Pages

Wednesday, July 25, 2012

பாபங்கள், ப்ராயச்சித்தங்கள் - 2


இனி வருவன இறந்த பின் ஒரு வாழ்வு இருக்கிறது, மறு பிறப்பு, அவற்றில் இப்படி இப்படி இருக்கிறது என்று எல்லாம் நம்புவோருக்கானது. உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை எனில் காலத்தை இங்கே விரயம் செய்ய வேண்டாம். இதெல்லாம் உண்டு/ இல்லை என்ற வாதங்களுக்கு நான் தயாரில்லை.

ப்ராயஹ என்பது தபஸ் என பொருள் படும். சித்தம் என்பது நிச்சயம் என பொருள் படும் ஆக ப்ராயச்சித்தம் என்பது 12 வருஷம் அனுஷ்டிக்கப்படும் கர்மத்தால் நிச்சயம் பாபத்தை நீக்கும் என்ற நம்பிகையுடனும் விரத அனுஷ்டான ரூபமாகவும் உள்ளது எனப்படுகிறது.

விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யாததாலும் செய்யக்கூடாததை செய்வதாலும், இந்திரியங்களை அடக்காததாலும் மனிதன் கீழானவன் ஆகிறான். ஆகையால் அவன் சுத்தமடைய  ப்ராயஶ்சித்தங்கள் செய்ய வேண்டும். செய்தால் இவனது ‘அந்தராத்மாவும்’ உலகமும் சுத்தமடைகிறது என்று யாக்ஞவல்கியர் சொல்லுகிறார்.

சரிதான், ஒரு வேளை செய்யாவிட்டால் என்ன இப்போது என்றால்…

ப்ராயஶ்சித்தம் செய்யாதவர்களும், பாபங்களை செய்பவர்களும், அதற்கு வருந்தாதவர்களும் கஷ்டமான பயங்கரமான நரகங்களை அடைகின்றனர் எனப்படுகிறது. 

அதெல்லாம் என்ன?

21 நரகங்கள் இருக்கிறதாம்.

தாமிஸ்ரம், லோஹசங்கு, மஹாநிரயம், சால்மலீ, ரௌரவம், கும்பளம், பூதிம்ருத்திகம், காலஸூத்ரம், ஸங்காதம், லோஹிதோதம், ஸவிஷம், ஸம்ப்ரதாபனம், மஹாநரகம், காகோலம், ஸஞ்ஜீவனம், மஹாபதம், அவீசி, அந்ததாமிஸ்ரம், கும்பீபாகம், அஸிபத்ரவனம், தபனம் ஆகிய இந்த 21 ஐயும் மஹாபாதகங்கள், உபபாதகங்கள் செய்தவர்கள் ப்ராயஶ்சித்தம் செய்யவில்லை என்றால் அடைவதாக சொல்கிறார்கள். இந்த 21 முக்கியமான நரகங்கள்தானாம்! இதில்லாமல் கொடிய நரகம்ன்னு எடுத்துக்கொண்டால் 28 கோடி இருக்காம்.
{பிற்சேர்கை: நண்பர் ஸ்ரீ இது குறித்த ஒரு லிங்க் கொடுத்து இருக்கிறார். இங்கே பொருத்தமாக இருக்கும். http://temple.dinamalar.com/news_detail.php?id=10977}

பாபங்கள் செய்தவர்கள் இங்கேயெல்லாம் இருந்து வேதனை அனுபவிக்கணும். எவ்வளவு நாள்?
மஹாபாதகம் செய்தால் சந்திரனும் நக்‌ஷத்திரங்களும் இருக்கும் வரை.
அதிபாதகமானால் முக்கால் ப்ரம்ம கல்பம் வரை. சமபாதகமானால் பாதி கல்பம் வரை. உபபாதகமானால் கால் கல்பம் வரை. மற்ற பாபங்களுக்கு அரைக்கால் கல்பம் வரை.
ஒரு கல்பம் என்பது சுமார்  435,37,20,000 ஆண்டுகள்! இது ப்ரம்மாவுக்கு ஒரு நாள். கணக்கு போட்டுக்கலாம்!

சரி, இப்படி வேதனை அனுபவித்த பிறகு? திருப்பி மனிதனாக பிறக்கணும்தானே?
அப்படி இல்லை. மனித பிறவி என்கிறது அரிதான விஷயமாம்!
அதெப்படி,  ஒரு தப்புக்கு ஒரு தண்டனைதானே இருக்கலாம்? தன்டனை அனுபவிச்சுட்டா பின்ன பழைய நிலமைக்குத்தானே போகணும்?

வாதம் சரிதான். ஆனால் கர்மா முழுக்க தீருகிறதில்லை. கொஞ்சம் மீதி இருக்கும் போதே போனால் போகிறது என்று நரகத்தில் இருந்து விடுதலையாக்கி விட்டுவிடுவார்கள். ஆயுள் தண்டனை என்றாலும் நன்நடத்தை, தலைவர் பிறந்த நாள். தேர்தல் பொருட்டு அவசரம் என்கிற மாதிரி முன்னாலேயே அரசு உத்தரவாலே ரிலீஸ் செய்கிறார்கள் இல்லையா? J அந்த மாதிரி அநியாயமா இல்லாட்டாலும் முழு கர்மா தீருமுன் அடுத்து மிருகங்கள், புழு, பூச்சி, புல், புதர், செடி கொடின்னு  பிறவி கொடுக்கப்படும். அதில் பெரும்பாலும் துன்பம்  அனுபவிக்கிற பிறவியா இருந்து அதையும் அனுபவிச்சு தீர்த்தபின் மனித பிறவிக்கு க்யூவில சேர்த்துடுவாங்க!
அது சரி, மஹாபாதகம், உபபாதகம்ன்னு எல்லாம் என்னமோ சொல்லறீங்களே அதெல்லாம் என்ன?Post a Comment