Pages

Monday, August 29, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - பச்சை கற்பூரம்
அப்படியே இந்த பச்ச கற்பூரத்தையும் பாத்துடலாம். பச்ச கற்பூரம் என்கிறதால பச்சையா இருக்காதுன்னு ஜோக் அடிச்சா திட்டுவீங்க. அதனால….
கற்பூரத்துக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?
அபாரண்ட்லி ஒண்ணுமே இல்ல!
ஆனா நிச்சயமா வாசனைல வித்தியாசம் இருக்கு.
நெட்ல தேடிப்பாத்தா குழப்பமே மிச்சம். இருந்தாலும் கிடைக்கிற தகவல் ரெண்டுமே ஒண்ணுன்னு சொல்லுது.
edible camphor ந்னு தேடிப்பாத்தா அமேசான்லயும் கிடைக்குது.
Cinnamomum camphora என்கிற சுகந்த மரத்துலேந்து இது கிடைக்கிறதா இங்கே http://senthuherbals.blogspot.in/2014/08/cinnamomum-camphora-chukantamaram.html சொல்றாங்க.
https://en.wikipedia.org/wiki/Camphor பாத்தா இதே மாதிரிதான் இருக்கு. எதுலேந்து தயாரிக்கறாங்க என்கிறதைப்பொருத்து வாசனை இருக்கும்போல இருக்கு.
இயற்கையா கிடைக்கிறது ஆர் இனாடியமராம். ரசாயன் தொழிற்சாலையில செய்யறது எல் இனாடியமர். இனாடியமர்? ஆப்டிகல் ஐஸோமர்.
மூலக்கூறுல வித்தியாசங்கள் வரலாம். ஒரே கெமிக்கலா இருந்தாலும் பௌதிக அளவில அதோட அமைப்பு வித்தியாசமா இருக்கும். சில சமயம் கண்ணாடி பிம்பம் போல இருக்கும். ஆர்வமிருந்தா அது பத்தி தேடி படிங்க!
ஊசியிலை மரங்களில் இதுக்கான மூலப்பொருள் நிறையவே கிடைக்குதாம்.
கற்பூரம் பத்தி சொல்லறப்ப சப்லிமேஷன்னு சொன்னேன் இல்லையா? இதுல அதை நல்லாவே பார்க்கலாம். கொஞ்சமே கொஞ்சம் திறந்து வெச்சாக்கூட காத்தில காணாமப்போகும். உணவுப்பொருட்களுக்கு நறுமணம் கூட்ட காலங்காலமா நம் நாட்டில பயன்படுத்தறாங்களாம். குறிப்பா அரபு நாட்டு ரெசிப்பில எல்லாம் இது நிச்சயம் இருக்குமாம். திருப்பதி லட்டுல கூட சுவைச்சு இருக்கோமில்ல?
பிஜி முடிச்சுட்டு வந்தவுடன் ஒரு வருஷம் தனியார் மருத்துவ மனை ஒண்ணுல வேலை பார்த்தேன். அப்ப அங்கே இருந்த சின்ன கோவில்ல தினசரி பூஜை பண்ண ஒரு குருக்கள் வருவார். கூடவே ஜோசியம் பாக்கிறது. ஹோமங்கள் செஞ்சு கொடுக்கிறது….
இவரோட வயித்து வலியை சரி செஞ்சதால எனக்கு ஃப்ரெண்ட் ஆயிட்டார். பேச்சுவாக்கில எம்ஜிஆருக்காக ஹோமம் செஞ்சதை சொன்னார். தேவதா ஆவாஹணம் செஞ்சு இருந்த ஜலத்தை பிரசாதமா எம்ஜிஆருக்கு கொடுக்க அப்போலோ டாக்டர்கள் ஒத்துக்கலையாம்.
எம்ஜிஆருக்கு கிட்னி மாத்தி இருந்தது இல்லையா? அப்ப இம்யூன் சப்ரசண்ட் மருந்து கொடுத்து இருந்தாங்க. அதனால இன்பெக்‌ஷன் வந்துடும்ன்னு தயக்கம். இவரோ இதுல ஒரு சாம்பிள் எடுத்துண்டு போய் என்ன வேண்ணா டெஸ்ட் செய்யுங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லைன்னு உறுதி செஞ்சுண்டு கொடுங்கன்னு கான்ஃபிடெண்டா சொன்னாராம். அவங்களும் டெஸ்ட் பண்ணி பாத்துட்டு பிரச்சினை இல்லைன்னு கொடுத்ததா சொன்னார்.
அது பிரச்சினை இல்லைன்னு எப்படி அவ்வளோ உறுதியா சொன்னீங்கன்னு கேட்டேன். அவர் “ அதுல பாக்டீரியா எப்படி இருக்கும்? நாதான் பச்ச கற்பூரம் போட்டுட்டேனே?” ந்னார்.
ஆமாம். ஹோமங்களில தேவதா ஆவாஹனம் செய்கிற குடத்தில தண்ணீரோட இதை கலக்கிறது வழக்கம்தான். ஒஹோ அதுவும் அப்படியா ந்னு நினைச்சுண்டேன். அதுலேந்து பயணம் செய்யறப்ப ஒரு சின்ன டப்பால பச்ச கற்பூரம் எடுத்துண்டு போய் கிடைக்கிற தண்ணில கலந்து பயன்படுத்த ஆரம்பிச்சேன்.
தினசரி செய்யற பூஜையில பயன்படுத்தற தண்ணீர்ல இதை கொஞ்சமே கொஞ்சம் கலப்போம். கம கமன்னு இருக்கும். பெருமாள் கோவில்ல கொடுக்கிற தீர்த்தத்திலும் இது இருக்குமில்ல?
அதே போல சந்தனம் அரைக்கவும் இதை கொஞ்சம் - சில கிரிஸ்டல்ஸ்- பயன்படுத்துவோம். அது தண்ணில இங்கேயும் அங்கேயும் அலையறதை வேடிக்கைக்கூட பார்க்கலாம். சந்தனம் அரைக்கும்போது இதை பயன்படுத்த சந்தனம் சட்டுன்னு நிறைய கிடைக்கும். குங்குமப்பூ சேர்க்க அது உடனே நீரை உறிஞ்சுண்டு திரளும். இது ரெண்டுத்தையும் போட்டு அரைக்கற சந்தனம் நல்ல வாசனையோடவே இருக்கும்.

 
Post a Comment