क्रमान्यत्वं परिणामान्यत्वे हेतुः ।।15।।
க்ரமாந்யத்வம்° பரிணாமாந்யத்வே ஹேது: || 15||
க்ரமாந்யத்வம்° = தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது; பரிணாமாந்யத்வே = மாறுதலடையும் தர்மங்களில் வேறுபாட்டுக்கு; ஹேது:= ஏதுவாகும். (நினைவாக; தெரிவிப்பதாக; அந்த விஷயமாக அறிவை உண்டாக்குவதாக.)
தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது மாறுதலடையும் தர்மங்களில் வேறுபாட்டுக்கு ஏதுவாகும்.
காரணம் காரியமாகும் போது ஒரே மாதிரி மாறுவதில்லை. இது ஏன் என்றால் தோன்றும் முறையில் உள்ள வேறுபாட்டால்.
மண் பொடியாக இருக்கலாம் அல்லது உருண்டையாக இருக்கலாம். நீரின் ஓட்டம் கல்லை அரித்து அரித்து மண் பொடி உண்டாகிறது. அவை திரண்டு மண் உருண்டை ஆகலாம். இது தோன்றும் முறை - கிரமம். இந்த தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது அதன் தோற்றத்தில் -பொடியாக இருப்பதற்கும், உருண்டையாக இருப்பதற்கும் - வேறு பாட்டை உண்டு செய்கிறது.
மண்ணில்; புதைந்த மரம் கரியாகிறது. ஆனால் வேறுவிதமாக இது உண்டானால் - அதிக அழுத்தம் உண்டானால் அதுவே வைரமாக ஆகிறது. தோன்றும் முறையில் வேறுபாடு மாறுதல் என்ன என்பதை நிர்ணயிக்க காரணமாகிறது.
இதே போல் லக்ஷண பரிணாமமும் அவஸ்தா பரிணாமமும்.
–
PG: குதிரில் கொட்டி வைத்த நெல் அப்படியே விட்டால் காலப்போக்கில் பொடியாகிவிடுகிறது. (சூர்ணாவஸ்தை) இது எப்போது நிகழ்கிறது? எப்போதுமே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. தானியத்தில் இந்த பரிணாமம் நடந்துகொண்டேதான் இருக்கும். திடு திப்பென்று தான்யம் பொடியாகிவிடுவதில்லை.
எப்போதும் நிலையாக இருப்பது தர்மீ மட்டுமே. சொரூபமோ, லக்ஷணமோ, அவஸ்தையோ மாறிக்கொண்டேதான் இருக்கும். காமம், சுகம் போன்ற சில பரிணாமங்கள் நேரில் அனுபவத்தால் தெரிகிறது. ஆனால் சில பரிணாமங்கள் பார்க்க முடியாதவை. ஆகமம், அனுமானம் போன்றவற்றால் ஊகித்து அறிய வேண்டியன.
அப்படிப்பட்ட மறைவான மாற்றங்கள் கீழ் கண்டவாறு பிரிக்கப்படுகிறது:
1. நிரோதம். 2. கர்மம். 3.ஸம்ஸ்காரம். 4. பரிணாமம். 5. ஜீவனம். 6. சேஷ்டை. 7. சக்தி.
இவ்வேழு விருத்திகளும் பரோக்ஷமானவை (காண இயலாதவை).
நிரோதம், ஸம்ஸ்காரம், பரிணாமம் பற்றி முன்பே பார்த்துவிட்டோம்.
புண்ணியமும் பாபமும் கர்மங்கள் ஆகும்.
சித்தம் முக்குண வடிவம்; அதில் ஒவ்வொரு கணமும் மாறுதல் நடப்பது அனுமானத்தாலேயே அறிய வேண்டி இருக்கிறது.
மூச்சு வருகிறது என்பதில் இருந்து உயிர் இருக்கிறது என - ஜீவனம்- ஊகித்து அறியப்படும்.
சரீரங்களின் சேஷ்டையில் இருந்து ஊகித்து அறியக்கூடிய சித்தத்தின் க்ரியைதான் சேஷ்டை. ஒருவன் முகத்தைப்பார்த்து இவன் கண்ணுல குறும்பு மின்னுது. ஏதோ குறும்பு செய்ய சிந்தனை ஓடுதுன்னு அறிகிறோம்.
கார்யங்களின் ஸூக்ஷ்ம -இருப்பே - அவஸ்தையே சக்தி.
---
இது வரை ஸம்யமங்களின் தர்மங்களை பார்த்தோம், இனி ஸம்யமத்தால் விஷய வசீகார ஞானம் பெறும் சித்திகள் சொல்லப்படும்.