருங்க. உங்க சைனுசைடிஸ், மூட்டு வலி இனம் புரியாத அலர்ஜின்னு பலதும் குறைய ஆரம்பிச்சுடும். அனுபவப்பட்டு சொல்கிறேன்.

குளித்து முடித்து ஆசமனம் செய்தால் அடுத்த கர்மாவுக்கு ரெடி.
இப்படியாக குளிப்பதால் பலம், அழகு, புகழ், தர்மம், ஞானம், சுகம், தைரியம், உயர்ந்த ஆரோக்கியம் ஆகியவை கிடைக்கும்ன்னு சத்யவ்ரதர் சொல்கிறார்.
குளியல் பத்தி 5-6 பதிவுக்கு சமாசாரம் இருந்தாலும் இடம், பொருள், ஏவல் உத்தேசித்து சிலதை சொன்னேன். மேலும் சந்தேகமோ குறிப்பாகவோ ஏதேனும் தெரிந்து கொள்ள தனி மடல் இடுங்கள்.

Post a Comment