Pages

Sunday, October 28, 2012

மஹா பெரியவர் - நிகழ்வு


திருவண்ணாமலையில் வசிக்கும் ஸ்ரீ கௌரிசங்கர் ஒரு தகவல் சுரங்கம். குறிப்பாக மஹா பெரியவர் என்று பேச்சு வந்துவிட்டால் போதும். பலரும் அறியாத தகவல்கள் வந்து கொட்டும்! நேற்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது ....

மஹா பாரதத்தில் துரியோதனன், காட்டில் இருக்கும் பாண்டவர்களை பரிவாரத்துடன் போய் பார்த்து விருந்து உண்டு அனுகிரஹிக்க வேண்டும் என்று துர்வாசரை கேட்டுக்கொண்ட கதை ஒன்று உண்டு. அனேகமாக நாம் அனைவரும் அறிந்து இருப்போம். திடீரென்று இந்த கதையை சொல்ல ஆரம்பித்தார் ஸ்ரீ கௌரிசங்கர். கதை முடிந்தபின் தொடர்ந்தார்....

மதனபள்ளியில் பெரியவா முகாம். அன்னக்கொடி கட்டிவிட்டார்கள். அதாவது யார் வேண்டுமானாலும் வந்து உணவு அருந்தி போகலாம். முகாம் இருக்கும் வரை இந்த அன்ன தானம் அங்கே நடக்கும்.

தகவல் அப்படியே சுத்து முத்து கிராமங்களுக்கும் பரவியது. ஒரு நாள் "வடை பாயசத்துடன் சாப்பாடு போடுகிறார்களாம், வா போகலாம்" என்று யார் ஆரம்பித்தார்களோ தெரியாது, போகும் வழி எல்லாம் ஆள் சேர்ந்துக் கொண்டு முகாமை நோக்கி போய்க்கொண்டு இருந்தார்கள்.
அன்ன தானம் எல்லாம் எப்போதோ முடிந்து எல்லாவற்றையும் கழுவி கவிழ்த்தாகிவிட்டது. பெரியவாளும் பிக்ஷை செய்தாயிற்று. திடீரென்று பெரியவா மடத்து மேனேஜரிடம் "டேய், ரொம்ப பசிக்கிறதுடா! என்ன இருக்கு?” என்று கேட்டார். மேனேஜருக்கு கை கால் ஓடவில்லை. இப்பதானே அரை மணி முன் சாப்பிட்டார்கள்? அதற்குள் எங்கிருந்து பசி வந்தது? அத்துடன் இப்படி பெரியவா கேட்டதே கிடையாதே! எவ்வளவு நாள் விரதமென்று உபவாசம் இருந்திருப்பார்!
என்னடா பதிலே காணோம். ரொம்பவே பசிக்கறதே!” என்றார் பெரியவர்.
மேனேஜர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டார்.
ஓஹோ, ஒண்ணுமே இல்லையா? ம்ம்ம் என்ன செய்யலாம்???”

அப்போது இரண்டு பேர் முகாமில் நுழைந்தார்கள். கையில் பழங்கள், ஏதோ பொட்டலங்களுடன். நமஸ்காரம் செய்து அவற்றை சமர்பித்தனர். பெரியவா அந்த தட்டில் இருந்து தேடி ஒரு பொட்டலத்தை எடுத்து பிரித்தார். கற்கண்டு இருந்தது. ஒரே ஒரு துண்டை எடுத்து கீழே வைத்து கையால் தட்டி உடைத்தார். அது சுக்கு நூறானது. அதில் ஒரே ஒரு சின்ன துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். பக்கத்தில் இருந்த துளசி தீர்த்தத்தில் கொஞ்சம் குடித்தார். ஏப்பம் விட்டார்! வந்தவரை பார்த்து "அப்பாடா! சரியான நேரத்துக்கு வந்து என் பசியை தீர்த்தாய். க்ஷேமமா இரு! ” என்று ஆசீர்வதித்தார். வந்தவருக்கு பரம சந்தோஷம்! வருவோர் கொண்டு வரும் பழங்கள் போன்ற எல்லாம் வழக்கமாக மடத்தில் உள்ளவர்கள் வயிற்றுக்கு போய் விடும்; அரிதாகத்தான் ஏதோ பெரியவா வயிற்றுக்குப்போகும் என்று தெரிந்திருந்ததால் ஒரு சின்னஞ்சிறு துண்டே ஆனாலும் தான் கொண்டு வந்த கற்கண்டை பெரியவா உண்டதில் அவருக்கு ஜன்ம சாபல்யம் ஏற்பட்டதாகவே தோன்றியது!
அதே சமயம் சாப்பிடப்போலாம் வா என்று கிளம்பிய கூட்டம் சுமார் 50-60 பேராக பெருகி அடுத்த தெருவை அடைந்திருந்தது. இதோ இந்த திருப்பம் தாண்டினால் முகாம் வந்துவிடும்! வயிறார சாப்பிடலாம்! ஒன்றும் அறியாத எளிய மக்கள்! ஏதோ ஒரு காலகட்டத்தில் அன்றைய அன்னதானம் முடிந்து விடும் என்ற கற்பனை கூட அவர்களுக்கு இல்லை!
திடீரென்று எல்லாருக்கும் வயிறு நிறைந்த உணர்வு! நடையின் வேகம் குறைந்து போய்விட்டது. ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். “பசியே இல்லையே! வயிறு ரொம்பிப்போச்சே! இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுக்கொள்ளலாமா?” கூட்டத்தில் எல்லோர் நிலைமையும் அதுதான். அப்படியே பிரிந்து அவரவர் வெவ்வேறு வழியில் போய்விட்டனர்!