Pages

Thursday, July 19, 2018

பறவையின் கீதம் - 33





நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்?” என்றார்.

சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்து சொன்னார் "ஆண்களே இப்படித்தான். வாழ்க்கையில நடைமுறையே தெரியாது. ஒத்தரோட கை கால் 
விறைச்சுப்போயிட்டா அவங்கள் செத்தவங்க. இது கூட தெரியாது?”

நசருதீனுக்கு அவரது மனைவியின் எளிய அணுகு முறை பிடித்துவிட்டது. ஒரு நாள் அவர் உறைபனியில் வெளியே போக நேர்ந்தது. கை கால்கள் விறைத்துப்போயின. '! என் கைகால்கள் விறைத்துப்போனதால் நான் செத்துப்போயிருக்க வேணும்' என்று நினைத்தார். 'அப்படியானால் நான் ஏன் இன்னும் நடக்கிறேன்? சவம் போல கீழே படுத்துக்கிடக்க வேணுமே?' படுத்துக்கொண்டார். ஒரு மணி நேரம் கழிந்து அங்கே வழிப்போக்கர்கள் கூடி இருந்தனர். நசருதீன் செத்துவிட்டாரா இல்லையா என்று காரசாரமாக விவாதம் நடந்து கொண்டு இருந்தது. 'கைகால்கள் விறைச்சுப்போயிட்டா செத்துபோய்தானே இருக்கணும்' என்று நசருதீன் உரக்க கூவ நினைத்தார். ஆனால் சவம் பேசாதே? அதனால் சும்மா இருந்தார்.

கடைசியில் அவர்கள் அவர் செத்துபோய்விட்டதாக முடிவு செய்தனர். பாடையில் ஏற்றி இடுகாட்டுக்கு கொண்டு போனார்கள். ஆனால் ஒரு இடத்தில் வழி இரண்டாக பிரிந்தது. இப்போது எந்த வழி இடுகாட்டுக்குப் போகிறது என்பதில் சர்ச்சை எழுந்தது. பலத்த சர்ச்சையை கேட்டு நசருதீனால் பொறுக்க முடியவில்லை. எழுந்து உட்கார்ந்து சொன்னார்: "மன்னிச்சுக்குங்க கனவான்களே, இடுகாட்டுக்கு வழி இடது பக்கம் இருக்கறதுதான். சரி சரி, சவம் பேசாதுன்னு எனக்கும் தெரியும். விதியை முறிச்சதுக்கு இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சு விட்டுருங்க. இனிமே இப்படி நடக்காம பாத்துக்கறேன்!”

யதார்த்தத்துடன் முரட்டு நம்பிக்கை மோதும்போது பொதுவாக தோல்வி அடைவது யதார்த்தம்தான்!

No comments: