Pages

Monday, October 15, 2012

உண்மையான பக்தி 3

பக்தர்: அப்படியானால் பஜனைக்கு என்னதான் பயன்? அத்தனையும் வீண்தானா?

ஸ்வாமி: எஜமானன் கொடுத்த வேலைகளை எல்லாம் முறைப்படி முடித்துவிட்டு, அவகாசம் இருந்தால், வேணுமானால் அவன் சமீபத்தில் போய் நிற்கட்டும். வேலை பாக்கி இருக்கும்போது அப்படி போய் நிற்கக்கூடாது. அதே போல தனக்கு ஏற்பட்ட சகல கர்மாக்களையும் செய்து முடித்தபின் அவகாசம் இருந்ததானால் ஈஸ்வரனை துதிக்கட்டும், பிரார்த்தனை செய்யட்டும். அவகாசத்தை இப்படி நல்ல வழியில் உபயோகித்துக் கொள்ளலாம். ஆகவே கர்மாக்களின் இடையில் கிடைக்கக்கூடிய அவகாசத்துக்கு ஏற்பட்டதுதான் இந்த பஜனை என்பது.

ஸ்ருதி ஸ்ம்ருதிகளால் சொல்லப் பட்ட கர்மாக்களை முடித்துதான் பஜனை என்றால் அந்தணனுக்கு பஜனை செய்ய அவகாசமே இராது என்று தோன்றுகிறது.

அப்படியல்ல. சோம்பேறிகளுக்குத்தான் அவகாசம் கிடைக்காது என்று தோன்றும். காரியம் செய்து கொண்டே இருப்பவர்களுக்கு எப்போதும் அவகாசம் கிடைக்கும்.

எப்படியும் வைதீக கர்மாக்களை முடித்துதான் பஜனை என்றால் அந்தணர் அல்லாதவர்களுக்கே அதிக நேரம் கிடைக்கும் என்று தோன்றுகிறது. அவர்களுக்கு வைதீக கர்மாக்கள் மிகவும் குறைவு. ஆகவே பஜனைக்கு அவர்களே முக்கிய அதிகாரிகள் ஆவர் என்று தோன்றுகிறது.

அது அப்படியேதான்.

இந்த விஷயத்தில் அந்தணனுக்கு மற்றவர்களுக்கு சமமான அதிகாரம் இல்லை என்பது நியாயமாகுமா?

முன் சொன்னபடி, அதிகாரமே இல்லை என்று சொல்லவில்லையே! அவகாசம் கிடைக்கும் போது வைத்துக்கொள்ளலாம் என்றே சொன்னேன். பகவானை புகழ்வதை விட அவனது கட்டளைகளை நிறைவேற்றுவதே முக்கியம் என்பதை மறக்க வேண்டாம். இன்னொரு விதமாகவும் யோசித்துப்பாருங்கள்.

எப்படி?

எஜமானன் எதிரிலேயே நிற்க பிரியப்படும் சேவகன் அப்படி பார்ப்பதிலேயே தன் சுகம் இருக்கிறது, வேலை செய்ய அப்புறம் போனால் இந்த சுகம் போய்விடும் என்று பயப்படுகிறான்.

அப்படியே!

ஆகையால் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயிக்க தன் சுகத்தையே முக்கியமாக வைக்கிறான். எஜமானனின் திருப்தியை முக்கியமாக கருதவே இல்லை.

ஆழ்ந்து கவனித்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

யஜமானனின் திருப்தியை அலட்சியம் செய்தோ, கவனிக்காமலோ அதை விட தன் திருப்தியை முன் வைத்த இவனை எப்படி பக்தி கொண்டவனாக கருத முடியும்?

முடியாதுதான்.

அதே போல பக்தன் என்று சொல்லிக்கொண்டு, பகவானின் கட்டளைகளை மதிக்காமல் உதாசீனம் செய்துவிட்டு மனம்கவர் இசையுடன் அவருடைய குணாதிசயங்களை பாடி வருகிறேன் என்றால், அவனை எப்படி பக்தன் என்று சொல்வது?

சொல்ல இயலாதுதான்.

மேலும், அவன் பகவானை தனக்கு சுகானுபவத்துக்கு ஏற்படுத்திய ஒரு அழகிய போகப்பொருளாக நினைக்கிறான் அல்லவா? சர்வமும் அறிந்தவனை, சர்வமும் இயன்றவனை தனக்கு ஒரு விளையாட்டுப்பொருளாக இறக்கி மதித்துவிட்டால் இதை விட என்ன அபசாரம் வேண்டும்?
ஈஸ்வரனை போக்ய வஸ்துவாக அனுபவிக்க நினைப்பது பெரும் அபசாரமாகும். அப்படி நினைப்பவன் ஒரு நாளும் பக்தனாகவே மாட்டான். அவருடைய கட்டளைகளை அப்படியே நிறைவேற்றுவதே உண்மையான பக்தி. காரியத்தில் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படியாமல் இருந்து கொண்டு வாயால் நான் பக்தன் என்று சொல்வது மஹா பாபமாகும். லஞ்சம் வாங்கின பணத்தை மடியில் வைத்துக்கொண்டே நான் லஞ்சம் வாங்கவில்லை என்று வியவகாரியம் செய்பவன் போலத்தான் இதுவும். வாக்கு, மனது, காரியம் மூன்றிலும் ஒருமைப்பாடு இருக்க வேண்டும்.
--

2 comments:

sury siva said...

am able to absorb having come in your wave length.


subbu rathna sharma

திவாண்ணா said...

நன்றி சார்!