Pages

Wednesday, August 22, 2012

தினசரி பூஜை - 3


பூஜை தொடர்ச்சி:
த்யானம், ஆவாஹனம்.
எந்த மூர்த்தத்தில இறைவனை நினைத்து பூஜை செய்யறோமோ அங்கே அவனை வரவழைக்கணும். பக்தி பெரும்பாலும் மனசு சம்பந்தப்பட்டதாகையால் இந்த த்யானம் முக்கியம். இறைவன் எங்கும் இருக்கிறான், ஏன் இங்கே ஆவாஹனம்ன்னு கேட்டா, எங்கும் இருக்கும் பரம் பொருள் இறைவனாக இந்த மூர்த்தத்தில இருக்காதா? நிச்சயம் இருக்கும். எங்கும் இறைவனை பார்க்கிற புத்தி இருந்தா இப்படி ஒரு இடத்தில த்யானம் செய்ய வேண்டாம். ஆனா நாம அப்படி இல்லையே! அது வேற லெவல். அந்த மட்டத்துக்கு போகாம அப்படி பேசறது போலித்தனம்.

சாதாரணமாக வட இந்தியாவில மக்கள் இதுல கெட்டி. நமக்கோ கோவில்களில அழகழகான சிலைகளை பார்த்தே பழக்கம். அங்கே அப்படி எல்லாம் கிடையாது. முகலாய படையெடுப்பில் சுத்தம் செய்து விட்டார்கள். பல இடங்களில் - முக்கியமாக மஹாராஷ்ட்ரத்தில்- ஒரு மரத்தடியில் ஒரு கல் இருக்கும். பிள்ளையார் என்று வணங்கிக்கொண்டு இருப்பார்கள். நமக்கோ அப்படி நினைக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும்! கங்கை கரையில் மண்ணை லிங்கமாக பிடித்து வைத்து மனமுருகி பூஜை செய்வதை பார்க்க நமக்கு ஆச்சரியமாக இருக்கும்! அவர்களுக்கோ அதே பழக்கம்.
என்ன சொல்ல வருகிறேன்? நாம் பூஜை செய்யும் மூர்த்தத்தில் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை அவசியம் வேண்டும். தீவிரமாக நம்பி அழைத்தால் அவன் நிச்சயம் வந்துவிடுவான்.
ஒரு குடத்து நீரிலோ வேற சில சந்தர்பங்களிலோ இப்படி ஆவாஹனம் செய்த தேவதையை பூஜை முடிந்த பின் "உன் இடத்துக்கு போய் வா" என்று அனுப்பி வைப்பது உண்டு. ஆனால் தினசரி செய்யும் வீட்டு பூஜையில் இப்படி செய்வதில்லை.

போன பதிவில் கொடுத்த தொடுப்பை பார்த்து இருந்தால் மேலே பூஜை ஏன் இந்த ரீதியில் போகிறது என்று புரியும்.
அடுத்து ஆசனம். வெகு சிலரே குறிப்பாக மூர்த்தங்களுக்கு ஆசனம் செய்து வைத்துக்கொண்டு உபயோகிக்கிறார்கள். சாதாரணமாக அக்ஷதைதான் பயனாகிறது.
இந்த மங்களாக்ஷதையும் பூக்களும் சீட்டாட்ட ஜோக்கர் மாதிரி. எதுக்கு வேணுமானாலும் மாற்றாக பயன்படும்!

அக்ஷதை என்பதில் கொஞ்சம் கவனம் கொடுக்க வேண்டும். அக்ஷதை என்றாலே முனை முறியாமல் இருப்பதாக பொருள். அதனால் சும்மா அரிசியில் மஞ்சள் பொடி கலந்து பயன்படுத்தக்கூடாது. சிரத்தை உள்ளவர் முனை முறியாமல் உள்ளதாக பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பித்தளை டபராவில் இப்படிப்பட்ட அரிசியை எடுத்துக்கொண்டு நாலைந்து சொட்டு உருக்கிய நெய்யை பரவலாக சேர்க்க வேண்டும். பின் ஒரு தேக்கரண்டியில் மஞ்சள் பொடியை எடுத்து பரவலாக தூவ வேண்டும்; ஒரு சிட்டிகை மஞ்சள் குங்குமம் (சாயம் கலக்காதது) தூவ வேண்டும். பின் நன்றாக இவற்றை கலக்க வேண்டும். இப்படி தயார் செய்த மங்களாக்ஷதையை பல நாட்கள் வைத்து பயன்படுத்தலாம். நெய்க்கு பதில் நீரை விட்டு தயார் செய்தால் அன்று மட்டுமே பயன்படுத்தலாம்.
வெள்ளை அரிசி சத்வம் என்றும், மஞ்சள் தாமசம் என்றும் குங்குமம் ராஜஸம் என்றும் சொல்கிறார்கள்.
பூக்களை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் வேண்டும். வாசனையுள்ள பூக்களே பயன்படுத்தக்கூடியவை.

ஸ்வாமியின் பாதங்களில் வார்ப்பதாக கற்பனையுடன் ஒரு உத்தரணி நீரை மூர்த்தத்தின் மீது விட வேண்டும். (இது பாத்யம்) அதே போல் கைகளில் வார்ப்பதாகவும். (அர்க்யம்). அடுத்து ஆசமனம்

அடுத்து குளியல். இதை நேரத்தை பொருத்து நீட்டிக்கொள்ளலாம். ஒரு நிமிஷத்திலும் முடிக்கலாம்; ஒரு மணி நேரமும் செய்யலாம். உண்மையில் மற்ற உபசாரங்கள் நிலையான நேரம் எடுத்துக்கொள்ளும். இது மட்டுமே அதிக வித்தியாசம் இருப்பதால் நாம் பூஜை செய்யும் கால அளவை இதுவே பெரும்பாலும் நிர்ணயிக்கிறது.
சீக்கிரம் முடிக்க உத்தரணியால் நீரை மூர்த்தங்கள் மீது வார்க்கலாம்.
நேரம் இருப்பவர்கள் தான் சொல்ல நினைக்கும் மந்திரங்களை / ஸ்லோகங்களை பொருத்து எதால் எவ்வளவு நேரம் அபிஷேகம் என்று நிர்ணயித்துக்கொள்ளலாம்.
சிவ பெருமானுக்கு அபிஷேகம் என்றால் அதிக ப்ரியமாம். விஷ்ணுவுக்கு அலங்காரம். அம்பாளுக்கு நிவேதனம். பிள்ளையாருக்கு தர்ப்பணம்.
ஆகவே சிவ பூஜை செய்வோர் விரிவான அபிஷேகமாக செய்கின்றனர். சுத்த நீர் எப்போதும் அபிஷேகத்துக்கு தகுந்தது. சுட வைக்காத பால், இளநீர், தேன், பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், நல்லெண்ணை, நெய், திருநீறு ஆகியனவற்றையும் பயன்படுத்தலாம். நல்லெண்ணை, நெய் பயன்படுத்தினால் அதன் பின் வென்னீரால் அபிஷேகம் செய்வதுண்டு. அது முன் செய்தவற்றின் பிசுக்கை மூர்த்தத்தின் மீதிருந்து நீக்கிவிடும்.
அபிஷேகம் ஆன பின் சுத்தமான மடித்துணியால் துடைத்துவிட்டு ஆசனத்தில் அமர்த்தி மேற்கொண்டு தொடரலாம்.

குளியல் முடித்து ஆசமனம் சமர்பிக்க வேண்டும்.
அடுத்து உடை. பால க்ருஷ்ணன் போல சில மூர்த்தங்கள் வைத்து இருப்பவர்கள் வெல்வெட், பட்டுத்துணியால் உடை தைத்து வைத்திருப்பர். அதை அணிவிப்பர். காசி கங்கை கரையில் நான் பார்த்த பெண்மணி ஒரு புது துணியை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டர்ர்ர்ர்ர்ர்ரென்று நாடாக்களாக கிழித்து தான் பிடித்து வைத்த 11 மண் லிங்கங்களுக்கும் அணிவித்தார்!
பெரும்பாலும் பயனாவது அக்ஷதைதான்!
உபவீதமும் அவ்வாறே. பிள்ளையார் சதுர்த்திக்கு மண் பிள்ளையாருக்கு குறிப்பாக உபவீதம் அணிவிப்பர்.
அதே போல் சாக்தர்கள் அம்பாளுக்கு ஆபரணங்கள் அணிவிப்பர்.
அடுத்து சந்தனம் சாற்றுதல். நேரம் சிரத்தை இருப்பவர் சந்தனக்கட்டையை சந்தனக்கல்லில் தேய்த்து சந்தனம் தயார் செய்வர். பச்சை கற்பூரம் என்று சொல்லும் வெள்ளை வஸ்துவை ஒரு சின்ன க்ரிஸ்டல் எடுத்து விரல்களால் அழுத்தி பொடியாக்கி நாம் பயன்படுத்தும் தீர்த்தத்திலும் சேர்க்கலாம். அதே சமயம் இந்த சந்தனம் அரைக்கவும் சேர்க்கலாம். அதனால் அரைக்கப்படும் சந்தனத்தின் அளவு அதிகமாகும். இது வெறும் உராய்வை அதிகமாக்குகிறதா இல்லை வேறு சமாசாரமா என்று தெரியவில்லை.னால் சும்மா அரைப்பதைவிட அதிக சந்தன விழுது விரைவில் உருவாகிறது.
சந்தனம் அரைக்கும் போது கூட குங்குமப்பூ சேர்க்கலாம். நல்ல நறுமணத்தையும் நிறத்தையும் இது தருகிறது. இதில் சில நுணுக்கங்கள்....


 
Post a Comment