பக்தர்: சிவ பக்தனாக இருப்பவர் உலகின் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் சிவனே என்றும், விஷ்ணு பக்தர்கள் விஷ்ணுவே என்றும் இதே போல மற்றவர்களும் சொல்கிறார்களே!
ஸ்வாமி: மேல் பார்வைக்கு அப்படி தோன்றலாம். சிவ பக்தர்களின் எண்ண ஓட்டத்தை கவனித்தால் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் ஒருவரே என்றும் அவர் பெயர் சிவன் என்றும் பொருள்படும். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் விஷ்ணு என்றோ வேறு யாரும் என்றோ ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அத்தகைய சக்தி வாய்ந்தவர்கள் பலர் இருப்பதாகவோ அவர்களுக்குள் சிவன் மிகச்சக்தி வாய்ந்தவர் என்றோ சொல்வதில்லை. அவன் நம்புவதும் சொல்வதுவும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் ஒருவரே, அவர் சிவனே என்பது. அனேக ஈஸ்வரர்களை அவன் ஒப்புக்கொள்வது இல்லை. ஒரே ஒரு ஈஸ்வரர்தான்; அவர் சிவன்தான்.
உண்மை! ஆனால் அதே போல விஷ்ணு பக்தனும் இப்படியேத்தானே விஷ்ணு பற்றி நினைக்கிறான்? அதே போலத்தானே கணேசர், ஸுப்ரமணியர், அம்பாள் முதலானவர்களுடைய பக்தர்களும் நினைக்கிறார்கள்? இவர்களில் யார் சொல்வதை ஒப்புக்கொள்வது? பரஸ்பரம் விரோதமாக இருப்பதால் எல்லாருடைய எண்ணங்களையும் ஒப்புக்கொள்ள முடியாதே!
எந்த பக்தரும் அனேக ஈஸ்வரர்கள் உண்டு என்று சொல்வதில்லை என்பது சரிதானே?
ஆம்!
எல்லாரும் ஒரே ஒரு ஈஸ்வரன் உண்டு என்று சொல்கிறார்களா இல்லையா?
ஆம்!
ஈஸ்வர லட்சணமாக சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் என்றும் சொல்கிறார்களா இல்லையா?
அப்படியே!
ஆனால் அந்த ஈஸ்வரனின் பெயர் என்ன என்பதில் வித்தியாசப்படுகிறார்கள்.
ஆம்.
அவர்கள் சொல்லும் ஈஸ்வர லட்சணத்தில் தவறு இல்லை; அத்துடன் ஒரே ரூபம் என்றே சொல்கிறார்கள்.
ஆம்.
உங்கள் முன் ஒரு மணி அரிசி இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அரிசியின் லட்சணங்கள் எல்லாம் அதில் இருப்பதை தெரிந்து கொண்டு அது அரிசியே என்று தீர்மானிக்கிறீர்கள். அப்போது தமிழ் பேசுபவன் ஒருவன் வந்து அது அரிசி என்று சொல்லிப்போகிறான். கன்னடம் பேசுபவன் வந்து அது அக்கி என்று சொல்லிப்போகிறான். சம்ஸ்க்ருத வல்லுனர் ஒருவர் வந்து அது தண்டுலம் என்று சொல்லிப்போகிறார். இதில் உங்களுக்கு ஏதும் பிரச்சினையா?
பெயர்கள் பொருளின் சுயரூபத்தில் சேராத வெளி அம்சம் என்று உங்களுக்கு தெரியவில்லையா? நாம ரூப பிரபஞ்சத்தில் அதற்கு ஏதும் பிரயோசனம் இருக்கலாம். அதே மாதிரி சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களை செய்பவர் என்கிற லட்சணம் இருந்ததேயானால், சிவன் என்று சொன்னால் என்ன, விஷ்ணு என்றூ சொன்னால் என்ன, தேவீ என்று அழைத்தால்தான் என்ன? பெயர்கள் வித்தியாசமாக இருந்தாலும் சொல்லப்படுகிற வஸ்து ஒன்றே அல்லவா?
கன்னடம் சம்ஸ்க்ருதம் தெரியாத தமிழன் அரிசியை அரிசி என்றும் நிச்சயம் அதற்கு அக்கி என்றோ தண்டுலம் என்றோ பெயர் கிடையாது என்றும் சொல்லுவான். அவனுக்கு பரிச்சயமான தமிழ் மொழியில் அவை இல்லை என்பதால் அவனைப் பொறுத்தவரை அது சரிதானே? அவனிடம் அப்படி ஒரு பெயர் இல்லை என்றால் அவன் அரிசி என்று ஒரு வஸ்து இல்லை என்று சொல்வதாகத்தான் நினைப்பான்.
ஆலோசித்து பொருளில் இருந்து பெயரை பிரித்துப்பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். இபப்டி பிரித்து பார்க்கத் தெரியாத பக்தன்தான் சண்டைக்கு வருவான். அவன் மனோ நிலைக்கு அது சரிதான். ஆனாலும் ஈஸ்வரன் எல்லா வித நாமரூபங்களையும் தாண்டினவன். மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத ஈஸ்வரனை குறிக்கவே பெயர்கள் சாதனங்கள் ஆகின்றன. பிரிக்க முடியாத ஈஸ்வர தத்துவத்தை பிரித்து காட்ட பயன்படுவதே ரூபம் என்று உணர்ந்திருக்கும் உத்தம பக்தனுக்கு இவன் எவ்வளவோ கீழ்தான்!
1 comment:
ஆனாலும் ஈஸ்வரன் எல்லா வித நாமரூபங்களையும் தாண்டினவன். மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத ஈஸ்வரனை குறிக்கவே பெயர்கள் சாதனங்கள் ஆகின்றன. பிரிக்க முடியாத ஈஸ்வர தத்துவத்தை பிரித்து காட்ட பயன்படுவதே ரூபம் என்று உணர்ந்திருக்கும் உத்தம பக்தனுக்கு இவன் எவ்வளவோ கீழ்தான்!//
மனதில் கொள்ள வேண்டிய ஒன்று.
Post a Comment