Pages

Tuesday, July 31, 2018

புதிர் விடை.





போன பதிவில போட்டிருந்த படம் ஏகாதச ருத்ரருடையது.

 இது ட்விட்டர்ல மெட்ராஸ் மாமி ன்னு ஒத்தர் போட்டிருந்த க்விஸ்.

இன்னொரு போஸ்ட்: https://twitter.com/blog_supplement/status/601628474143612928
https://twitter.com/blog_supplement/status/601628474143612928

One  of the rarest icons in the Indosphere: the ekAdasha mukha rudra with 24 arms from Peddavegi; chAlukya age~550-650CE 

சரி இவங்க பேர் என்ன?

ஒவ்வொரு புராணத்துலயும் ஒவ்வொரு மாதிரி இருக்கு என்கிறார் பையர்.
இப்படி ஒரு பாடம்:
 
अजैकपाद् अहिर्बुध्न्यो विरूपाक्षः सुरेश्वरः । जयन्तो बहुरूपश्च त्र्यम्बकोऽप्यपराजितः । वैवस्वतश्च सावित्रो हरो रुद्रा इमे स्मृ

அஜைகபாத்³ அஹிர்பு³த்⁴ன்யோ விரூபாக்ஷ​: ஸுரேஸ்²வர​: |  ஜயந்தோ ப³ஹுரூபஸ்²ச த்ர்யம்ப³கோ(அ)ப்யபராஜித​: |  வைவஸ்வதஸ்²ச ஸாவித்ரோ ஹரோ ருத்³ரா இமே ஸ்ம்ருʼ
 

Monday, July 30, 2018

புதிர் படம்




இந்தப் படம் யாரை குறிக்கிறது?
இது வரைக்கும் நான் பார்த்தது இல்லை. ஊகம் செஞ்சது தப்பாபோச்சு.
இதுக்கு யாருக்கு நன்றி சொல்லறதுன்னு தெரியலை.

 ரிஷி மூலம் நதி மூலம் மாதிரி நெட் மூலம் பாக்கக்கூடாதாம்!


Tuesday, July 24, 2018

பறவையின் கீதம் - 36





தேடலில் இருந்த ஒருவர் ஒரு சீடரை அணுகி மனித வாழ்வின் பொருள் என்ன என்று கேட்டார்.

சீடர் மாஸ்டரின் எழுத்துக்களை கொஞ்சம் பார்த்துவிட்டு மிகுந்த நம்பிக்கையுடன் "கடவுளின் களிப்பின் வெளிப்பாடே மனிதன் வாழ்க்கை" என்று கூறினார்.

இதே கேள்வியை மாஸ்டரிடம் கேட்ட போது அவர் சொன்னார் :”தெரியவில்லையே!”

தேடுகிறவர் தனக்கு தெரியவில்லை என்றுதான் கேட்கிறார். அதுநேர்மை.
சீடர் தெரியும் என்று சொல்கிறார. அது கடன் வாங்கிய அறிவின் அறியாமை.
மாஸ்டர் தெரியவில்லை என்கிறார். அது அகநிலை உணர்வுபெற்றவர் அறிய முடியாததை அறியமுடியாது என அறிந்ததின் வெளிப்பாடு.

Monday, July 23, 2018

பறவையின் கீதம் - 35






கிராம பாதிரி தேனீரை சுவைத்துக்கொண்டே ஒரு கிழவியின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்.

ஏன் அப்பப்ப கொள்ளை நோய்கள் வருது?

ம்ம்ம் என்ன செய்யறது. மனுஷன் சில சமயங்களில ரொம்ப கெட்டவனா ஆயிடறான். அப்ப அவனை கொண்டுபோக கொள்ளை நோய்களை ஆண்டவன் அனுமதிக்கறான்.

அப்படின்னா ஏன் நல்லவங்களும் அதில செத்துபோறாங்க?

அவங்களை சாட்சியா இருக்க ஆண்டவன் அழைச்சுக்கறான். கெட்டவங்களை விசாரிக்கறப்ப நேர்மையா நடந்துக்கணுமில்ல?

முரட்டுத்தனமான நம்பிக்கை எல்லாவற்றுக்கும் ஒரு காரணத்தை கண்டுபிடிக்கிறது!

Saturday, July 21, 2018

இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்....




இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.”
நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம் ஒரு டிவி காட்சியில் ஒளிபரப்பி இருக்காங்க.
ஊடகங்களை நம்பாதீங்க, அஜெண்டாவோடத்தான் நிகழ்ச்சிகள் நடத்தறாங்கன்னு பல நாட்களா சொல்லிகிட்டு இருக்கேன். ஒரு விஷயத்தைப்பத்தி விவாதிக்கணும்ன்னா அது பத்தி கொஞ்சமாவது அறிவு இருக்கணும். அறிவே இல்லாத முட்டாள்களும் மடையர்களும் விவாதம் செய்யறேன்னு ஆரம்பிச்சா? இவங்க எல்லாம் ஊடகத்துறையில இருக்கறது நம்ம சாபக்கேடு! இதையெல்லாமும் மக்கள் பாக்கறாங்களே.
நான் நிகழ்ச்சியை பாக்கலை. இது ட்விட்டர்ல வெடிச்சபிறகு யாரோ போட்ட விடியோ க்ளிப்தான் பார்த்தேன்.
இவங்கதரம் இதானே? அதுல என்ன ஆச்சரியம். சரஸ்வதி நாக்கில் இருக்கான்னா.... ன்னு பேசற கும்பல்தானே? கிடக்கட்டும்.
நான் எழுதற இந்த பதிவு அந்த 'அறிவாளிகளுக்கு' இல்லை. யாருக்கானா நிஜமா யோசிக்கறவங்களுக்கு "அதானே? இதுக்கு என்ன பதில்?” ன்னு தோணி இருந்தா அவங்களுக்கானது.
அடிக்கடி நான் சொல்கிற இன்னொரு விஷயம் - ஆன்மீகத்தில பல மட்டங்கள் உண்டு அதை கலந்து குழம்பாதீங்க என்கிறது.
இது 'எல்லாம் ப்ரம்ம மயம்' லெவல் நிச்சயமா இல்லை. அடுத்து வர 'ஒரு கடவுள், அவரே எல்லாமும்' லெவலும் இல்லை. மும்மூர்த்திகள், தேவர்கள், தேவதைகள்ன்னு கடவுளை பலதா பார்க்கிற லெவல். அல்லது அதுக்கும் வித்தியாசமா எங்க ஊர்ல கோவில்ல இருக்கிற சிவன் சிதம்பரத்துல இருக்கிற சிவன்ன்னு பார்க்கிற லெவல்ன்னு கூட சொல்லலாம். வித்தியாசம் இருக்கான்னா, ஆமாம், இந்த லெவல்ல நிச்சயம் இருக்கு. ஒவ்வொரு ஸ்தலத்துக்கு ஒரு விசேஷம்தானே சொல்லறாங்க? திருமணம் ஆகணும்ன்னா இங்கே போ, கடன் தொல்லை போக அங்கே போன்னுதானே சொல்லறாங்க? இங்கே இருக்கறதும் சிவன்தானே அங்க இருக்கறதும் சிவன்தானேன்னு சொல்ல முடியாது. சிவன் ஒத்தரே; ஆனாலும் ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு மாதிரி பலன்களையும் தருவார்.

இந்த தேவதைகளுக்கு பல விசேஷ சக்திகள் உண்டு. அதனாலத்தான் மனிதர்களை விட வித்தியாசமா இருக்காங்க. இவங்களை மனிதன் போல உருவகப்படுத்தி பலதும் சொல்லறது எல்லாம் நம்மால சுலபமா 'ரிலேட்' பண்ண முடியணும் என்கிறதுக்குத்தான். கோபம் அன்பு முதலான பல உணர்ச்சிகளும் இருக்கறதா சொல்லறதும் இதுக்குத்தான். சாமிக்கு கோபம் வந்துடும் என்கறதும் இதுக்கேதான். அதனாலத்தான் 'கருணையே வடிவானவன்னா ஏன் கோபம் வரும், ஏன் தண்டனை கொடுப்பார்' என்கிறது எல்லாம் விதண்டாவாதமே. இவர்களுக்கு திருமணம் நடக்கறதாவும் குழந்தைகள் இருக்கறதாகவும் சொல்வது எல்லாமும் இதுக்காகவே. ஒரு சுலபமான புரிதலுக்கு.

உண்மையில கை கால்கள் தலைன்னு எல்லாம் கிடையாது. த்யான ஸ்லோகங்களில சொல்கிற வடிவங்களும் தத்வார்த்தமாகவேதான் இருக்கும். 'பரோக்‌ஷப்ப்ரியா ஹி தேவா: ' என்கிறது வேதம். மறைந்திருப்பதிலேயே பிரியம் உள்ளவர்கள். இவர்களது உண்மை ஸ்வரூபத்தை நம்மால பார்க்க முடியாது. அதற்கான சக்தி நமக்கு கிடையாது. அதை அறியக்கூடிய புலன் நமக்கு இல்லை. அவர்களை அறிய நமக்கு இந்த 5 புலன்கள் போதாது. ஒரு வேளை நம்மோட ஆன்மீக முன்னேற்றத்தால் பார்க்க முடிஞ்சாலும் அது ஒரு ஒளி மயமாகத்தான் தென்படும். அதற்கு மேல் முடியாது.

ஆகவே தேவர்களை மனிதத்தன்மை உள்ளவர்களாக நினைத்து வாதம் செய்வதில சாரமில்லை. பெண் தெய்வங்களுக்கு மாதவிடாய் இராது என்கிறதால வெளியே போக வேண்டிய அவசியமும் இல்லை. இதுக்கும் விதி விலக்காக சில ஸ்தலங்களிலேயும் விசேஷமாக இருக்கலாம். நதியில் புது வெள்ளம் வரும்போது மாதவிடாய் அந்த தேவதைக்கு ஏற்படுத்துவதாகவும் சொல்கிறார்கள். இதெல்லாம் விதி விலக்கு; மாத விலக்கு இல்லை.

Friday, July 20, 2018

பறவையின் கீதம் - 34





ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார்.  

ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உலகம் தோன்றி 5000 வருஷங்கள் ஆனதா சொல்லுது. ஆனா நாங்க சில எலும்புகளை கண்டு பிடிச்சு இருக்கோம். அது பத்து லக்‌ஷம் வருஷமா உயிரினம் இருக்குன்னு சொல்லுதே?

பண்டிதர் சொன்னார்: "கடவுள் உலகை 5000 வருஷம் முன்னே படைச்சப்ப சில பழைய எலும்புகளையும் படைச்சார். அது நாம் கடவுளை நம்பறோமா இல்லை விஞ்ஞானிகளை நம்பறோமான்னு சோதிச்சுப்பாக்க!”

முரட்டு நம்பிக்கை யதார்த்தத்தையே அசைக்கிறது!

Thursday, July 19, 2018

பறவையின் கீதம் - 33





நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்?” என்றார்.

சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்து சொன்னார் "ஆண்களே இப்படித்தான். வாழ்க்கையில நடைமுறையே தெரியாது. ஒத்தரோட கை கால் 
விறைச்சுப்போயிட்டா அவங்கள் செத்தவங்க. இது கூட தெரியாது?”

நசருதீனுக்கு அவரது மனைவியின் எளிய அணுகு முறை பிடித்துவிட்டது. ஒரு நாள் அவர் உறைபனியில் வெளியே போக நேர்ந்தது. கை கால்கள் விறைத்துப்போயின. '! என் கைகால்கள் விறைத்துப்போனதால் நான் செத்துப்போயிருக்க வேணும்' என்று நினைத்தார். 'அப்படியானால் நான் ஏன் இன்னும் நடக்கிறேன்? சவம் போல கீழே படுத்துக்கிடக்க வேணுமே?' படுத்துக்கொண்டார். ஒரு மணி நேரம் கழிந்து அங்கே வழிப்போக்கர்கள் கூடி இருந்தனர். நசருதீன் செத்துவிட்டாரா இல்லையா என்று காரசாரமாக விவாதம் நடந்து கொண்டு இருந்தது. 'கைகால்கள் விறைச்சுப்போயிட்டா செத்துபோய்தானே இருக்கணும்' என்று நசருதீன் உரக்க கூவ நினைத்தார். ஆனால் சவம் பேசாதே? அதனால் சும்மா இருந்தார்.

கடைசியில் அவர்கள் அவர் செத்துபோய்விட்டதாக முடிவு செய்தனர். பாடையில் ஏற்றி இடுகாட்டுக்கு கொண்டு போனார்கள். ஆனால் ஒரு இடத்தில் வழி இரண்டாக பிரிந்தது. இப்போது எந்த வழி இடுகாட்டுக்குப் போகிறது என்பதில் சர்ச்சை எழுந்தது. பலத்த சர்ச்சையை கேட்டு நசருதீனால் பொறுக்க முடியவில்லை. எழுந்து உட்கார்ந்து சொன்னார்: "மன்னிச்சுக்குங்க கனவான்களே, இடுகாட்டுக்கு வழி இடது பக்கம் இருக்கறதுதான். சரி சரி, சவம் பேசாதுன்னு எனக்கும் தெரியும். விதியை முறிச்சதுக்கு இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சு விட்டுருங்க. இனிமே இப்படி நடக்காம பாத்துக்கறேன்!”

யதார்த்தத்துடன் முரட்டு நம்பிக்கை மோதும்போது பொதுவாக தோல்வி அடைவது யதார்த்தம்தான்!

Wednesday, July 18, 2018

பறவையின் கீதம் - 32





சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள்.

நண்பர் "அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்?” என்று கேட்டார்.
சாத்தான் " உண்மையின் ஒரு சிறு துணுக்கை!” என்றான்.

அது உனக்கு கஷ்டமாக இல்லையா?”
"இல்லை"
ஏன்?”
அதை வைத்துக்கொண்டு ஒரு குருட்டு நம்பிக்கையை உருவாக்கும்படி அவனை செய்துவிடுவேன்!”

மத நம்பிக்கை சத்தியத்துக்கு ஒரு வழிகாட்டி. வழியில் போகாமல் அந்த வழிகாட்டியையே கட்டிக்கொண்டு அங்கேயே இருந்தால் சத்தியத்தை தவற விட்டுவிடுவோம்.

Tuesday, July 17, 2018

பறவையின் கீதம் - 31





ஜென் குரு சிஷ்யனுக்கு தத்துவத்தை போதிப்பார்; அது இதயத்தை தொட்டு விடும். சிஷ்யன் அதை தகுந்த நபர் கிடைக்கும் வரை பாதுகாப்புடன் வைத்திருந்து போதிப்பார். முப்பது வருடங்கள் ஆகுமோ நாற்பது வருடங்கள் ஆகுமோ அது விஷயமில்லை. இது ஜென் பயிற்சி முறை.

ஜென் மாஸ்டர் முன்னன் டய்ஹன் சீடன் ஷோஜுவை கூப்பிட்டனுப்பினார்.
"ஷோஜு எனக்கு வயதாகிவிட்டது; நான் போகிறேன். இனி நீதான் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இந்தா இந்த புத்தகத்தை வைத்துக்கொள். இது ஏழு தலைமுறைகளாக குருவிடமிருந்து சீடனுக்கு என்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. நானும் இதில் கூடுதலாக கொஞ்சம் எழுதி இருக்கிறேன். இது நீ எனக்கு அடுத்து வரும் குரு என மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும்.”

ஷோஜு சொன்னார்: "புத்தகத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். உங்களிடமிருந்து எனக்கு ஜென் எழுதிய வார்த்தைகள் இல்லாமலே வந்துவிட்டது. அப்படியே இருக்கட்டும்.”
"தெரியும் தெரியும்" என்றார் முன்னன் பொறுமையாக. "இருந்தாலும் இது ஏழு தலைமுறைகளாக வந்துக்கொண்டு இருக்கிறது. இந்தா வைத்துக்கொள்.”

இருவரும் ஒரு தீ எரிந்து கொண்டு இருந்த கணப்பின் அருகில் இருந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். ஷோஜு கையில் திணிக்கப்பட்ட புத்தகத்தை உடனே தீயில் வீசிவிட்டார்.

"என்ன செய்கிறாய்? உனக்குப்பைத்தியம் பிடித்து இருக்கிறது!” என்று அலறினார் முன்னன்.

"நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்குத்தான் பைத்தியம் பிடித்து இருக்கிறது!” என்றார் ஷோஜு!

Monday, July 16, 2018

பறவையின் கீதம் - 30





ககுவா சக்ரவர்த்தியை சந்தித்த பிறகு காணாமல் போய் விட்டார். அவர் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை.

ககுவாதான் சைனாவுக்கு சென்று ஜென் பயின்ற முதல் ஜப்பானியர். அவர் அதிகமாக பயணம் செய்வதில்லை. எப்போதும் த்யானத்திலேயே இருப்பார். யாராவது அவரை பிடித்து சொற்பொழிவு ஆற்றச்சொன்னால் ஓரிரு சொற்களை சொல்லிவிட்டு காட்டின் வேறு தனிமையான பகுதிக்கு இடம் பெயர்ந்துவிடுவார்.

சைனாவில் இருந்து திரும்பிய பின் அவரைப் பற்றி கேள்விப்பட்டு நேரில் கொண்டுவரும்படி ஜப்பானிய சக்ரவர்த்தி ஆணை பிறப்பித்தார். அவர் வந்ததும் அரசவையில் பிரசங்கம் செய்யும்படி ஆணையிட்டார். ககுவா செய்வதறியாது பரிதாபமாக நின்றார். பின் தன் புல்லாங்குழலை எடுத்து ஒரு ஸ்வரத்தை வாசித்தார். சக்ரவர்த்திக்கு வணக்கம் செலுத்திவிட்டு கிளம்பிப்போய்விட்டார்

கன்பூசியஸ் சொல்லுகிறார்: தகுந்த பாத்திரத்துக்கு கற்றுத்தரவில்லை என்றால் அது பாத்திரத்தை வீணடித்ததாகும். சரியான பாத்திரம் இல்லையானால் எதுவும் கற்றுத்தராதே; அது சொற்களை வீணடித்ததாகும். "Not to discuss with a man worthy of conversation is to waste the man. To discuss with a man not worthy of conversation is to waste words. The wise waste neither men nor words.” ― Confucius, The Analects

Friday, July 6, 2018

பறவையின் கீதம் - 29





ஒரு தர்வேஷ் நதிக்கரையில் தான் பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார். அந்த வழியே போன ஒருவர் அவரைப்பார்த்தார். அவரது வெற்று முதுகை பார்த்து பளார் என்று வைக்க ஆசை எழுந்தது. மெதுவாக அருகே போய் பளார் என்று அறைந்துவிட்டார். அடிபட்டவர் பெரும் கோபத்துடன் எழுந்தார்.
வழிப்போக்கர் " ஒரு நிமிஷம் இரு. நீ என்னை திருப்பி அறையலாம். ஆனா முதல்ல இதுக்கு விடை சொல்லு. சத்தம் உன் முதுகுலேந்து வந்ததா இல்லை என் கையிலேந்து வந்ததா?
அதற்கு தர்வேஷ் சொன்னார்: இப்ப விடையை நீயே கண்டு பிடிச்சுக்கோ! நான் உணர்ந்ததை நீ உணர முடியாது!

A dervish or darvesh (from Persian: درویش‎, Darvīsh) is someone guiding a Sufi Muslim ascetic down a path or "tariqah", known for their extreme poverty and austerity.

Thursday, July 5, 2018

பறவையின் கீதம் - 28





மலை மீதிருந்து ஞானி இறங்கி வந்தார். அவரை சந்தித்த நாத்திகர் ஒருவர் "ஸ்வாமி, மலை மீது கண்ட இன்பப்பூங்காவில் இருந்து எதை எல்லாம் அள்ளி வந்தீர்கள்?” என்று கேட்டார்.
ஞானி புன்சிரிப்புடன் "மலர்களையும் பழங்களையும் என் ஆடையில் முடிந்து வரத்தான் நினைத்தேன். ஆனால் அங்கே சுவாசித்த நறுமணத்தில் என் ஆடைகளையே விட்டுவிட்டேன்!”

விஷயம் தெரிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்: கண்டவர் விண்டிலர்!

Wednesday, July 4, 2018

பறவையின் கீதம் - 27





தாமஸ் அகினா உலகின் புகழ்பெற்ற ஆன்மீக எழுத்தாளர். திடீரென்று ஒரு நாள் எழுதுவதை நிறுத்திவிட்டார். அவரது உதவியாளர் எழுதி பல நாட்கள் ஆகிவிட்டதை நினைவூட்டினார்

தாமஸ் சொன்னார்: திடீரென்று ஒரு நாள் ஒரு நிறைவான அனுபவம் ஏற்பட்டது. அப்போதுதான் நான் எழுதியதெல்லாம் ஒன்றுமே இல்லை என உணர்ந்தேன். இப்போது ஏதும் எழுத தோன்றவே இல்லை.

Tuesday, July 3, 2018

பறவையின் கீதம் - 26





அமேசான் நதியோடு போய் ஆய்வுப்பணியை மேற்கொண்டுவிட்டு திரும்பினார் ஒருவர். பலரும் ஆர்வத்துடன் சூழ்ந்துகொண்டு அது பற்றி சொல்லச்சொன்னார்கள். இவர் திகைத்துப்போனார். எதைப்பற்றி சொல்லுவது? அரிய வகை பூக்கள், இரவில் கேட்கும் பல மிருகங்களின் ஒலி, காட்டு மிருகங்கள் அருகில் செல்வது, வேகமான காட்டாறுகளின் நீரோட்டங்களில் அவசர அவசரமாக சென்ற போது - இப்படி ஏகப்பட்ட அனுபவங்களின் ஏற்பட்ட உணர்வுகளை எப்படி விவரிப்பது.
அதை சொல்லுவது கடினம். நீங்களே போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி எப்படி அங்கே போக வேண்டும் என்று ஒரு படத்தை வரைந்தார்.
அவ்வளவுதான்.
அதைப்பிடுங்கிக்கொண்டார்கள். சட்டத்தில் மாட்டி டவுன்ஹாலில் தொங்க விட்டார்கள். பிரதிகள் தயாரித்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டார்கள். இப்போது அவர்கள் எல்லோருமே அமேசான் நதியை குறித்த வல்லுனர்கள் ஆகிவிட்டார்கள். அதன் ஒவ்வொரு வளைவு, ஒவ்வொரு இடத்திலும் என்ன ஆழம், எங்கே எப்படி நீரோட்டம் உள்ளது, எங்கே நீர்வீழ்ச்சிகள் உள்லன... எல்லாம் அறிந்த
புத்திசாலிகள் ஆகிவிட்டார்கள்.

புத்தரை பலர் பலமுறை இறைவனைக்குறித்து சொல்ல வற்புறுத்தியும் அவர் அதற்கு இணங்கவில்லை. அவரும் ஒரு வரைபடத்தை போடத்தயாராக இல்லை.

Monday, July 2, 2018

பறவையின் கீதம் - 25





பாலைவனத்தில் இருந்து ஞானி திரும்பி வந்தார்.  
மக்கள் கேட்டார்கள்: கடவுளை கண்டீரா? அவர் எப்படி இருக்கிறார்? விவரியுங்கள்.
ஞானி மௌனமாக இருந்தார். இதயத்தில் உணர்ந்ததை எப்படி சொல்லில் வடிப்பது? இறை சொல்லில் அடங்குமா?
வற்புறுத்தினார்கள்.
யோசித்துவிட்டு ஏதோ சொல்ல முடிந்ததை சொன்னார். அது மிகவும் குறைபாடுடையது; போறாது என்று தெரிந்தே! யாரும் தானும் உய்த்து உணர தூண்டுமோ என்னவோ?
ஆனால் மக்கள் அதை அப்படியே எழுதிக்கொண்டார்கள். அதை புனித நூல் ஆக்கினார்கள். அதை நம்பிக்கையாக மற்றவர்கள் மீது திணித்தார்கள். சிரமப்பட்டு வெளிநாடுகளுக்கு அதை கொண்டு சென்றார்கள். அந்த முயற்சியில் தம் உயிரையும் கொடுத்தார்கள்.
ஞானி வருந்தினார். மௌனமாகவே இருந்திருக்கலாமோ?