Pages

Thursday, November 8, 2012

சுக சாதனம் - 2

 
அப்படியானால் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் விசாரிக்க வேண்டும். எங்கோ தவறு இருக்கிறது. சுகமாக இருக்க சுக சாதனங்கள் அதிகமாகி விட்டன என்று நீங்கள் சொல்லும் பக்ஷத்தில் தர்க்க ரீதியாக பார்த்தால் அவை உண்மையில் சுக சாதனமாக இல்லை, அப்படி நாம் கற்பனை செய்து கொண்டோம் என்று ஏற்படுகிறது. இப்போது நீங்கள் அனுபவிக்கும் நவீன வசதிகள் உண்மையில் சுக சாதனங்கள்தானா என்று பார்ப்போம்.
சாதாரணமாக காரணத்துக்கும் காரியத்துக்கும் உள்ள உறவை நிர்ணயிப்பது ஒன்றன் முன் ஒன்று நிச்சயம் வருகிறதா என்பதைக்கண்டே. இதற்கு அன்வயம் என்று பெயர். எதிராக இன்னொரு வழியும் இருக்கிறது. வ்யதிரேக வழி என்று பெயர். இந்த வழியில் ஒன்றன் இல்லாமை மற்றதின் இல்லாமையை உறுதி செய்வதை எப்போதும் பார்க்கலாம். மண் குடம் செய்வதற்கு முன் எப்போதும் மண் இருக்கிறது. மண் இல்லாமல் மண் குடத்தை செய்ய முடியாது என்றும் பார்க்கிறோம். இது போல நவீன வசதிகள் சுகத்தை தந்தனவா என்று பார்க்க இந்த இரண்டு வழிகளிலும் பார்க்க வேண்டும். நீங்கள் சொல்வது நவீன வசதிகள் இருந்தும் சுகமில்லை என்பது.

ஆமாம்.

அப்படியானால் அன்வய வழியில் பார்க்க இவை காரணமும் காரியமும் இல்லை என்று தெரிகிறது.

அப்படித்தான் தோன்றுகிறது.

மேலும் உங்கள் முன்னோர்கள் இவை இல்லாமல் சுகமாக இருந்ததாக சொல்லுகிறீர்கள்.

ஆமாம், அவர்கள் சுகமாக இருந்தார்கள்.

அப்படியானால் வ்யதிரிக்த வழியில் பார்த்தாலும் இவை காரணமும் காரியமும் இல்லை.

ஆமாம்.

அப்படியானால் நவீன வசதிகள் சுகத்துக்கு உண்மையான காரணமல்ல என்றாகிறது.

தர்க்க ரீதியில் அப்படித்தான்.

ஆனால் நமக்கு சுகம் தேவை?

நிச்சயமாக!

அப்படியானால் நாம் நமக்கு சாதகமாக இருப்பவவைகளை தூக்கி போட்டு விடாமல் உண்மையான சந்தோஷத்துக்கு வழி என்ன என்று பார்த்து அதை பின்பற்ற வேண்டும்.

அதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த வழி எது?

அதைத்தான் இப்போது பார்க்க வேண்டும். அதே தர்க்கத்தின் மூலம் முன்னோர்கள் சுகமாக இருந்த போது இப்போது இல்லாத என்ன இருந்தது, இப்போது என்ன இல்லை என்று பார்க்க வேண்டும்.

நிச்சயமாக! என்ன அது?

No comments: