Pages

Tuesday, October 23, 2012

விஜயதசமி வாழ்த்துகள்!

 
எல்லோருக்கும் ஸரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகள்! இறைவன் அருளால் சில நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த கன மழை இரண்டு நாட்களாக நீங்கி விட்டது. மக்கள் கடைவீதிகளில் கூடுகிறார்கள். பூஜைக்கு ஆயத்தம் ஜோராக நடக்கிறது. வெயிலும் சிறு மழையும் கண்ணாமூச்சி ஆடுகின்றன! ரம்யமான சூழ்நிலை!

குழந்தைகளுக்கு கொண்டாட்டம்! இன்று புத்தகங்களை தொடவே வேண்டாமே! வேண்டுமென்று புத்தகங்களை எடுக்க பாவனை செய்து அம்மா, “ஏய், அது சாமி! தொடக்கூடாது, இன்னிக்கு படிக்கக்கூடாது” என்று சொல்வதை கேட்க தனி ஆனந்தம்! இந்த மாதிரி அடிக்கடி வரக்கூடாதா என்று கூட ஏங்கும்
 
குழந்தைகள் உலகமே தனி. அவற்றுக்கு தன் எல்லை எது என்று தெரியாது. வளரும் குழந்தைகள் பற்றி அவற்றின் தாயார், தந்தை, தாத்தா பாட்டி எப்போதும் பேசிக்கொள்வதே இதுதானே? "அம்மா, உங்க பேரன் இன்னிக்கு தானே உக்கார கத்துக்கொண்டான்", “இன்னைக்கு உங்க பேத்தி ஸ்லோகம் சொன்னாள்” ரீதியில் முன்னேற்றங்களை கேட்பதில் ஒரு தனி ஆனந்தம் இருக்கிறது! இத்துனூண்டு குழந்தைக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது என்று ஆச்சரியப்படாத நாளே இல்லை என்றாகிவிடும். அப்புறம் பள்ளிக்கு போக ஆரம்பித்து எல்லாம் மாறிவிடும்! இதை செய்யாதே, அதை தொடாதே என்ற கட்டளைகளைத்தான் குழந்தைகள் அப்புறம் கேட்க வேண்டும். இது வரை தன்னால் முடியாது என்று ஒன்றே தெரியாமல் இருந்து இப்போது மாறிவிடும்.

சின்னக்குழந்தையாக இருக்கும் போது எதுவானாலும் தொட்டுத் தடவிப்பார்த்து, வாயில் போட்டுக்கொண்டு, கீழே தரையில் அடித்து, அது எப்படி ஏன் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்வதே குழந்தையின் ஸ்ட்ராங் பாய்ண்ட்! வளர்ந்த பின் அப்படி செய்தால் இரண்டு உதை விழும்! பலரும் செய்யாதே செய்யாதே என்பார்களே தவிர இப்படி செய் என்று மாற்றாக கற்று தருவதில்லை. அதனால் குழந்தை சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கற்றுக்கொள்வது நின்று போகிறது. இந்த "செய்யாதே" ஐ கேட்டு கேட்டே நாமும் கெட்டு போய்விட்டோம்!

பல விஷயங்களிலும் நமக்கு ஒரு மனத்தடை இருக்கிறது. இது என்னால் முடியாது; இது என் சக்திக்கு அப்பாற்பட்டது; சான்ஸே இல்லை என்று நமக்கு நாமே அடிக்கடி சொல்லிக்கொள்கிறோம். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஆன்மீக விஷயங்களில் பலர் இப்படி மனத்தடையுடன் இருப்பதை காண்கிறேன்! நம்மை நாமே சரியாக அறிவதில் வெளியில் இருந்து எப்படி தடை வர முடியும்?

ஆனாலும் பலரும் "ஆன்மீகமா? இல்லை, எனக்கு இது சுத்தமாக புரியாது; ஜபமா? நேரமே கிடையாது; பூஜையா? அது பெண் பிள்ளைகள் விஷயம்" என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லி தப்பிப்பதை பார்த்து இருக்கிறேன்!

முன் காலத்தில் ராஜாக்கள் ஒரு பழக்கம் வைத்து இருந்தார்களாம். என்னதான் சின்ன ராஜா என்றாலும் விஜய தசமி என்று அடுத்த நாட்டு எல்லையை தாண்டி கொஞ்ச தூரமாவது சென்று வருவார்களாம்! அதே சமயம் அந்த நாட்டு ராஜா இவருடைய எல்லையை எங்காவது தாண்டுவாராக இருக்கும்! அதற்காக அடுத்த நாட்டு ராஜாவுடன் சண்டைக்கு போக மாட்டார்கள்தான்! இருந்தாலும் சம்பிரதாயமாகவாவது இதை செய்வார்களாம். ஏன் என்றால் அதுதான் விஜயதசமியை கொண்டாடும் விதம்! எல்லையை தாண்டுதல்!

நாமும் நம்மைச்சுற்றி ஆன்மீகம் குறித்த சில, பல எல்லைகளை - தடைகளை போட்டு வைத்துக்கொண்டு இருக்கிறோம் அல்லவா? அவற்றையும்தான் கொஞ்சம் இந்த ஒரு நாளாவது தாண்டிப்பார்க்கலாமே! 24 மணி நேரத்தில் 20 நிமிஷமாவது இறைவனுடன் இருக்க பழகுவோம்! அடிப்படையாக நாம் செய்ய வேண்டும் என்று சாத்திரங்கள் சொல்லி இருப்பதில் சிலவற்றையாவது நம்மால் முடிகிறதா இல்லையா என்று செய்து பார்த்துவிடலாம்!

எல்லோருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்!

3 comments:

sury siva said...

Navarathri Greetings.

subbu rathinam.

Kavinaya said...

நல்ல யோசனை!
விஜயதசமி வாழ்த்துகள், உங்களுக்கும்!

திவாண்ணா said...

சுப்பு சார், மீனா, நன்றி!