Pages

Thursday, November 1, 2012

கடவுளின் உபயோகம் - 2

 

ஸ்வாமிகள்: புத்தகங்களில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? அதை உங்கள் சிந்தனையால் பெருக்கிக்கொள்ள வேண்டும். நீங்கள் அந்த பொருளில் சில புத்தகங்களை படித்து இருப்பதால் உலகத்தின் தோற்றம் குறித்தும் இறைவன் பற்றியும் சில கருத்துக்கள் ஏற்பட்டு இருக்க வேண்டுமே?
--
மாணவர்: புத்தகங்களை படித்து இதுதான் என்று எதையும் நிச்சயமாக சொல்ல முடிவதில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் தன் புத்தியை உபயோகித்துப் பார்க்கிறார், பின் மற்றவர்களை விட தன் பார்வையே சரி என்று சாதிக்க முயல்கிறார்கள். மேலும் அது போன்ற விஷயங்களின் இயல்பே எதையும் இதுதான் தத்துவம் என்று நிச்சயமாக நிர்ணயிக்க முடியவில்லை என்பதே. ஒருவர் சந்தேகமே வராத படி நிச்சயம் போல ஒன்றை சொல்லலாம். ஆனால் அதுவே முடிவு என்று சொல்ல முடியவில்லை. பின்னாலேயே இன்னொரு சாமர்த்தியசாலி வந்து அது தவறு என்று நிரூபிக்கலாம்.

புத்தியை பிரயோகித்து செய்யும் எல்லா விஷயங்களுமே அப்படித்தான். கிடக்கட்டும், சிறு மாற்றங்கள் இருந்தாலும் நவீன சித்தாந்திகள் உலகத்துக்கு தோற்றம் என்று ஒன்று இருந்தது; பிரியாத வேற்றுமையில்லாத ஒரு விஷயத்தில் இருந்து பிறப்பெடுத்தது என்று ஒப்புக் கொள்கிறார்களோ இல்லையோ?

அப்படித்தான் நினைக்கிறேன். அதன் காரண வஸ்துவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னாலும்... சிலர் ஆராம்பத்தில் அணுக்களின் கூட்டமாக இருந்தது என்கிறார்கள்.

அப்படித்தான் நம் தார்க்கிகர்களும் சொல்லுகிறார்கள்! சிருஷ்டிக்கு முன் அவை இயங்கிக்கொண்டு இருந்தன என்கின்றார்களா, இல்லை அசைவில்லாமல் இருந்தனவா?

விஞ்ஞானிகள் இப்போது சொல்வது அணுக்கள் எப்போதுமே அசைவில்லாமல் இருப்பதில்லை, எப்போது சக்தி நிறைந்து, இடைவிடாது சலித்துக்கொண்டே இருக்கும் என்பதே.

இவை வெளியிலிருந்து ஒரு சக்தியால் ஆட்டுவிக்கப்படும், பருப்பொருளின் நுண்ணிய அணுக்களா அல்லது வேறு விதமாக உள்ளனவா?

இப்போது கடைசியாக சொல்வது அணுவே தன்னுள் கொண்ட எல்லையற்ற சக்தியின் தூல வடிவம் என்பது.

எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்! விஞ்ஞானிகள் சக்தியே அணுவுக்கு வடிவமும் இருப்பையும் கொடுத்து அதை ஆட்டிவைக்கும் சக்தி ஒன்று இருக்கிறது என்று அறிந்திருக்கிறார்கள் அல்லவா?

ஆமாம்!

இந்த சக்தி எல்லயற்றது, எல்லா அணுக்களுக்கும் பொதுவானது, ஒரே மாதிரியானது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களோ?

ஆமாம்.

சக்தி பலவித ரூபங்களை எடுக்கக்கூடியதாதலால் ஒரு அணுவில் இருக்கும் சக்தி இன்னொரு அணுவின் சக்தியைக்காட்டிலும் வித்தியாசமானது என்று சொல்ல இடமில்லையே?

ஆம், இடமில்லைதான்.

அப்படியானால் நாம் ஒரு எல்லையற்ற, எல்லாம் வல்ல ஒரே ஒரு சக்தி இருப்பதாயும் அது சில சமயம் சில அணுக்களாக உருவம் எடுத்துக்கொள்வதாயும் சொன்னால் சௌகரியமாக இருக்குமோ?

மேற்கத்திய விஞ்ஞானிகள் அந்த தீர்மானத்தையே நெருங்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

அப்படித்தானே செய்ய வேண்டும்? அதுவே தர்க்க ரீதியாக சரியாக இருக்கும். இந்த எல்லையற்ற சக்தியையே பிரபஞ்சத்தின் முக்கிய காரணமாக சொல்லலாம் அல்லவா?

ஆம்.

ஆனால் பிரபஞ்சத்தில் அணுக்கள் மட்டும் இல்லையே! நீங்களும் நானும் இருக்கிறோம். நம் உடல்கள் பருப்பொருள்தான். ஆனால் கூடவே நமக்கு புத்தியுடன் கூடிய ஒரு அறிவு இருக்கிறது. இதை அணுக்கள் உள்ள பொருளாக சொல்ல முடியாது. பிரபஞ்சத்தைப் பற்றி முழுதும் சொல்லப்போனால் இதையும் என்னவென்று சொல்லியாக வேண்டுமே? இதை விஞ்ஞானிகள் எப்படி அணுகுகிறார்கள்?

விஞ்ஞானிகள் பருப்பொருளாலான பௌதிக பிரபஞ்சத்தை மட்டுமே ஆராய்கிறார்கள்.

ஆனால் சிலராவது இதைப்பற்றி யோசித்து இருப்பார்களே?

ஆமாம், அது போல சிலர் உண்டு. ஆனால் அவர்கள் நம்முள் இருக்கும் புத்தி அம்சத்துக்கு ஒரு மூல காரணத்தை கற்பித்து இருப்பதாக தோன்றவில்லை

1 comment:

Jayashree said...

Boy!! Omniscience!!
The supreme intelligence.