Pages

Friday, June 24, 2016

அந்தணர் ஆசாரம் - 3


வாய்க்கொப்பளித்தலும் ஆசமனமும்:

சௌளம் செய்த பிறகு கைகால்களை மண் நீர் ஆகியவற்றால் கழுவி சிகை, கச்சம் ஆகியவற்றை சரியாக கட்டிக்கொண்டு வாய் கொப்பளித்து ஆசமனம் செய்ய வேண்டும்.
ப்ராம்ஹணனுடைய வலது பக்கம் தேவதைகள் இருக்கிறார்கள். ஆகவே வாய் கொப்பளித்து நீரை இடது பக்கமாகவே உமிழ வேண்டும். மலம் கழித்த பின் 12 முறையும், சிறுநீர் கழித்தபின் 4 முறையும் உணவுக்குப்பின் 16 முறையும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
ஒரு நாளில் பல முறை செய்யக்கூடிய ஆசமனத்தை சரியான தெரிந்து கொண்டு செய்தல் நலம். பலரும் தவறாகவே செய்கிறார்கள்.

முதலில் வடக்கு நோக்கியோ கிழக்கு நோக்கியோ குக்குடாசனத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அதாவது பாதங்கள் பூமியில் அழுந்த உட்கார்ந்து, கைகள் முழங்கால்களுக்கு நடுவில் இருக்க வேண்டும். பூணூல் உபவீதியாக இருக்க வேண்டும். தோளை வஸ்திரத்தால் மறைத்து இருக்கக்கூடாது. சிகை பிரிந்து இருக்கக்கூடாது. தெற்கு, மேற்கு பார்த்து ஆசமனம் செய்தால் ஸ்னானம் ப்ராயச்சித்தமாகும்.

வலது கையை குவித்துக் கொண்டு, அதில் மத்தியில் உள்ள இரண்டு ரேகைகளும் முழுகும்படி (உளுந்து மூழ்குமளவிற்கு என்றும் சொல்வதுண்டு) நீர் எடுத்துக்கொண்டு, பிறகு சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் இவற்றை நீட்டி கையை குவித்துக்கொண்டு; உறிஞ்சுகின்றபோது ஒலி எழாமல், மணிக்கட்டை வாய் அருகில் படாமல் வைத்து கையை விரல்கள் மேலே போகும்படி உயர்த்தினால் நீர் வாய்க்குள் போய்விடும். இதுவே ஆசமனம் எனப்படும். இப்படி 3 முறை மந்திரம் கூறி நீர் பருக வேண்டும். பிறகு உதடுகளை வலதுகை பெருவிரலின் அடியால் இரண்டு தடவை துடைத்து, பின் இது எச்சில் என்பதால் கையால் நீரை தொட்டுக்கொள்ள வேண்டும்.

ஆசமனம் செய்ய முடிந்த வரை சுத்தமான நீரே வேண்டும். வென்னீர், நுரை உள்ள நீர், உப்பு கலந்த நீர் ஆகியன கூடாது. குளித்தபின் கிணற்றில் எடுப்பதோ ஆற்றில் ஓடும் தண்ணீரில் எடுப்பதோ உசிதம். கடல் தண்ணீரில் எப்போதும் ஆசமனம் செய்யக்கூடாது.

உணவு உண்ணல், ஹோமம், தானம், பக்‌ஷணம் தின்பது, தானம் வாங்குதல் ஆகியவற்றில் ஆசமனம் இரு முறை செய்யச்சொல்லி இருக்கிறது. பழங்கள், கரும்புத்துண்டு, தாம்பூலம் ஆகியவற்றை உட்கொண்ட பின் ஆசமனம் செய்யத்தேவையில்லை.

No comments: