Pages

Thursday, August 23, 2012

தினசரி பூஜை - 4


சந்தனம் அரைக்கும் போது கூட குங்குமப்பூ சேர்க்கலாம். நல்ல நறுமணத்தையும் நிறத்தையும் இது தருகிறது. இதில் சில நுணுக்கங்கள். நம் நாட்டில் குங்குமப்பூ காஷ்மீரில் விளைகிறது. உலகத்திலேயே 90 % ஈரானில். ஒரு அடி உயரம் வளரும் இந்த செடியில் நான்கு பூக்கள் வரை மட்டுமே பூக்கும்! ஒவ்வொன்றிலும் மூன்றே மூன்று ஸ்டிக்மா வரும். இதையும் இதன் இணைக்கும் தண்டையும் (ஸ்டாக்) அறுவடை செய்கிறார்கள். இந்த தண்டில் அதிக வாசனை வராது. (விலை கம்மி) ஸ்டிக்மாவில் நல்ல அற்புதமான வாசனை வரும்! ஒரு முறை அரைக்க ஒரே ஒரு ஸ்டிக்மா சேர்ஹ்து அரைக்க .... ஹா!

இந்த குங்குமப்பூவை கையால்தான் சேகரிக்க முடியும். இதற்கு விதை கிடையாது. இதன் ஆண் பூக்கள் ஸ்டெரைல். அதனால் ஆசாமி யாரான இத வளர்த்தாதான் உண்டு. பூத்து முடிஞ்ச பின்னே செடியை பிடுங்கினா நிலத்தடியில் கிழங்கு போல இருக்கும். நாலோ ஏழோ தேறும். இதை தனித்தனியா நடலாம். ஒரு வருஷத்துக்கு ஒரு முறைதான் பூக்கும். பூக்க ஆரம்பிச்சா அன்னிக்கே அறுவடை செய்தாகணும். சாயந்திரத்துக்குள்ள வாடிடும்! எல்லா செடிகளும் ஒரு வாரம் ரெண்டு வாரங்களிலே பூத்து முடிஞ்சுடும்! 150 பூக்களில ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு க்ராம் குங்குமப்பூ தேறும்!

இந்த காரணங்களாலே எடைக்கு எடை உலகத்திலேயே ரொம்ப விலை உயர்ந்த நறுமணப்பொருள்ன்னு இதை சொல்லறாங்க!

பையர் கஷ்மீர் போய் வந்தப்ப சேகரிச்ச தகவல்கள். விக்கியும் உதவியது. மூன்று விதமா விக்கறாங்களாம். முன்னே சொன்ன தண்டுகள் மட்டும்ன்னா சுமார் ரூபாய் 170 ஒரு க்ராமுக்கு. ஸ்டிக்மா மட்டும்ன்னா சுமார் 280 க்ராமுக்கு. கலந்தும் விக்கிறாங்களாம்.
இவ்வளோ விலை அதிகமானதை பயன்படுத்தணுமான்னு யோசனை வரலாம். நமக்கு எல்லாத்தையும் கொடுத்திருக்கிற பகவானுக்கு இதை விட கம்மியாவா கொடுக்க முடியும்? கவலை வேண்டாம். ஒரு க்ராம் டப்பா மூணு மாசம் வரும். டப்பாவை சீலுடன் பத்திரமா மூடி வெச்சு இருந்தா வாசனை அதிக நாள் வரும். நான் ஊதுபத்தியின் குச்சியால விரல் படாம ஜாக்கிரதையா ஒன்னே ஒன்னு  இதை எடுத்துப்போடுவேன். கொஞ்சம் தண்ணி பட்டாலும் சில நாட்களில பூஞ்சக்காளான் உருவாகிடும்!

ரைட், குங்குமப்பூ பத்தி புராணமா அப்புறம் போடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.
பச்சை கற்பூரம் போட பெருகிய சந்தனம், குங்குமப்பூ போட திரண்டு வந்துடும். இருக்கிற தண்ணியை எல்லாம் இழுத்துடும். அதனால போதும் என்கிற அளவு அரைத்து அப்புறமே கொஞ்சம் நீர்க்க இருக்கும்போது குங்குமப்பூ இட வேண்டும்.

அடுத்து பூக்களால அர்ச்சனை. இருங்க இருங்க, “சந்தனம் மேலே குங்குமம் என்ன ஆச்சு?” ன்னு நீங்க குரல் எழுப்பறது காதில விழுது. இந்த 16 ல அது இல்லை. பெரும்பாலான பூஜா கல்பங்களில உபசாரங்கள் ஒவ்வொண்ணுத்துக்கும் ஸ்லோகங்கள் இருந்தாலும் இதுக்கு அப்படி இல்லை. அதனால் இது பிற்சேர்க்கைன்னு நினைக்க வேண்டி இருக்கு. வழக்கிலே குங்குமம் இடுவது இருக்கவே இருக்கு. 

ஆகவே பூக்களால் அர்ச்சனை. ஒவ்வொரு ஸ்வாமிக்கும் நாமக்கள் இருக்கு. கல்பத்தில 8 சொல்லி அர்ச்சனை ன்னு சொல்லி இருக்காம். வழக்கம் வேறயா இருக்கு. பக்தி மேலீட்டால 108, 1008, ன்னு வளர்த்தி இருக்காங்க. தப்பில்லை. குறைச்சலான அர்ச்சனையா இருந்தா வருத்தப்பட வேண்டாம்ன்னு சொல்ல வரேன்.

 இந்த நாமாக்கள் எல்லாம் புராணங்களிலேந்து எடுக்கப்பட்டு இருக்கு. அதனால் இதுக்கு ஒரு மகத்துவம் இருக்கு. சம்ஸ்க்ருத பெயர்களா இருக்கேன்னு யோசிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ் அபிமானிகள் தமிழ் மறைகளா கருதற நூல்களில் இருந்து எடுத்து தொகுத்து அர்ச்சனை செய்யலாம். கடவுள் நிச்சயம் ஏத்துப்பார்.

 
Post a Comment