Pages

Tuesday, October 9, 2012

ஸூர்யோபாசனை - 6



அப்படியானால் தாங்கள் சொல்வதை நான் எப்படி எடுத்துக்கொள்வது?

சூரியன் உபாஸ்யன் என்று நான் எப்போது சொன்னேன்?

எரிகிற பௌதிக கோளம் வணங்கத்தக்கதாக இருக்க முடியாது என்று நான் சொன்ன போது.

அப்படி நீங்கள் சொல்லு முன் நான் எரிகிற அந்த பொருளே உபாஸ்யன் என்று கூட சொன்னேன்.

ஆமாம்.

அந்த சூரிய மண்டலம் அல்லது தேவன் என்று மாற்றாக நான் சொல்லவில்லை. யாரால் உயிரோட்டம் தரும் சேதனப் பொருளை அறிய முடியாதவனுக்கு தூலமான பொருளே உபாஸ்யன். எனினும் அசேதன பொருளை உபாஸ்யனாக ஒப்புக்கொள்ள முடியாதவருக்கு சூரிய தேவனே உபாஸ்யன் என்றேன். உபாஸ்யன் எப்போதும் ஒன்றே; ஆனால் அதன் நிச்சயத்தன்மை உபாசகனின் யோக்கியதைக்கு தகுந்த படி இருக்கும். இன்னும் விசாரித்து அந்த தேவதையையும் உபாஸ்யமாக ஒப்புக்கொள்ள முடியாதவருக்கு, உபாஸ்ய வஸ்து இன்னும் சூக்குமமாகும். அப்போது அது ஹிரண்ய கர்பன் என்கிறோம். இதுவும் மிகக்குறைவு, திருப்தி இல்லை எனில் நீ உபாசிப்பது பரமேஸ்வரனே என்போம். அதுவும் கூட அவருடைய தன்மையை கட்டுப்படுத்துகிறது என்று நினைத்தால் அது பிரிக்க முடியாத ப்ரம்ஹமே என்கிறோம். ஆக எங்கே பிரச்சினை?

அப்படியானால் தாங்கள் சொல்வது, ஸந்த்யையில் யார் உபாசனைக்கு விஷயமானவர் என்று தீர்மானமாக சொல்ல முடியாது; அது உபாசகனின் மனநிலை, புத்தியின் மேன்மையடைந்த நிலை ஆகியவற்றை பொருத்தது என்பதா?

உபாசகனை விட்டு விட்டால் உபாஸ்யம் ஏது? வணங்கப்படுவதின் தன்மை நிச்சயம் வணங்குகிறவனை சார்ந்து இருக்கிறது.

அதெப்படி?

என்னையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எல்லோரும் என்னிடம் மரியாதை காட்டுகிறீர்கள். பொதுவாக மரியாதை காட்டுவது என்னிடத்திலென்று சொன்னாலும்,அந்த மரியாதையை பெறும் நான்ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானவன். சாமான்ய மக்கள் என்னை சூழ்ந்து பளபளவென்றிருக்கும் இந்த அலங்கார பொருட்களை பார்த்து மரியாதை செலுத்துகின்றனர். அந்த மரியாதை இதே அலங்காரங்களை உடைய யாரும் கொடுப்பார்கள். ஆகவே அவை என்னை சாரா, அலங்காரங்களையே சாரும். சிலர் நான் வகிக்கும் ஸ்தானத்துக்காகவோ என் சன்யாச ஆஸ்ரமத்துக்காகவோ மதிப்பார்கள். அந்த மதிப்பும் எனக்கில்லை; என் ஸ்தானத்துக்கும் ஆஸ்ரமத்துக்குமேயாகும். இன்னும் சிலருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாகவே இராது. நான் எப்படி இருந்தாலும் எங்கே போனாலும் எனக்கு மரியாதை கொடுப்பர், சுசுருஷை செய்வர். அவர்களது மரியாதைக்குரிய பொருள் என் உடல். இன்னும் சிலர் என் உடல் கருப்போ சிவப்போ, நோய் வாய்ப்பட்டதோ, அவலட்சணமாக இருக்கிறதோ இல்லையோ, எப்படி இருந்தாலும் கருத மாட்டார்கள். என் மனது சுத்தமாக இருந்து, நடத்தை சரியாக இருந்து, தெளிந்த புத்தி இருந்து, ஆன்மீக சக்தியும் இருந்தால் அவர்களது மதிப்பை நான் பெறுகிறேன். உங்கள் எல்லாரிடத்திலும் பிரகாசிப்பது போல என்னிடமும் பிரகாசிக்கும் சைதன்ய தெய்வீக பேரறிவுப் பொறிக்காக எனக்கு  மரியாதை தருவோர் மிக மிகக்குறைவே

தங்களிடம் வரக்கூடிய எல்லா பக்தர்களும் ஒரே மாதிரி மனப்பக்குவத்துடன் இருக்க முடியாது என்பது உண்மையே!

அப்படித்தான்!  ஆனால் சாதாரணமாக இவர்கள், மரியாதை செலுத்துவது என் அலங்காரங்களுக்கோ, என் ஸ்தானத்துக்கோ, என் ஆஸ்ரமத்துக்கோ, என் உடலுக்கோ, மனதுக்கோ, புத்திக்கோ அல்லது உள்ளிருக்கும் தெய்வீக சக்திக்கோ,  எப்படி இருந்தாலும் என் முன் விழுந்து வணங்குகிறார்கள். இவர்களை கருதாமலே இவர்கள் வந்தனம் சொல்வது யாருக்கு என்று சொல்ல முடியுமா?

பதில் சொல்வது மிகவும் சிரமம்தான்

அதே போலத்தான் எல்லா உபாசனைகளிலும். அலங்காரங்களுக்காக மரியாதை கொடுப்பவனுக்கும் ஆத்ம சைதன்யத்துக்காக மரியாதை கொடுப்பவனுக்கும் வெளியே பார்த்தால் பெரிய  வித்தியாசம் ஒன்றும் தெரியாது. அதே போல மூட பக்தியுடன் சூரிய ஒளிப்பிழம்பை வணங்குகிறவனுக்கும், இதை ப்ரம்ஹத்தின் காணக்கூடிய ஒரு குறியாக கருதி வணங்குகிறவனுக்கும் வெளிப்பார்வையில் வித்தியாசம் தெரியாது. ஆகவே ஸந்த்யையில் உபாஸ்யன் யார் என்று கேட்டால் இப்படித்தான் பதில் சொல்ல முடியும்.

எளிதான சூரிய உபாசனையிலேயே ஆன்மீக பார்வையின் எல்லா மட்டங்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டேன்.

இது மட்டுமல்ல. அதை இன்னும் கொஞ்சம் விசாரித்துப்பார்த்தால், கர்மம், பக்தி, ஞானமென்னும் மூன்று சாதனங்களுமே இந்த நித்ய கர்மாவில் அங்கங்கு அமைக்கப்பட்டு இருப்பதை காணலாம். ஆனால் அது வேறு விஷயம். ஸந்த்யா வந்தனம் மிக எளிதாக தோன்றினாலும்  நாம் மிக உயர்ந்த நிலைகளை எட்டுவதற்கு அதுவே போதும். ஆரம்ப நிலையில் உள்ளவருக்கு பயனாவது போலவே அது உயர்ந்த நிலையில் இருப்பவருக்கு பயனாகும். இதன் பெருமையை உணராமல் இருப்பதும், காரியத்தில் இதை விட்டுவிடுவதும் பெரும் அசட்டுத்தனமாகும்.


-நிறைந்தது-
  
Post a Comment