Pages

Friday, March 18, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 5


காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
அவர் வரலியா?
யாரு? ” என்றார் டீக்கடைக்காரர்.
அதான்..… அந்த பெரியவர்! ”
ம்ம்ம்ம் என்னவோ காணலை.”
யாருங்க அவரு?”
தெரியாது. அவர் வரப்ப நல்லா வியாபாரம் ஆகும். அவ்ளோதான் தெரியும்.”
ஏன், நீங்க விசாரிச்சு தெரிஞ்சுக்கலியா?”
பிடி கொடுக்க மாட்டாரு… பேப்பரை எடுத்து முகத்தை மறச்சுக்கிட்டார்ன்னா அவ்ளோதான்!. என்னவோ உங்ககிட்ட மட்டும்தான் வலிய வந்து பேசறாரு!”
இளைஞனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
இன்னைக்கு என்னவோ ரொம்ப கவலையோட இருக்கீங்க!” டீயை கொடுத்தபடி கடைக்காரர் சொன்னார்.
ஆமாம். வருஷ கடைசி. ஆபீஸ்ல இன்னும் டார்கெட் அடையலைன்னு உசிரெடுக்கறாங்க. தற்காலிகமா வேலை பாத்துகிட்டு இருந்த என் பொண்டாட்டிக்கு வேலை போயிடுச்சு. அவ ஒரு வேலைய பாத்துக்கொடுன்னு உசிரெடுக்குறா. போதாக்கொறைக்கு எங்க வீட்ல தங்கி படிச்சுகிட்டு இருக்கிற என் அண்ணன் பொண்ணு பரிட்சை ரொம்ப கஷ்டமா இருக்குன்னு பொலம்பி டென்ஷனை ஏத்திகிட்டு இருக்கு! எங்க திரும்பினாலும் கஷ்டம்தான். நானும் ரொம்ப ட்ரை பண்ணறேன். ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது!” அங்காலாய்த்தபடியே தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.
காலை முதல் இங்கும் அங்கும் உலவிய கரு மேகங்கள் சட்டென்று திரண்டன. வானம் இருண்டது. சட சடவென காலம் தப்பிய மழை பலமாக அடிக்கத்துவங்கியது. ஜனங்கள் ஓடி வந்து இளைஞன் அமர்ந்திருந்த பெஞ்சுக்கும் எதிர் பெஞ்சுக்கும் நடுவே இருந்த இடைவெளியில் தஞ்சம் புகுந்தனர். ஆளுக்கு ஆள் சள சள என்று பேசிக்கொண்டு இருந்ததை தொடர்ந்தனர். கைகளில் கூடைகளை வைத்து இருந்த இரு கிராம பெண்கள் இளைஞனின் பக்கத்தில் நின்று கொண்டு தங்கள் உரையாடலை தொடர்ந்தனர்.
அதான் அக்கா கவல. நானும் எத்தனையோ முயற்சி செஞ்சு பாக்கறேன். ஒண்ணும் நடக்க மாட்டேங்குது.”
ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோடி. உனக்கு கெடைக்கணும்ன்னு இருந்தா அது நிச்சயமா கெடைக்கும். யாரும் அத தட பண்ண முடியாது. ஆமா! கெடைக்கக்கூடாதுன்னு இருந்தா நீ என்னதான் முக்கி மொனகினாலும் கெடைக்காது. நீ பாட்டுக்கு நீ செய்ய வேண்டியத செய்யி. ஆமா! புரிஞ்சுதா?”
வந்த வேகத்தில் மழை நின்றது. ஜனங்களும் தம் வேலையை தொடர வெளியேறினர்.

இளைஞன் உறைந்து போயிருந்தான். சாதாரண கிராம பெண்கள்…. என்ன ஒரு ஞானம்! எவ்வளவு நிச்சயத்துடன் பெரிய உண்மை ஒன்றை சர்வ சாதாரணமாக உதிர்த்துவிட்டு போகிறாள்! இந்தியாவை ஞான பூமி என்று சிலர் சொல்வது உண்மைதான் போலிருக்கிறது!
ஒருவருக்கு டீ ஊற்றி கொடுத்த படியே தன்னை பார்த்து ஏதோ உணர்த்த முயன்று கொண்டு இருந்த டீக்கடைக்காரரை பார்த்தான் இளைஞன். குறுக்கே இருந்த சிலர் நகரவே இளைஞன் கிட்டே போய் என்ன வென்று கேட்டான். “அவர் வந்திருந்தாரே பாத்தீங்களா?”
பெரியவரா?” கண்கள் கடையை துழாவின. “இல்லையே!”
மழ ஆரம்பிச்சப்ப வந்தாரு. நின்னப்ப போயிட்டாரு!”
பளிச் என்று நிர்மலமாக இருந்த ஆகாயம் மட்டுமே இப்போது தெரிந்தது!

Post a Comment