Pages

Tuesday, March 1, 2016

மாதவிலக்கு - 2அடுத்து இந்திரனுக்கு உதவி செய்ய மரங்கள் இசைந்தன. இந்த மனிதன் அடிக்கடி எங்கள் கிளைகளை வெட்டிவிடுகிறான். அப்படி வெட்டினால் மீண்டும் துளிர்விட்டு வளர வேண்டும் என்று வரமாக வேண்டிப்பெற்றன. ஆகவே வெட்டப்படும் மரங்கள் மீண்டும் துளிர்க்கின்றன. மரங்கள் ஏற்ற தோஷம் அவற்றின் பிசினாக ஆயிற்று. ஆகவே இந்த பிசினை பயன்படுத்தக்கூடாது. எது சிகப்பு நிறமாக உள்ளதோ அல்லது மரத்தை வெட்டி வீழ்த்துவதனால் கசிகிறதோ அதை சாப்பிடக்கூடாது.
மீதி இருந்த தோஷத்தையும் யாருக்கேனும் தந்துவிட இந்திரன் தேடி அலைந்து கடைசியில் பெண்களின் சபையை அடைந்தான். அங்கே பெண்களிடம் முறையிட அவர்களும் கருணை கொண்டு அதை ஏற்றுக்கொள்ள இசைந்தனர். வரமாக நாங்கள் ருது காலத்தில் எப்போது வேண்டுமானாலும் எங்கள் கணவர்களுடன் சுகம் அனுபவிக்க வேண்டும் என்று வேண்டிப்பெற்றனர். (இதனால் ருது காலத்தில் பெண் விரும்பினால் ஆண்மகன் உடலுறவை மறுக்கக்கூடாது என்பது சாஸ்திரம். பெரும்பாலான பாலூட்டிகள் வருடத்தில் ஒரு முறை வரும் காலகட்டத்தில் மட்டுமே உடலுறவு கொள்ளுகின்றன. பிற காலங்களில் அல்ல. மனிதன் இதற்கு விலக்காக இருக்கிறான். ) இந்திரனும் ப்ரம்ம ஹத்தி தோஷம் நீங்கப்பெற்று தன் லோகத்துக்கு திரும்பினான்.
இப்படி ஏற்ற ப்ரம்ம ஹத்தி தோஷமே பெண்களின் மாத தீட்டாக ஆயிற்று, ஆகவே இந்த காலகட்டத்தில் பெண் ப்ரம்ஹ ஹத்தி தோஷம் கொண்டவளாக ஆகிறாள். இந்திரனே நடுங்கி ஒடுங்கிய அளவுக்கு அது தோஷம் என்பதால் இந்த நேரத்தில் அவள் தெய்வ காரியங்களுக்கு அருகதை ஆகமாட்டாள். சமையல் போன்ற வீட்டு காரியங்களில் இருந்தும் விலகியே இருக்க வேண்டும். இன்னும் சில கட்டுப்பாடுகளும் தவறினால் ஏற்படும் பிரச்சினைகளும் சொல்லப்படுகின்றன. பிறக்கும் குழந்தைகளுடைய நலனுக்காக மூன்று நாட்கள் விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
இந்த 3 தினங்களிலும் அவளுக்கு ஸ்நாநம் (தலைக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளித்தல்) கூடாது. அப்படிச் செய்பவளுக்கு பிறப்பவன் நீரில் மரிப்பான். எண்ணை தேய்த்துக்கொள்ளல் ஆகாது. அப்படிச் செய்பவளுக்கு கெட்ட தோல் உள்ளவன் பிறப்பான். சீப்பு முதலியதால் தலைவாரிக்கொண்டால் மயிரில்லாதவனும்; மையிட்டுக்கொண்டால் ஒரு கண்ணற்றவனும்; பல் தேய்த்துக்கொண்டால் கறுப்பு நிற பல்லுடையவனும் ; நகத்தைக் கிள்ளினால் கெட்ட(ஒழுங்கற்ற) நகமுடையவனும்; நூல் நூற்றால் ஆணும்-பெண்ணுமற்ற நபும்ஸகனும்; கயிறு திரித்தால் கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்பவனும்; பானங்களை இலையால் அருந்தினால் பைத்தியக்காரனும்; கைகளால் திரவம் அருந்தினாலும் உயரமற்ற சிறிய பாத்திரத்தால் அருந்தினாலும் குள்ளனும் பிறப்பார்கள். நீண்ட பாத்திரத்தைத்தான் நீர் முதலிய பானங்களை அருந்த உபயோகிக்க வேண்டும். விலக்கான 3 தினங்களிலும் இந்த ஒழுக்கத்தை கடை பிடிக்கவேண்டும்.
ஆக மாதவிலக்கு நாட்களில் பெண்கள் தேவ விஷயங்களில் இருந்து தள்ளியே இருக்க வேண்டும் என்றாகிறது. சாதாரணமாகவே இந்த காலத்தில் இவர்கள் எந்த கோவிலுக்கும் செல்லக்கூடாது. ஒரு மண்டல விரதம் இருந்து யாத்திரை மேற்கொண்டு செய்ய வேண்டிய பூஜையில் இவர்கள் பங்கேற்பது இயலாத காரியம். எல்லோரும் இப்படி விரதம் இருந்துதான் போகிறார்களா என்பதெல்லாம் வேறு விஷயம். நான் இருக்க வேண்டிய விஷயத்தை சொல்லுகிறேன். மேலும் மன அழுத்தம் ஆனால் கூட எப்போது வேண்டுமானாலும் தீட்டு வந்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. அது உங்கள் விருப்பம். உங்கள் வீட்டில் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது. அதே போல கோவில்களில் என்ன விதி முறைகளை கடைபிடிக்கிறார்கள் என்பதில் நீங்கள் தலையிட முடியாது.
எந்த கோவிலும் வேத நெறிகளுக்கும் ஆகம சாத்திர விதிகளுக்கும் கட்டுப்பட்டே செயல்பட வேண்டும் என்பதால் அதில் யாரும் மாறுதல்களை ஏற்படுத்திக்கொள்ள சுதந்திரமில்லை. சில கோவில்களில் சில விதிகளை மிகவும் கடுமையாக பின் பற்றுகிறார்கள், குறிப்பாக கேரளாவில் பொதுவாகவே விதிகளை கடுமையாக பின் பற்றுகிறார்கள். சபரி மலையில் மாத விலக்கான பெண் வரும் வாய்ப்பு ஒரு போதும் இருக்கக்கூடாது என்று அவர்கள் பாரம்பரியமாக கடைபிடித்தால் இதை மதிக்க வேண்டும். கோவில்கள் பிரபலமாக விளங்கவும் அங்கிருக்கும் தெய்வங்கள் சக்தி மிகுந்தவையாக கருதப்படவும் இத்தகைய கட்டுப்பாடுகளுடன் பூஜை முதலானவை நடை பெறுவதுதான் காரணம். ஒரு கோவில் பிரபலமானது, அங்கு வழிபட விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு அதன் கட்டுப்பாடுகளை உடைப்பேன் என்பது எவ்வளவு நகைப்புக்கு உரியது?
யாருக்கு பெண் ஆண் சமத்துவ கருத்தில் அத்தனை ஈடுபாடு இருக்கிறதோ அவர்கள் இந்த விஷயங்களில் தலையிடாது தேவையானால் அவர்களே ஏதேனும் வழிபாட்டு தலத்தை உருவாக்கி அங்கே அவர்களது கட்டுப்பாடுகளை அவர்கள் இஷ்டத்துக்கு விதித்துக் கொள்ளட்டும். ஏற்கெனெவே இருக்கும் கோவில் முதலான வழிபாட்டுத்தலங்களில் நடை முறைகளில் தலையிட அவசியம் இல்லைஅதில் தலையிட வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

Post a Comment