Pages

Friday, October 12, 2012

உண்மையான பக்தி - 2

 
ஸ்வாமி: உண்மையில் கர்மாதான் பக்தியாகும் என்றும், கர்மாவுக்கு விரோதமாகவாவது அல்லது கர்மாவை விட்டாவது செய்யும் பஜனை பக்தியே ஆகாது என்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அடியார்: அதெப்படி?

பகவத் கீதையில் (18 – 46) “தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்" என்று சந்தேகத்துக்கே இடமின்றி பகவானே சொல்கிறார்.

यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः ॥१८- ४६॥

யத: ப்ரவ்ருத்திர்பூ⁴தாநாம் யேந ஸர்வமித³ம் ததம் |
ஸ்வகர்மணா தமப்⁴யர்ச்ய ஸித்³தி⁴ம் விந்த³தி மாநவ: || 18- 46||யத: பூ⁴தாநாம் ப்ரவ்ருத்தி = எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ
யேந இத³ம் ஸர்வம் ததம் = எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
தம் = அந்த பரமாத்மாவை
ஸ்வகர்மணா அப்⁴யர்ச்ய = தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும்
மாநவ: விந்த³தி = மனிதன் ஈடேறுகிறான்

உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.
இங்கே அவரவர்களுக்கு ஏற்பட்ட கர்மாவை அனுஷ்டிப்பதே தன்னை ஆராதனம் செய்யும் வழி என்ற தத்துவத்தை விளக்கி இருக்கிறார்.

பகவானிடம் பக்தியை காட்ட இந்த கர்மா அனுஷ்டிப்பதுதான் ஒரே வழியா?

யாருக்கெல்லாம் கர்மா விதித்து இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் இது மட்டுமே வழி.

ஈஸ்வரனை ப்ரார்தித்துக்கொண்டு, த்யானம் செய்வதிலேயே காலம் கழிக்கிற பக்தன் வெளிப்படும் கர்மாக்களை செய்வதில் வேகம் இருக்கிற பக்தனைவிட மேலானவன் இல்லை என்று வைத்துக்கொண்டாலும், அவனுக்கு சமமாக இருக்க வேண்டுமே?

தார தம்யம் சொல்வதற்கே இடமில்லை. ஒருவனுக்கு கர்மா கட்டாயமாக விதிக்கப்பட்டு இருக்கும்போது, அதை உதாசீனம் செய்துவிட்டு, மானசீகமாக பிரார்த்தனையோ த்யானமோ செய்கிறேன் என்றால் அவன் பக்தனாகவே ஆகமாட்டான்.

ஏன் அப்படி?

சாமான்யமாக ஒரு யஜமானனையும் அவரிடம் வேலை செய்கிற சேவகர்களையும் கவனிப்போம். ஒரு சேவகன் அவரெதிரில் நின்று கொண்டு அவரை புகழ்ந்து கொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளலாம். ஒரு வேளை அந்த எஜமானன் சேவகனைப்பார்த்து அடுத்த அறையில் இருக்கும் ஒரு பொருளை கொண்டு வரச் சொல்கிறார். அதற்கு அந்த சேவகன் "எஜமானரே, ஒரு வினாடிகூட உங்கள் எதிரில் இல்லாமல் இருக்க என்னால் முடியாது. பெருமை பொருந்திய, வசீகரமாக இருக்கும் உங்கள் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கும் பாக்கியத்தை ஒரு நிமிடமும் இழக்க சம்மதியேன். எப்போதும் உங்கள் எதிரேயே இருந்து கொண்டு உங்கள் நற்குணங்களை பாடி தங்களை துதித்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன்!” என்கிறான்.

இன்னொரு வேலைக்காரன் இருக்கிறான். அவன் எஜமானன் எதிரில் வருவது கூட கிடையாது. அவன் எஜமானன் நேரிடையாகவோ அல்லது வேறு நபர்கள் மூலமாகவோ தனக்கு இடப்பட்ட எல்லா வேலைகளையும் குறைவின்றி நேர்த்தியாக செய்து வருகிறான். எஜமானன் எங்கு பார்த்தாலும் அவன் பூர்ண மனதுடன், திருப்தியான முறையில் செய்து முடித்த வேலையையே காண்பானே ஒழிய அவன் வெட்டியாக நிற்பதை காண மாட்டான்.
இப்போது சொல்லுங்கள், இந்த இரண்டு பேரில் யார் அதிக எஜமான விஸ்வாசம் உள்ளவன். யாரிடத்தில் எஜமானனுக்கு அதிக திருப்தி இருக்கும்?

பின்னால் சொன்னவனிடத்தில்தான்.

ஒரு பையன் அப்பா மடியிலேயே உட்கார்ந்து கொண்டு இருக்கிறான்; அவனை என்ன சின்ன காரியம் செய்யச்சொன்னலும் செய்வதில்லை. இன்னொருவன் தகப்பனார் சொன்னால் வேலைகளை செய்ய உடனே வெளியே ஓடவும் செய்கிறான். யாரிடம் தகப்பனுக்கு அதிக ப்ரீதி ஏற்படும்?

சொல்கிறபடி கேட்கும் பின்னவனிடத்தில்தான்.

யஜமானன் அல்லது தகப்பன் முன்னிலையை விட்டு அகலமாட்டேன் என்னும் வேலைக்காரனிடமோ அல்லது பையனிடமோ கொஞ்சமாவது பக்தி இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அவர்கள்தான் எது சொன்னாலும் கேட்கத்தயார் இல்லையே?

சொன்னபடி கேட்காமல் இருப்பதற்கும் பக்திக்கும் வெகு தூரம்தான்.

அப்படியேத்தான். பக்திக்கு முதல் அடையாளமே சொன்னபடி கேட்பதுதான். ஏன் எதற்கு என்றேல்லாம் கேட்காமல், பிரியத்துடன் செய்ய வேண்டும். வாதாடிக்கொண்டோ, முண முணத்துக்கொண்டு கடனுக்கே என்று செய்வது பக்தியாகாது.

உண்மைதான்.

ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் என் கட்டளைகள் என்று பகவான் சொல்கிறார். இந்த கட்டளைகளை மீறிக்கொண்டோ அல்லது இந்த மீறுதலையே அடிப்படையாக கொண்டோ நடந்து வந்தால் அந்த சமயம் அவனிடம் பக்தி என்பது இருக்குமா? அப்படி யாரும் சொல்ல முடியுமா?

கர்மாவுக்கு பதிலாக பஜனை பயன்படாது என்று இப்போது தெரிந்துகொண்டேன்.

ஒரு நாளும் பதிலாகாது

அப்படியானால் பஜனைக்கு என்னதான் பயன்? அத்தனையும் வீண்தானா?
Post a Comment