Pages

Monday, June 20, 2016

அந்தணர் ஆசாரம் - 1


இந்த தொடருக்கு அந்தணர் ஆசாரம் என்று தலைப்பு கொடுத்து இருந்தாலும் யாரும் அனுசரிக்கக்கூடியவையே. ஹைஜீன் என்று சொல்லப்படும் பல விஷயங்களும் இதில் அடங்கும். சிலவற்றுக்கு காரணம் வெளிப்படையாக தெரியும். சிலவற்றுக்குத்தெரியாது.
தர்ம சாஸ்த்ரம் என்று ரிஷிகள் தொகுத்தவையாதலால் ஏன், எதற்கு, காரணம் தெரிந்தால்தான் அனுஷ்டிப்பேன் என்று சொல்லாமல் ரிஷிகள் சொன்னவை நமக்கு நலம் பயப்பனவாகவே இருக்கும் என்ற தெளிவுடன் அணுகுதலே சிறப்பு.
-----

முதலில் நாம் தினசரி செய்யும் வேலைகளைக் குறித்து பார்த்துவிடலாம்.
காலை எழுந்திருக்கிறோம். எப்போது எழுந்திருக்க வேண்டும்? ப்ராம்ம முஹூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும். அது எப்போது? அது ’ஏர்லி மார்னிங்க் எய்ட் ஓ க்ளாக்’ இல்லை! ஒரு நாழிகை என்பது 24 நிமிஷங்கள். இரண்டு நாழிகை ஒரு முஹூர்த்தம். காலை சூர்ய உதயத்துக்கு முன் இருக்கும் முஹூர்த்தம் ரௌத்ரம். அதுக்கு முந்தைய முஹூர்த்தம்தான் ப்ராம்ம முஹூர்த்தம். அதாவது காலை ஆறு மணிக்கு சூர்ய உதயம் இருந்தால் காலை மணி 4-24 முதல் 5-12 வரை. இது கணக்குக்கு பொதுவாக சொன்னது. கால நிலையை அனுசரித்து இரவு நேரம் அதிகமாகவோ (குளிர்நாட்கள்) குறைவாகவோ (வெயில் நாட்கள்) ஆகும் இல்லையா? இரவு நேரத்தை நாலாக பிரித்தால் ஒரு பகுதி ஒரு யாமம். ஒரு யாமத்தில் மூன்றே முக்கால் முஹூர்த்தம். இதுவே சரியான கணக்கு.

காலை எழுந்தவுடன் நேற்றைய தினத்தில் என்ன என்ன தர்மங்களை செய்தோம்; என்ன நியாயமாக சம்பாதித்தோம்; இன்று செய்ய வேண்டிய தர்மங்கள் என்ன; இன்றைக்கு மற்றவர்களுக்கு கெடுதல் ஏற்படாமலும் நமக்கு பாபம் சம்பவிக்காமலும் என்ன சம்பாதிக்கலாம்; நாளாக ஆக மரணம், வ்யாதி, சோக மோஹங்கள் அதிகமாகிவிடுமே, அப்போது என்ன செய்வோம் என்பன குறித்து யோசிக்க வேண்டும்.
பின் இறைவனைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

இறைவனின் நாமாக்களை உரக்கச் சொல்ல வேண்டும். இதனால் பாபங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும். சிலர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.


இந்த நேரத்தில் வேத அத்யயனம் செய்தவன் பாக்கியசாலி. பசு, அக்னி, தீக்‌ஷிதர் ஆகியோரை தரிசனம் செய்தவன் எல்லா ஆபத்துகளில் இருந்தும் விடுபடுவான், ஆபத்துகள் வரா எனப்படுகிறது.

No comments: