Pages

Monday, July 31, 2017

பொம்மனாட்டி சமாச்சாரம்!





(சொல்டேன தவிர எதான எழுதிருப்பாரோன்னு ப்ளாக்ல தேடினேன். ம்ஹூம் கடஞ்செடுத்த எம்சிபின்னா. பொம்மனாட்டி சமாச்சாரம் ஒன்னும் இருக்கறதா தெரியல)
இப்படி ஒரு கமெண்ட் சமீபத்தில வந்தது இல்லையா?
மனுஷன் தெரிஞ்சதைத்தானே எழுத முடியும்? :-)))
ஹிந்து சமாசாரங்களே பெரிய கடல். அதுல எனக்கு ஆர்வம் இருக்கறது சின்ன செக்டார்ல. அதுல சில விஷயங்களை தோண்டி தெரிஞ்சுண்டு இருக்கேன்…..ம்ம்ம்ம்ம்… தெரிஞ்சுண்டதா நினைச்சுண்டு இருக்கேன்.
ரெண்டு மூணு தரம் இங்கே பதிவுகளில எழுதினா மாதிரி எழுதறதும் 'எனக்கு தெரியும். உனக்குத்தெரியாது, கேட்டுக்கோ' மாதிரி இல்லை. என மனசில தெளிவாகறதுக்குத்தான் எழுதறேன். இனி படிச்சு எழுதி தெளிவாக வேண்டியது ஒண்ணுமில்லை என்கறதால எழுதறத நிறுத்தலாமா ன்னு யோசனை வந்தது.
இத கொஞ்சம் புரிய வைக்கட்டுமா?
மலையாளத்துல ப்ராந்தன் ஒத்தர் இருந்தாராம்! பைத்தியம்ன்னு மத்தவங்க நினைக்கறா மாதிரி நடத்தை. உள்ளுக்குள்ள ஞானியோன்னு சந்தேகப்பட வைக்கும். (ஆக்சுவலி முல்லா நசருதீன் பத்தி படிக்கறப்ப எழுதறப்ப இவர் நினைவு வரும்!) இவர் ஊர சுத்திண்டே இருப்பாராம். மனசில ஆகலையேன்னு சொல்லிண்டே இருப்பாராம். திடீர்ன்னு ஒரு நாள் மாறிடுத்து! மனசிலாயி மனசிலாயி ன்னு சொல்ல ஆரம்பிச்சுடாராம். ஜனங்க வழக்கம் போல சிரிச்சாங்க. யாரோ ஒத்தர மட்டும் இவர்கிட்ட என்ன விஷயம்ன்னு பதமா கேட்டார். ப்ராந்தன் ஒண்ணுமில்ல. ப்ரம்மம்ன்னா என்னன்னு விசாரம் பண்ணிண்டு இருந்தேன். அது என்னன்னு மனசுக்கு பிடிபடலை! ன்னார்.
ஓ அப்படின்னா இப்ப என்னன்னு புரிஞ்சுடுத்தா?
இல்லையே!
பின்னே?
அது மனசுக்கு பிடிபடாதுன்னு புரிஞ்சுடுத்து!
அந்த மாதிரி இந்த புத்தகங்கள் ப்ரவசனங்கள் மாதிரி சமாசாரம் எல்லாமே ஒரு ஸ்டேஜ் வரைதான். அப்புறம் நாமா செய்ய ஒண்ணுமில்லை. தானா கனியட்டும்ன்னு விடணும் போலிருக்கு!
எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டேன். 'படிச்சு எழுதி தெளிவாக வேண்டியது ஒண்ணுமில்லை' எங்கிறதை அஹங்காரமா எடுத்துக்கப்போறாங்களேன்னு அஹங்காரம் தோண வெச்சது. அதனால விளக்கம்.
சரி திருப்பி சப்ஜெக்டுக்கு வருவோம்.
ஹிந்துத்துவத்தை புரிஞ்சுக்க படிக்க ஆரம்பிச்சது உபநிஷத்துக்கள் வழியா போறப்ப வேதத்து மேலே ஒரு அபிமானம் வந்து அது எங்கோ இழுத்துண்டு போயிடுத்து. ரிலேடட் சப்ஜெக்ட் என்கிறதால தர்ம சாஸ்த்ரம் படிச்சேன். அதை அப்பப்ப பேசப்போக அதனால ஏதோ விஷயம் தெரிஞ்ச ஆசாமி மாதிரி ஒரு மயக்கம் ஜனங்களுக்கு ஏற்பட்டுடுத்து.
வேதங்கள் சொல்லுகிற விஷயங்கள் தனி. கர்ம காண்டங்களில கர்மாக்கள், அவற்றை செய்யறதால ஏற்படற பயன்கள் பத்தி இருக்கும். ஸம்ஹிதையில அதுக்கான மந்திரங்கள் இருக்கும். இஷ்டிகளே முன்னூத்தி சொச்சம் இருக்கும். அதை பார்க்கிறப்ப மலைப்பா இருக்கும். எவ்வளவு விஷயங்கள் காணாம போயாச்சு!
நம்ம ரிஷிகள் தொலை பார்வை உடையவங்க. காலப்போக்கில இதெல்லாம் சிரம சாத்தியமா போயிடும்; செய்யறவங்க இல்லாம போயிடுவாங்கன்னு பாத்து அதை எல்லாம் எளிமையாக்கி வைதீக கர்மாக்களா ஆக்கி க்ருஹ்ய சூத்திரம்ன்னு எழுதி வெச்சாங்க. உதாரணமா ஒரு இஷ்டியில செய்யறதுல நிறையவே சுருக்கமா ஒரு ஸ்தாலீபாகத்தில வரும்.
மூன்று வர்ணங்களுக்கான வேதம் ஒரு வர்ணத்துக்குன்னு மட்டுமே ஆகி அதுவும் க்ஷீணிச்சு போயிடும்ன்னு தெரிஞ்சு வேதத்துக்கு அதிகாரம் இல்லாம போகப்போறவங்களுக்காக கடை பிடிச்சு உலக வாழ்க்கைக்கு மேலுலக வாழ்க்கைக்கும் நல்லது செய்யறா மாதிரி சிலத… ம்ம்ம்? பலதை யோசிச்சாங்க. அவற்றை புராணங்கள் வடிவில கொடுத்தாங்க. கூடவே சில பல உப புராணங்கள் போல பல க்ரந்தங்களும் வந்தன. ஹோமங்கள் பூஜை வடிவெடுத்தன.
அதுக்காக புராணங்களில் வரது எல்லாம் கட்டுக்கதைன்னு அர்த்தமில்லை. நாம எதையாவது விளக்க ஒரு அனெக்டோட் சொல்லி விளக்கறா மாதிரி. எப்படியும் இதுல எல்லாம் சாரத்த எடுத்துக்கணும். சக்கையை விட்டுடணும்!
மனிதர்கள் பல விதம். அவர்களோட ருசிகளும் பலவிதம். அதுக்கு தகுந்தாப்போல பலவிதமான பூஜை முறைகள் இருக்கும். பலவிதமான தெய்வங்களும்!
இதில குல தெய்வ வழிபாடு முக்கியம். வருஷத்துக்கு ஒரு முறையாவது போய் அபிஷேக ஆரதனைகள் செஞ்சுட்டு வரணும். மத்தபடி வீட்டுல பூஜைன்னு ஒண்ணு முக்கியம். அது க்ரம பூஜைன்னு பெரியவங்க வழி சொல்லி வெச்சதா இருக்கலாம். அல்லது ஆத்மார்த்தமா அவங்கவங்க மனசுக்கு உகந்தபடி பூஜை செய்யலாம்.
இப்ப புரியும் ஏன் எக்கச்சக்க பூஜை முறைகள் இருக்குன்னு!
இது அத்தனையும் தெரிஞ்சுக்கறது சிரமமான விஷயம். இவை எல்லாமே குடும்ப வழக்கப்படி தலை முறை தலை முறையா பழக்கத்தில வரது. ஒரே பூஜையை ஒவ்வொரு குடும்பமும் வேற வேற மாதிரி செய்யும். இதுல ஹார்ட் அன் ஃபாஸ்ட் ரூல்ஸ் எல்லாம் கிடையாது. சாயங்காலம்தான் செய்வாங்கன்னா அது ஒரு ட்ரெடிஷன். (வாத்தியாருக்கு காலையில மத்த வேலைகள் இருக்குமில்ல? அதுவும் காரணமாயிருக்கலாம்!) வேற மாதிரி செய்யறதால் ஒண்ணும் குறைஞ்சும் போயிடாது! பலன் கிடைக்கதுன்னு ஒண்னுமில்ல. பக்தி மட்டுமே முக்கியம்.
ஆக மொத்தத்தில அவரவர் குடும்ப பழக்கப்படி செய்க. (அப்பாடா! இந்த ஒரு வரிக்காக இவ்ளோ பெரிய பதிவா? வெளங்கிடும்!)


தொடர்புடைய ஒரு பதிவு:
https://anmikam4dumbme.blogspot.in/2011/08/blog-post_05.html

Friday, July 28, 2017

கிறுக்கல்கள் -147





யாரோ தன் நாட்டை ஆக்ரமித்துக்கொண்டு கொடுமை செய்வோரைக் குறித்து தன் வெறுப்பை வெளிப்படுத்தினார்.

மாஸ்டர் சொன்னார் " இதோ பாருங்கள். ஒரு போதும் யாரும் உங்களை தரம் தாழ்த்தி வெறுப்பை தூண்டுவதை அனுமதிக்காதீர்கள்!”

Thursday, July 27, 2017

கிறுக்கல்கள் -146





"இந்த ஆசாமியை நம்பலாமா கூடாதான்னே தெரியலை!” என்றார் புதிதாக வந்த ஒருவர்.

அனுபவசாலியான சீடர் சொன்னார். “மாஸ்டர் எப்பவுமே தான் சொல்லற ஒரு வார்த்தையைக்கூட அப்படியே யாரும் அப்படியே ஏத்துக்கணும்ன்னு நினைக்கறதில்லை. அதை சந்தேகப்படு, கேள்வி கேளு என்பார்.”

மேலும் சொன்னார், “அவர் வார்த்தைகள் எல்லாமே லேசானவைதான். அதைப்பத்தி எனக்கு கவலை ஏற்படறதில்லை. ஆனா அவர் அருகாமை…. அவரோட வார்த்தைகள் நமக்கு ஒளி தருது. ஆனா பக்கத்தில இருக்கறதுதான்….. எரிச்சுடறார்!”

Wednesday, July 26, 2017

கிறுக்கல்கள் -145





"என் பெற்றோர் உங்களிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னாங்க" என்றார் புதிதாக வந்தவர்.


மாஸ்டர் புன்னகைத்தார். “ஆமாம். ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. அப்பத்தான் உங்க அப்பா அம்மா மாதிரியே ஆக முடியும். ரொம்ப நல்லதோ ரொம்ப கெட்டதோ எதுவுமே ஆகாது உங்களுக்கு!”

Tuesday, July 25, 2017

கிறுக்கல்கள் -144





என்ன சொன்னாலும் சீடர்களுக்கு மாஸ்டரின் ஞானம் அடைய எதுவும் செய்ய முடியாது என்னும் தத்துவம் மனதிற்கு பிடிக்கவே இல்லை.
மாஸ்டர் சொல்லுவார்: இருட்டை நீக்க நீ என்ன செய்ய முடியும்? இருட்டு என்பது ஒளி இன்மை. கேடு ஞானம் இல்லாமை. இல்லாததை என்ன செய்ய முடியும்?


(இருக்கறதை சண்டை போடலாம், மாத்தலாம், நீக்கலாம். இல்லாததை என்ன செய்ய?)
(குருவோ பகவானோ விளக்கேத்தி வைக்கணும்!)

Monday, July 24, 2017

கிறுக்கல்கள் -143






செல்வத்தை தேடி, வாழ மறந்தவர்கள் குறித்து இன்னொரு கதை சொன்னார் மாஸ்டர்.
செல்வந்தர் ஒருவர். இறந்து போய் விட்டார் என்று இடுகாட்டுக்கு ஊர்வலமாகப்போய் கொண்டு இருந்தார்கள். திடீரென்று அவருக்கு விழிப்பு வந்துவிட்டது. நடப்பதை உணர்ந்து கொண்டார். விரைவாக முடிவெடுத்தார். நாம் இப்படியே படுத்துக்கொண்டே இருந்து விடுவோம். முழித்துக்கொண்டதாக தெரிந்தால் ஆன செலவை வசூலித்து விடுவார்கள்.

Saturday, July 22, 2017

லக்ஷ்மீ அஷ்டோத்தரம் - ஒரு திருத்தம் - சரியா தப்பா?





/ தமிழில் ஒரு பழமொழி உண்டு - “எழுதினவன் ஏட்டை கெடுத்தான்”

இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாமாவளிக்கு பொருந்துகிறது. முதல் நபர் செய்த தவறை நம்மில் பலரும் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம்லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரத்தின் மூன்றாவது ச்லோகம் :

அதிதிம் ச திதிம் தீப்தாம் வசுதாம் வசுதாரிணீம்
நமாமி கமலாம் காந்தாம் காமாக்ஷீம் க்ரோதசம்பவாம்

இதனை ,

ஓம் அதித்யை நமஓம் தித்யை நம: ஓம் தீப்தாயை நம: ஓம் வசுதாயை நம: ஓம் வசுதாரிண்யை நம: ஓம் கமலாயை நம: ஓம் காந்தாயை நம: ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோத ஸம்பவாயை நம:

என்றே 90% புத்தகங்கள் காட்டுகிறது.

கமலா - தாமரையில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மீ
காந்தா -(விஷ்ணுவின்) மனைவி
காமாக்ஷி - அழகிய கண்களை உடையவள்

இது வரை சரி; அடுத்த நாமா ?

க்ரோத ஸம்பவாயை - கோபத்தோடு உதித்தவள் அல்லது கோபத்தினால் உதித்தவள்.

இது சரியாக பொருந்தவில்லையே...

இப்படி அர்ச்சனை செய்வது சரியாகுமா? லக்ஷ்மிக்கே பிடிக்குமா?

1935ல் வெளிவந்த புத்தகங்களில் நாமா சரியாகவே பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வந்தவர்கள், யாரோ ஒருவர் அறியாமல் பதம் பிரித்து ”க்ரோத ஸம்பவா” என அச்சிடப்போக, பின்னாளில் வந்தவர்கள் யாருமே அதை சரிபார்க்காமல் அப்படியே அச்சிடுகிறார்கள். இன்று கிட்டத்தட்ட எல்லா புத்த்கங்களிலும் இணையத்திலும் அப்படியே தான் இருக்கிறது.

லக்ஷ்மீ அஷ்டோத்தரம் கொண்டு அர்ச்சனை செய்பவர்க்கு லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும், ஐச்வர்யம் பெருகும். ஆனால் மக்கள் பலரும் தாங்கள் கஷ்டப்படுவதாக புலம்புவதைப் பார்க்கும் போது - இது போன்று தவறுகள் இருப்பதைக் காண முடிகிறது.

நம்மை யாராவது “சிடுமூஞ்சி” என்றால் நாம் சந்தோஷப்படுவோமா? ஆனால் மஹாலக்ஷ்மியை இப்படி தவறாக அழைத்தால் பூர்ணமாக அனுக்ரஹம் எப்படி கிட்டும் ?

இனி சரியான பாடத்துக்கு வருவோம்

ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் க்ஷீரோத ஸம்பவாயை நம:

காமாயை - ஆசையின் வடிவானவளே
க்ஷீரோத ஸம்பவாயை - பாற்கடலில் உதித்தவளே

இது அம்ருத மதன காலத்தில் பாற்கடலில் இருந்து மஹாலக்ஷ்மி உதித்தாள் எனும் புராணத்துக்கு இசைந்து அமைகிறது.

வாசகர்கள் அனைவரும் இனி மேல் நாமாக்களை திருத்திக் கொண்டு மஹாலக்ஷ்மியின் பூர்ண கடாக்ஷத்துக்கு பாத்திரமாகுங்கள்.

- நன்றி திரு அரவிந்த் ஸுப்ரமண்யம்

இப்படி ஒரு பதிவு இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இந்த நபரை நான் அறியேன். இவரிடம் எனக்கு ஒரு பஞ்சாயத்தும் இல்லை. ஆனால் இங்கே இப்படி சொல்லி இருக்கிறது என் அறிவுக்கு எட்டிய படி தப்பு.
இவர் சொல்கிறபடி பாத்தா பிரிக்கறதுதான் தப்பா பிரிச்சிருக்கு; யாரோ தப்பா பிரிக்கபோய் அதை எல்லாரும் கேள்வி கேட்காம அப்படி ஃபாலோ செய்யறா.
அப்படி இல்லை.
ஸ்லோகம்:
अदितिं च दितिं दीप्तां वसुधां वसुधारिणीम् ।
नमामि कमलां कान्तां कामाक्षीं क्रोधसंभवाम् ॥ १२॥
 
பிரிக்கறது சரியாத்தான் பிரிச்சிருக்கு.
காமாக்ஷீம் ன்னு சொன்ன போதே வார்த்தை முடிஞ்சுடுத்து க்ரோதசம்பவாம் அடுத்த வார்த்தை.
இல்லைன்னு சொல்லறதா இருந்தா சரியா இலக்கணத்தை சொல்லட்டும். எந்த விதிப்படி இது தப்பு?
மூல ஸ்லோகத்தில தப்பா ப்ரிண்ட் ஆயிருக்குன்னா அது வேற விஷயம். அதுக்கு ஆதாரம் காட்டட்டும். விசாரிச்சதுல "ஆமாம், தப்பா நாமாவளி இருக்கறதாகவும் முன்னே பழைய புத்தகங்களில சரியா இருந்ததாகவும் சொல்றாளே ஒழிய அந்த மாதிரி எந்த பழைய புத்தகத்தையும் பார்க்கலை" ன்னே மக்கள் சொல்றாங்க.
ஶ்ரீ அரவிந்த் சுப்ரமணியம் தயை செய்து மூலத்தில இருக்கிற ஆதாரத்தை வெளியிடட்டும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன் க்ரோத சம்பவா என்கிற பதம் இவருக்கு உறுத்துகிறது? ருத்ரனை கோபத்தின் வடிவமாவேத்தான் ஸ்தோத்திரம் செய்கிறோம். அவர் எவ்ளோ பாப்புலர்?
ஜனார்தனன் என்கிற பெயரும் ரொம்ப பாப்புலர். அதுக்கு என்ன அர்த்தம்? ஜனங்களை அழிப்பவன். க்ரோதசம்பவா என்பதாவது ஒரு குறையா சொல்லலாம். ஆனா இதை எப்படி சொல்லறது? பாசிடிவ்வா திட்றா மாதிரி இல்லே?  வியாக்கியானம் செய்யும் போது மக்கள் தன் சாதுர்யத்தை பயன்படுத்தி துஷ்ட ஜனங்களை அழிப்பவன்னு சொல்லிட்டு போயிடலாம்.
எல்லா தேவதைகளையுமே ஒரு பக்கம் ஜனங்களுக்கு அனுக்ரஹம் செய்வதாயும் இன்னொரு பக்கம் துஷ்டர்களை நாசம் செய்வதாகவுமேத்தான் வர்ணிக்கிறார்கள். அந்த 'நெகடிவ்' க்வாலிட்டியும் வேண்டித்தான் இருக்கு. துஷ்டர்கள் மீது கோபப்படுவது தவறில்லைதானே?
இப்படி இதை எல்லாம் நோண்டிப்பார்க்கிறதில என்ன பிரச்சினைன்னா ஒரு வேளை அஷ்டோத்திர பூஜை செய்யும் போது லக்ஷ்மி மனசில நிக்க மாட்டா. இந்த கான்ட்ரவர்ஸிதான் மனசில நிக்கும்!

Friday, July 21, 2017

கிறுக்கல்கள் -142





ஒரு இளைஞன் ஏழைகளுக்கு சேவை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தன் கனவை மாஸ்டரிடம் சொன்னான்.
மாஸ்டர் கேட்டார், சரி, உன் கனவு நனவாக எப்போது என்ன செய்யப்போகிறாய்?
சரியான வாய்ப்பு கிடைத்த உடன்….
வாய்ப்பு என்பது காத்திருந்து பெறுவது அல்ல. அது எப்போதுமே உன்னுடன் இருக்கிறது.

Thursday, July 20, 2017

கிறுக்கல்கள் -141





எந்த கேள்விக்கும் ஒரே ஒரு சரியான விடை மட்டுமேதான் இருக்க முடியும் என்று கட்சி கட்டினார் ஒருவர்.
மாஸ்டர் கேட்டார்: மனிதன் ஈரத்தில் படுத்து இருந்தால் உடம்பு வலி எடுக்கிறது. ஆனால் மீனோ நீரிலேயேத்தான் இருக்கிறது.
மரத்தில் வசிப்பது மனிதனுக்கு ஆபத்து. ஆனால் குரங்குகள் அங்கேயேத்தான் வசிக்கின்றன.
இப்போது வசிப்பிடம் எது சரி என்று கேட்டால் மீனுடையதா, குரங்குடையதா, மனிதனுடையதா - எதை இது மட்டுமே சரி என்று சொல்ல முடியும்?
புலி மாமிசத்தை உண்கிறது, எருமை புல் தின்கிறது, மரங்கள் பூமியில் இருந்து சத்தை உறிஞ்சிக்கொள்கின்றன. எது 'மட்டுமே' சரியான உணவு?

Wednesday, July 19, 2017

கிறுக்கல்கள் -141





உனக்குத்தேவையானது விழிப்புணர்வு, விழிப்புணர்வு, விழிப்புணர்வு என்றார் மாஸ்டர்,
மதத்தில் அபிமானம் கொண்ட சீடன் சொன்னான்: ஆமாம்! தெரியுமே? அதனால்தான் கடவுளின் இருப்பை உணர முயற்சிக்கிறேன்.
கடவுள் எப்படி இருப்பார் என்று உனக்குத்தெரியாது; அதனால் அவரது இருப்பு உன் கற்பனையே! உனக்குத்தேவை சுயத்தை பற்றிய விழிப்புணர்வு. நீ யார்?

Tuesday, July 18, 2017

உபாகர்ம





காஞ்சீ ஶ்ரீமடத்தின் வருடாந்தர பஞ்சாங்க ஸதஸ்ஸின் ஒருங்கிணைப்பாளரான
நெரூர் ஶ்ரீரமண ஶர்மா ஆஸ்திக மஹாஜனங்களுக்கு செய்துகொள்ளும் ஒரு
விஜ்ஞாபனம்.

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வேதத்தை ஓதும்
பொறுப்பு உள்ளவர்கள் அனைவரும் (அவர்களால் அதனை முழுதாக ஓத இயலுகிறதோ
இல்லையோ) அதற்கு அங்கமாக செய்யவேண்டியதான வருடாந்தர அனுஷ்டானமானது
உபாகர்ம என்பது. எந்த மஹர்ஷிகள் நமக்கு வேதத்தைக் கொடுத்துள்ளார்களோ
அவர்களுக்கு நன்றியுடனும் பக்தியுடனும் அக்னியில் ஆஹுதியளித்து அவர்களது
ஆசியுடன் அடுத்த வருடமும் வேத மந்திரங்களைத் தொடர்ந்து ஓதத் தொடங்குவதே
உபாகர்ம.

இந்த உபாகர்மாவுக்கு ஆவணி அவிட்டம் என்று பரவலாக தமிழில் இன்று பெயர்
வழங்கினாலும் ஆவணி தான் அவிட்டம் தான் என்று கிடையாது. இதற்கு பலவேறு
தர்ம ஶாஸ்த்ர க்ரந்தங்களில் பலவேறு காலங்களைச் சொல்லியுள்ளார்கள் மனு
முதலியோர். முக்கிய காலமாக ருக்வேதத்திற்கு ஶ்ராவண மாஸத்தின் ஶ்ரவண
(திருவோண) நக்ஷத்ரத்தையும், யஜுர்வேதத்திற்கு அதே மாதத்தின்
பௌர்ணமியையும், ஸாமவேதத்திற்கு பாத்ரபத மாதத்தின் ஹஸ்த நக்ஷத்ரத்தையும்
கூறியுள்ளார்கள்.

(ஶ்ராவண மாஸம் என்பது ஆடி மாதத்தில் வரும் அமாவாஸ்யைக்கு அடுத்த
ப்ரதமையில் தொடங்கி அதற்கடுத்த அமாவாஸ்யை முடிய. இதற்கு அடுத்தது
இப்படியே பாத்ரபத மாஸம். இதில் ஶ்ராவண ஶ்ரவணமும் ஶ்ராவண பௌர்ணமியும்
பெரும்பாலும் சேர்ந்து வரும். அதனால்தான் அந்த மாதத்திற்கு ஶ்ராவணம்
என்று பெயர். ஆகவே பெரும்பாலும் ருக் யஜுர்வேதங்களுக்கு சேர்ந்தே உபாகர்ம
வரும், ஆனால் சில வருடங்கள் ஒரு நாள் முன்பு பின்பாக வரலாம்.)

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் க்ரஹணம் மற்றும் ஸங்க்ரமணம்
(மாதப்பிறப்பு) ஏற்படும் தினத்தன்று உபாகர்ம அனுஷ்டிக்கக்கூடாது என்கிறது
ஶாஸ்த்ரம். அதிலும் ஸூக்ஷ்மமாக என்றைய தினம் உபாகர்ம செய்யவேண்டுமோ
அன்றைய தினம் நடுநிசிக்கு முன்பு க்ரஹணம் இருக்கக்கூடாது.

நிகழும் ஹேமலம்ப ௵ ஶ்ராவண மாஸ பௌர்ணமியன்று (2017-ஆகஸ்ட்-07):
பார்ஶ்வ க்ரஹண ஆரம்பம் 22:52
க்ரஹணம் விட ஆரம்பிப்பது 23:50
மோக்ஷம் +0:48

ஆகவே நடுநிசிக்கு முன்பே (22:52) க்ரஹணம் இருப்பதால் அன்றைய தினம்
அனுஷ்டிக்கப்படவேண்டிய ருக் யஜுர் உபாகர்மத்திற்கு தோஷம் ஏற்படுகிறது.
ஆகவே முக்கிய காலத்தில் இதனை அனுஷ்டிக்கமுடியாது. (க்ரஹணம் மற்றும்
ஸங்க்ரமணத்தைத் தவிர வேறு சில தோஷங்களும் சொல்லப்பட்டுள்ளன ஆனால் அவை
யாதும் இவ்வருடம் ஏற்படவில்லை. ஆகவே இவ்வருடம் க்ரஹணம் தான் தோஷம்.)

இத்தகைய விஷயத்தில் ருக்வேதத்திற்கும் ஶுக்ல யஜுர் வேதத்திற்கும் ஶ்ராவண
மாஸ ஶுக்ல பக்ஷத்தில் (பெரும்பாலும் ஹஸ்தத்துடன் கூடிய) பஞ்சமியன்று
உபாகர்ம அனுஷ்டிக்கும்படி ஶாஸ்த்ரம் கூறுகிறது. (பழைய பஞ்சாங்கங்களில்
வாஜஸநேயி என்ற பெயரில் ஶுக்ல யஜுர் வேதத்தையும் குறிப்பர், இஃது இன்றைய
பஞ்சாங்கங்களில் விட்டுப்போயிருக்கிறது.) ஆகவே இவ்வருடம் வரும் ஆடி ௴ 13
௳ (2017-ஜூலை-28) அன்று ருக்வேதிகளும் ஶுக்ல யஜுர்வேதிகளும் உபாகர்ம
செய்யவேண்டியது.


க்ருஷ்ண யஜுர்வேதத்திற்கோ ஶ்ராவண மாஸத்தில் தோஷம் ஏற்பட்டால் அதற்கு
முந்தையதான ஆஷாட மாஸ பௌர்ணமியன்று செய்யவேண்டும் என்ற போதாயன வசனம்
இருப்பதால் போதாயன ஸூத்ரத்தை அனுஷ்டிப்பவர்கள் சிலர் அவ்வாறு செய்யும்படி
அபிப்ராயப்படுகிறார்கள். (இந்த காலம் ஜூலை 8 அன்று கடந்துவிட்டது.) ஆனால்
ஆனி மாதத்தில் வரும் ஆஷாடம் கூடாது என்று வேறு சிலர் கருதுகின்றனர்.

போதாயனம் என்றில்லாமல் பொதுவான ஶாஸ்த்ரமாவது – முக்கிய காலமான ஶ்ராவண
பௌர்ணமிக்கு தோஷம் வந்தால் அடுத்த பாத்ரபத பௌர்ணமியன்றும், அதற்கும்
வந்தால் முந்தைய ஆஷாட பௌர்ணமியன்றும், அதற்கும் வந்தால் முக்கிய காலமான
ஶ்ராவண பௌர்ணமியிலேயே தோஷ பரிஹார ஹோமம் செய்தும் அனுஷ்டிக்கவேண்டும் –
என்றுள்ளது.

ஆகவே இவ்வருடம் முக்கிய காலமான ஶ்ராவண பௌர்ணமிக்கு தோஷம் இருப்பதாலும்
இரண்டாவதாக சொல்லப்பட்ட பாத்ரபத பௌர்ணமிக்கு தோஷம் இல்லாததாலும் அன்றே
(ஆவணி ௴ 21 ௳, 2017-செப்-6) க்ருஷ்ண யஜுர்வேதிகள் உபாகர்ம
செய்யவேண்டியது.
போதாயன ஸூத்ரத்தவர்களும் ஆஷாடத்தில் செய்யவியலாது என்ற
பக்ஷத்தில் இந்த காலத்திலேயே செய்யவேண்டும்.

ஸாம வேதிகளுக்கோ சதுர்த்திைய ஒட்டி உபாகர்ம வருவதால் க்ரஹண தோஷம்
வாய்ப்பே இல்லை. (மற்ற தோஷங்கள் ஸம்பவிக்கலாம் ஆனால் இவ்வருடம் ஒன்றும்
இல்லை.) ஆகவே அவர்கள் ஆவணி ௴ 9 ௳ (2017-ஆகஸ்ட்-25) பிள்ளையார்
சதுர்த்தியன்றே உபாகர்ம செய்யவேண்டியது.

ப்ரதிவருடமும் காஞ்சீ ஶ்ரீ பெரியவாளின் உத்தரவுபடி அன்னாரது சாதுர்மாஸ்ய
ஸமயத்தில் நடத்தப்படும் பஞ்சாங்க ஸதஸ்ஸில் தமிழ்நாட்டிலுள்ள சுமார்
15க்கும் மேற்பட்ட பஞ்சாங்கங்களின் வெளியீட்டாளர்கள் தர்ம ஶாஸ்த்ர
வித்வான்களின் கலந்தாலோசனையின்படி அடுத்த வருடத்திற்கான அனுஷ்டான
உத்ஸவாதிகளை முன்னதாகவே தீர்மானித்துக்கொள்கிறார்கள். பிறகு சித்திரை
மாதத்திற்கு முன்பாகவே (அடுத்த வருட முஹூர்த்தாதிகளைப்
பார்த்துக்கொள்வதற்கு ஏதுவாக) வெளியிடுகிறார்கள். கடந்த வருடம்
விஜயவாடாவில் ஶ்ரீ பெரியவாளின் சாதுர்மாஸ்ய ஸந்நிதியில் இந்த
வருடத்திற்காக நடந்த ஸதஸ்ஸில் மேற்கண்டபடியே நிர்ணயம் கொடுத்துள்ளோம்.

வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் அவர்களது மூல நூல்களை
ப்ரமாணம் காட்டி க்ரஹணத்தன்றே அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதைப்பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்த ஸம்ப்ரதாயத்தவர்கள்
அவரவர்களது பெரியோரைக் கேட்டுக்கொள்ளல் நலம். வைஷ்ணவர்கள் அல்லாதவர்களைப்
பொறுத்தவரை க்ரஹண தோஷம் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆகவே தான் ஶ்ரீமடத்து
ஸதஸ்ஸில் மேற்கூறியபடி நிர்ணயம் கொடுக்கப்பட்டது.

இதில் சிலர் தேவையின்றி பரவலாக ஊடகங்களில் மாற்றுக்கருத்துக்களைப்
பரவவிட்டு பொதுமக்களுக்கு குழப்பங்களை உண்டுபண்ணியிருப்பது வருந்தத்தக்க
விஷயம். கடந்த 2017-ஜூன்-16 தேதியிட்டு நமது ஶ்ரீ பெரியவாள் பஞ்சாங்க
ஸதஸ்ஸின் நிர்ணயத்தையே உறுதி செய்து கடிதம் கொடுத்திருப்பது சமூக
ஊடகங்களில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் மீண்டும் மீண்டும்
சில ஊடக ப்ரசாரங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் இதனைக் கண்டுக் குழப்பம்
அடையாமல் இருக்கவேண்டும்.

ஏன் இப்படிச் சிலர் மாற்றுக்கருத்தை ப்ரசாரம் செய்கிறார்கள் என்பது
நமக்குத் தேவையில்லை. இத்தகைய குழப்பங்களுக்கு ஆளாகாமல் “தெளிவு குருவின்
திருவார்த்தை கேட்டல்” என்ற ஆன்றோர் வாக்கின்படி லோக க்ஷேமார்த்தமாக ஶ்ரீ
பெரியவாள் நடத்தும் இந்த ஸதஸ்ஸின் மேற்படி நிர்ணயத்தை அனுசரித்து க்ரஹண
தோஷம் இல்லாத தினங்களில் உபாகர்ம அனுஷ்டானத்தைச் செய்து ஶ்ரேயஸ்ஸை
அடைவோமாக!

ஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர.

கிறுக்கல்கள் -140





யாரையும் அதிருப்திக்கு ஆளாக்கி விடுவோமோ என்று எப்போதும் பயப்படும் சீடன் ஒருவன் இருந்தான். மாஸ்டர் அவனிடம் சொன்னார்: கடவுளால் கூட செய்ய முடியாத விஷயம் ஒன்றிருக்கிறது.

என்னது அது?

அவரால் எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்தி செய்ய முடியாது!

Monday, July 17, 2017

பதிவுகள் இரண்டாயிரம்





கூகுளார் சொல்லறார் இத்தோட 2002 பதிவுகள் ஆயிடுத்தாம். இது 2003 ஆவது!
எழுத ஆரம்பிச்சப்ப எனக்கு புரியறதுக்காகத்தான் எழுத ஆரம்பிச்சேன். ஒரு விஷயத்தை உள் வாங்கினோமா இல்லையா என்கிறது அதை நாம் நம்ம மொழியில் எழுத ஆரம்பிக்கறப்பத்தான் சரியா தெரிய வரும்! அதுக்காக ஆரம்பிச்சது!
அத்தோட பலர்கிட்டேயும் ஆன்மீகத்தைப்பத்திய ஒரு சரியான புரிதல் இல்லைன்னு தோணித்து. டம்மீஸ் சீரியல் புத்தகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்! எதுவும் பெரிசா தெரிஞ்சதா அஸ்யூம் பண்ணிக்காம அடிப்படையில இருந்து சொல்லித்தரது. அதே பாணிலத்தான் இதை எழுதணும்ன்னு நினைச்சேன். அதனாலத்தான் இந்த மாதிரி ப்ளாக் தலைப்பும். போகிற போக்கில் என் மனசிலேயும் விஷயங்களை சீர் செஞ்சுக்க முடிஞ்சது.
இது வரை இரண்டு முறையாவது போதும், இனி எழுத வேண்டாம்ன்னு தோணி இருக்கு! ஒவ்வொரு முறையும் ஏதோ ஒண்ணு திருப்பி எழுத வைக்கறது.
ஒரு தொடரை எழுதிக்கொண்டு இருப்பேன். இத்தோட போறும்ன்னு நினைப்பேன். சரியா அந்த தொடர் முடியும் தறுவாயில இன்னொன்னு வந்து என்னை எழுதுன்னு வந்து நிக்கும்!
இப்படித்தான் ஶிவனோட நாமா பத்தாயிரம், ரமணர் பற்றி தொடர் எல்லாம் வந்தது.
அப்பறமா அதைப்பத்தி நினைக்கறதை எல்லாம் விட்டுட்டேன். இன்னும் எழுத சரக்கு ஏதும் இருக்கான்னு தெரியலை! சொல்ல நினைச்சது எல்லாம் சொல்லியாச்சுன்னு 1000 பதிவுகள் தாண்டினப்பவே பதிவுல எழுதிட்டேன். அது வரை படிச்சா பேசிக்கா ஆன்மீகத்தை பத்தி தெரிஞ்சுக்கலாம். அதுக்கு மேலே எல்லாம் குருபாடு சிஷ்யன்பாடுதான்!
கிறுக்கல்கள் சீரீஸ்ல இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. அதுக்கப்பறம் ஏதேனும் வருமா வராதான்னு தெரியாது. கூறாமல் சன்யாஸம் கொள்தான்! எல்லாருக்கும் நமஸ்காரம்.

கிறுக்கல்கள் -139





மாஸ்டர் அடிக்கடி சொல்வது: நாம் பார்க்கிற விஷயங்களை அவை எப்படி இருக்கின்றனவோ அப்படி பார்ப்பதில்லை. நாம் எப்படி நினைக்கின்றோமோ அப்படி பார்க்கிறோம்.

இதை விளக்க ஒரு கதை சொன்னார்.

அவருடைய 81 வயது நண்பர் அடிக்கடி மடாலயத்துக்கு ஈர உடையுடன் சேரும் சகதியுமாக வருவார். என்ன விஷயம் என்று கேட்டால் வழியிலே ஒரு மைல் தொலைவில் ஒரு சிறு ஓடை இருக்கிறதே அதுதான் பிரச்சினை என்பார். முன்னெல்லாம் அதை ஒரு தாவலில் கடந்துவிடுவேன். ஆனால் இப்போதெல்லாம் தாவினால் பாதிதான் கடக்கிறேன்; அதனால் ஓடையில் விழுந்துவிடுகிறேன். ஓடை நாளடைவில் அகலமாகிவிட்டது போலிருக்கிறது. அதை கவனிக்கவே இல்லை.

மாஸ்டர் சொன்னார். ஆமாமாம். இளைய வயசில் குனியும்போது இருந்த மாதிரி இப்போது இல்லை! இப்போதெல்லாம் தரை இன்னும் கீழே போய்விட்டது போலிருக்கிறது.

Friday, July 14, 2017

கிறுக்கல்கள் -138





நீ எப்படி உணர்கிறாயோ அதற்குத்தக்கபடிதான் உன் செயலும் இருக்கும். ஆகவே மாற்ற வேண்டியது உன் மனப்பாங்கை. செயலை அல்ல.

அதை மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்?

இப்போதைய மனப்பாங்கு சரியில்லை என்று புரிந்தால் போதும்!

Thursday, July 13, 2017

ஒரு விளக்கம்.





சமீபத்தில் ஞானம் அடைவது குறித்து சில பதிவுகள் போட்டிருந்தேன். அவற்றை மொழிபெயர்க்கும் போதே கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. அவை கொஞ்சம் குழப்பம் விளைவித்து இருக்கலாம். ஆகவே இது குறித்து இன்னும் கொஞ்சம் யோசித்ததில்….

 
புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால் இது வேறு லெவல். ஆன்மீகத்தில் நிறைய முன்னேறி கடைசியில் ஞானம் பெறும் கட்டத்தைப்பற்றியது. அது தானாகத்தான் நிகழ வேண்டுமே ஒழிய அதை சாதகன் செய்ய முடியாது. ஞானம் பெற ஆசைகள் அடியோடு ஒழிய வேண்டுமில்லையா? ஞானம் பெற வேண்டும் என்று ஒரு ஆசை - நியாயமானதாக இருந்தாலும் அது ஆசைதானே?- இருக்கும் வரை அது எப்படி நிகழ முடியும்? அது நிகழ்ந்த பிறகு ஞானி எல்லாவற்றையும் ப்ரம்ம ரூபமாகவே காண்பதால் ஆசை என்று ஒன்று இராது.
இந்த நிலை வரும் வரை ஆன்மீக முன்னேற்றத்துக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பது அர்த்தமில்லை. அப்படி ஒரு பொருளை எழுதியது உணர்த்தி இருந்தால் அது தவறு; மன்னிக்க.

நான் என்று ஒரு நினைப்பு இருக்கும் வரை கொஞ்சமாவது ஃப்ரீ வில் இருக்கிறது. அது வரை 'நாம்' செயல்களை செய்கிறோம். அதற்கான பலனும் கிடைக்கும். நான் செய்கிறேன் என்னும் நினைப்பு போய்விட்டால் அது மிகப்பெரிய ஆன்மீக முன்னேற்றம். அது பூர்ண சரணாகதியில்தான் வரும். அந்த நிலை வந்து விட்டால் எல்லாம் சுகமே! 'நாம்' என்ன செய்ய வேண்டுமோ அது செய்ய வைக்கப்படுவோம். என்ன செய்யக்கூடாதோ அதை செய்ய மாட்டோம். அதெப்படி என்றால் அதை இறைவன் பார்த்துக்கொள்கிறான்

இந்த 'நான்' போவது மிக மிக கஷ்டம். சரி அது வரை என்ன செய்ய வேண்டும் என்றால் தர்ம சாஸ்த்திரத்தில் சொல்லி இருப்பது போல செய்ய இயன்ற வரை செய்ய முயற்சிக்க வேண்டும். இங்கே ஞானம் பெற ஒண்ணும் உன்னால் செய்ய முடியாது என்பது அப்ளை ஆகாது. ஏன் என்றால் இது ஆரம்ப அல்லது இடை நிலை. இதை எல்லாம் செய்து செய்து நல்லது கெட்டது எல்லாம் நடந்து, கர்மா நிறைய கழிந்து, சித்த சுத்தி ஏற்படும் வரை நம் கையில் செய்வதற்கு எதோ இருக்கிறது. அதன் பின் வரும் ஞானம் எப்போ எப்படி எங்கே வரும் என்பதெல்லாம் நம் கையில் இல்லை. இதுவே சொல்ல வந்தது.

கிறுக்கல்கள் -137





ஒரு மதம் சார்ந்த சீடன் மீண்டும் மாஸ்டரிடம் வந்தான். நம் புனித நூல்கள் எதுவும் கடவுளை சரியாக காட்டாது என்கிறீர்களா?

இப்படித்தான் இருப்பார் என்று சொல்லக்கூடியவர் கடவுள் இல்லை. அவர் ஒரு புதிர்… நம்மால் புரிந்து கொள்ள முடியாதவர்.

பின்னே புனித நூல்கள் நமக்கு எதைத்தான் தருகின்றன?

பதிலாக ஒரு கதை வந்தது.
மாஸ்டரும் நண்பர்களும் ஒரு சீன ரெஸ்டாரண்டில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கிருந்த இசைக்குழுவில் ஒருவர் ஒரு பழைய பாடலை இசைக்க ஆரம்பித்தார். எல்லாருக்கும் அது பழகியதாக இருந்ததே ஒழிய சரியாக அதை என்ன என்று சொல்ல முடியவில்லை. மாஸ்டர் ஒரு சர்வரை கூப்பிட்டு அவர் என்ன வாசிக்கிறார் என்று கேட்டு வர அனுப்பினார். அவரும் போய் கேட்டுவிட்டு வந்தார். உடல் வளைத்து வணக்கம் செலுத்தி மகிழ்ச்சியுடன் அவர் சொன்னார் "ஐயா, அவர் வயலின் வாசிக்கிறார்!”

Wednesday, July 12, 2017

கிறுக்கல்கள் -136






புதிதாக வருபவர்களுக்கு மிகவும் உறுத்துவது மாஸ்டர் மிக மிக சாதாரணமாக இருப்பது. உலகத்தின் நல்ல விஷயங்களை ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு, புலனடக்கம் இல்லாதது போல தோன்றிக்கொண்டு….. அவர்களுடைய சாது என்னும் கற்பனைக்கு உகந்தபடியாக இல்லாமல் இருப்பது….. பொறுக்க முடியாமல் விருந்தினர் ஒருவர் ஒரு சீடரை பிடித்து இது பற்றி விசாரித்தார்.

சீடர் சொன்னார்: "கடவுள் மாஸ்டரை செய்த போது உள்ளே இருக்கும் மனிதனை நீக்க மறந்து போய் விட்டார்!”

Tuesday, July 11, 2017

கிறுக்கல்கள் -135






ஞானமடைய நாம் செய்யக்கூடியது ஏதுமில்லை என்னும் கருத்தை ப்ரசங்கி தீவிரமாக எதிர்த்தார்.
மாஸ்டர் கேட்டார், “ஆனால் நீங்கதானே ப்ரசங்கம் செஞ்சீங்க? எல்லாமே கடவுளோட கொடை, நல்லதெல்லாம் அவர் கருணைன்னு?
ஆமாம். கூடவே சொல்லுவேனே, நாம் கடவுளோட ஒத்துழைக்கணும்; அதை அவர் வலியுறுத்தறார்ன்னு?
அஹா! அந்த மரவெட்டி விறகு வெட்டினப்ப அவருக்கு அவரோட குழந்தை ஹும் ஹும் ன்னு முக்கி ஒத்துழைப்பு கொடுத்த மாதிரியா?

Monday, July 10, 2017

கிறுக்கல்கள் -134






ஞானம் அடைய  நாம் செய்யக்கூடியது நிச்சயமா ஒண்ணுமில்லையா?

ம்ம்ம் சரி, ட்ரெய்னை வேகமா போக வைக்க ரயில் பெட்டி சுவத்தில கையால அழுத்தின கிழவி மாதிரி நீயும் செய்யலாம்!

Saturday, July 8, 2017

கிறுக்கல்கள் -133





ஒரு புரட்சியாளர் மீண்டு மாஸ்டரிடம் வந்தார்.
இப்போ எனக்கு என்ன புரிதல் தேவை?
ஒரு காதலனுக்கும் புரட்சியாளனுக்கும் இருக்கும் வித்தியாசம். காதலன் ஒரு சிம்பனி இசையுடன் இயைந்து போகிறான்.
புரட்சியாளன்?
அவனுடைய தம்பட்டத்தின் சத்தத்தில் அமிழ்ந்து போகிறான்.

Friday, July 7, 2017

கிறுக்கல்கள் -132





தம் புனித நூல்களையே கட்டிக்கொண்டு இம்மியும் நகராதவர்களிடம், சத்தியம் கருத்துக்களை ஆராயும் மனதுக்கு பிடிபடுவதில்லை என்று சொல்ல மாஸ்டருக்கு அலுப்பதே இல்லை. அவர் சொன்ன கதை:

ஒரு ஆபீஸருக்கு அவருடைய செக்ரட்ரி ஒரு போன் செய்தி பற்றி போன் நம்பர் எழுதிய சீட்டை கொடுத்து இருந்தார். ஆபீஸர் கேட்டார், இந்த நம்பரை என்னால் படிக்கவே முடியவில்லையே?

செக்ரட்ரி சொன்னாள், "நான் என்ன செய்யட்டும். போனில் அவர் பேசியது சரியாக புரியவே இல்லை. அதனால் நானும் தெளிவாக எழுதவில்லை."

Thursday, July 6, 2017

அந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 7




அடுத்து ஹோமத்தில என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாமா வேணாமா? கொஞ்சம் யோசனையா இருக்கு. இக்னரன்ஸ் ஈஸ் ப்லிஸ்!
------------
ரைட். பாத்துடலாம்.முடிஞ்ச வரை ஆரம்பம் முதல் கடைசி வரை நடுவில எழுந்து போகக்கூடாது. ஹோமம் ஆரம்பிச்ச பிறகு அவசியம் இல்லாம பேசக்கூடாது. அவசியம் ஆனாலும் முடிஞ்ச வரை சைகையால காரியத்தை சாதிச்சுக்கணும்.

ஆரம்பிச்சுட்டா அந்த அக்னியை நல்லா பலப்படுத்திண்டு மேலே செய்யணும். அக்னி அணைய விடக்கூடாது. விட்டுட்டு அப்புறம் அதுல தீக்குச்சி கொளுத்தி போடறது சிலாக்கியம் இல்லை.

அக்னி காரியத்தால ஒரு லாபம் - தனம் கிடைக்கறது. ஆனா அந்த நேரத்தில பேசினா தனம் கையை விட்டுப்போகும். தேவையா? இதே போலத்தான் குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் பேசினா முகத்தில காந்தியும் ஆயுஸும் குறையும்.

ஹோமம் செய்தவுடன் எந்த தேவதையை உத்தேசிச்சு செய்தோமோ அந்த தேவதையுடையது இது என்னுடையதில்லை ன்னு பொருள் தொனிக்க … இதம் ந மம ன்னு சொல்லணும். சில ஹோமங்கள் - ம்ருத்யுஞ்சய ஹோமம், ஆயுஷ் ஹோமம் மாதிரி - இதுல கொஞ்சம் சிக்கலா இருக்கலாம். அதனால ஒட்டு மொத்தமா சொல்லறதும் உண்டு; தனித்தனியா தேவதை பேர் இல்லாம. ஆனா இப்படி ஒரு உத்தேச த்யாகம் இல்லாம பலன் இல்லை.

ஹோம திரவியத்தை சமர்பிக்கறப்ப சமர்பண பாவம் இருக்கணும். சமித்/ அன்னத்தை அக்னியில தூக்கி எரிவதோ விசிறுவதோ கூடாது. நெய் ஹோமம் செஞ்சா அதை தழல்ல தான் செய்யணும். மற்றதுக்கு அப்படி இல்லை. அக்னியில போட்டாப்போதும்.

அக்னில தண்ணீர் விழக்கூடாது. அப்படி விழுந்தா நமக்கு தீயால சுடறா மாதிரியாம் அக்னிக்கு. கொப்பளிச்சு போறதாம். அதனால ஒரு வேளை அக்னியை சமனப்படுத்த வேண்டி இருந்தா பாலோ சாணியை கரைச்சோ அக்னில சேர்க்கணும். இந்த "பால் ஊத்தறது" என்னன்னு இப்ப புரியறதா? சவத்தை எரிச்ச இரண்டாம் நாள் அக்னியை பாலால சமனப்படுத்திவிட்டு அஸ்தியை எடுப்பாங்க.

ஹோமம் செய்கிற எல்லாரும் செல்போனை எல்லாம் அணைச்சு வெக்கணும். அல்லது வேற யார்கிட்டயானா கொடுத்து வைக்கணும். நடுவில அது சத்தம் போட்டு கவனம் திரும்பறது சரியா இராது. தெரிஞ்ச வாத்தியார் ஒத்தர் அதை - அவர்கிட்ட வரும் வரை அதை - திட்டிண்டு இருந்தார். அதை அவர் வாங்கியப்பிறகு ஒரு நிகழ்ச்சி கூட ஒரு காலாவது அடென்ட் செய்யாம இருக்கறதில்லை. எஜமானனுக்கு தர்ம சங்கடம். 'ச்ராத்தத்துக்கு இன்னும் ஆள் வரலை'ன்னு ஆரம்பிச்சு 'இடம் எங்கே இருக்குன்னா?' வரை எல்லாத்துக்கு பதில் சொல்லிண்டு இருப்பார். பேசறவங்களாவது சட்டுன்னு பேசி கட் பண்ணுவாங்களா? மாட்டாங்க. சாங்கோபாங்கமா குசலம் விசாரிச்சுட்டு ஊர் கதை எல்லாம் பேசிட்டுத்தான் அது முடியும். எந்த வைதீகர் காலை நேரத்தில வேலையில்லாம இருக்காங்க? அந்த நேரம் பாத்து ஏன் இதுக்கு நாள் பாத்து சொல்லுன்னு போன் பண்ணனும்? என்னத்த சொல்லறது.

மந்திரத்தில கவனம் இருக்கணும். வாய் பாட்டுக்கு மந்திரம் சொல்ல செய்யறவங்க பாட்டுக்கு செல்போன், டேப் சகிதம் யார்கிட்டேயோ தொடர்பு வெச்சுண்டு சிரிச்சுண்டு பக்கத்துல இருக்கறவன்கிட்டேயும் ஷேர் செய்துண்டு… இது மாதிரி கவனமின்மை நிறைய கண்ணுல படறது. வாங்கற காசுக்கு வஞ்சனை இல்லாம உழைக்கனும்ன்னு தோண வேண்டாமோ? ஒரு வேளை இப்படி அவங்க செய்ய நினைச்சாலும்… பெரிய நிகழ்ச்சிகளில பாத்து இருக்கேன்.. ஆர்கனைசர் ஒத்தர் வந்து பேப்பரும் பேனாவும் ஒத்தர்கிட்ட கொடுத்து அந்த ஹோம குண்டத்தில உக்காந்து இருக்கறவங்க பேர் எல்லாம் எழுதித்தர சொல்லுவார். இவருக்கு எல்லாரையும் தெரியுமா? அதனால விசாரணை நடக்கும். மத்தவங்க கவனம் சிதறது மட்டும் இல்ல, அதை எழுதி முடிக்கற வரை இவர் செய்ய வேண்டிய ஹோமம் என்ன ஆகிறது? நாராயணா!

இன்னும் கொஞ்ச நாள் போனா விஷயம் தெரிஞ்ச யஜமானன் வைதீகர்கள்கிட்டேந்து செல்போன்களை பறிமுதல் செய்யும் நாள் வந்துடும்.

இன்னும் எழுதினா டிப்ரஷன் வந்துடும். முடிச்சுக்கலாம்.