சொற்களின் மகிமை பற்றி மாஸ்டர் சொல்லிக்க்கொண்டு இருந்த போது பின்னாலிருந்து ஒருவர் கூவினார்.
“நீங்க சொல்லறது முட்டாள்தனமா இருக்கு. நான் கடவுள் கடவுள் ன்னு சொல்லிண்டே இருந்தா புனிதமா ஆகிடுவேனா? இல்லை நான் பாபம் பாபம் பாபம் ன்னு சொல்லிகிட்டே இருந்தா கெட்டவனா ஆகிடுவேனா?”
மாஸ்டர் சொன்னார் "நாயின் மகனே! உக்காரு!”
கூவினவருக்கு பெரும் அதிர்ச்சி! சற்று நேரம் அவரால் பேசவே முடியவில்லை. பின் மாஸ்டர் மீது சர மாரியாக வசை பொழிந்தார்.
மாஸ்டர் இடை மறித்து "மன்னிக்கணும். நீங்க பெரியவர். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டுக்கறேன்!” என்றார்.
உடனே அந்த ஆசாமி தணிந்துவிட்டார்.
மாஸ்டர் சிரித்துக்கொண்டே சொன்னார். இதோ உங்க சந்தேகத்துக்கான விடை. ஒரு சின்ன வாக்கியம் உங்களை பெரும் கோபத்தில் தள்ள முடிந்தது. ஓரிரு சின்ன வாக்கியங்கள் உங்களை சமாதானப்படுத்த முடிந்தது!
No comments:
Post a Comment