Pages

Saturday, July 28, 2012

பாபங்கள் -ப்ராயச்சித்தங்கள் -4


மேலே போகு முன் இந்த பாபங்கள், அவற்றுக்கான ப்ராயச்சித்தங்கள்  எல்லாம் சாத்திரங்களில் அந்தணர்களுக்கு சொல்லப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது ஏன் ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் குழப்பம் வராமல் இருக்கும். அந்தணர் அல்லாதவரைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது. வேட்டையாடுதல் வேட்டைக்காரனின் தர்மம் எனும் போது அது எப்படி பாபமாகும்? இருந்தாலும் ப்ராயச்சித்தங்கள் விதிக்கும் போது அந்தணர் அல்லாதவர்களுக்கு சற்று இளக்கிக்கொடுத்து வசனம் இருப்பதால் அவர்களுக்கும் உண்டு என தெரிகிறது. இதில் இன்னும் எனக்கு தெளிவு வர வேண்டி இருக்கிறது.
----
இதற்கு அடுத்த கீழ் லெவெல்…..

அதி பாதகம்: அறியப்படாத ப்ராம்ஹண கர்ப்பத்தை கொன்றாலும், யாகம் முதலானவற்றை செய்யும் க்ஷத்ரிய வைச்யர்களை கொன்றாலும்,  ஆத்ரேய கோத்ர ஸ்த்ரீயை கொன்றாலும், சாட்சி சொல்லும் போது பொய் சொன்னாலும், குருவை தடுத்தாலும், ப்ராம்ஹணனிடம் அடைக்கலமாக உள்ளதை அபகரித்தாலும், ஸ்த்ரீ, ஸுஹ்ருத் (நல்லது செய்ய விரும்பும் நண்பன்) ஆகியோரை கொன்றாலும்...

ஸ்த்ரீ என்னும் போது ஸபத்னீ மாதா, மாதாவுடன் பிறந்தவள், மாமியார், அம்மாமி, அத்தை, பிதாவின் கூடப்பிறந்தவனின் பத்னீ, சிஷ்யனின் ஸ்த்ரீ, கூடப்பிறந்தவள், அவளதுதோழி, நாட்டுப்பெண், பெண், சரணமடைந்தவள், ராஜ பத்னீ, ஸ்ந்யாஸினீ, ப்திவ்ரதை, உபமாதா (செவிலித்தாய்) தன்னை அண்டியவள், வித்வானின் பத்னீ, ஆஹிதாக்னியின் பத்னீ, யோகியின் பத்னீ, தன் பேத்தி என பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

மேலும் அக்னிஹோத்திரத்துக்கான பசுவை கொல்லக்கூடாது; பெயர்ந்து இருந்தாலும் பெயராமல் இருந்தாலும் சிவலிங்கத்தை அசைக்கக்கூடாது, உயர்ந்த தேவர்களின் பிம்பங்களை சேதப்படுத்தலாகாது, இவை அதிபாதகங்கள்.

பெண்களுக்கு நீச புருஷனை சேர்வது, கர்ப்பத்தை அழிப்பது, கணவனை கொல்வது ஆகியவை குற்றங்கள்.

சமபாதகங்கள்:
ஐந்து மஹா பாதகங்கள் சொல்லப்பட்டன அல்லவா? இவை அவற்றுடன் ஒப்பிடக்கூடிய பாதகங்கள்.
பின் வருபவை ப்ரஹ்ம ஹத்யைக்கு சமமான பாதகங்கள்:
தன்னை சிறப்பித்துக் கொள்ள பொய் சொல்வது, மற்றவருக்கு ஹிம்சை ஏற்படும்படி அரசனிடத்தில் கோள் சொல்வது; குருவிடம் பொய்யாக தோஷம் சொல்வது, வேதத்தை நிந்திப்பது, மித்ரனை வதைப்பது, வேத அத்யயனம் செய்த பின் அதை மறப்பது.
யாகத்தில் இருக்கும் க்ஷத்ரிய வைச்யர்களை கொல்வது, ரஜஸ்வலா, (வீட்டுக்கு விலக்காக இருப்பவள்), கர்ப்பிணீ, அத்ரி கோத்திரத்தை சேர்ந்தவன், அறியப்படாத கர்ப்பம், சரணமடைந்தவள் இவர்களை கொல்வதும் சமபாதகம். இதில் ஒன்றிரண்டு முன்னேயே வந்துவிட்டதே? ஆமாம். ஆனால் இப்போது சொல்லப்படுபவை புத்தி பூர்வகமாக இல்லாமல் செய்வது பற்றியது. புத்தி பூர்வகமாக செய்தால் அதி பாதக வகையாகி விடும்.

சுராபானம் செய்வதற்கு சமமானவை பூண்டு முதலியவற்றை சாப்பிடுதல், கபடமாக பேசுதல், தன் மேன்மைக்காக பொய்யாக தன்னை புகழ்ந்து கொள்ளுதல், ரஜஸ்வலா ஸ்திரீயை சேருதல், வெண்கல பாத்திரத்தில் இளநீரைக் குடிப்பது, உப்புடன் பசுவின் பாலை குடிப்பது, வண்ணான் துறையில் ஸ்நானம் செய்வது, தாம்ர பாத்திரத்தில் பாலைக் குடிப்பது, நகநுனி பட்ட நீரை குடிப்பது எந்த நீரையுமே இடது கையால் குடிப்பது ஆகியன சுரா பானம் செய்ததற்கு சமமாகும்.

தங்கத்தை திருடியதற்கு சமமானவை: அடைக்கலத்தை அபகரிப்பது, மனிதன், குதிரை, வெள்ளி, பூமி, வஜ்ரம் (மணி)ஆகியவற்றை அபகரிப்பது பொன்னை திருடியதற்கு சமமாகும். இந்த பட்டியலில் ஸ்த்ரீ, பசுக்களையும் சேர்க்கிறார்கள்; நூறு பலம் தாம்ரம் திருடுவது தங்கம் திருடியதற்கு ஒப்பு என்றும் சொல்லப்படுகிறது.

4 comments:

Geetha Sambasivam said...

மத்த கோத்ரத்தை விடவும் அத்ரி கோத்ரத்துக்கு என்ன தனியான கொள்கை? புரியலை!

திவாண்ணா said...

ஆமாம். அவங்க ஸ்பெஷல். தக்‌ஷிணை கொடுக்கறது கூட அத்ரி கோத்திர ப்ராம்ஹணர் ன்னா மத்தவங்களை விட கூடுதலா கொடுக்கணும்.

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதான் என்ன காரணம்னு கேட்டேன். :)))

திவாண்ணா said...

ஆத்ரேயி என்கிற வார்த்தைக்கு இப்படி அர்த்தம் செய்யலாம். சிலர் வேறு பல விதங்களாயும் அர்த்தம் செய்யறாங்க. இது வித்வான்கள் விசாரிக்கிற சமாசாரம்! தர்மத்தை புரிஞ்சுக்கிறது கஷ்டம் சீதை சொன்னாளாம். முடிஞ்ச வரை புரிஞ்சு புரியாததை அப்படி பெரியவங்க சொல்லி இருக்காங்கன்னு ஏத்துக்கொண்டு போவோம்!