Pages

Wednesday, October 31, 2012

கடவுளின் உபயோகம் - 1

 
ஒரு நாள் ஒரு இளைஞர், நவீன கல்விமுறையின் பிரதிநிதி என்று சொல்லக்கூடிய ஒருவர் - ஸ்வாமிகள் பால் எப்படியோ ஈர்க்கப்பட்டு அவரிடம் வந்தார். அவரிடம் அறிமுகமும் செய்யப்பட்டார். இப்படியாக ஒரு உரையாடல் துவங்கியது.

ஸ்வாமிகள்: உங்களுக்கு நிறைய ஓய்வு நேரம் இருக்கிறது போலிருக்கிறதே? அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

இளைஞர்: அதை நான் பயன்படுத்துகிறேன் என்று சொல்லமுடியாது. அது தானாக போகிறது.

பொழுது போகவில்லையே என்று புகார் செய்யும் நபராக உங்களை பார்த்தால் தோன்றவில்லை.

இல்லை.

அதை கேட்க மெத்த மகிழ்ச்சி! உண்மையில் நம் வாழ்கையில் ஒவ்வொரு கணமும் எவ்வளவு விலையுயர்ந்தது என்று அறிந்தவர்கள் பொழுது சீக்கிரமாக போகிறதே என்றுதான் புகார் செய்ய வேண்டும்!

நான் அப்படியும் புகார் செய்வதில்லை!

நேரத்தை வீண் செய்பவர்கள்தான் நேரம் போகிறதைப்பற்றி புகார் செய்வார்கள். தன் நேரம் நல்லபடி செலவழிந்ததாக நினைப்பவர்களுக்கு அந்த புகார் இருப்பதே இல்லை. நீங்கள் இந்த வகை போலிருக்கிறது.

அப்படி இல்லை என்று தோன்றுகிறது. பொழுது போக்கப்பட வேண்டும் என்று தெரியும். அது நல்லபடி செலவழிந்ததா இல்லையா என்பது பொழுது போவதை பாதிப்பதில்லை. மேலும் அது நல்லபடி செலவழிந்தது, இல்லை என்று சொல்ல என்ன பிரமாணம் என்று தெரியவில்லை.

நிச்சயமாக. ஆனால் உங்கள் மன சமநிலைக்கோ அல்லது மற்றவரின் சமநிலைக்கோ பாதகம் இல்லாமல் நல்லபடி செலவழிந்தால் அது உங்களுக்கு கொஞ்சம் மன நிம்மதியை தரும்.

அது போன்ற நிம்மதி தூக்கத்தில்தான் கிடைக்கிறது.

உண்மைதான். ஆனால் நாம் எப்போதும் தூங்கிக்கொண்டு இருக்க முடியாதல்லவா? விழித்துக்கொண்டு இருக்கும் போதும் நமக்கு மன நிம்மதியை தேடுகிறோம். மனதில் ஒன்றுமில்லாமல் இருப்பது நமக்கு சாத்தியமில்லை. வெற்று மனத்தோடு நம்மால் இருக்க இயலாது. அதற்கு ஏதேனும் வேலை கொடுக்க வேண்டும். மனதின் சாந்தியை கெடுக்கக்கூடிய பொய்யான, நிஜமான விஷயமாக இல்லாமல், நமக்கு காம குரோதங்களை கிளறிவிடக்கூடியதாக இல்லாமல் இருக்க உலகத்தின் தோற்றம் போன்ற தத்துவ விஷயங்களை யோசித்தால் கெடுதலுக்கே இடமில்லாமல் இருக்கும் இல்லையா?

அது வெறும் ஊகங்களாக இருக்கும்.

இருந்தால் என்ன? அது யாருக்கும் கெடுதலை விளைவிக்காது. மனதுக்கு பாதகமில்லாத வேலை ஒன்று கிடைக்கிறது. என்னைப்போன்றவர்களில் சிலர் அதனால் உங்களுக்கு நல்லது ஏற்படுமென்று நினைக்கிறோம். அது சரியா இல்லையா என்பது இப்போது விஷயமில்லை. அப்படிப்பட்ட ஊகங்களில் கெடுதல் இருக்கிறது என்று நீங்கள் சொல்லமுடியாது.

ஆனால் அதனால் என்ன பயன்?

அதனால் பொழுது போகும். வேறு என்ன வேண்டும்? நாங்கள் சொல்வது போல அது நல்லதானால் சரி. இல்லை என்றாலும் பாதகமில்லை; நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை. அதனால் நீங்கள் தத்துவம், அதை சார்ந்த புத்தகங்களை ஏன் படிக்கக்கூடாது? பொழுதை போக்குவதற்காவது?

அந்த மாதிரி புத்தகங்களை நான் படித்து இருக்கிறேன். அவை வெறும் வார்த்தை ஜாலம் நிறைந்து இருக்கின்றன.

புத்தகங்களில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? அதை உங்கள் சிந்தனையால் பெருக்கிக்கொள்ள வேண்டும். நீங்கள் அந்த பொருளில் சில புத்தகங்களை படித்து இருப்பதால் உலகத்தின் தோற்றம் குறித்தும் இறைவன் பற்றியும் சில கருத்துக்கள் ஏற்பட்டு இருக்க வேண்டுமே?  

Tuesday, October 30, 2012

உண்மையான பக்தி - 7

 
ஸ்வாமி: நல்லது. வீட்டில் நடக்கும் ஒரு சாதாரண விஷயத்தை கவனிக்கலாம். ஒரு தனவந்தன் இருக்கிறான். அவனுக்கு நான்கு குழந்தைகள். அதில் ஒரு சின்ன குழந்தைக்கு பிறந்ந்த நாள் வருகிறது. அன்றைக்கு அந்த குழந்தைக்கே பிரதானம். அன்று அதுவே "உபாஸ்ய மூர்த்தி"! வீட்டின் நடுக்கட்டில் உயர்ந்த ஆசனம் போட்டு அதை உட்கார்த்தி வைத்து இருக்கிறார்கள், விலை உயர்ந்த உடைகளை அணிவித்து நகைகளை அணிவித்து அலங்கரித்து இருப்பர். அதற்காக தாயாரும் மற்ற குழந்தைகளும் கூட தான் போட்டுக்கொண்டு இருக்கும் நகைகளைக்கூட அன்றைக்கு தற்காலிகமாக அந்த குழந்தைக்கு போடுவதும் வழக்கம் உண்டு.

பக்தர்: ஆமாம். அப்படி வழக்கம் உண்டு.

அப்படி தங்கள் நகைகளை கொடுக்க வேண்டி இருக்கிறதே என தாயாரோ மற்ற குழந்தைகளோ வருந்துவார்களா? இன்றைக்கு இந்தக் குழந்தை எல்லா நகைகளையும் போட்டுக்கொண்டு இருக்கிறதே என்று பொறாமைப் படுவார்களா?

இல்லை.

இதே போல நமக்கு பிறந்த நாள் வரும் போது இந்த குழந்தையின் நகைகள் உள்பட நமக்கும் எல்லா நகைகளையும் அணிவிப்பார்கள் என்று மற்ற குழந்தைகள் அறிந்து உள்ளன அல்லவா?

ஆமாம்.

இன்றைக்கு இந்த குழந்தை தன் தாயாரிடமிருந்தும் மற்ற குழந்தைகளிடமிருந்தும் நகைகளை பிடுங்கிக்கொண்டதாக யாரேனும் குற்றம் சொல்வார்களா? இன்று 'உபாஸ்யமாக' இந்த குழந்தை இருக்க வேண்டும் என்று மற்றவர் நகைகளை கழற்றி இந்த குழந்தைக்கு போட்டதை தகப்பனின் பட்சபாதம் என்று யாரும் சொல்வார்களா?

மாட்டார்கள்.

நகைகள் உட்பட இத்தனை அலங்காரங்களும் யாருடைய ஆளுகையில் இருக்கிறது? யாருக்கு சொந்தம்?

தகப்பனாருடையதுதான்.

அப்படித்தான். அத்தனையும் அவர் சம்பாதித்ததுதான். இருந்தாலும் அவர் இதை எல்லாம் எப்போதும் போட்டுக்கொள்வாரா?

போட்டுக்கொள்வதில்லை.

அதாவது அத்தனையும் தனக்கு சொந்தமாக இருந்தாலும் தனக்கு என்று ஒரு போதும் உபயோகித்துக் கொள்கிறதில்லை. தேவைக்கு தகுந்தபடி அவ்வப்போது தன் குழந்தைகளுக்கு அணிவிப்பதிலேயே மகிழ்கிறார்.

ஆமாம். அப்படித்தான்.

ஆகவே தனக்கே பாத்தியதை இருந்தாலும் அவர் தான் போட்டுக்கொள்வதில்லை.

உண்மைதான்.

சுய ஆதீனத்தில் இரும்பு பெட்டியில் வைத்து இருக்கும் போது மட்டுமா நகைகள் அவருக்கு சொந்தம்? குழந்தை போட்டுக்கொண்டு இருக்கும்போது கூட அவருக்கு சொந்தம்தான்.

உண்மைதான்.

இப்போது ப்ரக்ருதி விஷயத்தை கவனிக்கலாம். பரம் பொருளான ரூபமில்லாத ப்ரம்மம் இந்த தகப்பனார் போல; தான் ஒரு நாளும் ஒரு விசேஷத்தையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. ஆனால் ஒவ்வொரு தேவதைக்கும் சொல்கிற விசேஷங்கள் இந்த ப்ரம்மத்துக்கே உரியவை. ஒரு பக்தானின் ஶ்ரேயஸை உத்தேசித்து ஒரு புராணத்தில் ஒரு தேவதையை உபாஸ்யமாக சொன்னால் அதில் அந்த தேவதைக்கே முதலிடம். பார்த்து மகிழும் தகப்பனாரும் ஏனைய குழந்தைகளும் போல மற்றவர் தள்ளி நிற்க வேண்டியதுதான். மற்ற தேவதைகளின் விசேஷங்கள், மற்ற குழந்தைகளின் நகைகளை இந்த குழந்தைக்கு அணிவிப்பது போல, இந்த தேவதைக்கே அளிக்கப்படும். ஒரு புராணத்தில் ஒரு தேவதைக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது என்பதற்தாக பட்சபாதம் சொல்ல முடியாது. வேறு ஒரு புராணத்தை சொல்லும்போது, மற்ற தேவதை பற்றி சொல்லும்போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஒவ்வொரு புராணத்திலும் வியாசருடைய எண்ணம் இப்படியே இருக்கிறது.

பரம் பொருளுக்கு எந்த விசேஷமும், பெயரும், ரூபமும் கிடையாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் அத்தகைய பாவனை ஏதோ சிலரைத்தவிர சாதாரணமாக யாருக்கும் ஏற்படுவதில்லை என்பதை அவர் நன்கு அறிவார். ஆகவே பக்தர்களின் உபாசனைக்காக பல தேவதா மூர்த்திகளை சொல்லி இருக்கிறார். இந்த மூர்த்திகள் சுத்த ப்ரம்மத்தின் அம்சமாகவே இருந்தாலும் தற்காலிக வியவகாரத்தில் அவையே பரம் பொருள் என பாவித்து சொல்லி இருக்கிறார். அவர் புராணம் எழுதியிருக்கிற மாதிரியில் ஒரு தேவதையை தீவிரமாக பக்தியுடன் உபாசித்து வந்தால் மற்ற தேவதைகளை உபாசிக்க அவசியமில்லாமல், அந்த மற்ற தேவதைகளின் உபாசன பலனை அடையும் படி சௌகரியம் செய்து இருக்கிறார். ஒரே தேவதையை உபாசித்தாலே மேலே பர ப்ரம்மத்தை அறியும் யோக்யதையையும் அடையலாம்.  
சிரமத்தை குறைத்து, பலனை அதிகப்படுத்தி கொடுப்பதிலும் , பரம் பொருள் தத்துவத்துக்கு பாதகமில்லாமல், பக்தனின் யோக்கியதைக்கு தக்கபடி சாதனங்களை சொல்லிக் கொடுப்பதிலும் வியாசருக்கு சமம் யாருமில்லை! அவரது நோக்கத்தை சரியாக அறியாமல் நமக்குள் சண்டை போட்டுக் கொண்டால் குற்றம் நம்முடையதே தவிர அவருடையதல்ல. உண்மையில் வியாசருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

Monday, October 29, 2012

உண்மையான பக்தி - 6


பக்தர்: இந்த மாதிரி அசட்டு வியவகாரங்களுக்கு வ்யாசரேதான் காரணமோ என்று தோன்றுகிறது! இவர் அந்தந்த தேவதைகள் குறித்து பல புராணங்களை எழுதி இருக்கிறார். ஒவ்வொன்றிலும் அது எது குறித்த புராணமோ அந்த தேவதையையே பர வஸ்து என்கிறார். அதனால் வ்யாசரின் அபிப்ராயத்தில் யார்தான் பரவஸ்து என்று சிரத்தை உடைய யாருக்கும் நிர்ணயிக்க முடியாமல் இருக்கிறது!

ஸ்வாமி: வ்யாசர் மூடர் அல்ல, ஜனங்களை ஏமாற்ற அவர் ஒரு காரியமும் செய்வதில்லை என்று நம்புகிறீர்களா?

அதில் ஆட்சேபணை ஒன்றுமில்லை.

எல்லாவற்றுக்கும் மேலான பர வஸ்து ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியாயம் அவருக்கு தெரிந்து இருக்க வேண்டும் இல்லையா?

தெரிந்துதான் இருக்கும். அதுதான் எனக்கு பிரச்சினையே. ஒவ்வொரு தேவதையையும் பரவஸ்து என்று அவர் சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை.

வ்யாசர் ஒவ்வொரு தேவதையையும் பரவஸ்து என்று சொல்லவில்லை; பர வஸ்துவேதான் ஒவ்வொரு தேவதையும் என்றுதான் சொல்கிறார் என புரிந்து கொண்டால் பிரச்சினையே இராது.

அதெப்படி?

பர வஸ்துவுக்கு சொந்தமாக பெயரோ ரூபமோ கிடையாது. ஆனால் அதுவே நமக்கு வழிபடும் பொருளானால் அதற்கு ஒரு பெயரும் ரூபமும் வேண்டி இருக்கிறது. உண்மையில் அது ஸ்வபாவத்தில் ரூபம் அற்றது, அதை அரூபம் என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் வியவகாரத்தில் எல்லா ரூபங்களும் அவருடையதே ஆகும்.

இது எனக்குப்புரிகிறது. ஆனால் வியாசர் ஒரு மூர்த்தி பற்றி சொல்லும் போது- உதாரணமாக சிவன் பற்றி சொல்லும்போது பர தத்துவத்துக்கு உரிய லட்சணங்களை மட்டும் அவருக்கு கொடுப்பதில்லை. இதர தேவதைகளுக்கு உரிய விசேஷமான அம்சங்களையும் இவருக்கு உள்ளது போல சொல்கிறார். சிவனை பர வஸ்துவின் அழிக்கும் அம்சமாக சொல்லாமல் விஷ்ணுவும் ப்ரம்மாவுமே இவர்தான் என்கிறார். அல்லது அவர்கள் இவருடைய அம்சமேயாவர் என்றோ சந்ததி என்றோ சொல்லிவிடுகிறார்.
 

Sunday, October 28, 2012

மஹா பெரியவர் - நிகழ்வு


திருவண்ணாமலையில் வசிக்கும் ஸ்ரீ கௌரிசங்கர் ஒரு தகவல் சுரங்கம். குறிப்பாக மஹா பெரியவர் என்று பேச்சு வந்துவிட்டால் போதும். பலரும் அறியாத தகவல்கள் வந்து கொட்டும்! நேற்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது ....

மஹா பாரதத்தில் துரியோதனன், காட்டில் இருக்கும் பாண்டவர்களை பரிவாரத்துடன் போய் பார்த்து விருந்து உண்டு அனுகிரஹிக்க வேண்டும் என்று துர்வாசரை கேட்டுக்கொண்ட கதை ஒன்று உண்டு. அனேகமாக நாம் அனைவரும் அறிந்து இருப்போம். திடீரென்று இந்த கதையை சொல்ல ஆரம்பித்தார் ஸ்ரீ கௌரிசங்கர். கதை முடிந்தபின் தொடர்ந்தார்....

மதனபள்ளியில் பெரியவா முகாம். அன்னக்கொடி கட்டிவிட்டார்கள். அதாவது யார் வேண்டுமானாலும் வந்து உணவு அருந்தி போகலாம். முகாம் இருக்கும் வரை இந்த அன்ன தானம் அங்கே நடக்கும்.

தகவல் அப்படியே சுத்து முத்து கிராமங்களுக்கும் பரவியது. ஒரு நாள் "வடை பாயசத்துடன் சாப்பாடு போடுகிறார்களாம், வா போகலாம்" என்று யார் ஆரம்பித்தார்களோ தெரியாது, போகும் வழி எல்லாம் ஆள் சேர்ந்துக் கொண்டு முகாமை நோக்கி போய்க்கொண்டு இருந்தார்கள்.
அன்ன தானம் எல்லாம் எப்போதோ முடிந்து எல்லாவற்றையும் கழுவி கவிழ்த்தாகிவிட்டது. பெரியவாளும் பிக்ஷை செய்தாயிற்று. திடீரென்று பெரியவா மடத்து மேனேஜரிடம் "டேய், ரொம்ப பசிக்கிறதுடா! என்ன இருக்கு?” என்று கேட்டார். மேனேஜருக்கு கை கால் ஓடவில்லை. இப்பதானே அரை மணி முன் சாப்பிட்டார்கள்? அதற்குள் எங்கிருந்து பசி வந்தது? அத்துடன் இப்படி பெரியவா கேட்டதே கிடையாதே! எவ்வளவு நாள் விரதமென்று உபவாசம் இருந்திருப்பார்!
என்னடா பதிலே காணோம். ரொம்பவே பசிக்கறதே!” என்றார் பெரியவர்.
மேனேஜர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டார்.
ஓஹோ, ஒண்ணுமே இல்லையா? ம்ம்ம் என்ன செய்யலாம்???”

அப்போது இரண்டு பேர் முகாமில் நுழைந்தார்கள். கையில் பழங்கள், ஏதோ பொட்டலங்களுடன். நமஸ்காரம் செய்து அவற்றை சமர்பித்தனர். பெரியவா அந்த தட்டில் இருந்து தேடி ஒரு பொட்டலத்தை எடுத்து பிரித்தார். கற்கண்டு இருந்தது. ஒரே ஒரு துண்டை எடுத்து கீழே வைத்து கையால் தட்டி உடைத்தார். அது சுக்கு நூறானது. அதில் ஒரே ஒரு சின்ன துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். பக்கத்தில் இருந்த துளசி தீர்த்தத்தில் கொஞ்சம் குடித்தார். ஏப்பம் விட்டார்! வந்தவரை பார்த்து "அப்பாடா! சரியான நேரத்துக்கு வந்து என் பசியை தீர்த்தாய். க்ஷேமமா இரு! ” என்று ஆசீர்வதித்தார். வந்தவருக்கு பரம சந்தோஷம்! வருவோர் கொண்டு வரும் பழங்கள் போன்ற எல்லாம் வழக்கமாக மடத்தில் உள்ளவர்கள் வயிற்றுக்கு போய் விடும்; அரிதாகத்தான் ஏதோ பெரியவா வயிற்றுக்குப்போகும் என்று தெரிந்திருந்ததால் ஒரு சின்னஞ்சிறு துண்டே ஆனாலும் தான் கொண்டு வந்த கற்கண்டை பெரியவா உண்டதில் அவருக்கு ஜன்ம சாபல்யம் ஏற்பட்டதாகவே தோன்றியது!
அதே சமயம் சாப்பிடப்போலாம் வா என்று கிளம்பிய கூட்டம் சுமார் 50-60 பேராக பெருகி அடுத்த தெருவை அடைந்திருந்தது. இதோ இந்த திருப்பம் தாண்டினால் முகாம் வந்துவிடும்! வயிறார சாப்பிடலாம்! ஒன்றும் அறியாத எளிய மக்கள்! ஏதோ ஒரு காலகட்டத்தில் அன்றைய அன்னதானம் முடிந்து விடும் என்ற கற்பனை கூட அவர்களுக்கு இல்லை!
திடீரென்று எல்லாருக்கும் வயிறு நிறைந்த உணர்வு! நடையின் வேகம் குறைந்து போய்விட்டது. ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். “பசியே இல்லையே! வயிறு ரொம்பிப்போச்சே! இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுக்கொள்ளலாமா?” கூட்டத்தில் எல்லோர் நிலைமையும் அதுதான். அப்படியே பிரிந்து அவரவர் வெவ்வேறு வழியில் போய்விட்டனர்!

Tuesday, October 23, 2012

விஜயதசமி வாழ்த்துகள்!

 
எல்லோருக்கும் ஸரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகள்! இறைவன் அருளால் சில நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த கன மழை இரண்டு நாட்களாக நீங்கி விட்டது. மக்கள் கடைவீதிகளில் கூடுகிறார்கள். பூஜைக்கு ஆயத்தம் ஜோராக நடக்கிறது. வெயிலும் சிறு மழையும் கண்ணாமூச்சி ஆடுகின்றன! ரம்யமான சூழ்நிலை!

குழந்தைகளுக்கு கொண்டாட்டம்! இன்று புத்தகங்களை தொடவே வேண்டாமே! வேண்டுமென்று புத்தகங்களை எடுக்க பாவனை செய்து அம்மா, “ஏய், அது சாமி! தொடக்கூடாது, இன்னிக்கு படிக்கக்கூடாது” என்று சொல்வதை கேட்க தனி ஆனந்தம்! இந்த மாதிரி அடிக்கடி வரக்கூடாதா என்று கூட ஏங்கும்
 
குழந்தைகள் உலகமே தனி. அவற்றுக்கு தன் எல்லை எது என்று தெரியாது. வளரும் குழந்தைகள் பற்றி அவற்றின் தாயார், தந்தை, தாத்தா பாட்டி எப்போதும் பேசிக்கொள்வதே இதுதானே? "அம்மா, உங்க பேரன் இன்னிக்கு தானே உக்கார கத்துக்கொண்டான்", “இன்னைக்கு உங்க பேத்தி ஸ்லோகம் சொன்னாள்” ரீதியில் முன்னேற்றங்களை கேட்பதில் ஒரு தனி ஆனந்தம் இருக்கிறது! இத்துனூண்டு குழந்தைக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது என்று ஆச்சரியப்படாத நாளே இல்லை என்றாகிவிடும். அப்புறம் பள்ளிக்கு போக ஆரம்பித்து எல்லாம் மாறிவிடும்! இதை செய்யாதே, அதை தொடாதே என்ற கட்டளைகளைத்தான் குழந்தைகள் அப்புறம் கேட்க வேண்டும். இது வரை தன்னால் முடியாது என்று ஒன்றே தெரியாமல் இருந்து இப்போது மாறிவிடும்.

சின்னக்குழந்தையாக இருக்கும் போது எதுவானாலும் தொட்டுத் தடவிப்பார்த்து, வாயில் போட்டுக்கொண்டு, கீழே தரையில் அடித்து, அது எப்படி ஏன் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்வதே குழந்தையின் ஸ்ட்ராங் பாய்ண்ட்! வளர்ந்த பின் அப்படி செய்தால் இரண்டு உதை விழும்! பலரும் செய்யாதே செய்யாதே என்பார்களே தவிர இப்படி செய் என்று மாற்றாக கற்று தருவதில்லை. அதனால் குழந்தை சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கற்றுக்கொள்வது நின்று போகிறது. இந்த "செய்யாதே" ஐ கேட்டு கேட்டே நாமும் கெட்டு போய்விட்டோம்!

பல விஷயங்களிலும் நமக்கு ஒரு மனத்தடை இருக்கிறது. இது என்னால் முடியாது; இது என் சக்திக்கு அப்பாற்பட்டது; சான்ஸே இல்லை என்று நமக்கு நாமே அடிக்கடி சொல்லிக்கொள்கிறோம். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஆன்மீக விஷயங்களில் பலர் இப்படி மனத்தடையுடன் இருப்பதை காண்கிறேன்! நம்மை நாமே சரியாக அறிவதில் வெளியில் இருந்து எப்படி தடை வர முடியும்?

ஆனாலும் பலரும் "ஆன்மீகமா? இல்லை, எனக்கு இது சுத்தமாக புரியாது; ஜபமா? நேரமே கிடையாது; பூஜையா? அது பெண் பிள்ளைகள் விஷயம்" என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லி தப்பிப்பதை பார்த்து இருக்கிறேன்!

முன் காலத்தில் ராஜாக்கள் ஒரு பழக்கம் வைத்து இருந்தார்களாம். என்னதான் சின்ன ராஜா என்றாலும் விஜய தசமி என்று அடுத்த நாட்டு எல்லையை தாண்டி கொஞ்ச தூரமாவது சென்று வருவார்களாம்! அதே சமயம் அந்த நாட்டு ராஜா இவருடைய எல்லையை எங்காவது தாண்டுவாராக இருக்கும்! அதற்காக அடுத்த நாட்டு ராஜாவுடன் சண்டைக்கு போக மாட்டார்கள்தான்! இருந்தாலும் சம்பிரதாயமாகவாவது இதை செய்வார்களாம். ஏன் என்றால் அதுதான் விஜயதசமியை கொண்டாடும் விதம்! எல்லையை தாண்டுதல்!

நாமும் நம்மைச்சுற்றி ஆன்மீகம் குறித்த சில, பல எல்லைகளை - தடைகளை போட்டு வைத்துக்கொண்டு இருக்கிறோம் அல்லவா? அவற்றையும்தான் கொஞ்சம் இந்த ஒரு நாளாவது தாண்டிப்பார்க்கலாமே! 24 மணி நேரத்தில் 20 நிமிஷமாவது இறைவனுடன் இருக்க பழகுவோம்! அடிப்படையாக நாம் செய்ய வேண்டும் என்று சாத்திரங்கள் சொல்லி இருப்பதில் சிலவற்றையாவது நம்மால் முடிகிறதா இல்லையா என்று செய்து பார்த்துவிடலாம்!

எல்லோருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்!

Monday, October 22, 2012

உண்மையான பக்தி -5


பக்தர்: சிவ பக்தனாக இருப்பவர் உலகின் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் சிவனே என்றும், விஷ்ணு பக்தர்கள் விஷ்ணுவே என்றும் இதே போல மற்றவர்களும் சொல்கிறார்களே!

 ஸ்வாமி: மேல் பார்வைக்கு அப்படி தோன்றலாம். சிவ பக்தர்களின் எண்ண ஓட்டத்தை கவனித்தால் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் ஒருவரே என்றும் அவர் பெயர் சிவன் என்றும் பொருள்படும். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் விஷ்ணு என்றோ வேறு யாரும் என்றோ ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அத்தகைய சக்தி வாய்ந்தவர்கள் பலர் இருப்பதாகவோ அவர்களுக்குள் சிவன் மிகச்சக்தி வாய்ந்தவர் என்றோ சொல்வதில்லை. அவன் நம்புவதும் சொல்வதுவும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் ஒருவரே, அவர் சிவனே என்பது. அனேக ஈஸ்வரர்களை அவன் ஒப்புக்கொள்வது இல்லை. ஒரே ஒரு ஈஸ்வரர்தான்; அவர் சிவன்தான்.

 உண்மை! ஆனால் அதே போல விஷ்ணு பக்தனும் இப்படியேத்தானே விஷ்ணு பற்றி நினைக்கிறான்? அதே போலத்தானே கணேசர், ஸுப்ரமணியர், அம்பாள் முதலானவர்களுடைய பக்தர்களும் நினைக்கிறார்கள்? இவர்களில் யார் சொல்வதை ஒப்புக்கொள்வது? பரஸ்பரம் விரோதமாக இருப்பதால் எல்லாருடைய எண்ணங்களையும் ஒப்புக்கொள்ள முடியாதே! 

 எந்த பக்தரும் அனேக ஈஸ்வரர்கள் உண்டு என்று சொல்வதில்லை என்பது சரிதானே? 

ஆம்! 

எல்லாரும் ஒரே ஒரு ஈஸ்வரன் உண்டு என்று சொல்கிறார்களா இல்லையா? 

ஆம்!

 ஈஸ்வர லட்சணமாக சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் என்றும் சொல்கிறார்களா இல்லையா? 

அப்படியே! 

ஆனால் அந்த ஈஸ்வரனின் பெயர் என்ன என்பதில் வித்தியாசப்படுகிறார்கள். 

ஆம். 

அவர்கள் சொல்லும் ஈஸ்வர லட்சணத்தில் தவறு இல்லை; அத்துடன் ஒரே ரூபம் என்றே சொல்கிறார்கள். ஆம். உங்கள் முன் ஒரு மணி அரிசி இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அரிசியின் லட்சணங்கள் எல்லாம் அதில் இருப்பதை தெரிந்து கொண்டு அது அரிசியே என்று தீர்மானிக்கிறீர்கள். அப்போது தமிழ் பேசுபவன் ஒருவன் வந்து அது அரிசி என்று சொல்லிப்போகிறான். கன்னடம் பேசுபவன் வந்து அது அக்கி என்று சொல்லிப்போகிறான். சம்ஸ்க்ருத வல்லுனர் ஒருவர் வந்து அது தண்டுலம் என்று சொல்லிப்போகிறார். இதில் உங்களுக்கு ஏதும் பிரச்சினையா? 
பெயர்கள் பொருளின் சுயரூபத்தில் சேராத வெளி அம்சம் என்று உங்களுக்கு தெரியவில்லையா? நாம ரூப பிரபஞ்சத்தில் அதற்கு ஏதும் பிரயோசனம் இருக்கலாம். அதே மாதிரி சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் என்கிற லட்சணம் இருந்ததேயானால், சிவன் என்று சொன்னால் என்ன, விஷ்ணு என்றூ சொன்னால் என்ன, தேவீ என்று அழைத்தால்தான் என்ன? பெயர்கள் வித்தியாசமாக இருந்தாலும் சொல்லப்படுகிற வஸ்து ஒன்றே அல்லவா? 
கன்னடம் சம்ஸ்க்ருதம் தெரியாத தமிழன் அரிசியை அரிசி என்றும் நிச்சயம் அதற்கு அக்கி என்றோ தண்டுலம் என்றோ பெயர் கிடையாது என்றும் சொல்லுவான். அவனுக்கு பரிச்சயமான தமிழ் மொழியில் அவை இல்லை என்பதால் அவனைப் பொறுத்தவரை அது சரிதானே? அவனிடம் அப்படி ஒரு பெயர் இல்லை என்றால் அவன் அரிசி என்று ஒரு வஸ்து இல்லை என்று சொல்வதாகத்தான் நினைப்பான். 
ஆலோசித்து பொருளில் இருந்து பெயரை பிரித்துப்பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். இபப்டி பிரித்து பார்க்கத் தெரியாத பக்தன்தான் சண்டைக்கு வருவான். அவன் மனோ நிலைக்கு அது சரிதான். ஆனாலும் ஈஸ்வரன் எல்லா வித நாமரூபங்களையும் தாண்டினவன். மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத ஈஸ்வரனை குறிக்கவே பெயர்கள் சாதனங்கள் ஆகின்றன. பிரிக்க முடியாத ஈஸ்வர தத்துவத்தை பிரித்து காட்ட பயன்படுவதே ரூபம் என்று உணர்ந்திருக்கும் உத்தம பக்தனுக்கு இவன் எவ்வளவோ கீழ்தான்!

 

Thursday, October 18, 2012

பைத்தியம்!


சமீபத்தில், பாண்டிச்சேரியில் ஒரு ஞாயிறு அன்று நொச்சூர் வெங்கட்ராமன் அவர்களின் உபன்யாசம் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. ஒரு பத்து பதிவுகளுக்கு விஷயம் தேறிவிட்டது! :-))
கேரளாவில் ஒரு கிராமத்தில் ஒருவர் இருந்தார். ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும் அவரை மக்கள் பைத்தியம் என்றே அழைப்பர். ஒரு கால் நொண்டி வேறு. ஊருக்கு அருகில் ஒரு சிறு குன்று உண்டு. அதன் அடிவாரத்தில் ஒரு சிறு ஓடை. தினசரி காலை இந்த பைத்தியம் ஒரு பெரிய கல்லை கஷ்டப்பட்டு உருட்ட ஆரம்பிக்கும். தூக்க முடியாத அளவு பெரிது. அதனால் அதை உருட்டி குன்றின் மேலே ஏற்றும். ஒரு வழியாக குன்றின் உச்சியை அடையும் போது மாலை ஆகிவிட்டு இருக்கும்! உச்சியை அடைந்த பிறகு பெருத்த சத்தத்துடன் அதை கீழே உருட்டி விடுவார்! அது உருண்டு கீழே வந்து ஓடையில் பெரிய சத்தத்துடன் விழும்!
இது தினசரி நடந்து கொண்டு இருந்தது!
மக்கள் இது குறித்து அவரை கேலி செய்வர். "ஏண்டா? ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு அதை மேலே உருட்டிக்கொண்டு போகிறாய்? சரி, அதை மேலே கொண்டு வைத்தாலும் பரவாயில்லை. அங்கே கொண்டு போன பிறகு கீழே உருட்டி விடுகிறாய்! போகட்டும். ஏன் திருப்பி அடுத்த நாளும் மேலே உருட்டிக்கொண்டு போகிறாய்? நீ சரியான பைத்தியம்!" அவரோ சிரித்துக்கொண்டே இருப்பார்.
ஒரு நாள் பொறுக்க முடியாமல் அவருடைய அண்ணா கேட்டார், “ ஏன்டா இபப்டி இருக்கிறாய்? எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏன் இப்படி கல்லை தினசரி மேலே கொண்டுப்போய் உருட்டி விடுகிறாய்?”
பதில் வந்தது: “அது உருண்டு கீழே ஓடையில் பொத் என்று விழும் போது சிரிப்பாக இருக்கிறது”
இந்த க்ஷண நேர இன்பத்துக்கா இப்படி செய்கிறாய்?”
நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள்? வாழ்வில் சிறிது நேர மகிழ்ச்சிக்கு நாள் முழுதும் பாடுபடவில்லையா?”
 

Wednesday, October 17, 2012

உண்மையான பக்தி -4


பக்தர்: பக்தி விஷயமாக இன்னொன்று கேட்க விரும்புகிறேன். கேட்கலாமா?

ஸ்வாமி: கேளுங்கள், என்ன விஷயம்?

அநேக பக்தர்கள் சிரத்தை உள்ளவராயும் சாத்வீகமாயும் இருந்தாலும் தன் உபாஸ்ய தேவதையைத் தவிர வேறு எந்த தேவைதையையாவது யாரும் தன் காது பட துதித்தால் உடனே அதை ஒரு வியவகாரமாக்கி வசவை ஆரம்பித்து விடுகிறார்கள் என்பதை பார்த்து இருக்கிறேன். இப்படி பொறுத்துக்கொள்ள முடியாத மனோ பாவம் உண்மை பக்தியுடன் பொருந்துமா?

பொருந்தாது என்பதில் ஐயமில்லை. இந்த மனோ பாவம் நல்ல பக்தர்களிடம் இராது. பக்தியின் உண்மை ஸ்வரூபத்தை அறியாமலும், தங்களால் உபாசிக்கப்படுவதாக சொல்கிற ஈஶ்வரனின் ஸ்வரூபம் எப்படி உள்ளதென அறியாமலும் இருக்கிறவர்களிடம்தான் இந்த மனோ பாவம் காணப்படும்.
ஜகத்தை நிர்வாகம் செய்து கொண்டு ஸர்வேஸ்வரனாக இருக்கும் பர வஸ்து நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த நாம ரூபங்கள் அசேதனமான ப்ரக்ருதியை சேர்ந்தவையே. கொஞ்சமாவது ப்ரக்ருதி சம்பந்தத்தை ஏற்படுத்தாமல் ஈஶ்வரனுக்கு என்று நாம ரூபம் இருக்க முடியாது. “பாதோsஸ்ய விஶ்வா பூதானி" என்று புருஷ ஸூக்தத்தில் சொல்லி உள்ளபடி நாம ரூபமுள்ள ப்ரபஞ்சமே அவருடைய பாத மாத்திரமே (கால் பாகம்) ஆகும். ஶ்வர தத்துவத்தில் இதற்கு மேலாக இருக்கும் பெரிய பாகத்தை ஒரு பொழுதும் நாம் நேரடியாக அறிய முடியாது. அவரது பாதம் மட்டுமே நமக்கு தெரியக்கூடும். அந்த பாதத்தை சேவிப்பதாலேயே அவரை சேவிக்க வேண்டி இருக்கிறது.
ப்ரபஞ்சத்தில் உள்ள தேவர்கள், பித்ருக்கள், மனுஷ்யர்கள், மிருகங்கள் முதலானவை அடங்கிய இதர விஷயத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நம்மை எப்படி நடத்திக்கொள்ள வேன்டுமென்றும் சாஸ்திரங்களில் சொல்லிய படி நடத்திக்கொள்வதுதான் கர்மா எனப்படுகிறது. அதுவே ஈஶ்வரனின் பாத சேவை. அந்த பாதத்தில் ஊக்கத்துடன் இடையறாத சேவை செய்துநம் பக்தியினால் ஈஶ்வரனுக்கு த்ருப்தி ஏற்பட்டு, நம்மை கை தூக்கி நிறுத்தி அவர் முகத்தை நேரில் காணும் வாய்ப்பை கொடுத்தால், அப்போது அவர் நெற்றியில் இருப்பது விபூதியா கோபி சந்தனமா என்று பார்த்துக்கொள்ளலாம்.
நாமோ ஏணிப்படியின் அடியில் இருக்கிறோம். பகவானின் பாத பிரகாசமே இன்னும் சரியாக புலப்படவில்லை. அப்படி இருக்க அவரது முகத்தின் தன்மை பற்றி ஏன் ஊகிக்கவும், வியவஹாரம் செய்யவும் வேண்டும்? நம் காலமும் சக்தியும் மட்டுமே விரயமாகும். உண்மை பக்தி உள்ளவன் இதில் நேரத்தியும் ச்கதியையும் வீணாக்க மாட்டான்.ஶ்வரன் எனில் உலகை உருவாக்கி, காப்பாற்றி, அழிப்பவன் என்கிற சுருக்கமான லக்ஷணம் போதும் அவனுக்கு. அவருக்கு எந்த பெயர், உருவம் கொடுத்தாலும் ஆட்சேபணை செய்ய மாட்டான். ஏனெனெனில் அவை ஈஶ்வர தத்வத்தை சேர்ந்தவை அல்ல என்றும் அந்தந்த பக்தரின் நலனை உத்தேசித்து சொல்லப்படுகிறவைதான் என்றும் அவன் அறிவான். தன்னைக்குறித்து பகவானால் ஆணையிடப்படுகிறவை அடங்கியதே வேதங்கள் என்றும், வேதங்கள், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மாக்களை ஒழுங்காக செய்து வருவதே பகவானின் அனுக்ரஹத்தை சம்பாதிக்க வழி என்றும் பகவத் ஆராதனத்தை தான் சரியாக செய்ய இது ஒன்றே வழி என்றும் அறிந்திருப்பான்.

Monday, October 15, 2012

மாளய அமாவாசை -2


இதில் முக்கிய விஷயம் ஒன்றை இன்னும் சரியாக சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

தேவர்கள் எப்படியும் 33 கோடி. யாரேனும் பூஜை ஹோமம் செய்வர். இவர்தான் செய்ய வேண்டும் என்றில்லை. மேலும் அவர்கள் இருப்புக்கு காரணம் அவர்களே முன்னே செய்த புண்ணியங்களும் சில கர்மாக்களும் ஆகும். ஆகவே அவர்கள் இருப்பு அவை பலன் கொடுக்கும் காலம் ஆகும். பின் மீண்டும் மனித பிறவி எடுத்து விடுவர்.

பித்ருக்கள் விஷயம் அப்படி இல்லை. மனிதராக பிறந்த அனைவருமே இறக்கும் போது பித்ரு ஆகிவிடுவர். அவர்களது சந்ததி மட்டுமே அவர்களுக்கு ஆராதனம் செய்ய முடியும். (ஆத்ம பிண்டம், காருண்ய பித்ரு சமாசாரம் தவிர.) வேறு யாரும் செய்ய இயலாது. வாழ்ந்த வரை இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையானாலும் இறந்த பின் நிலமை தெரிய வருமாததால் ஜீவித்திருந்த போது சுத்த நாத்திக வாதியாக இருந்திருந்தாலும் இறந்த பின் அவருடைய சந்ததியினருக்கும் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் தர்பணம் முதலிய செய்தே ஆக வேண்டும். “என் தகப்பனாருக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே கிடையாதே" என்பதற்கு இடமில்லை. இறந்தவருக்கு நம்பிக்கை இல்லாததால் சரியாக இறுதி கர்மா செய்யவில்லை, மாதா மாதம் தர்பணம் முதலியன் செய்யவில்லை, இப்போது பிரச்சினைகளுக்கு ஜோதிடர்கள் பித்ரு சாபம் என்கின்றனர், என்ன செய்வது என்றால்..... இந்த மாதிரி இப்போது அதிக அளவில் கேள்விகள் எழுகின்றன. ராமேஸ்வரம் சென்று அங்கே இப்படி அதிகம் பேர் வருவதால் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்துள்ளதால் இவற்றுக்கு சரியாக பிராயச்சித்தங்கள் செய்து வைக்கின்றனர். வேண்டுவோர் பயன் பெறுங்கள்.

உண்மையான பக்தி 3

பக்தர்: அப்படியானால் பஜனைக்கு என்னதான் பயன்? அத்தனையும் வீண்தானா?

ஸ்வாமி: எஜமானன் கொடுத்த வேலைகளை எல்லாம் முறைப்படி முடித்துவிட்டு, அவகாசம் இருந்தால், வேணுமானால் அவன் சமீபத்தில் போய் நிற்கட்டும். வேலை பாக்கி இருக்கும்போது அப்படி போய் நிற்கக்கூடாது. அதே போல தனக்கு ஏற்பட்ட சகல கர்மாக்களையும் செய்து முடித்தபின் அவகாசம் இருந்ததானால் ஈஸ்வரனை துதிக்கட்டும், பிரார்த்தனை செய்யட்டும். அவகாசத்தை இப்படி நல்ல வழியில் உபயோகித்துக் கொள்ளலாம். ஆகவே கர்மாக்களின் இடையில் கிடைக்கக்கூடிய அவகாசத்துக்கு ஏற்பட்டதுதான் இந்த பஜனை என்பது.

ஸ்ருதி ஸ்ம்ருதிகளால் சொல்லப் பட்ட கர்மாக்களை முடித்துதான் பஜனை என்றால் அந்தணனுக்கு பஜனை செய்ய அவகாசமே இராது என்று தோன்றுகிறது.

அப்படியல்ல. சோம்பேறிகளுக்குத்தான் அவகாசம் கிடைக்காது என்று தோன்றும். காரியம் செய்து கொண்டே இருப்பவர்களுக்கு எப்போதும் அவகாசம் கிடைக்கும்.

எப்படியும் வைதீக கர்மாக்களை முடித்துதான் பஜனை என்றால் அந்தணர் அல்லாதவர்களுக்கே அதிக நேரம் கிடைக்கும் என்று தோன்றுகிறது. அவர்களுக்கு வைதீக கர்மாக்கள் மிகவும் குறைவு. ஆகவே பஜனைக்கு அவர்களே முக்கிய அதிகாரிகள் ஆவர் என்று தோன்றுகிறது.

அது அப்படியேதான்.

இந்த விஷயத்தில் அந்தணனுக்கு மற்றவர்களுக்கு சமமான அதிகாரம் இல்லை என்பது நியாயமாகுமா?

முன் சொன்னபடி, அதிகாரமே இல்லை என்று சொல்லவில்லையே! அவகாசம் கிடைக்கும் போது வைத்துக்கொள்ளலாம் என்றே சொன்னேன். பகவானை புகழ்வதை விட அவனது கட்டளைகளை நிறைவேற்றுவதே முக்கியம் என்பதை மறக்க வேண்டாம். இன்னொரு விதமாகவும் யோசித்துப்பாருங்கள்.

எப்படி?

எஜமானன் எதிரிலேயே நிற்க பிரியப்படும் சேவகன் அப்படி பார்ப்பதிலேயே தன் சுகம் இருக்கிறது, வேலை செய்ய அப்புறம் போனால் இந்த சுகம் போய்விடும் என்று பயப்படுகிறான்.

அப்படியே!

ஆகையால் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயிக்க தன் சுகத்தையே முக்கியமாக வைக்கிறான். எஜமானனின் திருப்தியை முக்கியமாக கருதவே இல்லை.

ஆழ்ந்து கவனித்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

யஜமானனின் திருப்தியை அலட்சியம் செய்தோ, கவனிக்காமலோ அதை விட தன் திருப்தியை முன் வைத்த இவனை எப்படி பக்தி கொண்டவனாக கருத முடியும்?

முடியாதுதான்.

அதே போல பக்தன் என்று சொல்லிக்கொண்டு, பகவானின் கட்டளைகளை மதிக்காமல் உதாசீனம் செய்துவிட்டு மனம்கவர் இசையுடன் அவருடைய குணாதிசயங்களை பாடி வருகிறேன் என்றால், அவனை எப்படி பக்தன் என்று சொல்வது?

சொல்ல இயலாதுதான்.

மேலும், அவன் பகவானை தனக்கு சுகானுபவத்துக்கு ஏற்படுத்திய ஒரு அழகிய போகப்பொருளாக நினைக்கிறான் அல்லவா? சர்வமும் அறிந்தவனை, சர்வமும் இயன்றவனை தனக்கு ஒரு விளையாட்டுப்பொருளாக இறக்கி மதித்துவிட்டால் இதை விட என்ன அபசாரம் வேண்டும்?
ஈஸ்வரனை போக்ய வஸ்துவாக அனுபவிக்க நினைப்பது பெரும் அபசாரமாகும். அப்படி நினைப்பவன் ஒரு நாளும் பக்தனாகவே மாட்டான். அவருடைய கட்டளைகளை அப்படியே நிறைவேற்றுவதே உண்மையான பக்தி. காரியத்தில் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படியாமல் இருந்து கொண்டு வாயால் நான் பக்தன் என்று சொல்வது மஹா பாபமாகும். லஞ்சம் வாங்கின பணத்தை மடியில் வைத்துக்கொண்டே நான் லஞ்சம் வாங்கவில்லை என்று வியவகாரியம் செய்பவன் போலத்தான் இதுவும். வாக்கு, மனது, காரியம் மூன்றிலும் ஒருமைப்பாடு இருக்க வேண்டும்.
--

Saturday, October 13, 2012

"மாளய அமாவாசை"

வரும் திங்கட்கிழமை (15-10-2012) "மாளய அமாவாசை".
தேவர்களை ஆராதிக்க எப்படி மார்கழி மாதம் மிகச்சிறந்ததாக கருதப்படுகிறதோ அதே போல பித்ரு ஆராதனத்துக்கு புரட்டாசி மாதம் - சரியாக சொல்லப் போனால் பாத்ரபத மாதம் - முக்கியமானதாகும். பாத்ரபத தேய்பிறை பிரதமை முதல் வளர்பிறை பிரதமை வரை உள்ள காலம் மஹாளய பக்ஷ புண்ய காலம். அச்சமயம் எல்லா பித்ருக்களும் பூலோகத்துக்கு வந்து விடுகிறார்கள்.
சாதாரணமாக பித்ருக்கள் எதிர்பார்ப்பது மாதம் ஒரு முறை ஆராதனம். நமக்கு ஒரு நாள் போல அவர்களுக்கு ஒரு மாதம். நாம் இரவு தூங்கி காலை விழிப்பதுபோல அவர்கள் தேய்பிறையில் துயின்று அமாவசை அன்று விழிக்கிறார்கள். அதனால்தான் விழித்தவருக்கு உணவு கொடுப்பது போல அவர்களுக்கு அமாவாசை அன்று எள்ளும் நீரும் இறைத்து தர்பணம் செய்கிறோம்.
விதி விலக்காக அவர்கள் மஹாளய பக்ஷம் முழுதுமே ஆராதனம் ஏற்க தயாராக இருக்கிறார்கள்.

தேவர்களின் ஆராதனத்துக்கும் பித்ரு ஆராதனத்துக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது.

தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் தொடர்பு "பரஸ்பரம் பா4வந்த: ஶ்ரேய: பரம் அவாப்ஸ்யத2" என்று ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிற சமாசாரம்.

தேவர்களுக்கு ஆராதனம் செய்ய வேண்டியது ஒரு பக்ஷத்துக்கு ஒரு முறை. (இஷ்டி, ஸ்தாலீபாகம் போன்ற கர்மாக்களை சொல்கிறோம்.) பின்னே தினசரி பூஜை செய்ய வேண்டி இருக்கிறதே என்றால் அது அவர்களது உண்மை ஸ்வரூபத்தை நாம் காண முடியாமல் மனிதர்கள் போல பாவிப்பதால், அவர்களுக்கும் மனிதர்களுக்கு தினமும் உணவளிப்பது போல தினசரி பூஜை செய்ய வேண்டி இருக்கிறது.

தேவர்கள் ஆராதனம் செய்தால் சந்தோஷிக்கிறார்கள்; அனுக்ரஹம் செய்கிறார்கள். ஆராதனம் செய்யாதவர்கள் குறித்து அவ்வளவு பொருட்படுத்துவது இல்லை. கர்மா, புண்ணியம் செய்து தேவர்கள் ஆனதால் அவர்களுக்கு அந்த புண்ணிய பலத்திலேயே இருப்பு ஏற்படுகிறது.

ஆனால் பித்ருக்கள் அப்படி இல்லை. அவர்கள் ஆராதனத்தை எதிர்பார்க்கிறார்கள். நடக்காவிட்டால் அது குறித்து தாபம் அடைகிறார்கள். அவர்களது இருப்புக்கு அது முக்கியம். இவர்கள் எதிர்பார்க்கும் இதை சரிவர செய்யாவிட்டால் அவர்களது கோபமும் சாபமும் நம்மை பாதிக்கின்றன. எப்படி எனில்....

பருவுடலை நீத்தவர் வசு, ருத்ர, ஆதித்ய ரூபமாக காரண சூக்ஷ்ம சரீரத்துடன் இருக்கிறார்கள். இதை விட்டு இவர்கள் தன் மாத்திரைகளுடன் லயமாக வேண்டும். இந்த தன் மாத்திரைகள்தான் பஞ்ச பூதங்களுக்கும் தோற்றக்காரணம்; அவற்றின் இருப்புக்கும் குணங்களுக்கும் அவையே காரணம். ஆகவே பித்ருக்கள் உலகின் ஒவ்வொரு உயிருடனும் தொடர்பில் இருக்கிறனர். ஆகவே இவர்களுக்கு ஏற்படும் ஒரு சிறு சஞ்சலம் கூட நமக்கு மிகப்பெரிய துன்பங்களை கொண்டு வந்து சேர்த்துவிடும். அவை ஆத்யாத்மிக, ஆதி தைவிக, ஆதி பௌதிக துன்பங்களாகக்கூட இருக்கலாம்.
இதனால்தான் நீத்தார் கடனை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பது. ஶ்ரத்34யா ஆசரித ஶ்ராத்34: என்ற படி அதன் பெயரே அப்படித்தான் உருவாக்கி இருக்கிறது. சரியான நேரத்துக்கு செய்தல் முதற் கொண்டு எல்லா நியமங்களும் சரியாக கடைபிடிக்கத்தக்கவை.
தமிழிலக்கியங்களும் "தென் புலத்தோர்க்கு ஊட்டினரே வீடடைவர்" என்றும் "தேவர், தென்புலத்தோர், துறந்தவர்க்கு அளித்த சேடம் நல் அமுதினும் இனிதாம்" என்றும் சொல்கின்றன.
(ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் பத்திரிகை படித்த போது தோன்றிய சில எண்ணங்கள்..... இதிலுள்ள சில மேற்கோள்கள் அதிலிருந்து எடுத்தது.)