Pages

Wednesday, November 7, 2012

சுக சாதனம் - 1


ஒரு ஒதுக்குப்புற சந்தடியில்லாத கிராமத்தில் ஸ்வாமிகள் சில நாட்கள் தங்கியிருந்தார். அந்தணர்கள் உள்ளிட்ட கிராமத்தார் சிலர் ஒரு நாள் மாலை தரிசனம் செய்து தங்கள் மரியாதையை தெரிவிக்க வந்தனர். அவர்களின் தலைவர் கூறியது:

தலைவர்: சில காலம் முன் வரை எங்கள் கிராமம் செல்வச் செழிப்புடன் இருந்தது. சமீப காலத்தில் அது மிகவும் க்ஷீணமாகிவிட்டது. எங்கள் கிராமம் முன் போல செல்வ செழிப்புடன் இருக்க தாங்கள் அனுக்ரஹம் செய்ய வேண்டும்.

ஸ்வாமிகள்: நிச்சயம் பகவான் உங்கள் ப்ரார்த்தனைகளை செவி மடுப்பான். ஆனால் நம் கையில் இல்லாத தீர்வு இல்லாத விஷயங்களை மட்டுமே பகவானிடம் கேட்க வேன்டும் என்று தோன்றுகிறது.

நம் கையில் இதற்கு தீர்வு இருப்பதாக எப்படி சொல்லுகிறீர்கள்?

இந்த கிராமம் செல்வ செழிப்பில் குறைந்து விட்டதாக சொல்லுகிறீர்கள். ஆனால் நான் கேள்விப்பட்டது சரி என்றால் முன்னை விட இப்போது மாடி வீடுகள் அதிகம். முன்னைப்போல் இல்லாமல் இப்போது வீடுகள் கல் வீடுகளாக இருக்கின்றன. சுண்ணாம்பும் செங்கல்லும் பயன்படுத்தி கட்டி இருக்கிறீர்கள். இப்போது அவை காற்றோட்டமும் நல்ல வெளிச்சமும் உடையனவாக இருக்கின்றன. பார்க்க மிக அழகாக இருக்கின்றன. முன்னோர்கள் காலத்தைப்போல இருளடைந்து, மண் சுவர்கள், ஓலை கூரைகளுடனும் இல்லை.

அதில் சந்தேகமில்லை.

உங்கள் முன்னோர்கள் அணிந்து கொண்டு திருப்தி அடைந்ததை விட இன்னும் விலையுயர்ந்த மென்மையான ஆடைகளை அணிகிறீர்கள். மேலும் அவர்கள் கனவிலும் கண்டிராத பொருட்களும் உங்களிடம் இருக்கின்றது.

நிச்சயமாக.

சில மைல்கள் தூரமே உள்ள கிராமங்களுக்கு அவர்கள் சேறும் சகதியுமான சாலைகளில் மாட்டு வண்டிகளில் சென்று வந்தார்கள். நீங்கள் தரமானசாலைகளில் அதேநேரத்தில் முப்பது மடங்கு தூரம் மோட்டார் வண்டிகளில் செல்கிறீர்கள்.

இதெல்லாம் இருக்கிறது என்பது உண்மைதான்.

அவர்களுக்கு உள்ளூரில் செய்யப்பட்ட எண்ணை விளக்குதான் கதி. உங்களுக்கு அது கடல் தாண்டி வருகிறது. இன்னும் இந்த கிராமத்துக்கு மின்சாரம் வரவில்லை என்றாலும் பிரகாசமான விளக்குகள் உள்ளன

ஆமாம், இருக்கின்றன.

பின் ஏன் புகார் செய்கிறீர்கள்? சுகமாக வாழ உங்கள் முன்னோர்களுக்கு இருந்ததை விட உங்களுக்கு அதிக வசதிகள் இருக்கின்றனவே? இன்னும் என்ன வேண்டும்?

இதெல்லாம் இருப்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும் எங்கள் முன்னோர்கள் சுகமாக இருந்த அளவு நாங்கள் இருக்க முடிவதில்லை என்பதே உண்மை.

அதெப்படி? நீங்கள் ஒப்புக்கொள்வது போல சந்தோஷத்தின் காரணங்கள் அதிகமாகி இருக்கும் போது சந்தோஷமும் அதிகமாகி இருக்க வேண்டுமே? எப்படி குறைந்து இருக்க முடியாது அல்லவா?

எப்படி என்று தெரியவில்லை. சௌகரியங்கள் அதிகமானாலும் சுகம் குறைவாகத்தான் இருக்கிறது. எப்படி பழைய சந்தோஷமான நிலை கிடைக்கும் என்றே கேட்கிறோம்.

அப்படியானால் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் விசாரிக்க வேண்டும்.... 

No comments: